ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/பிறவாப் பெருமையும் இறவாப் புகழும்



பிறவாப் பெருமையும்
இறவாப் புகழும்

துரையில் ஒரு வைத்தியர். சித்தவைத்திய முறையைக் கையாளுபவர்தாம். பரம்பரையாக வைத்தியம் செய்பவர்கள் அவருடைய குடும்பத்தார். அவர் பெயர் சொக்கலிங்கம். தகப்பனார் பெயர் வீரபத்திரன். இந்த சொக்கலிங்கம், கவிஞர் ஒருவருக்கு வைத்தியம் செய்தார்.

கவிஞர் சிறு வயதுடையவர்தாம் என்றாலும் அவருக்கு வந்திருந்த வியாதி கடுமையானதாக இருந்தது. நாற்பது நாள் படுக்கையிலேயே கிடந்தார். வைத்தியரோ தினமும் யமனுடனேயே போராடிக்கொண்டிருந்தார். பல தடவை சித்திரபுத்திரன் கூடக் கவிஞர் சீட்டைக் கையில் எடுத்து விட்டான். வைத்தியருடைய திறமைக்கு அஞ்சி அஞ்சியே எடுத்த சீட்டைக் கிழிக்க முடியாமல் இருந்து விட்டான்.

யமனுக்கும் வைத்தியருக்கும் நடந்த போட்டியில் கடைசியில் வைத்தியரே வெற்றி பெற்றார். கவிஞர் பிழைத்து எழுந்து விட்டார். வியாதி முற்றும் குணமாகித் தலைக்குத் தண்ணிரும் விட்டாகி விட்டது.

இதன் பின் சில தினங்கள் கழித்து, வைத்தியர் கவிஞரைப் பார்க்க வந்தார். ஒரு பெரிய தட்டில் தாம்பூலம், பழம் எல்லாம் வைத்து வைத்தியரை உபசரித்தனர் கவிஞருடைய வீட்டார். கவிஞருக்கும் நன்றி உணர்ச்சி அதிகம் இருந்தது. உளம் நிறைந்த அன்போடு, கவிஞர் வைத்தியருடைய சேவையைப் பாராட்டினார். அவருடைய அன்பு ஒரு பாட்டாகவே வெளிவந்தது. பாட ஆரம்பித்தார் கவிஞர்:

மிக்க மது ரைச்சிவனும் வீரபத்திரன் கதனும்
சொக்கர் இருவரெனத் தோன்றினார்

என்று ஆரம்பித்தார். பாட்டைக் கேட்டவர்கள் எல்லாம் "என்ன! புகழுரைக்கும் ஓர் அளவு உண்டல்லவா! மதுரையில் கோயில் கொண்டிருக்கும், சொக்கலிங்கப் பெருமானையும் இந்த வைத்தியர் சொக்கலிங்கத்தையும் ஒரே தலையில் வைத்து பாடுகிறாரே! என்று அதிசயித்தார்கள்.

கவிஞர் பக்கத்தில் உள்ளவர்கள் முகத்தில் உள்ள குறிப்பை எல்லாம் கவனித்துக் கொண்டார், என்றாலும் உண்மை உண்மைதானே? அதைச் சொல்லித் தானே ஆகவேண்டும்? ஆதலால் மேலும் பாட ஆரம்பித்தார்.

மிக்கமது ரைச் சிவனும்
வீரபத்தி ரன் சுதனும்
சொக்கர் இருவரெனத்
தோன்றினார் - அக்கோன்
பிறவாமல் காப்பான்;
பிறந்தாரை மண் மேல்
இறவாமல் காப்பான் இவன்"

என்று பாடி முடித்தார். உண்மைதானே! மதுரைச் சொக்கலிங்கப் பெருமானால் அவன் விரும்பினால் எவ்வளவோ அல்லல்தரும் பிறவியே இல்லாமல் காப்பற்ற முடியும். இல்லை, அப்படி அவன் முயன்று அந்த முயற்சியில் தோற்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். மனிதன் பிறந்தே விடுகிறான். அந்த நிலையில் அப்படிப் பிறந்தவனை இறவாமல் காப்பது தானே அடுத்தபடியாகச் செய்யவேண்டியது! அந்தக் காரியத்தை அல்லவா இந்த வைத்தியர் செய்கிறார். அந்த சொக்கருக்கும், இந்தச் சொக்கருக்குமே ஒரு போட்டிதான். அந்த சொக்கர் ஒரு போட்டியில் தோற்று விடுகிறபோது, இந்தச் சொக்கர் இன்னொரு போட்டியில் வெற்றியல்லவா பெற்று விடுகிறார்! யார் எப்படிப் போனால் என்ன? தமிழர்களுக்கு ஒரு நல்ல பாட்டு கிடைத்துவிடுகிறது.

- அக்கோன்

பிறவாமற் காப்பான்
பிறந்தவரை மண் மேல்
இறவாமற் காப்பான் இவன்

என்னும் அடிகளை எத்தனை தரம் பாடிப்பாடிப் பார்த்தாலும் கொஞ்சமும் அலுக்கிறதில்லை. அந்தப் பாட்டு அவ்வளவு சுவையுடையதாக இருக்கிறது.

இந்தப் பாட்டை ஒரு நாள் ஆயிரத்து ஓராம் தடவையாக மனத்துக்குள்ளேயே நான் பாடிக் கொண்டிருந்தேன்.சமீபத்தில் நான் கோயம்புத்துர் தமிழ் விழாவிற்குச் சென்றிருந்த போது. அப்போது ஒரு நண்பர், பக்கத்தில் உள்ள பேரூருக்கு வருகிறீர்களா? என்று கூப்பிட்டார். கூப்பிட்டவர் நல்லதொருகாரும் வைத்திருந்தார். உப்புச் சப்பில்லா திருந்த அந்தத் தமிழ் விழா நிகழ்ச்சிகளைவிடக் கார் சவாரி கொஞ்சம் குஷாலாய் இருக்குமல்லவா என நினைத்து சரி என்றேன். காரிலும் போய் ஏறிக்கொண்டேன். கோயம்புத்துருக்கு மேற்கே மூன்று மைல் தூரத்திலுள்ள போரூர் என்னும் மேலைச் சிதம்பரம் போய்ச் சேர்ந்தோம். அங்குள்ள பட்டீசர் கோயிலின் கோபுரவாசலுக்குத் தெற்கே கொண்டுபோய்க் காரை நிறுத்தினோம். காரைவிட்டு இறங்கியதும் ஜட்கா வண்டி நிலையத்தையும், அதையொட்டிக் கல்லால் கட்டிய மேடையையும் பார்த்தோம்.

அந்த மேடைமீது ஒரு புளிய மரம் பெரிதாக வளர்ந்திருந்தது. பழமையான மரந்தான் என்றும் தெரிந்தது. ஸார் உங்களுக்குத் தெரியுமா இந்த புளியைப் பற்றி! இதுதான் சார் பிறவாப்புளி என்றார் நண்பர்! அதென்ன பிறவாப்புளி'. அது தான் பிறந்து, வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கொண்டு நிற்கிறதே! இதை ஏன் பிறவாப்புளி என்கிறீர்கள்? என்றேன். நண்பரோ உண்மைதான் சார். இந்த மரம் பூக்கும், காய்க்கும், பழுக்கவும் செய்யும், ஆனால் இந்த மரத்தின் பழத்தினின்றும் எடுத்த விதைகளை முளைக்கப் போட்டால் மூளைப்பதே இல்லை. இந்த மரத்துக்குப் பிறவி, இப்பிறவியோடு சரி, இனிப் பிறவியே கிடையாது’ என்று விளக்க ஆரம்பித்தார்.

'பிறவாப்புளி இங்கிருக்கிறதே! இறவாப் பொருள் ஏதேனும் உண்டோ? என்று கேள்வியைப் போட்டேன் நான். 'உண்டு சார், உண்டு, அதுவும் இந்த தலத்திலேயே இருக்கிறது! வாருங்கள் என்றார் நண்பர். அந்தப் பெரிய கோயிலுக்கு வடக்கே காஞ்சிமா நதியின் தென்கரையிலுள்ள வடகயிலாயம் என்னும் சிறிய கோயிலின் வெளிமுகப்பில் ஒரு பனை நீண்டு வளர்ந்து நின்று கொண்டிருந்தது. எத்தனை வருவடிகாலமாக அது அங்கே இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் இந்தத் தலைமுறையில் அங்கே இல்லையாம். இதற்கு அழிவே கிடையாதாம்.

இந்தப் பனையின் மேல்பட்டையைக் கஷாயம் வைத்துக் குடித்தால் தசை சம்பந்தமான எல்லா வியாதிகளும் நீங்குமாம். இப்படிப் பிறவாப் புளியும், இறவாப் பனையும் இருந்து கொண்டு பேரூரின் பெருஞ்சிறப்பை வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் நண்பர் கூறியபோது நான் முன்பு பாடிய பாட்டு, திரும்பவும் ஞாபகத்துக்கு வந்தது. வாயும் பாட்டைப் பலதடவை முணுமுணுத்தது.

பிறவாப்புளியையும், இறவாப்பனையையும் பார்த்து விட்டு - ஏன் பார்த்துவிட்டு, தரிசித்து வணங்கிவிட்டு அந்தப் பட்டிநாதர் கோயிலுக்குள்ளேயே நுழைந்தோம். கோயிலின் மகாமண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் கர்ப்பக் கிருகத்தையும் பார்த்தால், சோழர்கள் கட்டிய கோயிலாகத் தெரிந்தது. விசாரித்ததில் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலே விஜயாலயச் சோழன் கால் வழியினனான முதலாம் ராஜேந்திரன் கட்டினான் என்று தெரிந்தது.

இந்த ராஜேந்திரன்தான் கி.பி. 1013 முதல் 1045 வரை சோழசாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த கங்கை கொண்ட சோழன். இவன் அரியணை ஏறி 26 ஆண்டுகள் கழிந்தபின்னரே இக்கோயில் திருப்பணியை ஆரம்பித் திருக்கிறான்.

அர்த்தமண்டபத்தையும் மகாமண்டபத்தையும் கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மகா மண்டபம் கட்ட, விழுமிய பட்டன் தனபாலன், கன பாட்டி அரசாண்டார், வீரசேகர தேவன், அகமுடையான் தேவி, சோழப் பிச்சன், அதிக மான் முதலியோர் உதவி யிருக்கிறார்கள் என்று அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

இந்த மண்டபங்களைக் கடந்து கர்ப்பக்கிருகத்துக்கே சென்றோம். அங்கே கோயில் கொண்டிருக்கும் சுயம்பு லிங்கத்துக்கு பட்டீசர், பட்டிநாதர், கோட்டீசர் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. அன்றொருநாள் காமதேனுவின் கன்று இந்தப் போரூர்ப் பகுதியான பிப்பிலாரண்யத்தில் துள்ளி விளையாடியபோது, அதன் முன்கால்கள் ஒரு மண் புற்றுக்குள் சிக்கிக் கொள்ள, அந்தக் கன்றின் அலறல் கேட்டு அதனை விடுவிக்க வந்த காமதேனு தன் கொம்பால் அந்த புற்றை முட்ட, அந்தப் புற்றிடத்தே முளைத்திருந்த சிவலிங்கத்தின் தலையில் காமதேனுவின் கொம்புபட்டு ரத்தம் பீறிட்டது என்றும், அதைக் கண்டு காமதேனு வருந்த, அங்கே சிவபெருமான் காமதேனுவுக்கு நேரில் பிரத்தியகூஷமாகக் காட்சிகொடுத்தார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

புராணவரலாறு எப்படி இருந்தாலும் இருக்கட்டும். கன்றினது காற்குளம்பின் சுவடுகளும் பசுவின் நுனிக் கொம்பின் சுவடும் இன்னும் சிவலிங்க உருவின் சிரசில் அடையாளமாகக் கொண்டதால் கோட்டீசர் என்றும் பெயர் பெற்றுள்ளார் இறைவன் என்று தெரிகிறது. காஞ்சியில், அம்மையின் முலைத்தழும்பையும் வளைத் தழும்பையும் ஏற்றவனே இங்கு, காமதேனுவின் காற் குளம்பின் தழும்பையும், கொம்பின் நுனித் தழும்பையும் ஏற்று நிற்கிறான். தழும்பேறிய அந்தத் திருவுருவைக் கண்டு தரிசித்து, நாத்தழும்பேற அவன் புகழ் பாடி மகிழ்ந்தால், பிறவா நெறி பெறலாம் என்று கூறுவதில் ஒரு வியப்பும் இல்லை யல்லவா!

பட்டீசரை வணங்கியபின் பச்சை நாயகியையும் வணங்கினோம். இரண்டு கோவிலுக்கும் இடையேயுள்ள கல்யாண மண்டபத்திற்குள்ளும் நுழைந்து அங்கே இரும்புக் இராதிகளுக்குள்ளே சிறை செய்து வைத்திருக்கும் உற்சவ மூர்த்திகளையும் கண்டு தரிசித்தோம். இதன் பின் கிழக்கே பார்க்கத் திரும்பினோம். ஒரு சிறு வாயில் வழி யாக ஒரு பெரிய மண்டபத்துக்குள்ளேயே நுழைந்தோம்.

அதுதான் வெள்ளி மன்றம் என்றார் நண்பர். அங்கே தான் ஆனந்த நடராஜர் கோயில் கொண்டிருக்கிறார், ஆட வல்லான் என்ற பெயரோடு. அப்பெருமானை இன்று அலங்கரித்திருக்கிற முறை, அந்தஅற்புத மூர்த்தியை ஏதோ கேலி செய்வதாகவே இருக்கிறது. இரண்டு காதிலும் சுளகு அகலத்தில் வெள்ளியால் காதணி செய்து வைத் திருக்கிறார்கள். இது அந்த அற்புத மூர்த்தியின் அழகை அடியோடு கெடுக்கிறது. இதோடு விட்டாலுங்கூடப் பரவாயில்லை. ஆடை உடுத்துகிறோம் என்று சொல்லி இரண்டு கால்கள் நான்கு கைகள் எல்லாவற்றிக்கும் 'பாண்டேஜ்" போட்டது போல் வரிந்து வரிந்து சுற்றி யிருக்கிறார்கள். மேலும் என்ன என்ன அலங்காரங்களோ செய்து அந்த மூர்த்தியை அவனிருக்கும் வண்ணத் திலேயே கண்டு வணங்க வகையில்லாது செய்திருக் கிறார்கள். இத்தனை கூத்துக்கும் ஆளாக்கியிருக்கிறார்கள், அந்த ஆனந்தக் கூத்தனை.

இந்த ஆடவல்லானையும் அருட்சக்தியையும் மானசீக மாகவே கண்டு வணங்கி விட்டு வெளியே வந்தால் இத்தனை நேரம் சுற்றியதன் பலனும், இத்தனை சிரமம் எடுத்து இங்கு வந்ததன் பலனும் கைவரப் பெறுகிறோம். ஆடவல்லான் மூலத்தானத்துக்கு முன்னுள்ள சபா மண்டபம் நிரம்பவும் அழகு வாய்ந்தது. அந்த மண்டபம் 94 டி நீளமும் 38 அடி அகலமும் 16 அடி உயரமும் உடையது. 36 தூண்கள் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன.

முன் வரிசையில் இருக்கும். எட்டுத் தூண்களிலும் எட்டு அற்புதமான உருவங்கள், சிற்பக்கலையின் வெற்றிகள். அழகு செய்கின்றன. ஆகுவாகனத்தில் அமர்ந்துள்ள ஐங்கரன் ஒரு தூணில் என்றால் வீறு முகமயில் மீது விளங்கும் ஆறுமுகன் எதிர்த்த துணில்; கனல் உமிழ் கண்ணோடு காட்சி கொடுக்கும் அக்கினி வீரபத்திரனும் அகோர வீரபத்திரனும் இரண்டு துணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். யானையை உரித்துத் தமது திருமேனியில் போர்வையாகப் போர்த்திக் கொண்ட கிருத்திவாஸ்ன் ஒரு தூணில் என்றால், தாருகாவனத்து முனிவர் பத்தினிகளின் கற்பு நிலையைச் சோதிக்க, நிர்வாணமாய் மானும் மழுவும் இளமதியும் திருவோடும் சிறந்திலங்க பிட்சாடனக் கோலம் தாங்கிய பிஞ்ஞகன் ஒரு தூணிலே காட்சி கொடுக்கிறான்.

நடனக் கலையில் இந்த அகிலத்திலேயே தனக்கு நிகர் ஒருவரும் இல்லை என்னும் அகந்தையுடன் ஆடல் புரிந்த அந்த ஆலங்காட்டுக் காளியின் கோலச்சிலைக்கு எதிரிலேயே, அவள் கர்வம் அடங்க, தாளொன்றால் பாதாளம் ஊடுருவ, மற்றைத் தாளொன்றால் அண்டம் கடந்து நிற்கும் அந்த அற்புத ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும் நிற்கிறான். இந்தச் சிலைகளில் ஒவ்வொன்றும் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உடையதாய் ஒரே கல்லில் சிற்றுளி வேலையின் நயமெல்லாம் தெரியச் செதுக்கப் பட்டிருக்கிறது.

இந்த சிற்பங்களைச் செதுக்கியவன் சிம்மனாச்சாரி என்ற சிற்பி என்றும், இந்த அற்புத மண்டபத்தைக் கட்டி அங்கே இத்தகைய அதி அற்புதமான சிற்ப உருவங்களையும் நிருமாணித்தவர் கி.பி. 1625 முதல் 1659 வரை மதுரையில் அரசாண்டதிருமலை நாயக்கருடைய சகோதரரான அளகாத்திரி நாயகர் என்றும் வரலாறு கூறுகிறது.

இந்தச் சிற்ப உருவங்கள் எட்டையும் பார்ப்பதற்கென்றே கோயம்புத்துருக்குப் போகலாம். அங்கிருந்து காரிலோ வண்டியிலோ ஏறிப் போரூர் செல்லலாம். பட்டீஸ் வரனையும், பச்சை நாயகியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். நாம் மாத்திரம் என்ன அன்று அந்த பெர்கடஸன்துரை ஆறாயிரம் மைல் கடல் கடந்தல்லவா இங்க வந்து இந்தச் சிற்ப உருவங்களைப் பார்த்திருக்கிறார்.

பார்த்ததோடு மட்டுமல்லாமல், போரூர் வெள்ளி மன்றத்துச் சிற்ப உருவங்கள், சிற்பக்கலை மலினதசை அடைந்த காலத்தில் உருவனவையல்ல, அக்கலை உச்ச நிலையில் உயர்ந்து விளங்கிய உன்னத காலத்தில் உருவானவையே என்று சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

இந்த எட்டுச்சிலைகளையும் போரூர் சென்று காண முடியாதவர்கள் இரண்டு உருவங்களை மட்டும் பார்த்தாவது மகிழட்டும் என்றுதான் இரண்டு அதி அற்புதமான சிலா உருவங்களின் படங்களை வெளியிட்டிருக்கிறோம். பிறவாயாக்கைப் பெரியோன் என்று சிவனை பாராட்டுகிறோம். அந்தப் பிறவாப் பெருமையுடைய இறைவனது இரண்டு மூர்த்தங்கள் இறவாப்புகழோடு இன்று இங்கே காட்சி கொடுக்கின்றன. போரூர் பிக்ஷாடன. மூர்த்தி வெகு அழகான உருவம். தாருகாவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மானுக்கும்; இறைவன் புல்லருத்துவது எவ்வளவு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மானும் எப்படி தலையைத்திருப்பிக் கொண்டு அந்தப் புல்லைக் கடிக்கத் துடிக்கிறது. அந்த ஒரு பகுதியிலேயே மனம் அப்படியே லயித்து விடுகிறது. அந்தச் சிலையைப் பார்க்கும் நமக்கு ஒரு வளைவொடு கூடிய வலதுகால், துவண்டு நிற்கும் அந்த இடை, கருணையோடு சாய்ந்-திருக்கும் தலை எல்லாம். ஏதோ கவிதையில் காணுகின்றோமே, 'லளிதம்', அந்த 'லளிதம்' அந்த 'ரிதம்' என்பதை அல்லவா கல்லில் உருவாக்கி விடுகிறது. தலையணி, மார்பணி, இடையணி, காலணி எல்லாம் அழகுக்கு அழகு செய்கின்றன. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளும் இந்த ஆணழகனைக் கண்டுதானே நிறை யழிந்தார்கள்? அதுதானே அன்றையக் கதை!

இந்த மூர்த்திக்கு எதிர்த்திசையில் இருப்பவர் தாம் கஜசம்ஹாரமூர்த்தி. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய அந்த யானையைச் சங்கரித்து, அதன் தோலையே போர்வையாகப் போர்த்திக் கொண்டு நிற்கின்ற நிலையில் சிலை அமைந்துள்ளது. சங்கார மூர்த்தியின் காலடியில் உயிரிழந்த யானையின் தலை மிதிபடுகிறது. அந்தத் தும்பிக்கை, அந்த யானையின் அலறலோடு கூடிய வாய், ஒற்றைக் காலில் நின்று மற்றொருகாலைத்துக்கி மடித் திருக்கும் நிலையிலே ஒரு சுழற்சி; எட்டுக்கைகளாலும் அந்த யானைத் தோலை ஏதோ, 'பாராசூட்” விரிப்பது போல விரித்துப் போர்த்தியிருக்கும் நேர்த்தியெல்லாம் பார்த்துப் பார்த்து அனுபவிக்கத்தக்கவை. மனிதனைப் பிறவாமல் காக்கும் திறமுடையவன்தான் இறைவன். பிறவாத யாக்கையுடைய பெருமகன்தான் அவன். என்றாலும், அவனுக்கும் அவனுடைய மூர்த்தங்களுக்கும் இறவாப்புகழ் அளிக்க கூடியவன் மனிதனாகத்தான் இருந்திருக்கிறான். அந்த மனிதனையே, கலைஞன், சிற்பி என்கிறோம் நாம்.