இலக்கியத் தூதர்கள்/சீவகன் விடுத்த தூதன்


10. சீவகன் விடுத்த தூதன்

குறை போக்க வந்த நிறைநூல்

இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவினை உடையதாகிய ஒப்பரிய தமிழ்மொழியில் பண்டை நாளில் பற்பல நாடக நூல்கள் இருந்தன என்பர். சிந்தையள்ளும் சிலப்பதிகாரம் ஒன்றே செந்தமிழ் நாடகக் காப்பியமாக இன்று நாம் காணக் கிடைக்கின்றது. அதைப் போன்றதொரு நாடகநூல் இல்லாத பெருங் குறையினைப் போக்க வெழுந்த அருந்தமிழ் நாடக நூல் மனோன்மணீயம் ஆகும். மனோன்மணி யென்னும் மங்கை நல்லாளைத் தலைவியாகக் கொண்டு ஆக்கப்பெற்ற அரிய நூல் அதுவாகும்.

சுந்தரர் செந்தமிழ்த் திறம்

சென்ற நூற்றாண்டில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகவும், பின்பு நெல்லை இந்துக் கல்லூரியின் முதல்வராகவும் விளங்கிய பேரறிஞர் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ்த் தாயின் முடிமணியாக அணியத் தக்க மனோன்மணியத்தை இயற்றியளித்தனர். அவர் ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் சிறந்த புலமையாளர்; தத்துவ நூலாராய்ச்சியுடன் வரலாற்றாராய்ச்சி, மொழி யாராய்ச்சி முதலியவற்றிலும் சிறந்தவர். தமிழிற் கவி பாடும் திறன் நன்கு வாய்க்கப்பெற்றவர். சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய திருஞான சம்பந்தரின் காலத்தை முதன் முதலாக ஆராய்ந்து அறுதியிட்டு உரைத்தவர் இவ்வறிஞரே. அது தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்வார்க்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிவருகிறது. தமிழ்த்தெய்வ வணக்கத்தின் தனிச்சிறப்பு

மனோன்மணீய நூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடல் தனிப்பெருஞ் சிறப்புடையது. அது நூலாசிரியரின் சிறந்த மொழியாராய்ச்சித் திறனையும், தாய் மொழியாகிய தமிழின்பால் அவருக்கிருந்த அளவிறந்த பற்றினையும் தெளிவுற விளக்கும். ‘பரம்பொருளாகிய இறைவன் பல்லுயிரும் பலவுலகும் படைத்துக் காத்துத் துடைத்தாலும், தான் எந்த வேறுபாடும் அடையாது முன் இருந்தபடியே இருக்கிறான். அவ்வுண்மையைப் போன்றே, தமிழ்த்தாய் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிக் குழந்தைகளைப் பெற்றாலும் உலக வழக்கில் அழிந்தொழிந்து சிதையாத அருந்திறன் படைத்துள்ளாள். அத்தகைய தமிழ்த்தாயின் இளமைத் திறத்தை வியந்தும் செயல் மறந்தும் வாழ்த்துவோம்’ என்று தமிழ்த்தெய்வத்தை வாழ்த்தி வணங்கும் நூலாசிரியரின் தமிழுள்ளம் சாலச் சிறந்ததாகும். தமிழிலுள்ள இணையற்ற நூல்களாகிய திருக்குறள், திருவாசகம் என்னும் இரண்டனையும் அவர் பாராட்டுந் திறன் பலகாற் படித்து இன்புறத் தக்கதாகும்.

‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மதுவாதி யொருகுலத்துக் கொருநீதி?’
‘கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே.’
‘மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ?’

திருக்குறள், திருவாசகப் பெருமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறளைக் குற்றமறக் கற்றுணர்ந்த நல்லோர், ஒரு குலத்திற்கு ஒரு நீதி யோதும் மனுவாதி நூல்களை மனத்திற் கொள்ளு வரோ? உலகமுழுதும் அழிந்தொழியும் கடையூழிக் காலத்தில், தனக்கு ஏற்படும் தனிமையைப் போக்கிக் கொள்வதற்கே இறைவன் திருவாசகத்தில் ஒரு பிரதியெழுதி வைத்துக்கொண்டான். ஓதுவார் உள்ளத்தையெல்லாம் உருக்கி, அவர்கள் உயிரைப் பற்றிய ஆணவம் முதலான குற்றங்களையெல்லாம் ஒழிக்கும் பெற்றி வாய்ந்த திருவாசகத்தில் பற்றுக் கொண்டோர் கண்மூடிக் கடுந்தவம் புரிய வேண்டுவதில்லை. இவை போன்ற பல அரிய கருத்துக்களைக் கொண்டொளிரும் தமிழ்த்தெய்வ வணக்கம் தமிழறிஞர் பலரும் ஒருங்கே பாராட்டும் உயர்வுடையது.

மனோன்மணீய நூலின் அமைப்பு

இந்நால் லிட்டன் பெருமகனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ‘இரகசிய வழி’ (The Secret Way) என்னும் கவிதைக் கதையைத் தழுவி இயற்றப்பட்டதாகும். எனினும் ஆசிரியர் தமிழ் நாட்டுக்கு ஏற்ற வகையில் வாழ்த்து வணக்கங்களுடன் நூலைத் தொடங்குகிறார். நூற்பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் விளங்கவும், மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் முதலியவற்றை இடத்துக்கு ஏற்ற வகையில் அமைத்து நூலை ஆக்கியுள்ளார். மந்திரம், தூது, வெற்றி முதலிய அரசியல் நிகழ்ச்சிகளையும் இடையே கலந்துள்ளார். அங்கம், களம் என்னும் பாகுபாடுகளோடும் மங்கல முடிவோடும் நூலை ஆசிரியர் முடித்திருப்பது பாராட்டற்பாலது.

மனோன்மணீயத்தில் சிவகாமி சரிதை

மேலும், ஆசிரியர் இந்நாடக நூலுள் ‘சிவகாமி சரிதை’யென்னும் கிளைக்கதை யொன்றைப் புகுத்தி யுள்ளார். அக்கதை ஆங்கிலத்தில் ஆலிவர் கோல்ட்ஸ்மித் என்பார் ஆக்கியுள்ள ‘துறவி’ (The Hermit) என்னும் கவிதைக் கதையினைத் தழுவிய தாகும். அதனையும் ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ற வகையில், கற்போர் உள்ளத்தைக் கவருமாறு பொற்புறப் பாடியிருப்பது பாராட்டத் தக்கதாகும்.

மனோன்மணீயத்தின் மாண்பு

இந்நாடக நூல் தோன்றிய நாள் தொட்டு அறிஞர்களின் மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியதாயிற்று. அந்நாள் முதல் இந்நாள் வரை இதைப் போன்றதொரு நூல் தோன்றாதிருப்பதே இதன் பெருமைக்கு ஏற்ற சான்றாகும். இந்நூலில் மக்கள் அறியவேண்டிய அரிய பொருள்கள் பலவற்றை, உரிய இடங்களில் வெளிப்படையாகவே விளக்கியுள்ளார். நூல் முழுதும் தத்துவக் கருத்துக்களை உள்ளுறையாக அமைத்திருப்பது ஆசிரியரின் உயர்ந்த நோக்கையும் ஆழ்ந்த புலமையையும் புலப்படுத்தும். இந்நூல் செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் பெரும் பகுதியான ஆசிரியப்பாக்கள் உரைநடை போன்றே தோன்றும். இடையிடையே வரும் பல வகையான பாக்களும் பாவினங்களும் கருத்துக்களுக்கேற்ற சந்தமுடையனவாக வந்துள்ளன. தமிழரின் உயர்ந்த பண்பாட்டைப் புலப்படுத்துவது ஒன்றே ஆசிரியரின் குறிக்கோளாதலின், அதற்கேற்ப நாடகம் நிகழும் இடத்தையும் நாடகப் பாத்திரங்களையும் அமைத்துக் கொண்டார்.

நாடக உறுப்பினர்

இந்நாடகத்தில் வரும் உறுப்பினர் எண்ணிலராயினும் அவருள் முக்கியமானவர் ஒன்பதின்மர் ஆவர். சீவகன், குடிலன், சுந்தர முனிவர், நடராசன், நாராயணன், பலதேவன், புருஷோத்தமன் ஆகிய எழுவரும் ஆண்பாலார் ; மனோன்மணி, வாணி ஆகிய இருவரும் பெண்பாலார். நூல் முழுவதும் மனோன்மணியைக் குறித்த செய்திகளாகவே அமைந்திருத்தலால், ஆசிரியர் இதற்கு ‘மனோன்மணியம்’ என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.

பாத்திரங்களின் பண்புகள்

ஆசிரியர் சுந்தரம் பிள்ளை நாடக உறுப்பினர்களின் பண்புகளை நூலின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை சிறிதும் வழுவாத முறையில் படம் பிடித்துக் காட்டுவதுபோல வகுத்துரைப்பது வியத்தற்குரிய ஓர் அமிசமாகும். சீவகனைக் கள்ள மில்லாத வெள்ளை உள்ளத்தகைவும், குடிலனை வஞ்சகம்நிறைந்த நெஞ்சினனாகவும், சுந்தரமுனிவரை உயர்ந்த சிந்தையுடைய செந்தண்மையாளராகவும், நடராசனை ஒரு நல்லறிஞனாகவும், நாராயணனை நற்குணங்கள் நிறைந்த போர் வீரனாகவும், பலதேவனைக் கயமைக் குணமுடைய இழி மகனாகவும், புருஷோத்தமனை வல்லமை வாய்ந்த நல்லாட்சி புரியும் அரசனாகவும், மனோன்மணியை அறிவும் அழகும் அருங்குணமும் ஒருங்கே அமைந்த தலைவியாகவும், வாணியைக் கற்பிற் சிறந்த பொற்புடைய தோழியாகவும் வகுத்துக் கொண்டு கதையினை அமைக்கும் ஆசிரியரின் கலைத்திறம் கற்பாரை வியப்பில் ஆழ்த்துவதாகும். குடிலன், நடராசன் முதலானோர் இயல்புகளை அவரவர் வாய்ச் சொற்களின் வாயிலாகவே வெளிப்படுத்தியிருப்பது படிப்பவர்க்குப் பெருமகிழ்ச்சி தருவதாகும். மனோன்மணீயக் கதை

சீவகன் என்னும் பாண்டிய மன்னன், தீய நினைவும் திறமான சூழ்ச்சியும் உடைய குடிலன் என்னும் அமைச்சன் வயப்பட்டான். அவன் சொற்படியே மதுரையை விடுத்து, நெல்லையிற் கோட்டையமைத்து, அதன்கண் உறையலானான். சீவகனுக்குக் குல குருவாக விளங்கிய சுந்தர முனிவர், அவனை இடையூற்றினின்றும் காத்தற் பொருட்டு, நெல்லைக் கோட்டையில் தமக்கென ஓர் அறையை வாங்கினர். அதிலிருந்து அரணின் புறத்தேயமைத்த தமது உறையுள்வரை பிறர் அறியாது. சுருங்கை வழி யொன்றை அமைத்தார்.

சீவகன் பெற்ற ஒரே செல்வியாகிய மனோன்மணியும் சேர நாட்டரசன் புருடோத்தமனும் ஒருவரை யொருவர் கனவிற் கண்டு காதல் கொள்கின்றனர். அதற்கு முன்பே மனோன்மணியின் தோழியாகிய வாணியும் பாண்டியன் படைத்தலைவனாகிய நடராசனும் ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டுள்ளனர். வாணியின் தந்தையாகிய சகடன் பொருளாசையால் குடிலன் மகனாகிய பலதேவனுக்கே தன்மகளை மணஞ் செய்விக்கத் துணிந்தான். அதற்குப் பாண்டியன் இசைவையும் வேண்டிப் பெற்றான்.

மனோன்மணியின் மனநிலையைக் கண்ட சுந்தர முனிவர் இளவரசிக்கேற்ற மணவாளன் சேர வேந்தனாகிய புருடோத்தமனே என்று அரசனுக்கு அறிவித்தார். இதனையறிந்த குடிலன், மனஎன்மணியும் அவளுக்குரிய பாண்டிய அரசும் தன் மகன் பல தேவனுக்குக் கிடைத்தலாகாதா என்று பேராசை கொண்டான். உடனே சூழ்ச்சி யொன்றைச் செய்து பல தேவனையே சேரனிடம் தூது விடுக்குமாறு பாண்டியனைத் தூண்டினான். சேரனுக்குச் சினத்தை விளைத்துப் பாண்டி நாட்டின்மீது படையெடுத்து வருமாறும் செய்துவிட்டான்.

உண்மைக் காதலின் வெற்றி

போரிலே பாண்டியன் தோல்வியுற நேர்ந்தது. அவ்வேளையிலும் அவன் குடிலன் கூற்றையே மெய்யென நம்புகிறான். அவனது சூழ்ச்சியால் மனோன்மணியைப் பல தேவனுக்கு மணஞ்செய்விக்க மன்னன் துணிகின்றான். மனோன்மணியும் கடமையுணர்ச்சியின் காரணமாக அதற்கு இசைகின்றனள். நள்ளிரவில் மணவறையில் சுந்தர முனிவர் மணச்சடங்கினை கடாத்த, மனோன்மணி பலதேவன் எதிரே மணமாலை தாங்கி வந்து நிற்கின்றாள். அந்த மணவேளையில் சேர வேந்தனாகிய புருடோத்தமன், கொடிய வஞ்சகனாகிய குடிலனுக்கு விலங்கு பூட்டி, அவன் காட்டிய சுருங்கை வழியே அரண்மனையுட் புகுந்து மனோன்மணியின் கண்ணெதிரே காட்சியளித்தான். கனவிற் கண்ட காதலனைக் கண்ணுற்ற பெண்ணரசியாகிய மனோன்மணி, அன்னவனுக்கே மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள். உண்மைக் காதல் வெற்றியுற்றது.

நூலின் தத்துவ உண்மைகள்

இவ்வரலாற்றை நாடக முறையில் வகுத்துக் காட்டும் ஆசிரியர் தத்துவப் பொருள்களை உள்ளுறையாகக் கொண்டு நூலை ஆக்கியுள்ளார். சீவகனைக் குடிலன் தன் வயப்படுத்தி ஆட்டுவித்தல், சீவான்மாவை மாயை ஆட்டுவிக்கும் திறமேயாகும். அருட்குரவருடைய அறவுரைகளைப் பாண்டியன் நம்பாதவாறு செய்யும் அம் மாயையின் வல்லமையை என்ன வென்று சொல்வது! ‘ஆறுகோடி மாயா சத்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின’ என்று மணிவாசகப் பெருமானும் பேசியுள்ளார். எனினும், இறைவனது அருட்சத்தியானது முடிவில் மாயையின் ஆற்றலையழித்து, உயிரின் தற்போதத்தைக் கெடுத்து, அதனைத் தன்வயமாக்கிக் கொள்ளும் என்பது இந் நூலின் முடிந்த பொருளாகும். இந்நூலில் சுந்தர முனிவரின் சீடர்களாக நிட்டாபரர், கருணாகரர் என்னும் இருவர் வருகின்றனர். இவர்களை முறையே வேதாந்தியாகவும் சித்தாந்தியாகவும் கொள்ளலாம். பாண்டியனுக்கும் சேரனுக்கும் போர் மூண்டதனை அறிந்தபோது கருணாகரர் பரிவுற்று இரங்குகிறார். அது கண்டு நிட்டாபரர் கட்டுரைப்பதும், அதற்கு மாறாகக் கருணாகரர் கூறுவதும் வேதாந்த சித்தாந்த உண்மைகளைத் திரட்டி யுரைக்கும் இரு விரிவுரைகளாக விளங்குகின்றன.

மனோன்மணியின் கனவும் முனிவர் வரவும்

பாண்டியன் மகளாகிய மனோன்மணி ஒரு நாள் இரவு உறங்கும்பொழுது கனவொன்று கண்டாள். அக்கனவில் சேர வேந்தன் புருடோத்தமனைக் கண்டு, அவனது பேரெழிலில் மனத்தைப் பறிகொடுத்தாள். அவனையன்றிப் பிறரை மணப்பதில்லை யென்றும் மனவுறுதி பூண்டாள். அதனால், அவள் உணவு கொள்ளாது நினைவு நோயால் பெரிதும் உடல் மெலிந்து வாடினாள். இந்நிலையில் மன்னவன், சுந்தர முனிவருடன் அந்தப்புரம் அடைந்து, மகளின் நிலையைக் கண்டு மனமுடைந்தான். மனோன்மணியின் கலத்தில் பெரிதும் கருத்துடையவராகிய முனிவர், அவளது மனநிலையை அறிந்து கொண்டார். பின்னர் மன்னனுக்கு மனோன்மணியின் மணவினை குறித்து நினைவூட்டினார். அவளை மணப்பதற்குரிய தகுதி வாய்ந்த மணவாளன் சேரவேந்தன் புருடோத்தமனே என்பதையும் அவன் சிந்தை கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ‘அச்சேரனிடத்து நடராசனைத் தூதனுப்புக; அவன் சென்று காரியத்தை நன்றே முடித்துக் கொண்டு திரும்புவான்’ என்றும் நினைவூட்டினார்.

குடிலன் சூழ்ச்சி

முனிவரின் மொழிகளைக் கேட்ட மன்னன், அமைச்சனாகிய குடிலனிடம் இதுபற்றிக் கலந்து கொண்டே தூதனுப்புதல் நலமெனக் கருதினான். அவனோ தன்னுடைய சூழ்ச்சிகட்கெல்லாம் சுந்தர முனிவர் தடையாயுள்ளனர் என்று நினைத்தான். அம்முனிவர் மீது அரசனுக்கு வெறுப்பினை விளைத்தல் வேண்டுமென நினைத்தான். நடராசனுக்குப் பதிலாகத் தன் மகன் பலதேவனைத் தூதுதனுப்புமாறு செய்யவேண்டு மென உறுதி பூண்டான். பலதேவன் சேரனிடம் தூது சென்று, அவனை இகழ்ந்து பேசுமாறு செய்து விட்டால் சினங்கொண்ட சேரன் போருக்குச் சீறியெழுவான்; அவ்வாறு போர் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே மறைமுகமாகச் சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனத் திட்டமிட்டான்.

சீவகனும் குடிலனும்

மறுநாள் குடிலன், மன்னன் மாளிகையை அடைந்தான். இளவரசியின் திருமணச் செய்தி கேட்டுப் பெருமகிழ்வுற்ற செய்தியை அரசனுக்கு அறிவித்தான். தக்க காரணத்துடன் அச்சேரனுக்குத் தூதனுப்புதல் வேண்டும் என்றும் விளம்பினான். “வஞ்சி நாட்டின் ஒருபகுதியாகிய நன்செய் நாடு நீர் வளமும் நிலவளமும் நிறைந்தது. அது நம் பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதியாகும். அங்கு வாழ்வார் பேசும் மொழி நம் தமிழே. இஃது ஒன்றே அப்பகுதி நம்முடையது என்பதை நாட்டப் போதிய சான்றாகும். அந்நாட்டினைச் சில காலமாகச் சேரன் ஆண்டு வருகிறான். அதனை எவ்விதத்திலும் மீட்டல் வேண்டும் என்ற நினைவாலேயே யான் இந் நெல்லையில் கோட்டையும் படையும் கொண்டு நிறுவினேன். ஆதலின் அச்சேரன்பால் நாம் ஒரு தூதனை யனுப்பி, நன்செய் நாட்டின் உரிமையை விளக்குவோம்; அதனை நம்பால் ஒப்படைத்து விடுமாறு அறிவுறுத்துவோம் ; நம் வீரத்தையறிந்த சேரன் நம்பால் அதனை ஒப்புவித்து நம்முடன் நட்புக் கொண்டொழுக விரும்புவான். அப்போது நாமும் அதற்கு இசைந்து, நம் ஒற்றுமைக்கு அறிகுறியாக மனோன்மணியின் திருமணத்தைப் பற்றி மெல்ல உரைத்தால் அவன் அதற்கு மறுப்பின்றி விருப்புடன் ஒருப்படுவான். மணமும் நாம் நினைத்தவாறே இனிது நிறைவேறும்” என்று பக்குவமாகப் பகர்ந்தான்.

பலதேவன் தூது போதல்

குடிலன் கூறிய மொழிகளைக் கேட்ட சீவகன் சிந்தை பெரிதும் மகிழ்ந்தான். அவனைப் பெரிதும் பாராட்டி, இச் செயலை இனிது முடித்தற்கேற்ற பேராற்றல் படைத்தவன் நும் மகனாகிய பலதேவனே என்று பகர்ந்தான். அது கேட்டு அளவிறந்த மகிழ்ச்சி யடைந்த குடிலன், தன் மகனைத் தூதனுப்ப உடன் பட்டான். சீவகன் விடுத்த தூதனாய்ச் சேரன் பேரவை யடைந்த பலதேவன் அவன் முன் சென்று செருக்குடன் நின்றான். அவனது நிலை, சேரனுக்குச் சினத்தையும் வெறுப்பையும் விளைத்ததாயினும் அடக்கிக்கொண்டு, அவன் தூது வந்த காரணத்தை வினவினான்.

சேரன் பேரவையில் பலதேவன்

அப்பொழுது பலதேவன், “மலைய மன்னவ ! நெல்லையிலிருந்து பாண்டி நாட்டு எல்லையை ஆளும் சிவக வேந்தன் விடுத்த தூதன் யான். அவ்வழுதியின் மந்திரத் தலைவனாகிய குடிலேந்திரன் மகன் பலதேவன் என்பது என் பெயர். எம் மன்னனாகிய சீவகன், தன் பகைவரை யெல்லாம் வெல்லுதற்கே நெல்லையைத் தலைநகராக்கி ஆங்கு வல்லமை வாய்ந்த அரணையும் அமைத்துள்ளான் ; வேந்தே ! நீ ஆளும் வஞ்சி நாட்டின் தென்கீழ்த் திசையில் அமைந்த நன்செய் நாடு எங்கட்கு உரியது. அங்குள்ளார் பேசும் மொழியும், ஆளும் ஒழுக்கமுமே அதற்குத் தக்க சான்றுகள். முன்னிருந்த மன்னர் சோர்ந்திருந்த வேளையில் எங்கள் எல்லைக்குட் புகுந்து சின்னாள் நீ அந்நாட்டை ஆண்டாய். அந் நாட்டின் உரிமையை மீட்கும் நோக்குடனேயே நெல்லையை வல்லையில் தலை நகராக்கினோம். படைகளும் ஆங்குத் திரண்டு வந்துள்ளன” என்றான்.

சேரன் சினமும் சீவகன் மனமும்

பலதேவன் மொழிகளைக் கேட்ட சேரன் சிரித்தான், சினந்தான். ‘அதற்காக யாம் செய்ய வேண்டுவது என்ன?’ என்று வினவினான். அதுகேட்ட பலதேவன், “சேரனும் செழியனும் போரினில் எதிர்த்தால் யார் பிழைப்பரோ? நீவிர் இருவரும் போர் புரிந்தால் வீணே பலர் இறந்தொழிவர். அத்தகைய துன்பம் நேராதிருக்கவே பாண்டியன் என்னை இங்கு ஏவினான். நன்செய் நாட்டை உரிமை நோக்கிப் பாண்டியனுக்கு அளிப்பதே கடனெனக் கூறவும் நின் கருத்தை யறிந்து மீளவுமே என்னைத் தூது விடுத்தான்-வேந்தே ! நினக்கு நன்மை விளைக்கும் உண்மை சிலவற்றை உரைக்கிறேன். நீவிர் இருவரும் பகைத்தால் யாது விளையுமோ? அறியோம். போரில் அஞ்சாத ஏறனைய சீவகனுடன் நீ வெஞ்சமர் விளைத்தல் நன்றன்று. மேலும் நன்செய் நாட்டை உரிமை பாராட்டி நீயே அடைதற்குரிய வழியொன்றும் உளது. எங்கள் மன்னனுக்குக் கண்ணனைய பெண்ணொருத்தி யுள்ளாள் அவள் பேரெழில் பெற்றவள்; அமுதே உருவெடுத்தாற் போன்ற ஆரணங்கு அன்னாள். அழகிய நறுமலராய் மலர்ந்துள்ளாள் அவள். அந் நறுமலர்த் தேனை நாடிப் பருகும் வண்டு, இதோ! இவ்வரியணையில் வீற்றிருக்கிறது. அம்மனோன்மணி நின் அரியணையில் அமர்ந்தால் தென்னவன் மனம் திருந்தும் ; நன்செய் நாடும் நின்னதாகும்” என்று கூறி நின்றான்.

சேரன் வீரமொழி

அதுகேட்ட சேரன், ‘நன்று ! நன்று!’ என்று சிரித்தான். “ஒகோ ! உங்கள் நாட்டில் மலரையணை தற்கு வண்டினைக் கொண்டு விடுவார்கள் போலும் ! இருபுறக் காதலின்றி எம் நாட்டில் திருமணம் இல்லை. மேலும், நம் அரியணை இருவர்க்கு இடங் கொடாது. நன்செய் நாடு குறித்து நீ நவின்ற சொற்கள் நினைக்குக்தொறும் நினைக்குந்தொறும் எனக்கு நகைப்பையே தருகிறது. நம் அரண்மனைக் கடைத் தலையில் அடைக்கலம் புகுந்த மன்னர் பலர் நடைப் பிணமாய்த் திரிந்துகொண்டிருத்தலைக் கண்டிலையோ ? அவர்கள் முடியும் செங்கோலும் நம் அடியில் வைத்து வாய்புதைத்து நின்று, தத்தம் மனைவியரின் மங்கல நாணை இரந்து நிற்கும் எம் அரசவை புகுந்து, நாக்கூசாமல் நன்செய் நாட்டைப் பாண்டியனுக்குத் தருக! என்று பகர்ந்த பின்னும் நீ உயிர் தாங்கி நிற்பது தூதன் என்ற ஒரே காரணத்தால் என்பதை அறிவாய்! ஆராயாது உன்னை இங்குக் தூதனுப்பிய பாண்டியன் இதுகாறும் முடியணிந்து அரசாள்வது யாரால் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் தானே உணர்வான். இதனை உங்கள் அரசனுக்கு அறிவிப்பாய்” என்று வீரமும் வெகுளியும் தோன்றக் கூறிப் பலதேவனை அனுப்பினான்.

பாண்டியன் அவையில் பலதேவன்

சேரன் அரசவையினின்று நீங்கிய தூதனாகிய பலதேவன் தன் தந்தையின் சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்தான். நெல்லையைச் சார்ந்து சீவகன் திருமுன் சென்று வணங்கி நின்றான். அவனது முகக்குறிப்பினைக் கண்ட குடிலன் தனது சூழ்ச்சி பலித்து விட்டதெனத் தன்னுள் எண்ணி இறுமாந்தான், அதனால் அரசனுக்கு இறுதியும் தனக்கு உறுதியும் விளைவது திண்ணமென எண்ணி இன்புற்றான். பலதேவன், பாண்டியனை வணங்கி, “அரசே! சேர வேந்தன் நம்மைச் சிறிதும் மதித்திலன்; அவன் இழித்துரைத்த மொழிகளைக் கூற என் நா எழவில்லை ; வஞ்சி நாட்டுப் படை இன்றே நெல்லையை நோக்கிப் புறப்படும் என்றும் அவன் வீறுடன் கூறினான்” எனச் சொல்லி யகன்றான்.

பலதேவன் இடைத்தூதன்

இங்ஙணம் குடிலன் கூறிய கருத்துக்களை அவன் கூறியவாறே கூறிச் சேரன் சீறியெழுமாறு செய்து வந்த பலதேவன், கூறியது கூறுவானாகிய இடைத் தூதனுக்கு ஏற்ற சான்றாக விளங்குவதை மனோன்மணிய நூலால் அறிகின்றோம். இவ்விடத்துக் குடிலன் வாயிலாகத் தூதர் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாசிரியர், வள்ளுவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்ந்து சொல்லுவதைக் கண்டு மகிழலாம்.

“வினை தெரிந்து உரைத்தல் பெரிதல, அஃது
தணைநன் காற்றலே ஆற்றல், அதனால்,
அன்பும் குடிமைப் பிறப்பும் அரசவாம்
பண்பும் அறிவும் பரவுநூல் உணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
வாய்மையும் சொல்லில் வழுவா வன்மையும்
துணிவும் காலமும் நளமுந் துணியுங்
குணமும் மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதன்என்(று) ஓதினர்.”