ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/மணிவாசகர் கண்டதில்லை


மணிவாசகர் கண்டதில்லை


உருத் தெரியாக் காலத்தே
உள் புகுந்து என் உளம் மன்னிக்
கருத்திருத்தி ஊன் புக்குக்
கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாபடியேன்
அணிகொள் தில்லை கண்டேனே

என்பது மணிவாசகர் பாடிய பாடல். திருப்பெருந் துறையிலே குருந்த மரத்தடியிலே தன்னை வலிந்து ஆட்கொண்ட பெருமானை, அப்பெருமானோடு இணைந்து அவர் அருளிய சிவபதத்தின் அருமையை எல்லாம் தான் தில்லையிலே கண்டு கொண்டதாக மணிவாசகர் பாடுகிறார். மணிவாசகருக்குத் திருப்பெருந்துறைக்கு அடுத்த படியாக தில்லையில் ஈடுபாடு அதிகம் இருந்திருக்கிறது. ஆதலினால்தான் "தில்லை பாதி திருவாசகத்தில்" என்ற பழமொழியே எழுந்திருக்கிறது.

தில்லை மூதூர் ஆடிய திருவடியிலே அளவிலா ஈடுபாடு உடையவராய் இருந்திருக்கிறார். திருப்பெருந்துறையை விட்டுப் புறப்பட்ட மணிவாசகர் உத்தரகோச மங்கை, திருவிடைமருதூர், திருவாரூர், திருமுதுகுன்றம், திருவண்ணாமலை எல்லாம் சென்றபின் தான் திருத்தில்லை வந்து அடைந்திருக்கிறார். அங்கு தான் திருவாசகத்தை மணிவாசகர் சொல்லச் சொல்ல, சிற்றம் பலவன் ஏட்டில் எழுதினான் என்பது வரலாறு. மேலும் திருவாசகத்திற்கு உரை சொல்லும்படி மணிவாசகரைக் கேட்டபோது, அதன் பொருளாக விளங்குபவன் தில்லையில் நடம்புரியும் திருச்சிற்றம்பலவனே என்று அவனையே சுட்டிக் காட்டி நின்றார் என்பதும் கர்ண பரம்பரை வழக்காக நாம் தெரிந்திருக்கிறோம்.

தில்லையில் வித்தகனார் விளையாடலைக்கண்டு பரவசம் அடைந்த மணிவாசகர், பின்னர் பலநாள் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் குலாப்பத்து, திருப்பதிகம், கோயிற்பதிகம், கீர்த்தித் திருஅகவல், திரு அண்டப்பகுதி, போற்றித்திருஅகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருஉந்தியார், திருத்தோணோக்கம், திருப்பூவல்லி, திருப்போன்சல் முதலியவற்றைப் பாடினார். அன்னைப் பத்து, கோத்தும்பி, குயிற்பத்து, தசாங்கம், அச்சப்பத்து இவைகளும் இங்கு எழுந்தவையே, இவைகளைப் பற்றி எல்லாம் விரிவாகப் பேச காலமோ நேரமோ இடந்தராது.

தில்லையிலே ஆனந்தக் கூத்தருடைய தாண்டவத்திலே ஈடுபட்டு அனுபூதி பெற்று அசைவற்று நின்றிருக்கிறார். இதை, அறியாத, மெய்க்காவலர் இவரைக் கனக சபையை விட்டு கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொற்களை இவர் செவி ஏற்கவில்லை. சிவானந்தப் பிரகாசத்தில் திளைத்து நின்று சிவசிவ என்றே குரல் கொடுத்திருக்கிறார்.

அதன்பின் மோனநிலை கலைந்து, கோயிலை வலம் வரும்போது, கீர்த்தத்திருவகவல், திரு அண்டப்பகுதி, போற்றித் திரு அகவல் ஆகிய மூன்று அகவல்களையும் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார். அதனால்தான் இன்னும் சைவத் தமிழ் உலகம், மக்கள் திருக்கோயிலில் வலம் வரும்போது வீண்பேச்சும் சழக்குரையும் பேசாது இவ்வகவல்களையே பாராயணம் செய்து கொண்டே வரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. ஆனால் நாமெல்லாம் இந்த மரபை அனுஷ்டிக்கிறோமா என்பது கேள்வி.

கீர்த்தித் திரு அகவலில், அரியொடு பிரமற்கு அளவறிய வொண்ணாதவனாக, தூண்டு சோதி தோற்றிய தன்மையை நினைக்கிறார். உத்தரகோசமங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பைப் பாராட்டுகிறார். திரு அண்டப் பகுதியிலோ இன்னிசை வீணையில் இயைந்தோனாக, பிரமன்மால் காணப் பெரியோனாக, அதே சமயத்தில் பக்திவலையில் படுவானாக, சொற்பதம் கடந்த தொல்லோனாக எல்லாம் இறைவனைக் காண்கிறார், அவன் பஞ்ச பூதங்களிலும் நிறைந்திருக்கிற தன்மையை.

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

என்றெல்லாம் விளக்கம் தருகிறார்.

கீர்த்தித் திருஅகவல் முதலிய மூன்று அகவல்களையும் பாடிய பின்னர் மணிவாசகர் தில்லையில் தங்கியிருந்த காலத்து அங்குள்ள பெண்கள் வளைக்கரங்கள் ஒலிக்க, கிண்கிணிமாலைகள் ஒலிக்க, முகத்தில் குறு வியர்வை பொடிப்ப, விழிபுரளச் சுண்ணம் இடிப்பதைக் கண்டார். அதையே பொற்சுண்ணம் இடிக்கும் பாடல்களாகப்

பாடினார்.

மூத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய் குழல் வண்டினம் ஆட ஆட
சித்தம் சிவனொடும் ஆட ஆட
செங்கயற்கண் பனி ஆட ஆட

பித்தெம் பிரானொடு ஆட ஆட
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொடு ஆட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே,

என்னும் பாடல்களைப் படிக்கும்போது, சுண்ணம் இடிப்பாரது சுவை மிகுந்த பண்ணோசையும், ஆடிப்பாடும் துள்ளலோசையும் கலந்து நமக்குப் பேரானந்தம் தருகிறது என்றால் வியப்பில்லையே.

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்க கொட்டி இசைத்திடும் ஒரு கூட்டப் பாட்டே தெள்ளேணம் கொட்டுதலாகும். நம் நாட்டில் இதனைக் கும்மி என்றால் 'மலையாள மக்கள், கைகொட்டிக்களி என்றே இதனை அழைக்கின்றனர். இந்த தெள்ளேனப் பாடல்கள் சாதாரணமான கொள்கைகளை மட்டும் பிரதிபலிப்பதாக இல்லை, பெரிய உண்மைகளையே, எளிய தமிழில், இனிய சந்தத்தில் இசைத்திடும் பாடல்களாக அமைகின்றன.

வான் கெட்டு மாருதம் மாய்ந்து
அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டலின்றி
சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன் கெட்டு உணர்வு கெட்டு
என்னுள்ளமும் போய்
நான் கெட்டவா பாடித்
தெள்ளேனம் கொட்டாமோ

என்று கேட்கும் போது, "நான்" என்னும் அகந்தை நம்மை விட்டு ஓடியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி தோன்றுகிற தல்லவா.

தில்லையில் அடிகளார் பாடிய பாடல்களில் எல்லாம் சிறப்பாக நான் கருதுவது திருச்சாழல் பதிகத்தையே. இன்றைய உலகம் கேள்வி பதில் உலகமாக இருக்கிறது. பத்திரிகைகளிலே சினிமா, சினிமா நடிகர்களைப் பற்றிய கேள்வியும் பதிலும் நிறைந்திருக்கிறது. சில கேள்விகளுக்குப் பேனா மன்னனும், சில கேள்விகளுக்குப் பைங்கிளியும், இன்னும் சில கேள்விகளுக்குச் சட்டாம் பிள்ளையும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்துதானோ மணிவாசகரும் கேள்விபதில் முறையிலேயே திருச்சாழல் பதிகம் பாடியிருக்கிறார். சாழல் என்ன விளையாட்டு என்று தெரியவில்லை. அம்மானையைப்போல் இருந்திருக்க வேண்டும். இச்சாழல் பாடல்களுக்குப் பகைப் புலனாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஈழநாட்டிலிருந்து வந்த புத்தர்கள் சிலர், தில்லை வந்து தில்லைவாழ் அந்தணரை வாதுக் கழைத்திருக்கின்றனர். இறைவன் ஆணைப்படி, மணிவாசகரே அவர்கள் வாதத்திற்குப் பதில் சொல்ல வந்து நின்றிருக்கிறார்.

பௌத்தர்களோ வல் வழக்காட, மணிவாசகர் இறைவனை நினைந்திருக்கிறார், பௌத்தர்கள் எல்லாம் வாய் மூடி ஊமைகளாக நின்றிருக் கின்றனர். தில்லையை ஆண்ட மன்னன் மகள் ஒருத்தி ஊமையாக இருந்திருக்கிறாள். கடைசியில் இறை அருளால் அவளே வாய் திறந்து பேசி, பௌத்தர்களை எல்லாம் மடக்கியிருக்கிறாள். இந்த அற்புத நிகழ்ச்சிக்கு. ஓர் உருவம் கொடுத்தே மணிவாசகர் திருச்சாழலில் கேள்வி பதிலாகவே பாடியிருக்கிறார் என்பர்.

தென் பாலுகந்தாடும்
தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பாலு கந்தான்
பெரும் பித்தன் காணேடி

என்று சாழல் விளையாட்டில் ஈடுபட்ட பெண் ஒருத்தி கேள்வி போடுகிறாள். இதனைக் கேட்ட மற்றொரு பெண்.

பெண்பால் உகந்திலனேற்
பேதாய் இருநிலத்தோர்
விண்பாவியோ கெய்தி
விடுவர்காண் சாழலோ

என்று பதில் கூறி இருக்கிறார்.

அம்பலத்தே கூத்தாடி
அமுது செயப் பலிதிரியும்
நம்பனையும் தேவனென்று
நண்ணுவதும் என்னேடி

என்பது ஒரு பெண்ணின் கேள்வி,

நம்பனையும் மாமா கேள்
நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாஎன்று
ஏத்தினகாண் சாழலோ

என்பது இக்கேள்விக்குப் பதிலாய் அமைகிறது. இக் கேள்வி பதில்தான் எவ்வளவு சுவையாக அமைந்திருக்கிறது.

தில்லையில், பூவல்லி கொய்து, கோத்தும்பி விரட்டி, பொன்னுசல் ஆட்டி, பலபல பாக்களைப் பாடியபின், தன் இதயக் குயிலையும் கூவ விட்டிருக்கிறார்.

கீதம் இனிய குயிலே!
கேட்டியேல் எங்கள் பெருமாள்
பாதமிரண்டும் வினவிற்
பாதாளம் ஏழினுக்கப்பால்
சோதி மணிமுடி சொல்லில்
சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதிகுணம் ஒன்றும் இல்லான்
அந்தமிலான் வரக்கூவாய்

என்று குயிலுக்கு வேண்டுகோள் விடுகிறபோது இறை உணர்ச்சி மணிவாசகரது உள்ளத்தில் நிறைந்திருக்கும் பான்மையை உணர்கிறோம். தில்லையில் மணிவாசகர் பெற்ற அனுபவம் எல்லாம் இப்பாடல்களில் விளங்கக் காண்கின்றோம். மணிவாசகர் கண்ட தில்லை அவருக்கு மாத்திரம் அல்ல, திருவாசகம் படிக்கும் நமக்கெல்லாமே ஓர் அற்புத அனுபவமாகவே அமைகிறது.

தாய் நாடான தமிழ் மக்கள் இந்தத் தில்லையாம் சிதம்பரத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்தால், சேய் நாடான ஈழத்து மக்களும் காரை நகர் என்னும் ஈழத்துச் சிதம்பரத்தை நினைந்து நினைந்து மகிழலாம்தானே. அங்கு நடக்கும் திருவெம்பாவை விழா, மணிவாசகர் விழா எல்லாம் ஈழத்தில் நிலைத்திருக்கும் சைவ உணர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது என்று நான் சொன்னால் அது மிகையாகாதல்லவா.

ஆ.பெ.அ.நெ-8