இருண்ட வீடு/அத்தியாயம்-16


16

அண்ணன் தன் பசியைக் கூறினான், தங்கை

அவன் ஏறிவந்த வண்டியை மெச்சுகிறாள்.


ஆமாம் இந்த அலைச்சலில் உங்களை
சாப்பிடும் படியும் சாற்ற வில்லை
என்றாள். வெந்நீர் இருக்குமா என்றான்
ஆமாம் ஆமாம் அடுப்பில் வெந்நீர்
கொதிக்க வைக்கிறேன் குளிப்பீர் என்றாள்.
வெற்றிலை கொஞ்சம் வேண்டும் என்றான்
ஆமாம் ஆமாம் அதையும் மறந்தேன்
என்று கூறி ஈந்தாள் வெற்றிலை
வெற்றிலை போட்டான் வெறித்துப் பார்த்தான்.
சாப்பிடச் சொல்லிக் கூப்பிடவில்லை.
பசியால் அண்ணன் பதை பதைக் கின்றான்.
துடிப்பொடு தங்கைபால் சொல்ல லானான்.
விடிய நாலுக்கு வீட்டை விட்டுக்
கிளம்பி னேனா? கிளிய னூரில்
சிற்றுணவுக்குச் சுற்றிப் பார்த்தேன்
அகப்பட வில்லை அதற்குள் வண்டியும்
புறப்பட்டதனால் பொசுக்கும் பசியுடன்
ஏறினேன், இங்கே இழிந்தேன் என்றான்.
இந்தக் கதையை இயம்பித் தனது
பொறுக்கொணாப் பசியைப் புகன்றான். அவளோ
எங்கள் அண்ணன் ஏறி வந்த
வண்டியே வண்டி வண்டியே வண்டி
என்று வண்டியின் இயல்பைப் பற்றி
எண்ணி மகிழ்ந்தாள் / மண்ணாங் கட்டி!

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-16&oldid=1534758" இலிருந்து மீள்விக்கப்பட்டது