ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/பிழை எலாம் தவிரப் பணிப்பான்

பிழை எலாம் தவிரப் பணிப்பான்


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போக மும் திருவும் புணர்ப்பானை
பின்னை என் பிழையைப் பொறுப்பானை
பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத் தனி
ஆரூரானை மறக்கலும் ஆமே!

என்பது சுந்தரர் தேவாரம். சேரநாடு சென்று நண்பர் சேரமான் பெருமாள் நாயனாருடன் சில காலம் தங்கியிருந்து விட்டு, திருவாரூரை நோக்கிப் புறப்படுமுன் ஆரூர் தியாகரை மறக்க இயலாமையை உணர்ந்து பாடிய பாடல் இது. இந்தப் பாடல் என் நித்யப் பாராயணப் பாடல்களில் ஒன்று. சாதாரணமாகத் தேவாரப் பாடல்கள் எல்லாம் ஏதோ கோயில்களில் ஒதுவார்கள். பாடுதற்கு மட்டும் உரியது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம் நாம். அவை நம் வாழ்வோடு பிணைந்து நம் வாழ்க்கை யைச் செம்மை செய்யவும் உதவும் என்ற உணர்வு இந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் எனக்கு நேர்வதுண்டு. அதைப் பற்றிய ஒரு சிறு சந்தர்ப்பத்தைக் கூறி விளக்கவே இக் கட்டுரை. 1944ம் வருஷம், ஆம் கிட்டத் தட்ட இருபது வருஷங்களுக்கு முன், நான் திருநெல்வேலியில் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்டாக வேலை பார்த்தேன். அப்படி வேலை பார்க்கும்போது எத்தனை எத்தனையோ கேஸ்களை விசாரிக்கவும் அவைகளில் தீர்ப்புக் கூறவும் செய்தேன்.

நான் மாஜிஸ்ட்ரேட்டாக வேலை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரே பயம். காரணம் திறமையாகத் தீர்ப்பு எழுதத் தெரியாது என்பதினால் அல்ல. அப்படித் தீர்ப்பு எழுதும்போது குற்றம் செய்த ஒரு சிலர் சாட்சியம் இல்லாததினால் தப்பித்துக் கொண்டு செல்வதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் குற்றம் செய்யாத ஒருவன் என் தீர்ப்பினால் தண்டிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதுதான் என் பயத்துக்கெல்லாம் காரணம்.

ஆதலால் எல்லாப் பாரத்தையும் இறைவன் பேரிலேயே போட்டு விட்டுத்தான் தீர்ப்பு எழுதுவேன். இருபதுவருஷம் கழிந்த பின்னரும், இன்றும் என் இதயத்தில் கை வைத்துக் கொண்டு சொல்கிறேன், பொன்னுக்கோ பொருளுக்கோ அடிமையாகி, இல்லை அன்பர்களது சிபார்சுகளுக்கோ முக்கியத்துவம் கொடுத்து நான் தீர்ப்பு எழுதியதில்லை. இன்னும் ஒரு நிறைவு என்ன வென்றால், குற்றம் செய்யாதவர்களை, அப்படி அவர்கள் அக்குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள் என்று ஒரு சிறு சந்தேகம் தோன்றிவிட்டால் கூட அவர்களைத் தண்டித்ததில்லை.

இப்படி எல்லாம் பயபக்தியோடு வேலை பார்த்த எனக்கு ஒரு வழக்கில் சோதனை ஒன்று வந்தது. திருநெல்வேலி ஜில்லாவில் ஜாதி வெறி அதிகம். திருநெல்வேலி வேளாளர்கள் மற்ற சமூகத்தினரைத் தாழ்வாகவே நடத்துவர். ஓர் ஒதுக்குப் புறமான கிராமத்தில் வேளாளர் தெருவில் நாடார், தேவர் முதலிய பிற்பட்ட சமூக மக்களின் கல்யாண ஊர்வலம் வருதல் கூடாது என்று எழுத்தில் இல்லாத ஒரு சட்டம். அந்தக் கிராமத்தில் இந்தக் கெடுபிடி இருப்பதைப் பலர் விரும்பவில்லை.

அந்தக் கிராமம் எந்தப் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் இருக்கிறதோ அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சப் - இன்ஸ்பெக்டராக வருகிறார். அவரது ஆட்சிக்காலத்திலே அக்கிராமத்தில் உள்ள கெடுபிடியைத் தகர்த்து எறிந்து விட வேண்டும் என்று எண்ணினர் நாடார் சமூகத்தினர். அவர்களது இனத்தில் ஒரு திருமணம் நடக்கிறது. அத்திருமண விழாவன்று மணமக்களைப் பல்லக்கில் ஏற்றி அந்த வேளாளர் தெரு வழியாக ஊர்வலம் நடத்துவது என்று திட்டமிடுகின்றனர். ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டிருப் பதை வேளாளரும் தெரிந்து கொள்கின்றனர்.

அப்படி வந்தால் நேரில் நின்று தடுக்க முடியா விட்டாலும் மறைமுகமாகவாவது தடுப்பது என்று தீர்மானிக்கின்றனர் அவர்கள். நாடார் சமூகத்தினரும் அப்படித் தடுத்தால் கலகம் செய்வது என்று தீர்மானித்து அதற்குரிய கம்பு அரிவாள்களையும், பல்லக்கிலேயே எடுத்து வைத்துக் கொண்டு ஊர்வலம் புறப்படுகின்றனர். சப்இன்ஸ்பெக்டரும் தன் கீழ் உள்ள ஏட்டு முதலியவர் களுக்கு தக்க உத்தரவுகள் போட்டு விட்டு அவர் மட்டும் லீவ் எடுத்துக் கொண்டு வெளியூர் சென்று விடுகிறார். மணமக்கள் ஊர்வலம் பல்லக்கில் நடக்கிறது.

வேளாளர் எல்லாம் தங்கள் தங்கள் வீடுகளியே பதுங்கிக் கொள்கின்றனர். வேளாளர் தெருவின் நடுப்பகுதியில் ஒரு பந்தல் போட்டிருக்கிறது. அதுவரை வந்து விட்டனர். திருமண ஊர்வலத்தை நடத்திக் கொண்டு நாடார் சமூகத்தினர். அதுவரை யாதொரு தடையும் காணோமே என்றவுடன் நாடார்களுக்குத் தெம்பு பிறந்தது. -

தங்கள் பல்லக்கு செல்ல இடையூறாக இருக்கிறது என்று சொல்லி அத்தெருவின் நடுவில் போட்டிருந்த பந்தலைப் பிரிக்கின்றனர். உடனே கல்லெறி விழுகிறது. சிலர் வெளியே வந்து பந்தலைப் பிரித்தவர்களை மடக்குகின்றனர். நாடார் சமூகத்தினர் கலகத்துக்கு என்று தயார் செய்துகொண்டு வந்தவர்களாயிற்றே! ஆதலால் கலகம் மும்முரமாக நடக்கிறது. உடன் வந்த ஏட்டு செய்வது என்ன என்று அறியாமல் துப்பாக்கிப் பிரயோகம் வேறே செய்து விடுகிறார்.

அதனால் ஒருவரும் காயம் அடையவில்லை என்றாலும் கலகம் நின்று விடுகிறது. பல்லக்கு திரும்பி விடுகிறது. விசாரணைக்குப் போலீஸ் அதிகாரிகள் வந்து விடுகின்றனர்.

போலீஸ் விசாரணையின் பலனாக, நாடார் சமூகத்தில் இருபதுபேர் பேரில் அவர்கள் கலகம் செய்ய முனைந்ததாக ஒரு வழக்கும், அதைப் போலவே வேளாளர் இருபது பேர் பேரில் கலகம் செய்ததாக ஒரு வழக்கும் போடப் படுகிறது.

'கேஸ்' என் கோர்ட்டில் விசாரணைக்கும் வந்து விடுகிறது. ஒவ்வொரு தரப்பிலும் இருபது முப்பது சாட்சிகள். போலீஸ் தரப்பு சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, எதிர்தரப்பு சாட்சிகள் விசாரணை என்று கிட்டத்தட்ட ஒரு வருஷகாலம் நடக்கிறது. வக்கீல்களுக்கு நல்ல வரும்படி. கேஸ் முடிகிற தருணத்தில் இருக்கிறது. அந்த நிலையில் என்னைத் தலைச்சேரிக்கு டிப்டிகலெக்டராக மாற்றியிருப்பதாக சர்க்காரிலிருந்து ஒரு தந்தி வருகிறது. தந்தி வெள்ளிக்கிழமை வந்தது. திங்கட் கிழமையன்று சார்ஜ் கொடுத்து விட்டு, புதன் கிழமையன்று நான் தலைச்சேரி போகவேண்டும்.

இந்த நிலையில் இந்த வழக்குகளை, எனக்குப் பதிலாக வருகிற மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டுப் போவதா, இல்லை, தீர்ப்புக் கூறிவிட்டே செல்வதா என்பது பிரச்சனை. வழக்கை நடத்துகிற வக்கீல் களுக்கு என் நல்லெண்ணத்தில் ஒரு நம்பிக்கை. இருதரப்பு வக்கீல்களும் என்னைச் சந்தித்து, "இந்த வழக்குகளை நீங்கள் ஒரு வருஷகாலமாக விசாரித்திருக்கிறீர்கள்." நீங்களே 'பைசல்' செய்து விட்டுப் போனால் நல்லது - என்று தெரிவித்துக் கொண்டார்கள். எனக்கும், 'அது சரி' என்றே பட்டது. உடனே வேலையோடு வேலையாக இரண்டு வழக்குகளிலும் இரவு பகலாக இருந்து தீர்ப்பு எழுதினேன்.

என்னுடைய எண்ணத்தில் இரண்டு கட்சிக்காரர்களுமே கலகத்திற்குக் காரணம் என்றாலும், நாடார் சமூகத்தினர்தான் கலகத்திற்கு வித்திட்டவர்கள். அவர்களில் முதன்மையாக இருந்து கலகத்திதைத் தூண்டி நடத்தியவர்களுக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அப்படியே கலகம் நடப்பதற்கு முக்கிய காரணஸ்தராக இருந்த ஒன்பதின்மருக்கு ஆளுக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை என்றும், மற்றவர்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரூபாய் நூறு அபராதம் என்றும் தீர்ப்பு எழுதி, தீர்ப்பை எடுத்துக் கொண்டு திங்கட்கிழமை காலை கோர்ட்டிற்கு வந்தேன். அன்று பகல் ஒரு மணிக்கு நான் சார்ஜ் கொடுக்க வேண்டும். காலை 10 மணி அளவில் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கோர்ட்டில் ஆஜராகும்படி கூப்பிட்டேன். அதிசயம் என்ன வென்றால், நான் யார் யாருக்கு 'கடுங்காவல் தண்டனை' - என்று தீர்ப்பு எழுதியிருக்கிறேனோ அவர்களில் பலர் கோர்ட்டிற்கு வரவில்லை. மற்றவர்கள் எல்லாம் வந்து நின்றார்கள்.

'வராதவர்கள் ஏன் வரவில்லை' - என்று காரணம் வினவினால் இரவு பெய்த மழையின் காரணமாக இடையிலே உள்ள காட்டாற்றில் வெள்ளம். அதைக் கடந்து வரமுடியவில்லை. அவர்கள் எல்லாம் மேற்கே பத்து மைல் போய் ரயில் ஏறி பகல் பன்னிரெண்டு மணிக்குள் வந்து விடுவார்கள் என்றனர். 'சரி பகல் ஒரு மணிக்குத் தீர்ப்புக் கூறுகிறேன்' - என்று எல்லோரையும் அனுப்பி விட்டு மற்ற வேலைகளைக் கவனித்தேன்.

ஒருவேளை அவர்கள் பன்னிரெண்டு மணிக்கு வராவிட்டால் என்ன செய்வது? எழுதிய தீர்ப்புகளைக் கிழித்துத் தீக்கிரையாக்கி விட்டுக் கிளம்பி விடுவதா என்று எண்ணினேன். எதிரிகள் ஆஜர் இல்லாமல் எந்த எந்தத் தீர்ப்பை எப்போது சொல்லலாம் என்று கிரிமினல் புரொளஜேர் கோடு என்ற சட்டப்புத்தகம் ஏதாவது சொல்கிறதா என்று பார்க்க அந்தச் சட்டப் புத்தகத்தின் ஏடுகளைப் புரட்டினேன்.

அதில் சொல்லியிருந்தது, 'சாதாரணமாக அபராதம் மட்டும் போடுவதானால், எதிரிகள் முன்னால் இல்லாத போதும் தீர்ப்புச் சொல்லலாம். சிறை தண்டனை என்று இருந்தால் எதிரிகளை முன்னால் வைத்துக் கொண்டுதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்' - என்று. இந்த நிலையில் என்ன செய்வது என்று திரும்பவும் சிந்தித்தேன். என் தீர்ப்பின் கடைசிப் பக்கத்தை மட்டும் எடுத்துவிட்டு எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு, ரூபாய் நூறு நூறு என்று அபராதம் போட்டுத் தீர்ப்பைத் திருத்தி எழுதி அதை இணைத்து வைத்திருந்தேன். பன்னிரெண்டு மணிக்கு எதிரிகள் வராவிட்டாலும் தீர்ப்பைச் சொல்லி விடுவது என்றே தீர்மானித்து விட்டேன். கடைசியில் குறித்த பகல் ஒருமணிக்கு எதிரிகளைக் கூப்பிட்டால், எதிரிகள் எல்லோருமே ஆஜர் ஆகி வந்து நின்றார்கள் கோர்ட்டிலே.

இப்போதும் என் மனதிலே ஒரு போராட்டம். முன்னர் எழுதிய தீர்ப்பைச் சொல்வதா, இல்லை, பின்னர் திருத்தி அமைத்த தீர்ப்பைச் சொல்வதா - என்று. இப்படி நான் குழம்பிக் கொண்டிருந்த போதுதான் சுந்தரர் தேவாரப் பாடல் எனக்கு நினைவு வந்தது.

பொன்னும் மெய்ப் பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை
பின்னை என் பிழையைப் பொறுப்பானை
பிழையெலாம் தவிரப் பணிப்பானை

என்ற அடிகளைப் பாடியவுடன், உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்தது. நாம் நினைக்கிறோம் நமது அறிவின் திறத்தால் எதிரிகளை சரியாய் எடை போட்டுத் தீர்ப்பு எழுதி விட்டோமென்று.

ஆனால் இறைவன் நியதியின் படி எதிரிகளில் ஒன்பதுபேர் சிறைதண்டனை பெற வேண்டியவர்கள் அல்ல என்று ஏற்படுகிறது. அதற்கு ஒரு சிறு நாடகம். மனக்கலக்கம், குழப்பம், எல்லாம் ஏற்பட்டாலும், முடிவில் தீர்ப்பை மாற்றி எழுத வல்லவா இறைவன் நம்மைப் பணித்திருக்கிறான்.

நாம் பிழை செய்யாமல் நம்மைத் தவிர்க்க வேண்டியல்லவா இத்தனைக் கூத்தை நடத்தியிருக்கிறான் என்று எண்ணினேன். அந்த இறைவனின் அருளை வியந்து கொண்டே, திருத்திய தீர்ப்பையே படித்து முடித்தேன்.

ஆம். எனது வாழ்விலே மறக்க முடியாதது இது. இறைவன் நியதியிலும், திருமுறைகளிலும் அழுத்தமான நம்பிக்கை ஏற்பட நல்லதொரு வழி வகுத்துக் கொடுத்ததும் இச் சந்தர்ப்பம் தானே!