இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/நாடு விழித்தெழுக!
எங்கு மனம் அச்சமற்று விளங்குகிறதோ, எங்கே தலை பெருமிதத்துடன் நிமிர்கிறதோ, எங்கு அறிவு தன்னுரிமையுடன் பொலிகிறதோ, எங்கு குறுகிய சாதி மதப் பிரிவு பிளவுகளால் உலகம் சிதையாமல் உருப்பெற் றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்தினின்று சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி முழுநிறைவை நோக்கிக் கைகளைப் பரப்புகின்றதோ, எங்கு பகுத்தறிவு என்னும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்கங்களான திகைப்பூட்டும் பாலை மணலில் பாயாது மீள்கிறதோ, எங்கே விரிந்த எண்ணத்திலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் இழுத்துச் செல்லுகிறதோ, அந்த உரிமைப் பொன்னுலகில் எந்தாய் எனது நாடு விழித் தெழுவதாக. -கீ