இருண்ட வீடு/அத்தியாயம்-14


14

பெரிய பையனுக்கு விளையாட்டுத் துப்பாக்கி!

அனைவர்க்கும் மகிழ்ச்சி!


அங்கே, பெரியவன் அடுக்கிய இரண்டு
மூட்டை போல் உதடுகள் முன்னே தோன்ற
மல்லாந்து, மார்பை மறுபுறம் திருப்பாது
சொல்லும் இன்றித் துடிக்கும் நெஞ்சொடு
மாம்பழம் விளாம்பழம் வந்த வழி யோடு
காதைச் செலுத்திக் கண்ணைச் சாய்த்து
மாமனை எதிர்பார்த் தூமைபோல் அழுதான்.
மாமனோ சென்னையில் வாங்கி வந்த
கைத்துப் பாக்கியைக் கையில் கொடுத்தான்
பெரியவன் உதடுகள் சிரித்தாக வேண்டும்!
வெள்ளைப் பற்கள் வெளித் தோன்றாமல்
பிணம்சிரிப் பதுபோல் பெரிதும் சிரித்தான்
தங்க மாமனார் தாமும் சிரித்தார்.
உரியவள் இதனை உணர்ந்து சிரித்தாள்.
கைத்துப் பாக்கி மெய்த்துப் பாக்கிபோல்
வித்தென்று தக்கை விலகி வெடிப்பதை
மாமனார் காட்டினார். மங்கையும் பையனும்
வியப்படைந் தார்கள். வீட்டுக் காரியோ
"அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
வைத்து விடுங்கள் வைத்து விடுங்கள்.
அவனிடம் கொடுக்க லாகா" தென்றாள்
அவ்வா றதனை அங்கே வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-14&oldid=1534756" இலிருந்து மீள்விக்கப்பட்டது