ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/அப்பருடன் ஒரு நாள்

அப்பருடன் ஒரு நாள்

ன்றொரு நாள் மாலையிலே ஆற்றங்கரையிலே நடந்த ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன் நான். பிரபல பேச்சாளர் பேச்சு ஒன்று நடந்தது அங்கு பேச்சாளர் அடுக்கு மொழிகளை அள்ளி வீசினார்; இளைஞர் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பினார். பேச்சுக்கு இடை யிடையே கேள்விகள் வேறு போட்டார்.

ஆலயங்கள் ஏனையா?
அபிஷேகங்கள் ஏனையா?
கோலங் கொடிகள் ஏலையா?
கொட்டு முழக்கம் எனையா?
பாலும் பழமும் வைத்து நிதம்
பணிந்து நிற்பது ஏனையா?
சீலம் பேணும் உள்ளத்தைத்
தெய்வம் தேடி வாராதோ?

என்று கேட்டபோது நீண்ட காலமாகவே, கோயில், குளம், சமயம், சாஸ்திரம் என்று பழகியவர்களும் நிலை குலைந்தனர். மேலும் மேலும் கேள்விகள் பிறந்தன.

தண்ணார் மதியும் புரிசடையும்
தாங்கும் தையல் பாகன் என
எண்ணாது ஒருவன் சொன்னது கேட்டு
எவனோ சொன்னான் அவனைக் கேட்டு
அண்ணா சொன்னான் அது போலின்று
அடுத்த தம்பி சொல்கின்றான்
கண்ணால் ஈசன் திருமேனி
கண்டார் எவரும் உண்டோ சொல்! என்று பேச்சாளர் கேள்வி கேட்டார். கேட்டவர்கள் அத்தனை பேரும் வாயடைத்துப் போய் உட்கார்ந் திருந்தார்கள். கேள்விக்கு விடை, 'இல்லை, ஐயா, இல்லை' என்று சொல்வதுபோல கூட்டத்தார் கரகோஷம் வேறு செய்தார்கள்.

இத்தனையையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டுமிருந்த எனக்கோ வீடு திரும்பும்போது உள்ளம் ஒரு நிலையில் இல்லை.

'என்ன! இந்த நண்பர்கள் பேசுகின்ற பேச்சிலும் கேட்கின்ற கேள்விகளிலும் ஒரு வேகம் இருக்கத்தானே செய்கிறது. கொஞ்சம் உண்மையுங்கூட இருக்கிறதே! இதற்கெல்லாம் தக்க விடை சொல்வார் கிடையாதா” என்று சிந்தித்துக் கொண்டே திரும்பினேன்.

அந்தச் சமயத்தில் ஒருவர், ஒரு பெரியவர், எனக்கு முன்னமேயே அறிமுகம் ஆனவர்தான் - என்னை அடுத்துவந்தார். 'என்ன தம்பி! எப்போதுமே உற்சாகமாக இருக்கும் உமக்கு இன்றைக்கு ஏன் இத்தனை சோர்வு' என்று கேட்டார். நான் என்னுடைய நிலையை விளக்கினேன். கூட்டத்தில் அன்பர் கேட்ட கேள்வி களையும் அடுக்கினேன். 'இன்றைய உலகத்தில் எழு கின்ற பிரச்சனைகள் எத்தனை எத்தனையோ உண்டே, அவைகள் எல்லாம் தீராத புதிர்கள் தானா? இல்லை எல்லாவற்றிற்கும் விடை கண்டுவிட முடியுமா? கூறிவிட முடியுமா?' என்று கேட்டேன். 'என்ன இதுதானா பிரமாதம்' என்று பேசத் துவக்கினார் பெரியவர்.

"ஆம்! தம்பி. இந்த கடவுளைக் கண்ணால் காண்ப தற்குத் தான் எத்தனைபேர் எப்படி எப்படி எல்லாம் முயன்றிருக்கிறார்கள். வேதங்களை ஒதியிருக்கிறார்கள். யாகங்களைச் செய்திருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார்கள் காவி உடை உடுத்தியிருக்கிறார்கள். மொட்டை அடித்திருக்கிறார்கள். தாடியை வளர்த்திருக்கிறார்கள். தவம் பண்ணியிருக்கிறார்கள். நோன்பு நோற்றிருக்கிறார்கள். இப்படியெல்லாம் இவர்கள் செய்தும், இந்தப் பொல்லாத கடவுள், அவ்வளவு லேசாக காட்சி கொடுக்கிறவனாக இல்லையே.

அப்படி அவன் காட்சி கொடுக்க மறுக்கிறபோது, தயங்குகிறபோது, அப்படி ஒருவன் இருக்கவா போகி றான் என்ற சந்தேகமே எழுவது இயற்கைதானே. இப்படி முதலுக்கே மோசம் என்று வருகிறபோது, அவன் வடிவத்தைப்பற்றி, உருவத்தைப்பற்றி, வண்ணத்தைப் பற்றி என்ன என்று சொல்ல? மைப்படிந்த கண்ணாள் பாகன், கச்சி மயானத்தான் ஊரான், வார்சடையான் என்றெல்லாம் அவனைச் சொன்னால் அவையெல்லாம் உண்மையாகிவிடுமா என்ன? கடவுள் என்றாலே எல்லாம் கடந்து நிற்பவன் அல்லவா? அவன் ஒர் ஒப்புடையவன் அல்லன். ஒருவன் என்றுகூட இல்லை. ஓர் ஊரான் என்றாவது சொல்ல முடியுமா? இல்லை, இப்படி இருப்பான் என்று ஒர் உவமையாவது காட்ட முடியுமா? முடியாதுதானே! இப்படி இருப்பான் அவன், இந்த நிறத்தவன் அவன், இந்த வண்ணத்தவன் அவன் என்றெல்லாம் அவனைச் சொல்லிலோ, கல்லிலோ, சித்திரத்திலோ, சிலையிலோ எழுதிக் காட்டிவிட முடியாது தானே!' என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார் பெரியவர்.

எனக்கோ பெரியவர் பேரிலேயே சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. இவரும் ஆற்றங்கரை பேச்சாளர் பரம்பரை தானோ? என்று எண்ணினேன். அதற்குள் அவர் கையமர்த்தி, 'தம்பி இறைவன் அப்படி இருப்பான், அந்நிறமுடையவனாய் இருப்பான், அவ்வண்ணமுடையவனாய் இருப்பான், என்றெல்லாம் காண்பதற்கோ, அல்லது பிறருக்குக் காட்டுவதற்கோ அவன் அருள் வேண்டும். தம்பி! அந்த அருளையே கண்ணாகக் கொண்டு கண்டால் அல்லவா காண முடியும். பிறருக்கு காட்டவும் முடியும்.

அந்த அருள் இல்லாமல் அவனைக் காணவும், பிறருக்குக் காட்டவும் முடியாது தம்பி!" என்று முடித்தார் அவர் பேச்சை, ஏது! பெரியவர் பெரியவர் தான் என்று நினைத்த போது.

மைப்படிந்த கண்ணாளும் தானும்
கச்சி மயானத்தான், வார் சடையான்
என்னின் அல்லான்
ஒப்புடையன் அல்லன், ஒருவன் அல்லன்
ஒரூரன் அல்லன், ஓர் உவமன் இல்லி
அப்படியும், அந்நிறமும், அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன், இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே
என்ற பாட்டு திரும்பவும் திரும்பவும் என் நாவில் தவழ்ந்தது. பாட்டைப் பாடிக்கொண்டே பெரியவருடன் கொஞ்ச தூரம் நடந்து சென்றேன். இருவரும் பக்கத்தில் உள்ள கோயிலுள் புகுந்தோம். புகுவதற்கு முன், கோயிலுக்குள் போக வேண்டுவது அவசியம்தானா என்றேன். இந்நில உலகினில் நிலை பெற்றிருப்பதற்கு, மனதை ஒரு நிலைப்படுத்தி எல்லாம் வல்ல இறைவனை, எங்கும் நிறைந்த இறைவனை வணங்குவதற்கு 'கோயில் குளம், பூசை புனற்காரம் எல்லாம் வேண்டுமா' என்றேன். பெரியவரோ பதில் பேசவில்லை. ஆனால் பாட ஆரம்பித்து விட்டார்.

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
பூ மாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி
தலையாரக் கும்பிட்டு கூத்தும் ஆடி
சங்கரா சய போற்றி போற்றி என்றும்
அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலற நில்லே

என்று அவர் மனம் கசிந்து பாடியபோது, நானும் அவருடன் சேர்ந்து, ஆரூரா ஆரூரா! என்றே அலற ஆரம்பித்து விட்டேன். கோயில் புகுவது, அங்கு அலகிடுவது, மெழுகுவது, பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடுவது, கும்பிட்டுக் கூத்தாடுவது எல்லாம், மனதை எப்படிப் பக்குவப்படுத்தும், எப்படி ஒரிடத்தில் நிலை நிறுத்தும் என்று கண்டேன்.

கோயிலை வலம் வந்தோம் இருவரும். மேலப் பிராகாரத்தில் ஒரு மாடக் குழியில் ஒரு சிலையைக் கண்டேன். பெரியவர் அதைக் கையெடுத்துக் கும்பிட்டார். நான் அதைக் கண்டு சிரித்தேன். "என்ன தம்பீ!' என்றார். 'என்ன தாத்தா இறைவனைக் காண அவன் அருளே கண்ணாகக் காண வேண்டும் . என்றீர்கள். ஏதோ இயற்கையோடு ஒட்டியிருந்தால், அவன் அருளைக் கண்ணாகக் கொண்டு காணா விட்டாலும், கலையென்றாவது கண்டு களிக்கலாம். இப்படி இயற்கைக்கே விரோதமாக ஆணும் பெண்ணும் ஓர் உருவில் காட்சி கொடுக்கிறார்களே - கொஞ்சமும் இயற்கைக்குப் பொருத்தமாக இல்லையே. இது இறையுமில்லை, கலையுமில்லையே" என்றேன். அர்த்த நாரியின் சிலா விக்கிரகத்தின் முன்பு நின்று கொண்டு தான் இப்படிக் 

164

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

கூறினேன் நான். இதற்கெல்லாம் சளைத்தவராக இல்லை பெரியவர். அங்குமே அவர்,

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடி
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்.
வரிக்குயில் பேடையோடாடி வைகி வருவன கண்டேன்.
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்.

என்றெல்லாம் பாடினார். அவர் பாடப்பாட என் முன் தவழும் இயற்கை, உலக நியதி எல்லாம் ஆண் பெண் என்ற இரண்டு தத்துவத்துக்குள்ளே அடங்குவதாகக் கண்டேன். இந்த இரண்டு தத்துவங்களும் தனித்தனி இயங்காமல் இணைந்து இணைந்து செல்வதால் தான் உலகமே உய்கிறது என்றும் கண்டேன்.

Nothing in this world is single All things by a law Divine in one another mingle

என்றெல்லாம் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி பாடியதின் உண்மையும் அப்போது விளங்கிற்று. அர்த்தநாரி தத்துவத்தின் அருமையையும் அறிந்தேன். அது இயற்கை நியதியை எவ்வளவு அழகாகக் காட்டுகிறது என்பதையும் தெரிந்தேன். இந்த உண்மைகளையெல்லாம் தெரிவதற்கு அவன் அருளைக் கண்ணாக மட்டுமல்ல, காதாகவும், ஏன் அறிவாகவுமே கொண்டிருக்க வேண்டும் என்றும் கண்டு கொண்டேன்.

கோயிலின் வெளிப் பிராகாரத்தைச் சுற்றிய நாங்கள் அதன் பின் உட்பிராகாரத்துக்குள்ளேயே நுழைந்தோம். அங்கு ஒரு குறட்டில் ஒன்பது சிலா உருவங்கள் இருந்தன. அவற்றிற்கு மேலே, 'நவதாண்டவம்' என்றும் குறித்திருந்தார்கள் வர்ண மையினாலே,

எல்லாம் தாண்டவ உருவங்கள் அல்ல தான் என்றாலும் அவை சிவபிரானுடைய் ஒன்பது மூர்த்தங்கள் என்று தெரிந்து கொண்டேன். அங்கே ஆனந்தத் தாண்டவர் இருந்தார்; ஊர்த்துவ நடனர் இருந்தார்; பிக்ஷாடனர். இருந்தார்; கங்காளர் இருந்தார்; நீலகண்டர் இருந்தார்; கங்காதரர் இருந்தார்; கஜ சம்ஹார மூர்த்தி இருந்தார்; திரிபுர தகனர் இருந்தார்; சந்திர சேகரர் இருந்தார்; இவையெல்லாவற்றையும் காட்டி, “என்ன ஸ்வாமீ! ஒரு ஆளே இப்படி ஒன்பது வேஷம் போடுறாரே, யாரை ஏமாற்ற இப்படிப் பகல்வேஷம் போடுகிறார். இவர்?" என்று கொஞ்சம் நையாண்டித்தனமாகவே கேட்டேன் பெரியவரை. அவருக்குத்தான் பேச்செல்லாம் பாட்டா யிற்றே. உடனே பாட ஆரம்பித்து விட்டார்.

மயலாரும் தன்னடியார்க்கு அருளும் தோன்றும்
மாசில் புன் சடை மேல் மதியம் தோன்றும்.
இயல்பாக இரு பிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல் நஞ்சுண்டு இருண்ட கண்டம் தோன்றும்
கயல்பாய கருங்கல் உழி கங்கை நங்கை
ஆயிரமாம் முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாய சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே!

என்று அவர் பாடப்பாட, ஒருவரே இப்படிப் பல பல மூர்த்தங்களாக, நோக்குவார் நோக்குகின்ற படியெல்லாம் தோன்றுவார் என்று தோன்றிற்று எனக்கு. எல்லாம் காண்பவர், நோக்குபவர், அறிபவர், அறிவாற்றலுக்கு, அருள் நிலைக்குத் தக்கவாறு தான் தோன்றும் என்றும் உணர்ந்து கொண்டேன்.

இத்தகைய அறிவு, உணர்வு, அனுபவம் எல்லாம் பெற்ற பின் பெரியவரைத் தொடர்ந்தே கோயிலின் உட்பிராகாரத்தின் வடக்குப் பிராகாரத்திற்கு வந்தேன். அங்கே ஒரு சந்நிதி. நடராஜர் சந்நிதிதான். ரொம்பவும் அருமையாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஆட வல்லான், அம்பிகை சிவகாமியுடனும், பக்தன் மணி வாசகனுடனும் கோயில் கொண்டிருந்தான்.

எனக்கு எப்போதுமே நடராஜர் என்றால் அலாதி பக்தி. கலை உலகின் அற்புதம் அந்த வடிவம். உருவமில்லாத கடவுளுக்கு, சிந்தனை செய்யும் கலைஞன் கற்பித்துக் கொடுத்த முதல் உருவமல்லவா அது! அணுவுக்குள் அணுவாய், ஊனாயும், உயிராயும், உணர்வாயும் உள்ளும் புறமும் இருந்து இயங்குகிறான் இறைவன், அவன் ஆட்டுகின்றபடியே அண்டங்கள் எல்லாம் ஆடுகின்றன. அப்படி அண்டங்களையெல்லாம் ஆட்டுகின்றவன், தானும் ஆடிக்கொண்டேதான் ஆட்டு கின்றான் என்ற உண்மைகளை யெல்லாம் உள்ளடக்கிய அற்புத தத்துவ தரிசனத்தை அல்லவா அந்தச் சிலை உருவிலே காண்கிறோம் நாம். ஆதலால் நடராஜர் சந்நிதி முன்பு, பெரியவர் தூண்டுதல் இல்லாமலேயே என் கை குவிந்தது, தலை தாழ்ந்தது. இதை பெரியவர் பார்த்தார். "பையன் பரவாயில்லை" என்று நினைத்துக் கொண்டார். பாடினார்.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

அவர் பாடிய பாட்டை மெய்மறந்து நின்று கேட்டேன். அதன் பின் உண்மை விளங்கிற்று. மனிதப் பிறவி எடுத்த ஞானிகள் பக்தர்கள் எல்லாம் பிறவிப் பெருங்கடல் நீந்தும் மார்க்கத்தைத்தானே தேடி அலைகிறார்கள். தாய் கருவில் வாழ் குழவி தாமெல்லாம் வேண்டுவது தூய பிறவாமையே என்றிருக்கும்போது இவர்மட்டும் 'மனித்தப் பிறவி வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று பெரும்போடு போடுகிறாரே என்று எண்ணினேன்.

ஆம். அந்த மனித்தப் பிறவிக்கும்தான் ஒரு நிபந்தனை போட்டு விடுகிறாரே. நடனராஜனைக் காணும் பேறு பெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால், எத்தனை தரம் வேண்டுமானாலும் இந்த மனிதப் பிறவி எடுக்கலாம்தானே! மனிதப் பிறவியிலும் அது தமிழ் மனிதப் பிறவியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நடராஜனைக் காண்பதேது. அவன் அருளே கண்ணாகக் காணப் பெறுவதேது?

இப்படியெல்லாம் பெரியவருடன் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்துவிட்டு இறைவனையும் கண்டு தரிசித்து வணங்கிவிட்டு வெளியில் வந்தபோது உள்ளத்திலே ஒரு உறுதி, உடலிலே ஒரு தெம்பு கண்டது. கோயில் வாசலிலேயே அவரை முந்திக்கொண்டு,

நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்
ஏமாப்போம், பிணியறியோம், பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

என்று நானே பாட ஆரம்பித்துவிட்டேன். இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை என்றே எல்லா இடமும் எதிரொலி செய்ய ஆரம்பித்தன. நான் பாடுவதைக் கேட்ட பெரியவரும், "ஆம் தம்பி! அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை," என்று எனக்கு உற்சாகமூட்டினார், ஒரு தைரியத்தைக் கொடுத்தார். சரி, ஆசாமியை விட்டுவிடக் கூடாது, என்று அவர் காலைப்பற்றிக் கொள்ள விரைந்தபோது ஆசாமி அந்தர்த்தியான மாகி விட்டார்.

இவையெல்லாம் சென்ற சப்தஸ்தான விழாவன்று திருவையாற்றை அடுத்த திருப்பூந்துருத்தியில், இன்று இடிந்து கிடக்கும், அப்பர் மடத்தில் அரைமணி நேரம் இருந்ததின் பலன். மாலைப் பொழுதில்,மணற்பரப்பில் மல்லாந்து கிடந்தபோது சிறிது நேரம் கண்மூடியிருக்கிறது. கருத்து ஓடியிருக்கிறது எங்கெல்லாமோ. இப்படி அனுபவம் ஒரு நாள். ஒரு நாள் என்ன பல நாள் - வாழ்நாள் முழுவதும் பெறலாமே இப்படிப்பட்ட அனுபவத்தை.

அமார், கலைமணி, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுல குக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியம் தமிழக . வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று. ஓர் அன்பர் சொன்னார். முற்றிலும் உண்மை. தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ்மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். குற்றால முனிவர். ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சீடரான அவர் ஆக்கித் தந்துள்ள இலக்கியப் படைப்புகளும், கலைப் படைப்புகளும் தமிழுக்கும். கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.

தொ.மு.பாஸ்கரத் தொன்டையான், ஐ.ஏ.எஸ்.

ஆசிரியரது பிற நூல்கள்

1 வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்து பாகங்கள்)
2 வேங்கடத்துக்கு அப்பால்
3 இந்தியக் கலைச் செல்வம் (வானொலிக் கட்டுரைகள்)
4 கலைஞன் கண்ட கடவுள்
5 கல்லும் சொல்லாதோ கவி
6 அமர காதலர்
7 தென்றல் தந்த கவிதை
8 தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பண்பாடும்
9 பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
10 தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்
11 ரசிகமணி டி.கே.சி.
12 மதுரை மீனாட்சி
13 இந்திய கலைச் செல்வம்