இருண்ட வீடு/அத்தியாயம்-32


32

பெரிய பையன் இல்லை.

அயலார் நலம் விசாரிக்கிறார்கள்.


குறி தவறாமல் எறிந்த முக்காலி
பெரியவன் தலைமேல் சரியாய் வீழ்ந்தது
தலைவர் பின்னும் தாம்விட் டெறிந்த
விறகின் கட்டை வீணே ; ஏனெனில்
முன்பே பெரியவன் முடிவை அடைந்தான்!
அறிவிலார் நெஞ்சுபோல் அங்குள விளக்கும்
எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது!
வீட்டின் தலைவர் விளக்கேற்று தற்கு
நெருப்புப் பெட்டியின் இருப்பிடம் அறியாது -
அன்பு மனைவியை அழைப்பதா இல்லையா
என்ற நினைப்பில் இருக்கையில், அண்டை
அயலார் தனித்தனி அங்கு வந்தார்கள்
எதிர்த்த வீட்டான் என்ன வென்றான்.
திருடனா என்றான் சீனன். விளக்கை
ஏற்றச் சொன்னான் எட்டி யப்பன்
எதிர்த்த வீட்டின் எவ்விக் கிழவி,
குழந்தை உடல்நலம் குன்றி இருந்ததே
இப்போ தெப்படி என்று கேட்டாள்.
விளக்கேற் றும்படி வீட்டுக் காரியை
விளித்தார் தலைவர் விடையே இல்லை!
என்மேல் வருத்தம் என்று கூறிப்
பின்னர் மகனைப் பேரிட் டழைத்தார்;
ஏதும் பதிலே இல்லை. அவனும்

வருத்தமாய் இருப்பதாய் நினைத்தார் தலைவர்!
அயல்வீட் டார்கள் அகல்விளக் கேற்றினார்.
கிழவி முதலில் குழந்தையைப் பார்த்து
மாண்டது குழந்தை மாண்டது - என்றாள் !
மனைவியும் பையனும் மாண்ட சேதி
அதன்பின் அனைவரும் அறிய லாயினார்.
தெருவார் வந்து சேர்ந்தார் உள்ளே.
ஊரினர் வீட்டின் உள்ளே நுழைந்தார்.
அரச காவலர் ஐந்துபேர் வந்தார்.
ஐவரும் நடந்ததை ஆராய்ந் தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-32&oldid=1534774" இலிருந்து மீள்விக்கப்பட்டது