இருண்ட வீடு/அத்தியாயம்-11


11

தலைவர் சாப்பிட முடியவில்லை.

இலந்தையூர்க்குப் புறப்பட வேண்டியதாயிற்று.


சங்கிலி தலைவரைச் சாப்பிட அழைத்தாள்
அங்கே பசியால் அழியும் தலைவரோ
மெதுவாய் எழுந்தார்; அதே நேரத்தில்
எப்போ தும்போல் இரண்டு பல்லிகள்
பளபள வென்று பாடத், தலைவர்
மீண்டும்நாற் காலியில் விசையாய்ச் சாய்ந்தார்.
அந்த நேரம் அங்குநின் றிருந்த
கணக்கன் தலைவரைக், கனிவுடன் அழைத்தே
"இன்று நீங்கள் இலந்தை யூர்க்குச்
சென்று வஞ்சகன் சிற்றம் பலத்தைக்
கண்டு பணத்தைக் கையோடு வாங்கிக்
கொண்டு வருவதாய்க் கூறினீர்களே,
ஐதராப் பக்கம். அவன் ஓடிவிட்டால்
பைதரா வழக்கும் பயன்படாதே
பத்துப் பைகள் பரிபோகலாமோ?
என்று பலவும் எடுத்துச்சொன்னான்!
"நன்று நன்று சென்று நீ ஒரு
காரைப்பேசிக் கடிதில் கொண்டுவா.
அச்சாரப் பணம் ஐந்துரூ பாய்கொடு,
கடன்பட் டவனைக் கையோடு பிடிக்க
அரச காவலர் அங்கே இருப்பரேல்
ஐந்து ரூபாய் அவரிடம் கொடுத்து
வேண்டிய ஒழுங்குடன் விரைவில் அழைத்துவா"
என்றான் தலைவன் / ஏகினான் கணக்கன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-11&oldid=1534753" இலிருந்து மீள்விக்கப்பட்டது