இலக்கியங்கண்ட காவலர்/பெருங்கோப் பெண்டு
பகைவர் கைப்பற்றி ஆண்ட தன் நாட்டின் ஒரு பகுதியாய் ஒல்லையூர் நாட்டை, அப்பகைவரை அழித்து வென்று, மீட்டும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்து, அச்சிறப்பால், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என அழைக்கப் பெற்ற அரசன் வரலாறு முன்னர் உரைக்கப்பட்டுள்ளது. சிறந்த வீரனும், நிறைந்த குணமுடையோனுமாய அப்பூதப் பாண்டியன் மனைவியே பெருங்கோப் பெண்டு. பெருங்கோப் பெண்டு எனும் பெயர் பேரரசன் மனைவியார் எனப் பொருள் தந்து, அரசர் மனைவி யரைக் குறிக்கும் பொதுப் பெயராய் வழங்குமேனும், பெருங்கோப் பெண்டு எனும் பெயரால் சிறப்பாக அறியத் தக்கவர், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மனைவியராய இவர் ஒருவரே.
"சிறந்த பேரமர் உண்கண் இவள்!" எனத் தன் கணவனாலேயே பாராட்டப் பெறும் பேறுடையளாய பெருங்கோப்பெண்டு, பேரழகும், பெருங்குணமும் உடையளாவாள். கணவன்பால் பேரன்புடைய இவள், அவன் பேரன்பையும் குறைவறப் பெற்றிருந்தாள். ‘பகைவரை வென்று துரத்தேனாயின், என் அரியணை என்னுடன் அமர்ந்திருக்கும், அழகும், அறிவும் நிறைந்தவளாய என் மனைவியைப் பிரிவேனாகுக!” என அவன் கூறும் உரையால், இவள்பால் அவன் கொண்டிருந்த அன்பு எத்துணை ஆழமும், அக்லமும் அளக்கலாகாப் பெருமையும் உடைத்து என்பது விளங்கும்.
ஒருநாள், அரசியல் அலுவல் காரணமாகத் தன் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை பூதப் பாண்டியனுக்கு ஏற்பட்டது. இவள் தன்னைப் பிரிந்து ஒரு கணமும் உயிர் வாழாள் என்பதை அவன் உணர்வான். முழவோசை இடைவிடாது முழங்கிக் கொண்டே உளது. மேலும் காவலர் கண் இமையாது காத்துக் கொண்டும் உள்ளனர். ஆகவே சிறிது அச்சம் அற்று இருத்தலும் இயலும்! என்று எண்ணிப் பிரிந்து சென்றான்; சென்றவன் சென்ற இடத்திலேயே நெடிது நின்றானும் அல்லன், விரைந்து வீடுவந்து சேர்ந்து விட்டான். என்றாலும், அத்துணை ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சென்று, அத்துணை விரைவில் வந்தானாயினும், அச்சிறு பிரிவினையும் இவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உளம் தளர்ந்து உறுதுயர் உற்றாள். அத்துணை அன்புடையாள் இவள்.
இவ்வாறு அன்பால் பிணைப்புண்டு அறவாழ்வு மேற்கொண்டு வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையில் பெரும் பிரிவு குறுக்கிட்டு விட்டது. தன்னை வந்து எதிர்த்த சேர சோழ வேந்தர்களோடு செய்த போரில் பூதப்பாண்டியன் இறந்து விட்டான். பிரியாது வாழ்ந்தரிடையே பிரிவு தோன்றிவிட்டது; தோன்றிய பிரிவு சிறிது நாள் கழித்துக் கூடலாம் சிறு பிரிவாகாது, மீண்டும் கூடலாகாப் பெரும் பிரிவாகி விட்டது. களத்தில் கணவன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டாள், பெருங்கோப் பெண்டு. கலங்கினாள்; கண்ணிர் விட்டுக் கதறி அழுதாள்; சிறிது நிலை தெளிந்து சிந்தித்தாள்.
“கணவன் இறந்தால், இறந்தான் கணவன் என்ற செய்தி அறிந்த அந்நிலையே, ‘அவன் சென்ற இடத்திற்கே யானும் செல்க!’ என அறிவிப்பார் போல், அவன் உயிரைப் பின்பற்றித் தம் உயிரையும் இழக்கும் இயல்புடையாரே, தலையாய கற்புடையராவர். அவ்வாறு உயிர்விடும் ஆகூழ் அற்றவிடத்து, அவன் உடல் எரிபுக்கு அழிந்ததேபோல், தம் உடலையும் எரியில் வீழ்த்தி அழித்துவிட்டுத் தம் உயிரை இழப்பவர் இடையாய கற்புடையராவார். அத்துணை மனவலி அற்றவர், அல்லது, கணவனை இழந்தும் உயிர்வாழ வேண்டிய இன்றியமையாக் கடமை உடையவர், இப்பிறவியில் இழந்த உடனுறை வாழ்வு, வரும் பிறவியில் வந்து வாய்க்குமாக என வேண்டி, வெள்ளரிக்காய் விதைகளைப் போன்று நீரில் மிதந்து கிடக்கும் பழஞ்சோற்றைப் பிழிந்தெடுத்து, நெய் கலவாம்ல் வெந்த வேளைக் கீரையைக் கலந்து கொண்டு, எள் துவையல் துணை செய்ய உண்டு, பரற்கற்கள் உறுத்தும் பாழ்ந்தரையில் பாய் இல்லாமல் படுத்து உறங்கி, உள்ள நாளளவும், உறுதுயர் பொறுத்து நோன்பு மேற்கொண்டு வாழ்பவர் கடையாய கற்புடையாராவர். அவருள் தலையாய கற்புடையார் வரிசையில் வைத்துப் போற்றும் வாய்ப்பு எனக்கு இல்லாது போயிற்று. அவ்வாய்ப்பு இழந்த யான், அவருள் இடையாயர் பெறும் பெருநிலையினையாவது பெறுதல் வேண்டும்; அவர் உயிரோடு போதல்செல்லா உயிரோடு இருந்து பழியுற்ற யான், போகாத அவ்வுயிரைப் போக்கியேனும் புகழ் பெறுதலே பின்பற்றத் தகுவதாம்; அதுவே பேரறமாம்!” எனத் துணிந்தாள்.
காட்டின் நடுவே அமைந்திருந்த காடுகிழாள் கோயில் முன், கரிய கட்டைகளைக் கொண்டு பிணப் படுக்கை ஒன்று அமைக்கப் பணித்தாள். அவ்வாறே ஆங்கு அவள் தீப்பாய்தற்காம் பெருந்தீ எழுப்பப் பட்டது. உயிர் மாசு துடைக்கத் துணிந்த பெருங் கோப்பெண்டு, உடல் மாசு போகக் குளித்துவிட்டு, நீர் ஒழுகும் மயிர் இரு பக்கமும் தொங்கச் சுடுகாடு நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.
பாண்டியன் அவைக்களப் புலவர்களுள் ஒருவராய பேராலவாயர் அக்காட்சியைக் கண்டார். காடுகிழாள் கோயில் முன், அக்காட்டு வாழ் மக்கள், யானைகள் கொண்டு வந்த விறகினால் தீ மூட்டி வாழ்ந்ததையும், காட்டுக் கொடுவிலங்குகளுக்கு அஞ்சும் மானினங்கள் ஆங்குவந்து அத்தீயின் ஒளியில் அச்சம் ஒழிந்து உறங்கியதையும், அவ்வாறு உறங்கும் மானினங்களுக்கு அத்தீயால் ஊறு ஒன்றும் இலதாகவும், தீங்கு வந்துறுமோ என அஞ்சிய மந்திகள் அத்தீயை அழித்ததையும் கண்டு மகிழ்ந்தவர் புலவர். அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், தீப்பாய்வான் எண்ணி ஆங்கு மெல்ல அடியிட்டு வரும் பெருங்கோப் பெண்டினைக் கண்டார்; அவர் கலக்கம் பெரிதாயிற்று. மானினம் பிழைக்க, மந்திகள் நெருப்பழித்த நிகழ்ச்சியை நினைந்தார். மந்தி செய்ததைத் தம்மால் செய்ய முடியவில்லையே, அரசமாதேவி உயிரிழப்பதை உணர்விழந்து பார்த்திருப்பதல்லது, தடுத்து நிறுத்த இயலவில்லையே என எண்ணி எண்ணித் துயர் உற்றார். அந்நிலையில், பூதப்பாண்டியன் இறந்தமை யால் அரசிழந்து அல்லல் உறும் பாண்டி நாட்டு மக்களின் அவல நிலை அவர் நெஞ்சில் நிறைந்தது. உடனே, தீயில் குதிக்கத் துணிந்து நிற்கும் பெருங்கோப் பெண்டின் அண்மையிற் சென்றார். நாட்டின் நிலையினை எடுத்துக் காட்டிக் கடமைக்காகக் கணவனைப் பிரிந்து வாழ்தலும் ஒரு வகையில் கவின் உடையதே என மெல்ல எடுத்துரைத்தார்.
புலவர் கூறுவனவற்றைக் கேட்டாள், பெருங் கோப்பெண்டு. அந்நிலையே பெருங்கோபம் உற்றாள். “இறந்த கணவனோடு பிரிந்து போகும் உயிர் உடையவரே கற்புடையராவர்; அவ்வாய்ப்பு வாய்க்கப் பெறாதார், தம் உயிரை யாதானும் ஒருவகையில் விடுத்து உயர்ந்து அக்கற்பு நெறியில் நிற்றல் வேண்டும் என மகளிர்க்குரிய கடமைகளை மறவாது எடுத்துரைப்பதே மாண்புடையார் கடனாம். தாங்கள் அக்கடமையில் தவறி விட்டீர்; அவ்வறவுரை கூறாது விட்டதே தங்கள் சான்றாண்மைக்கு இழுக்காம்; அங்ங்னமாகவும், தாங்கள் கூறாத அவ்வற நெறியினைக் கணவன்பால் கொண்ட என் அன்பையும் என் கடமையையும் காட்ட மேற்கொண்டு தீப்பாயத் துணிந்து நிற்கும் என் செயல் கண்டு, என்னைப் போற்றி, அக்கடமையில் வழுவா வாறு நின்று காப்பதையும் விட்டுத் தடுத்து நிறுத்துகிறீர்! தம் கடமை மறந்து, கடமை உணர்ந்து செய்வாரையும் தடுத்து, அக்கடமையினின்றும் வழுவுதற்காம் வழிகாணும் தங்களின் சான்றாண்மையின்பால் ஐயங் கொள்கிறேன். ஏனைப் பெண்களைப் போன்றே என்னையும் எண்ணி விடாதீர்கள். கணவன் இறந்த பின்னர்க் கைம்மை நோன்பு நோற்று வாழும் அவ்வாழ்வு வேண்டேன். கணவனோடு இறந்து கடமையிற் பிறழாக் கற்புநெறி நிற்கும் துணிவுடையேன். அத்தகைய துணிவுள்ளம் உடைய என் உடலை இத்தீத் துயர் உறுத்தாது; கணவனை இழந்து கைம்மை நோன்பு நோற்கும் அவர்க்குத் தாமரை மலர்ந்த தண்ணிர்ப் பொய்கை, காட்டுத் தீப்போல் கடுந்துயர் உறுத்தலும், கடமை உணர்ந்து கணவனோடு உயிர் துறக்கத் துணிந்தார்க்குக் காட்டுத் தீ, தாமரை மலர்ந்த தண்ணிர்ப் பொய்கை போல் குளிர்ந்து காட்டலும் உலகியல். கணவனை இழந்தார்க்குக் காட்டுத் தீயும், தாமரைப் பொய்கையும் ஒரு தன்மையவே. ஆகவே, இந்த ஈமத் தீயால் துயர் உறுவேன் என்று உள்ளம் கவலற்க! தீப்பாய்ந்து உயிர் போக்கி உயர்வடையத் துணிந்த என்னை, இடைநின்று தடுத்தல் ஒழிக கூறி, விடைபெற்று விரைந்து தீப்புகுந்து விழுப்புகழ் பெற்றாள்.
கணவன் பாராட்டக் காதல் வாழ்வு வாழ்வதும், அக்கணவன் இறந்த பின்னரும் இருந்து உயிர்வாழ விரும்பாமையும், கற்புடைய மகளிர்க்குப் பொற்புறு அணிகலன்களாம் எனச் சொல்லால் உரையாது, செயலால் செய்து காட்டிய பெருங்கோப் பெண்டு, ‘அறம் கூறுதல் ஆன்றோர் கடன், அவ்வாறு தவறிய அவரைக் கடமை உணர்ந்தார், அவர் தவறு காட்டித் திருத்தி நல்வழிப்படுத்தலே நன்னெறி!’ என எடுத்துக் கூறும் அறிவுரைகள் அறிந்து மேற்கொள்ளத் தக்கனவாம்.