இயல் தமிழ் இன்பம்/நிகழ்வது தழீஇய எச்ச உம்மை

18 நிகழ்வது தழீஇய எச்ச உம்மை

காலம் மூவகைப்படும்; அவை: இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பன - என இலக்கண நூலாசிரியர்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - வினையியலில்

“காலம் தாமே மூன்றென மொழிப” (2)

“இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப் பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை யுடைய தோன்ற லாறே” (3)

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

உரைகள்

தெய்வச் சிலையார்:- மேற்சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும் பொருள் நிலைமையை உடைய தோன்று நெறிக்கண்.

இளம்பூரணர்:- காலம் மூன்றாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பதூஉம், வெளிப்படக் காலம் விளங்காதன குறிப்பு வினை என்பதூஉம் பெற்றாம்.

(வ-று) உண்டான், உண்ணா நின்றான், உண்பான் எனவரும்.

இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது, தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறாவமை.

சேனாவரையர்:- இளம்பூரணர் கூறியுள்ள அனைத்தையும் கூறி, மேற்கொண்டு தொடர்ந்து சேனாவரையர் கூறியிருப்பது:- தொழிலாவது பொருளினது புடை பெயர்ச்சியாகலின், அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின், நிகழ்ச்சி என்பதொன்று அதற்கு இல்லையாயினும், உண்டல்-தின்றல் எனப் பஃறொழில் (பல்தொழில்) தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின் உண்ணா நின்றான் - வாரா நின்றான் என நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று என்பது.

இனி நன்னூல் சொல்லதிகாரம் - பொதுவியலில் காலம் பற்றிப் பவணந்தியார் கூறியுள்ள நூற்பா வருமாறு:

“இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே” (31)

உரைகள்

மயிலைநாதர் உரை:- போவதும் வருவதும் நிகழ்வதும் என்று காலம் மூவகைப்படும்.

இறப்பு, நிகழ்வு, எதிர்வு என முறையின் கூறாராயது, காலம் என ஒரு பொருள் இல்லை என்பாரும், நிகழ்காலம் ஒன்றுமே என்பாரும், இறந்ததூஉம் எதிர்வுதூஉம் என இரண்டு என்பாரும், இறப்பு நிகழ்வு எதிர்வு என மூன்றென்பாருமான இப்பகுதியார், ஆசிரியர் அவருள் காலம் இல்லை என்பார், ஒரு பொருள் நிகழுமிடத்துப் பொருண்மைப் பேறல்லது காலம் என்று வேற்றுணர்வும் பிறவும் படுவதில்லை என்ப. இனி, காலம் ஒன்றென்பார், யாறொழுகும் - மலை நிற்கும் என உள்பொருள் ஒரு காலத்தானே சொல்லப்படும் பிறிதில்லையென்ப. இறப்பும் எதிர்வும் என இரண்டு என்பார், கோல் ஓடுங்கால் சென்றதூஉம் செல்வதூஉம் அன்றே? அதனால் நிகழ்வு இல்லை என்ப. மூன்று என்பார் - நெருநல் - இன்று - நாளை எனவும், வந்தான் - வாரா நின்றான் - வருவான் எனவும், இவ்வாறு சொற்கள் மூன்று காலமும் காட்டுதலின் மூன்று என்ப. இவ்விகற்பமெல்லாம் அறிவித்தற்கு இவ்வாறு சூத்திரம் செய்தார் எனக் கொள்க.

ஏகாரத்தான், மூன்று என்பதே ஈண்டுப் பொருள் எனக் கொள்க.

“உலக வழக்கமும் ஒரு முக் காலமும்
நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான்”

என்றார் அகத்தியனார்,

சங்கர நமச்சிவாயர் (சிவஞான முனிவர்) உரை:- “பொருள்களின் தொழில் இறந்ததும் நிகழ்வதும் எதிர்வதும் ஆதலின், அவ்வாறு இயற்றும் காலமும் மூன்று கூற்றதாம் எனவும் உய்த்துணர்தலின், இங்ஙனம் உணராது காலம் இன்றெனவும் - நிகழ் காலம் ஒன்றுமே எனவும் - இறந்த காலம் எதிர்காலம் இரண்டுமே எனவும் கூறுவார் கூற்றை விலக்கிக் காலம் மூன்றே என்றார். இதன் திறம் இன்னும் விரித்துரைப்பிற் பெருகும். நிகழ் காலம் போல வெள்ளிடைப் பொருளன்றி, இறந்த காலம் எதிர்காலம் இரண்டும் மறை பொருளாய் நிற்றலின், இறப்பு நிகழ்வு என்னாது இறப்பு எதிர்வு என்றார்.

இதுகாறும், எடுத்துக் கொண்ட கட்டுரைக்கு அடிப்படை போடப்பட்டது. இனி, மேலே கட்டடம் எழுப்பவேண்டும்.

இதுகாறும் கூறியவற்றால், இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலம் மூவகைப்படும் என்னும் கொள்கை இலக்கண நூலாசிரியர்களாகிய அகத்தியனார், தொல்காப்பியனார், பவணந்தியார் ஆகியோர்க்கு உடன்பாடு என்பது தெரிய வருகிறது.

ஆனால், உரையாசிரியர்களின் உரைக் குறிப்புகளால் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. காலம் என ஒன்று இல்லை என்பது சிலர் கருத்து. காலம் என ஒன்று இருப்பதாகக் கொள்ளினும் நிகழ் காலம் ஒன்று மட்டுமே உள்ளது என்பது வேறு சிலரின் கொள்கை! நிகழ் காலம் என்பது இல்லை-இறந்த காலம், எதிர் காலம் என்னும் இரண்டு மட்டுமே உள்ளன என்பது மற்றொரு சாராரின் கோட்பாடு. அந்த அந்தக் கொள்கைக்குக் கூறப்படும் காரணங்களையும் உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாம் அவற்றைச் சிறிது விவரமாகக் காண்பாம்.

நம் நாட்டு அறிஞர்களைப் போலவே, ஐன்ஸ்டின் போன்ற அயல் நாட்டு அறிஞர்களும் காலக் கோட்பாட்டில் மாறுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

காலம் என ஒன்று இல்லை என்னும் கருத்து எனக்கும் உடன்பாடே, அப்படியெனில், ‘நிகழ்வது தழீஇய எச்ச உம்மை’ என்னும் தலைப்பை எவ்வாறு கட்டுரைத் தலைப்பாய் எடுத்துக் கொண்டாய்? என்னும் வினா எழும். படிப்படியாக மேலே செல்வோம்.

இடம் என ஒரு பொருள் இல்லாதது போலவே, காலம் எனவும் ஒரு பொருள் இல்லை. இரண்டும் சூழ்நிலைகளால் வரையறுக்கப் படுகின்றன. வெட்ட வெளியில் வீடு கட்டிக் கொண்டு இது இன்னார் வீடு-அது அன்னார் வீடு எனச் சூழ்நிலையால் நாமே வகுத்துக் கொள்கிறோம். குறிப்பிட்ட சில எல்லைகளை அமைத்துக் கொண்டு, இது வரையும் இந்த மாவட்டம்-இந்த மாநிலம்-இந்த நாடு எனவும், இவற்றிற்கு அப்புறம் உள்ளவை அந்த மாவட்டம்-அந்த மாநிலம் அந்த நாடு எனவும், சூழ்நிலைகளின் உதவியால் நாமாக முடிவு கட்டுகிறோம்.

இது போலவே, பூவுலகம் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிற்றையும் சுற்றும் சூழ் நிலையால், இரவு–பகல், காலை – மாலை, கோடைக் காலம் – மழைக் காலம் குளிர்காலம் என்றெல்லாம் பகுத்துக் கொள்கின்றோம். செய்த செய்கின்ற - செய்யப்போகிற நிகழ்ச்சிகளைக் கொண்டு இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படுத்திக் கொண்டோம். எனவே சூழ்நிலைகளின் துணையால் காலம் என ஒன்றை நாம் உண்டாக்கிக் கொண்டுள்ளோம்.

பொருள்களின் புடை பெயர்ச்சியாகிய தொழில் நடந்து கொண்டிருக்கும் போது, நடந்து விட்டதை இறந்த காலமாகவும் தொடர்ந்து நடக்க விருப்பதை எதிர் காலமாகவும் கொள்வதால், இடையில் நிகழ் காலம் என ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று கருதிச் சிலர் நிகழ்காலத்தை நீக்குகின்றனர். தொழில் நடந்து விட்டதோ இனி நடக்க இருப்பதோ நேருக்கு நேர் புலப்படாமல் மறை பொருளாக இருப்பதால், இறப்பு-எதிர்வு இல்லை. நேருக்கு நேர் தொழில் நடப்பது தெரிவதால் நிகழ்காலம் என்பது மட்டுமே உள்ளது என்பது நிகழ்காலக் கொள்கையினரின் கூற்று.

இறப்பு எதிர்வு என்பன மறை பொருளாதலானும், நிகழ்வு ஒன்றே நேருக்குநேர் தெரிந்து கொண்டிருப்பதாலும், நன்னூல் ஆசிரியர், இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற வரிசையில் சொல்லாமல், இறப்பு எதிர்வு நிகழ்வு என வரிசைப்படுத்தியுள்ளார் எனச் சங்கரநமச்சிவாயர் கூறியிருப்பதிலிருந்து அறியக்கூடியது, நிகழ்காலம் என ஒன்று உண்டு என்னும் உறுதிப்பாடே! நிகழ்காலம் என்பதற்கு நாம் ஒரு வகை விளக்கம் சொல்வோமே! இறந்த காலமும் நிகழ்காலமும் சந்திக்கும் நேரம் நிகழ்காலம் ஆகும்-எதிர் காலத்திலிருந்து இறந்த காலம் பிரியும் நேரம் நிகழ்காலம் ஆகும்-என்று சொல்லலாமே! நிகழ்வு உண்டு என்ற அடிப்படையுடன் நிகழ்வது தழீஇய எச்சஉம்மைக்கு வருவோம்:

‘உம்’ என்பதன் பொருள்கள்:

தொல்காப்பியர் தம் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் இடையியலில்

“எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே” (1)

என, ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கு எட்டுப் பொருள்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த எட்டனுள் நமக்கு வேண்டிய ‘எச்சம்’ என்னும் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம். இதற்கு உரையாசிரியர்கள் தரும் எடுத்துக்காட்டு விளக்கம் வருமாறு:

இளம்பூரணர்: சாத்தனும் வந்தான் என்றால், அவனையன்றிப் பிறரையும் வரவு (பிறர் வரவையும்) விளக்குமாகலின், அஃது எச்ச உம்மை.

சேனாவரையர்: சாத்தனும் வந்தான் என்னும் உம்மை கொற்றனும் வந்தான் என்னும் எச்சங் குறித்து நிற்றலின் எச்ச உம்மை. கொற்றவனும் வந்தான் என்பதூஉம், இறந்த சாத்தன் வரவாகிய எச்சங்குறித்து நிற்றலின் எச்ச உம்மை.

தெய்வச்சிலையார்: எச்சம் இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதும் என இருவகைப்படும். சாத்தனும் வந்தான் என்றவழி, முன்னொருவன் வரவு குறித்தானாயின் இறந்தது தழீயதாம்: பின்னொருவன் வரவு குறித்தானாயின் எதிரது தழீஇயதாம். ஏனையொழிந்த பொருளைக் குறித்தமையான் எச்சமாயிற்று.

பவணந்தியார் தம் நன்னூல்-சொல்லதிகாரம் இடையியலில்

“எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே”(6)

என ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கு எட்டு பொருள் கூறியுள்ளார், ‘உம்’ என்பதே ‘உம்மை’ எனப்படுகிறது.

இந்த எட்டனுள் ஈண்டைக்கு வேண்டிய ‘எச்சம்’ என்பதற்கு மட்டும் உரையாசிரியர்கள் கூறியிருப்பனவற்றைக் காண்போம்.

மயிலைநாதர்:- சாத்தனும் வந்தான் என்பது எச்சம்; அவனையேயன்றிப் பிறரையும் வரவு (பிறர் வரவையும்) விளக்கலின்,

சங்கர நமச்சிவாயர்:- சாத்தனும் வந்தான் என்பது கொற்றன் வந்ததன்றி என பொருள்படின் இறந்தது தழீஇய எச்ச உம்மை. கொற்றனும் வருவான் எனப் பொருள்படின் எதிரது தமீஇய எச்ச உம்மை.

காண்டிகை உரை:- எச்சம் இறந்தது தழீஇய எச்சமும் எதிரது தழீஇய எச்சமும் இருவகைப்படும். சாத்தனும் வந்தான் - இங்கே, கொற்றன் வந்ததன்றி, என்னும் பொருளைத் தந்தால் இறந்தது தழீஇய எச்சம்; இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத் தந்தால் எதிரது தழீஇய எச்சம்.

தொல்காப்பிய உரையாசிரியர்கட்குள் தெய்வச்சிலை யாரும், நன்னூல் உரையாசியர்கட்குள் சங்கர நமச்சிவாயர் காண்டிகை உரைகாரர் ஆகியோருமே, இறந்தது தழீஇய எச்சம், எதிரது தழீஇய எச்சம் என்னும் எச்சப் பெயர்களை அறிமுகம் செய்துள்ளனர். மற்ற உரையாசிரியர்கள் இதுபற்றிப் பேச்சு மூச்சு காட்டவில்லை.

முன்பெல்லாம் கூட்டங்களில் பேச்சாளர்களேயன்றித் தலைவர் ஒருவர் இருப்பார். இப்போது முன்னிலை வகிப்பவர் என ஒருவர் முளைத்துக் கொண்டுள்ளார். வாழ்த்துரையாளரும் வரவழைக்கப்படுகிறார். இம்மூவருள், முதலில் முன்னிலையாளர் வந்து விட்டார். முதன்மையாகத் தலைவரை எதிர்நோக்கியுள்ளனர். தலைவரும் வந்து விட்டார். உடனே, கழகத்தார்கள் தலைவரும் வந்து விட்டார் எனக் கூறுகின்றனர். இங்கே தலைவரும் என்பதில் உள்ள உம், முன்னால் நடந்துவிட்ட (இறந்து விட்ட) முன்னிலையாளரின் வருகையைத் தழுவுகிறது. எனவே, தலைவரும் என்பதில் உள்ள ‘உம்’ இறந்தது தழீஇய (தழுவிய) எச்ச உம்மை எனப்படுகிறது.

வாழ்த்துரையாளர் வராத நிலையில், தலைவர் வந்து விட்டாராயின், தலைவரும் வந்து விட்டார் என்று கூறின், தலைவரும் என்பதில் உள்ள உம், இன்னும் வாழ்த்துபவர் வரவில்லையே என எதிர்காலத்தில் வர இருக்கிற வாழ்த்துரையாளரைத் தழுவுவதால் எதிரது தழீஇய எச்ச உம்மை எனப்படுகிறது.

தலைவரும் வந்து விட்டார் என்பதில் உள்ள ‘உம்’ இரண்டையும் தழுவுவதாகவும் கூறலாம். அதாவது-முதலில் முன்னிலையாளர் வந்து விட்டார் என்ற இறந்த காலத்தையும், இன்னும் வாழ்த்துபவர் வரவில்லை என்ற எதிர்கால நிகழ்ச்சியையும் தழுவுவதால், இந்த உம்மை, இறந்ததும் எதிரதும் தழுவிய எச்ச உம்மை என்றும் கூறலாம்.

முன்னிலையாளரும் தலைவரும் வாழ்த்துபவரும் மற்றும் வரவேண்டியவர்களும் வந்து விட்டனர் என்பதில், எது எது எதை எதைத் தழுவுகிறது என்று வினவின், எதுவும் எதையும் தழுவவில்லை-இங்கே உம்மைகளை எண்ணிக்கைப் பொருளில் உள்ள எண் உம்மையாகக் கொள்ளவேண்டும், ஏனெனில், இங்கே எதுவும் எச்சமாக குறைவாக இல்லை. தலைவரும் வந்து விட்டார் என்பதிலோ, ‘உம்’ தன்னில் தானே கருத்து முடியாமல், இன்னும் யரோ வந்து விட்டவரையோ-இன்னும் யாரோ வரவேண்டியவரையும் குறிக்கும் குறைச் சொல்லாக - எச்சச் சொல்லாக இருப்பதால் எச்ச உம்மை எனப் பெயர் வழங்கப்படுகிறது.

நிகழ்வது தழுவுவது

இலக்கண உரையாசிரியர்கள், இறந்தது தழீஇய எச்ச உம்மை, எதிரது தழீஇய எச்ச உம்மை என்னும் இரண்டைத் தவிர, நிகழ்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ‘நிகழ்வது தழீ இய எச்ச உம்மை, என ஒன்று இருப்பதாக எங்கும் கூறவேயில்லை. அதை நாம் கண்டு பிடித்தாக வேண்டும்.

‘ஒரே நேரத்தில் முருகனும் கூவினான்-கண்ணனும் கூவினான்’ என்றால், முருகனும் கண்ணனும், என்பவற்றில் உள்ள உம்மைகளை நிகழ்வது தழீஇய எச்ச உம்மைகள் எனலாம். முருகனும் என்ற உம்மை கண்ணனும் கூவியதையும், கண்ணனும் என்ற உம்மை முருகனும் கூவியதையும் தழுவுகின்றன, ஒருவர் முன்னேயும் மற்றொருவர் பின்னேயும் கூவினால், இறந்தது-எதிரது எனலாம். இருவரின் கூவலும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால், இந்த உம்மைகள் நிகழ்வது தழுவியனவாக உள்ளன.

ஒரே நேரத்தில் முருகனும் கண்ணனும் கூவினர் என்றால், இந்த உம்மைகள் எதையும் தழுவாததால் எண்ணும்மைகள் எனப்படும். முருகனும் கூவினான் - கண்ணனும் கூவினான் என இரண்டு தொடர்களாகக் கூறினால் தான் நிகழ்வது தழுவியதாகும். இந்தப் புதுக் கண்டு பிடிப்பாகிய நிகழ்வது தழீ இய எச்ச உம்மைக்கு இலக்கிய ஆட்சி ஒன்று காண்போம்.

கம்பர் ஒரு காதல் காட்சியைப் படைத்துக் காண்பித்துள்ளார். சீதை மாளிகையின் மேல் தளத்தில் தோழியருடன் நின்றுகொண்டிருக்கிறாள். அந்த மாளிகைத் தெருவில் இராமன் விசுவாமித்திரருடனும் இலக்குவனுடனும் சென்று கொண்டிருக்கிறான்.

தற்செயலாக இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்கின்றனர், நோக்கம் ஆரம்பக் கட்டத்திலிருந்து ஆழ்ந்த கட்டத்திற்குப் போய்விட்டது. சீதையின் இரு கண்களாகிய இரு வேல்கள் இராமனின் தோள்களில் ஆழ்ந்து பதிந்தன. இராமன் கண்களோ சீதையின் மார்பகத்தில் தைத்துக் கொண்டன.

கயிறு இழுப்புப் போட்டியில் இருவர் இரு பக்கலில் நின்றுகொண்டு கயிற்றை இழுப்பர், ஒத்த வலிமையினராயின் அவரவரும் அவரவர் இடத்திலேயே இருப்பர். ஒருவன் மற்றவனினும் மெலியவனாயின், அவன் வலியவன் பக்கம் இழுக்கப்பட்டு விடுவான், இதுதான் இயற்கை நிலை. ஆனால் சீதையும் இராமனும், நோக்கு என்னும் கயிற்றால் உள்ளம் என்னும் கைகொண்டு ஒருவரை ஒருவர் இழுத்தனர். ஆனால் இயற்கைக்கு மாறாக இருவருமே ஒருவரிடத்தை மற்றவர் அடைந்தனர். அதாவது, சீதையின் இதயத்தை இராமனும் இராமனது இதயத்தைச் சீதையுமாக மாறி அடைந்தனர். முதல் காட்சியிலேயே முற்றிய நிலைக்குப் போய் விட்டது என்னவோ போல் இருக்கிறது.

திருவள்ளுவர் காதல் காட்சியை மிகவும் நாகரிகமாகப் படைத்துக் காட்டியுள்ளார். காதலன் நோக்கும் போது காதலி பார்க்காதது போல் தலை குனிந்து தரையைப் பார்க்கிறாளாம். காதலன் பார்க்காதபோது காதலி புன்முறுவலுடன் நிமிர்ந்து அவனைப் பார்க்கின்றாளாம். இரவில் பேருந்துகள் எதிர் எதிராக இயங்கும்போது, ஒரு வண்டி இயக்குநர் விளக்குப் போட்டால் எதிரே உள்ளவர் விளக்கை நிறுத்தி விடுவார். அவர் விளக்கு போட்டால் இவர் நிறுத்தி விடுவார். இது போன்றல்லவா இந்தக் காதலர்களின் காட்சி இருக்கிறது.

“யான் நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”

என்பது திருக்குறள்.

திருவள்ளுவர் காதலர்களின் நோக்கத்தை இவ்வளவு நாகரிகமாகக் கூறியிருக்க, கம்பரோ மிகவும் பச்சையாகக் கூறியிருக்கிறார். இதற்கும் தக்க காரணம் உள்ளது. திருவள்ளுவரின் காதலர்கள் புதுமுகங்கள். கம்பரின் காதலர்களோ மிகவும் பழைய முகங்கள்.

“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமா?”

என்று கம்பர் பாடி இராமன்-சீதை காதலை நாகரிகப் படுத்தியுள்ளார்.

திருவள்ளுவரின் காதலர்களோ ஒருவர் பார்க்கும்போது மற்றொருவர் பார்க்கவில்லை. கம்பரின் காதலர்களோ ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்கின்றனர். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்ணப் பார்க்கின்றனவாம். நோக்கின் வாயிலாக நிலை தடுமாறி இருவர் உள்ளமும் ஒன்றும்படியாக இராமனும் நோக்கினானாம்; அதே நேரத்தில் சீதையும் நோக்கினாளாம்;

“எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
(பாலகாண்டம்-மிதிலைக் காட்சிப் படலம்-35)

இந்தப் பாடலில், ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதில் உள்ள உம்மை, சீதையும் நோக்கினாள் என்பதைத் தழுவுகிறது. ‘அவளும் நோக்கினாள்’ என்பதில் உள்ள உம்மை, இராமனும் (அண்ணலும்) நோக்கினான் என்பதைத் தழுவுகிறது. இவ்விரண்டனுள் முன்னால் நடந்த இறந்தது எது? - பின்னால் நடந்த எதிரது எது? இல்லை-இறந்ததோ எதிரதோ இல்லவேயில்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் அண்ணலும் - அவளும் என்ற உம்மைகள் நிகழ்வது தழீஇய எச்ச உம்மைகளாம்.

சிலர், ‘இடமுன்-கால முன்’ என்னும் கரடி விட்டு இந்தக் கருத்தைக் குலைக்கப் பார்க்கலாம். இங்கே எந்த முன்னும் எந்தப் பின்னும் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் இவற்றை ‘நிகழ்வது தழீஇய எச்ச உம்மை’ என்று கூசாது கூறலாம். இந்தக் கட்டுரையின் பொருள் இஃதே!