இலக்கியங்கண்ட காவலர்/கிள்ளி வளவன்

15
கிள்ளி வளவன்

சோழ நாடு திருமாவளவன் ஆட்சிக்குப் பின் இரு கூறுபட்டு இரு திறத்தாரால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்றிற்குப் புகார் தலைநகர். மற்றொன்றிற்கு உறையூர் தலைநகர். சோழன் கரிகாலனுக்குப் பின்னர் உறையூரும் உறையூர்ச் சோழரும் சிறந்து விளங்கினர். உறையூரையாண்ட சோழ அரசர்களுள் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சிறந்தவனாவன். இவன் புலவர் பாராட்டும் புகழுடையவன். “இவன் பேராண்மை பகைவரும் அஞ்சும் தன்மையது. இவன் கை வண்மை மாரியும் தோற்கும் இயல்பினது. இவன் செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடையவன்!” எனப் புலவர் கூறும் பாராட்டுக்கள் பல.

இவனது நாட்டு வளம் குறித்து ஒரு புலவர் மிகவும் நயம்படப் பாடியுள்ளார். நீர் வளம் நிறைந்தமையால் ஒரு பெண் யானை படுத்து உறங்குவதற்காம் நிலம், ஏழு ஆண் யானைகளைக் காப்பாற்ற வல்ல பெரும் உணவினைத் தரும் என்ற பொருள்படும்படி,

“ஒரு பிடி படியும் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடு”

எனப் பாடிப் புகழ்ந்துள்ளார்.

நற்குடிப் பிறந்தாரிடையே ஒழுக்கமும், வாய்மை யும், நாணும் இயல்பாகவே பொருந்தியிருக்கும். அடுக்கிய கோடி பெறினும், குன்றுவ செய்யாக் குணம் குடிப் பிறந்தாரிடையேதான் உண்டு என்பர். ஆதலின் உயர் குடியினராதல் ஒருவர்க்குக் கருவிலேயே வாய்த்த திருவாகும். கிள்ளி வளவன் பிறந்த சோழர்குடி வழி வழிச் சிறப்புடைய குடியாம். அவன் பெருமைக்கு அவன் குடிப் பெருமையே காரணம். இதை மாறோக்கத்து நப்பசலையார் விளக்குந் திறம் போற்றத் தக்கது. “கிள்ளி வளவ! நீ கொடையாற் சிறந்தவன் எனக் கூறுகின்றனர். அதனால் உனக்கொரு புகழுமில்லை; அது நீ பிறந்த குடியின் பண்பு. அடைக்கலம் புகுந்த புறாவின் பொருட்டுத் துலை புகுந்து புகழ் கொண்ட சிபியினை முதல்வனாகக் கொண்டது உன்குடி கொடைக் குணத்தை இயல்பாகக் கொண்டது சோழர் குடி. அக்குடி வந்தார் அனைவருமே அக்குணமுடையாராவர். ஆகவே அக்குணம் உன்பாலிருப்பது உனக்கே உரிய புகழன்று. அஃது உன் குடிப்புகழ்.

“கிள்ளி வளவ! நீ பகைவரும் அஞ்சும் பேராண்மையுடையவன் என்று கூறுகின்றனர். அதுவும் உனக்குப் புகழ் அளிக்காது. உன் குடி, தேவர் பொருட்டு ஆகாயத்தே திரிந்து கேடு விளைக்கும் கோட்டைகளை வாழ்விடமாகக் கொண்ட அரக்கர்களை அழித்துப் புகழ் பெற்ற தொடித்தோட் செம்பியனை முன்னோ னாகக் கொண்டது. ஆதலின் வெற்றி சோழர் பண்பு. ஆகவே வெற்றி வீரனாவதில் உனக்குத் தனிப் புகழில்லை.

“கிள்ளி! முறை வேண்டினார்க்கும், குறை வேண்டினார்க்கும் அரச மன்றத்தில் நீ சான்றோரோடு காண்டற் கெளியனாய் இருந்து முறை செய்வாய் எனக் கூறுகின்றனர். இதனாலும் உனக்குப் புகழில்லை. உன் தலை நகராகிய உறையூர்க்கண் அமைந்துள்ள அவையில் அறம் என்றும் நின்று நிலை பெற்றிருக்கும் என்ப. ஆகவே அறங் கூறுதல் சோழர் குடிக்கு இயல்பாம். ஆதலின் அதிலும் உனக்குப் புகழில்லை.”

மேற்கூறியவாறு மாறோக்கத்து நப்பசலையார் சோழர்குடி இயல்பாகவே சிறந்தது, கொடையிற் புகழ் பெற்றது, அறத்தில் நின்றது என்று அவன் குடிப்புகழ் போற்றினார்.

புகழ் மிக்க மன்னனாய்த் திகழ்ந்த கிள்ளி வளவன் புலவர் பலர் சூழ வாழும் நல்வாய்ப்புப் பெற்றிருந்தான். எனவே, அவனும் ஒரு புலவனாய் விளங்கியதில் வியப்பொன்று மில்லையன்றோ கிள்ளி வளவன் பண்ணன் என்பானைப் பற்றிப் பாடிய பாடல் மிகவும் சுவையுடையதாகும்.

பண்ணன் என்பான் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்று புலவர் பாராட்ட வாழ்ந்தவன். புலவர் பலரின் பாராட்டைப் பெற்ற கிள்ளி வளவனே இவனைப் பாராட்டினான் எனில் இவன் பெருமைக்கோர் எல்லையுண்டோ? பண்ணன் பேராண்மையும், பெருங்கொடையும் உடையவன். சோழ நாட்டில் காவிரிக் கரையிலிருந்த சிறுகுடி என்னும் சிறந்த ஊரின் தலைவன். வள்ளல் ஒருவன் சிறப்பினை அவன்பால் பரிசில் பெறும் புலவர் பாடுவதிலும், அவனைப் போன்ற பிறிதொரு வள்ளல் பாராட்டுவதே உண்மைச் சிறப்பாகும். அத்தகைய பெருஞ் சிறப்புடையவன் பண்ணன். பெருங்கொடை வள்ளல் தலைவனாகிய கிள்ளி வளவன் பண்ணனைப் பாராட்டியுள்ளான்.

பண்ணன்பால் பரிசில் பெறக் கருதிய பாணன் ஒருவன், அவன் சிறுகுடியை நோக்கிச் செல்கின்றான். பண்ணன்பால் பரிசில் பெற்ற இளைஞரும் முதியவருமாய பாணர்கள் வேறு வேறு திசை நோக்கி வரிசை வரிசையாகச் செல்கின்றனர். இக்காட்சியைப் பாணன் காண்கின்றான். பழுமரம் ஒன்றில் பழம் உண்ணுவதற்கு வந்து கூடிநிற்கும் பறவைகள் எழுப்பும் பேரொலிபோல் பண்ணன் அறச்சாலையில் உணவு பெறுவோர் எழுப்பும் ப்ேரொலி கேட்கலாயிற்று. அவன் சிறுகுடி அண்மையில் உள்ளது என்பதனை அஃது உணர்த்தியது. பாணனும் சிறுகுடி அண்மையில் உள்ளதை உணர்ந்தான்; உணர்ந்த பின்னும், தன் பசிக்கொடுமையால், “பண்ணன் சிறுகுடி யாண்டுளது? பண்ணன் சிறுகுடி யாண்டுள்ளது?” என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே வந்தான். பரிசில் பெற்றுத் திரும்பும் பாணர் சிலரை நெருங்கி, “ஐய, பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம் யாண்டுள்ளது? அண்மையிலா? சேய்மையிலா?” என்று கேட்கலாயினன். பாணன் ஒருவன் இவ்வாறு பண்ணன் சிறுகுடி நோக்கிச் செல்லும் காட்சியை அப்படியே படம் எழுதிக் காட்டுவது போன்று கிள்ளி வளவன் பாடிக் காட்டியுள்ளான்.

கிள்ளி வளவன் பாடியுள்ள புறநானூறு 173ஆம் பாடலில் பண்ணன் அறச்சாலையில் எழும் ஒலிக்குப் பழமரம் சேர்ந்த பறவையினங்கள் எழுப்பும் ஒலியினை உவமையாகக் கூறியுள்ளான். அறச்சாலையினின்றும் உணவு பெற்று மீளும் பாண் சிறுவர் வரிசை வரிசையாகச் செல்லும் காட்சிக்கு, மழை வரும் என அறிந்து, முட்டைகளை ஏந்திக்கொண்டு, மேட்டு நிலம் நாடி வரிசை வரிசையாக எறும்புகள் செல்லும் காட்சியினை உவமையாகக் கூறியுள்ளான். இவ்வுவமைகளின் அழகும் எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் தப்பாது மழை பெய்யும் என்ற உண்மை உரையினை எடுத்தாளும் சிறப்பும் மிகச் சிறந்தனவாம். பாணர்க்குப் பரிசில் அளித்து, அவர் பசி போக்கித் துணை புரியும் பண்ணனைப் பசிப்பினி மருத்துவன் எனப் பெயரிட்டுப் பாராட்டும் பண்பு மிக உயர்ந்ததாம். இவ்வாறு கிள்ளிவளவன் பாடல் புதுமை நலத்தில் சிறந்து விளங்குகின்றது.

நாடாளுவதில் வல்ல காவலர்கள், நற்றமிழ் வல்ல பாவலர்களாகவும் திகழ்ந்த அவர்கள், புலமைச் சிறப்பினை அறிந்து, அவர்கள் பாடல்களின் கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பயன் பெறுவோமாக!