இருண்ட வீடு/அத்தியாயம்-7


7

பிள்ளையின் நோய்க்குப் பிட்டுத் திணிக்கப்படுகிறது.

மற்றவர்க்குப் பிட்டு வேண்டாம் என்று முடிந்தது.

பிள்ளைக்கு வாயில்லை.


வீட்டின் தலைவி நீட்டிய காலும்
ஆட்டின் கத்தல்போல் அருமைப் பாட்டுமாய்க்
குழந்தையை வைத்துக் குந்தி யிருந்தாள்.
இழந்த உயிரில் இம்மி யளவு
பிள்ளையின் உடலொடு பிணைந் திருந்ததால்
வள்ளிக் கொடியும் வதங்கி யதைப்போல்
தாய்மேற் பிள்ளை சாய்ந்து கிடந்தது.


தாயோ சங்கிலி தன்னை அழைத்து
"வாங்கி வந்த வடையையும் பிட்டையும்
கொண்டுவா பசியடி குழந்தைக்" கென்றாள்.
தட்டில் வடையும் பிட்டும் கொண்டு
சட்டென வைத்தாள் சங்கிலி என்பவள்.


கூடத்து நடுவில் ஏடு விரித்து
வைத்த பிட்டையும் வடையையும் வந்து
மொய்த்த ஈயொடு முதல்வர் தின்றார்!
மறுபடி ஒருபிடி வாயில் வைக்குமுன்
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்.
அதனால் அதை அவர் அருந்துதல் நீங்கி
வாயினால் "வேண்டாம் வடை" என் றுரைத்தார்.
பெரிய பையன் பிசைந்தான் பிட்டை!

ஒரு துளிகூட உண்ணமாட் டாமல்
கொரகொர கொழகொழ கொணகொண என்றான்
இதன்மொழி பெயர்ப் பென்ன என்றால்
"எயிறு வீங்கி இடத்தை மறித்தது
தின்பதற் கென்ன செய்வேன்" என்பதாம்


பையனால் இப்படிப் பகர முடிந்தது
தலைவரால் அப்படிச் சாற்ற முடிந்தது
பிட்டை வாயில் இட்டுத் திணிக்கும்
தாயை நோக்கி அத் தடுக்குக் குழந்தை
"தாயே எனக்கிது சாகும்நேரம்" என்று
வாயால் சொல்லும் வல்லமை இல்லை
அறிவெனும் வெளிச்சம் அங்கே இல்லை
மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-7&oldid=1534748" இலிருந்து மீள்விக்கப்பட்டது