இருண்ட வீடு/அத்தியாயம்-15


15

பையனின் சாதகம். கைப்பிள்ளைக்குச் சாவே கிடையாது.


என்னருந் தங்கையே இந்தப் பெரியவன்.
நன்றாகப் படிக்கின்றா னாசொல்
என்றான். தங்கை இயம்பு கின்றாள்:
சாதகம் பார்த்தோம் சரியாய் அவனுக்குப்
பத்தொன்ப தாண்டு படிப்பு வராதாம்
இருபதில் உலகையே என்னதென் பானாம்
என்றுதன் அண்ண னிடத்திற் கூறினாள்.



கையோ டிந்தக் கைக்கு ழந்தையின்
குறிப்பையும் பார்த்தால் குற்ற மென்ன
என்று கேட்டான் பின்னும் அண்ணன்.
காட்டினேன் குழந்தையைக் கல்லில் தூக்கிப்
போட்ட போதிலும் போகாதாம் உயிர்.
தொண்ணூறு வயதென்று சோசியன் சொன்னான்.
மந்தத் தாலே வந்த நலி இது!
இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நலி இவ்வாறு வலிவு பட்டது.
வளரும் பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறு
வருவதும் போவதும் வழக்கந் தானே!
நாளைக்கே இது நன்றாய்ப் போய்விடும்:
ஏழு மலையான் இரக்கம் வைப்பான்
காப்பாய் என்று காப்பும் கட்டினேன்,
என்று தங்கை இயம்பினாள். அவனோ
சமையல் ஆனதா தங்கையே என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-15&oldid=1534757" இலிருந்து மீள்விக்கப்பட்டது