இயல் தமிழ் இன்பம்/காக்கை கற்பிக்கும் ஆக்க நிலை

17. காக்கை கற்பிக்கும் ஆக்க நிலை

மலையத்தனைக் கருத்து

நாம் நாடோறும் எளிதிற் காணும் காக்கைகளின் செயல் ஒன்றினைக்கொண்டு, வள்ளுவனார் மலையத்தனை பெரிய கருத்து ஒன்றை மக்கள் இனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அந்தக் கருத்தைக் கட்டளைக் கருத்தாகவே கற்பித்துக் கூறியுள்ளார் என்றும் கொள்ளலாம்.

இந்தியர்கள் தமியராய் - மறைவாக உண்ணுவர் என்பதாக ஒரு கருத்தை மேனாட்டார் கூறுவதாகச் சொல்வதுண்டு. மறைவிடத்திலன்றி வெளியிடத்தில் பலரும் காணவும் உண்ணுபவர் எனப்படுபவரும் உண்ணும், உணவைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுவதில்லை.

காக்கை கற்பிக்கும் பாடம்

ஆனால், ஒரு காக்கையோ, ஓரிடத்தில் ஓர் இரையைக் காணின், மறைவாகத் தான் மட்டும் தனித்து உண்ணாமல், மற்ற காக்கைகளையும் கரைந்து (அழைத்து) உண்ணும். உண்டு கொண்டிருக்கும் போதும் கரைந்துகொண்டே உண்ணும்.

மக்கள் இவ்வாறு செய்வரா? இல்லையே! தாம் பெற்ற செல்வத்தை மறைக்காமல், காக்கையைப் போல், மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து நுகரும் மாந்தர்க்குச் செல்வம் குறைந்துகொண்டேயிருக்குமா-அல்லது-நிறைந்துகொண்டேயிருக்குமா? குறைந்துகொண்டே போதுதான் இயற்கை. பரி வள்ளல் கூட வாரி வாரி வழங்கியதால் ஒன்றும் இல்லாதவனாகிவிட்டான் என்பது ஒருசாரார் கருத்து. அளவின்றிப் பிறர்க்கு அளித்தமாந்தர் சிலர் வறிஞராகி விட்ட வரலாறு நேரில் அறிந்ததே.

வள்ளுவரின் புரட்சி

உண்மை யிவ்வாறிருக்க, வள்ளுவனார் புராட்சியான ஒரு புதுக்கருத்தைக் கூறியுள்ளார். கரவாது (மறைக்காமல்) இனத்தையும் கரைந்து உண்ணும் காக்கையைப் போல் நடந்து கொள்பவர்க்கே செல்வங்களும் உளவாகும் என்று அவர் அறிவித்துள்ளார். இக்கருத்துடைய குறளாவது:

“காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள”

(பொருட்பால் - சுற்றம் தழால்)

இக்கருத்து ஒருவகையில் நடைமுறைக்கு மாறாகத் தெரிகிறதல்லவா? அங்ஙனமாயின்; இக்கருத்து பொருந்துமாறு எங்ஙனம் என ஆராயவேண்டும்,

வரலாறு நடந்ததைக் கூறுவது; இலக்கியமோ நடந்ததை நடப்பதை அடிப்படையாகக் கொண்டு இனி நடக்க வேண்டியதைக் கூறுவது என்பது. “இலக்கியமும் வரலாறும்” என்பது தொடர்பான ஒரு கருத்தாகும்.

கருதுகோள்

திருக்குறள் ஓர் இலக்கியம். “நடந்ததை அடிப்படையாகக் கொண்டு நடக்க வேண்டியதைக் கூறுவது இலக்கியம்” என்ற கருதுகோளை (Formula) மேற்காட்டியுள்ள குறளோடு பொருத்திப் பார்க்குங்கால் அறியப்படும் உண்மையாவது:

பிறர்க்கு வழங்குபவரிடத்திலேயே செல்வம் இருக்கும் என்பது, வள்ளுவர் வெளிப்படையாகக் கூறியுள்ள கருத்து. இத்ற்குள்ளே மறைந்து பொதிந்து கிடக்கும் கருத்து ஒன்று உண்டு: காக்கையைப் போல் பரந்த உளப்பாங்கு உடையவரிடத்திலேயே - பலர்க்கும் பயன்படுபவரிடத்திலேயே செல்வம் இருக்க அரசு ஒப்புதல் அளிக்க (அனுமதிக்க) வேண்டும்: அவ்வாறு பயன்படாதவர் செல்வத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என்பது அதன் உட்கருத்து. இஃது, அரசு மேற்கொள்ள வேண்டிய கட்டளைக் கருத்தாகும். “நடந்ததை-நடப்பதை அடிப்படையாகக் - கொண்டு நடக்க வேண்டியதைக் கூறுவது இலக்கியம்” என்ற கருதுகோளின்படி, மேற்காட்டியுள்ள குறளின் பொருத்தப்பாடு இப்போது புலனாகலாம்.

ஆக்கம் யாரிடத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதைக் காக்கை கற்பிக்கின்றதல்லவா? குறிப்பு:- இந்தக் கருத்து, 1982ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், “இலக்கியமும் வரலாறும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், கட்டுரையாசிரியர் பேசிய கருத்துக்களுள் ஒன்றாகும்.