இலக்கியத் தூதர்கள்/இந்திரன் விடுத்த தூதன்

9. இந்திரன் விடுத்த தூதன்

நளன் வரலாற்றைக் கூறும் இருநூல்கள்

முதல் ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய நளனது வரலாற்றைக் கூறும் நூல்கள் தமிழில் இரண்டுள. அவற்றுள் தலையாயது நளவெண்பா. மற்றொன்று நைடதம் என்னும் நற்காவியமாகும். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்று புலவரெல்லாம் வியந்து போற்றும் சிறந்த கவிஞராகிய புகழேந்தியார் நளவெண்பா நூலை யாத்தனர். ‘நைடதம் புலவர்க்கு ஔடதம்’ என்று நாவலர் நயந்து போற்றும் நைடதக் காவியத்தை நற்றமிழ் வல்ல சிற்றரசனாகிய அதிவீரராம பாண்டியன் ஆக்கினான்.

ஆதாரமாய் அமைந்த நூல்கள்

புலமை நலத்தால் புகழேந்திய புலவராகிய புகழேந்தியார் பாரதக் கதையில் வரும் நளன் சரிதையை ஆதரவாகக் கொண்டு நளவெண்பா நூலைப் பாடினர் என்பர். சூதாட்டத்தால் நாட்டை யிழந்து காட்டை யடைந்து கவலுற்றுக் கொண்டிருக்கும் பாண்டவர்க்கு ஆறுதல் கூறும் வேதவியாசர், நளன் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறிவிளக்கினார். அதனை அடிப்படையாகக்கொண்டே நூலைப்பாடியதாகப் புகழேந்தியார் நளவெண்பாவின் தோற்றுவாயில் நவில்கின்றார், நளனால் ஆளப்பெற்ற நாடு நிடதம் எனப்படும்; ஆதலின் அந்நாட்டு மன்னன் வரலாற்றைக் கூறும் காவியம் ‘நைடதம்’ எனப்பட்டது. இந்நூல் வடமொழியில், ஹர்ஷ கவி என்பார் இயற்றிய ‘நைஷதம்’ என்னும் காவியத்தின் மொழிபெயர்ப்பாகும். அவ்வடமொழி நூலின் சுவை குன்றாமல் அதிவீரராம பாண்டியன் மொழி பெயர்த்துள்ளான் என்று இருமொழி நூல்களையும் ஒருங்கே பயின்ற அறிஞர்கள் உரைப்பர்.

வெண்பாவிற் புகழேந்தி

தமிழில் உள்ள நால்வகைப் பாக்களில் வெண்பாவே முதன்மை வாய்ந்தது. புலவர்கள் அதனைப் பாடுவதும் அருமையாகும். ஆதலின் ‘புலவர்க்கு வெண்பாப் புலி’ என்றே வழங்கும் பழமொழியுண்டு. வெண்பா வகையினுள் ஒன்றாகிய குறள் வெண்பாக்களால் தம் நூலைப்பாடிய திருவள்ளுவரை ‘முதற்பாவலர்’ என்று பாராட்டுவதும் இக் காரணத்தாலேயே ஆகும். எனவே, செப்பலோசையிற் சிறந்து விளங்கும் செவ்விய இனிய நேரிசை வெண்பாக்களால் நளன் வரலாற்றைப் பாடிய புகழேந்தியாரை வெண்பாப் பாடுவதில் வீறு பெற்றவர் என்று வியந்து போற்றுவாராயினர்.

புகழேந்தியார் வைணவப் புலவர்

நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் நூலாசிரியர் திருமாலுக்கு வணக்கங் கூறியுள்ளார். மேலும், கலி தொடர் காண்டத்தில் நளனைக் கலி தொடர்ந்தவாற்றைக் குறிப்பிடும் புலவர், ‘நாராயணாய நமவென்று அவனடியிற் சேராரை வெந்துயரம் சேர்ந்தாற் போல்’ கலி தொடர்ந்தது என்று கட்டுரைக்கின்றார், கலிநீங்கு காண்டத்திலும் ‘மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோர் அருவினைப்போல்’நளனைக் கலி நீங்கியதென்றும் நவில்கின்றார். ஆதலின், புகழேந்தியார் திருமால் அடியவர் என்பது தெள்ளிதிற் புலனாகும்.

புலவரைப் போற்றிய வள்ளல்

புகழேந்தியார் தம்மை யாதரித்த குறுநில மன்னனாகிய சந்திரன் சுவர்க்கி என்பானின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கியே நளவெண்பாவை யாத்தனர் என்பர். ஆதலின் செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார், தம் நூலில் அம் மன்னனைத் தக்கவாறு போற்றிப் பரவுகின்றார், மனுமுறை தவறாது செங்கோல் செலுத்திய அம் மன்னனே ‘மாமனு நூல் வாழ வருசந்திரன் சுவர்க்கி’ என்று வாழ்த்தினார். அவனது வளம் பொருந்திய மள்ளுவ நாட்டைச் சொல்லும்போது, ‘வண்டார் வள வயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான் - தண்டார் புனை சந்திரன் சுவர்க்கி’ என்று போற்றினர். அவனது கொடை நலத்தைக் கொண்டாடும் புலவர், ‘தாருவெனப் பார்மேல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும், ‘சங்கநிதிபோல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும் குறிப்பிடுகின்றார்.

நளவெண்பா அரங்கேற்றம்

கொடை வள்ளலாகிய சந்திரன் சுவர்க்கியின் அரசவையில் புகழேந்தியார் தம் நளவெண்பா நூலை அரங்கேற்றினர். அப்போது அந்திப் பொழுதின் வருணனையைக் குறிக்கும் அழகிய பாடலொன்றைப் பாடிப் புலவர் விளக்கினார்.

“மல்லிகையே வெண்சங்கா வண்டுத, வான்கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப,-முல்லையெனும்
மென் மாலை தோளசைய, மெல்ல நடந்ததே
புன் மாலை அந்திப் பொழுது.”

அந்திப்பொழுதாகிய அரசன் மெல்ல கடந்து வருகிறான். வண்டு, அவ்வேளையில் மல்லிகை யென்னும் சங்கை ஊதுகிறது. மன்மதன் மெய்காப்பாளனாகக் காத்து வருகின்றான். அவன் கையில் கரும்பு வில் விளங்குகின்றது. முல்லை மலர்மாலை, அவன் தோளிற் கிடந்து துவள்கின்றது. எத்துணை அழகிய கற்பனை!

அவையில் எழுந்த தடை

பாட்டையும் விளக்கத்தையும் கேட்ட புலவரெல்லாம் உள்ளங் கிளர்ந்து முகமலர்ந்த தலையசைத்தனர். ஒரு புலவர் மட்டும் எழுந்து, இவ்வருணனையில் தவறுள்ளதெனத் தடை கூறினார். சங்கினை ஊதுவான் அதன் அடிப்புறத்திலன்றோ வாய்வைத்து ஊதுதல் மரபு; அங்ஙணமிருக்க, மலரின் மேற்புறத்திலிருந்து ஊதும் வண்டு சங்கூதுவானை யொப்பது எங்ஙனம் ? ஆதலின் இக்கற்பனை தவறுடையதாகும் என்று புகழேந்தியார் கருத்தை மறுத்துரைத்தார்.

புகழேந்தியாரின் புலமை

அது கேட்ட புகழேந்தியார் மகிழ்வோடு அப் புலவரை நோக்கினார். “நீவிர் கூறிய கருத்துப் பொருத்தமுடையதே; ஆயினும் கள்ளுண்ட களி மயக்குடன் சங்கை ஊதுவான், அதன் பின்பக்கம் முன்பக்கங்களே யறியானன்றோ? ஆதலின் தேனுண்ட வண்டும் களிகொண்டு மேலமர்ந்து ஊதிற்று; இதில் ஏதும் ஐயமுண்டோ?” என்று அவையிலிருந்த புலவரெல்லாம் வியக்குமாறு விடையிறுத்து மேற் சென்றார். மறுப்புரை கூறிய புலவர் வாயடைத்து வாளா அமர்ந்தனர் என்பர். இங்நிகழ்ச்சி, புகழேந்தியாரின் நிகரிலாப் புலமை நலத்தை விளக்குவதாகும்.

மன்னன் அன்னத்தைக் கண்ணுறல்

இத்தகைய இனிமை வாய்ந்த நளவெண்பா நூலில் இரண்டு தூது நிகழ்ச்சிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அன்னத்தின் தூது. மற்றொன்று நளன் தூது. முதலில் அன்னத்தின் தூது பற்றிய செய்திகளை ஆய்ந்துணர்வோம். நிடத நாட்டின் தலைநகரமாகிய மாவிந்த நகரின் நடுவேயமைந்த மாளிகையைச் சூழ்ந்து மாமலர்ச் சோலை விளங்கியது. அரசனாகிய நளன் அச்சோலையிலுள்ள நன்மலர்களைக் கொய்தற்குத் தோழியர் பலர் புடை சூழ மெல்ல நடைபயின்று சென்றான். அச்சோலையின் நடுவண் அமைந்த பொய்கையில் பூத்த நறுமலர்த் தாமரையின்மேல் அன்னம் ஒன்று அமர்ந்திருத்தலைக் கண்டான். அதனைப் பிடித்துக்கொணருமாறு, அவன் தோழியரை ஏவினான். அவர்களும் அவ்வாறே அன்னத்தைப் பிடித்து மன்னன் திருமுன்னர்க் கொண்டு வந்து வைத்தனர். மன்னனைக் கண்ட அன்னம் மலங்கியது; தன் இனமான பிற அன்னங்களைக் காணாது கலங்கியது. அவ்வன்னத்திற்கு அரசன் ஆறுதல் கூறினான்.

அன்னம் சொன்ன அரிவை

நளன் கூறிய ஆறுதல் மொழியைக் கேட்டுத் தடுமாற்றம் தீர்ந்த அன்னம் அவனுக்கொரு நற் செய்தியைக் கூறியது. ‘அரசே! நின் தோளுக் கிசைந்த தோகை நல்லாளாகத் தமயந்தி என்னும் தையலாள் ஒருத்தி யுள்ளாள்’ என்று உரைத்தது. அவள் பண்பு நலத்தை யெல்லாம் அன்பொழுகச் சொல்லியது. அவள் பெண்மை யென்னும் நாட்டைப் பேணி யரசாண்ட திறம், புலவரால் நயம்பட உரைக்கப் படுகின்றது. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களையும், தமயந்தி தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நாற்படைகளாகக் கொண்டாள்; ஐம்பொறிகளையும் அரிய அமைச்சர்களாகக் கொண்டாள் ; கால்களில் அணிந்துள்ள சிலம்புகளைக் கடிமுரசாகக் கொண்டாள்; கண்கள் இரண்டையும் வேலும் வாளுமாகக் கொண்டாள்; முகமாகிய மதியினைக் கொற்றக் குடையாகப் பெற்றாள்; இவ்வாறு அவள் பெண்மை யரசைப் பேணி யொழுகினாள் என்று அன்னத்தின் வாயிலாகப் புலவர், தமயந்தியின் நலமுரைக்கும் திறம் பாராட்டற் குரியதாகும்.

அன்னம் தூது போதல்

தமயந்தியின் சிறப்பைக் குறித்து அன்னம் சொன்ன அரிய செய்திகளைக் கேட்ட நளன் அவள் மீது அளவிலாப் பெருங்காதல் கொண்டான். அதனால் அவனது நெஞ்சம் இற்றது; மானம் அற்றது; நாணம் அழிந்தது. ‘இனி என் வாழ்வு, உன் வாய்ச்சொற்களில்தான் உள்ளது’ என்று கூறி, அன்னத்தை அத் தமயந்தியின்பால் தூது போக்கினான். அங்கு நின்று அன்னம் வானில் எழுந்து விதர்ப்ப நாட்டின் தலைநகரமாகிய குண்டினபுரத்தை நோக்கி விரைந்து பறக்கலுற்றது. அதனைத் தூதனுப்பிய நளன் உள்ளம், காதல் வெள்ளத்தால் அலைமோதித் தடுமாறும் நிலையினைப் புலவர் விளக்கும் திறம் பெரிதும் போற்றற்குரியதாகும்.

நளனது காதல் உள்ளம்

‘அன்னம் இந்நேரத்தில் குண்டினபுரத்தைக் குறுகியிருக்குமோ ? இந்நேரத்தில் அப்பெண்ணரசியைக் கண்டிருக்குமோ ? இந்நேரத்தில் அவள்பால் எனக்குள்ள காதலை இயம்பியிருக்குமோ? அங்கிருந்து திரும்பி யிருக்குமோ?’ என்று கூறிப் பெருமூச்சுவிடும் நளனது காதல் உள்ளத்தைப் புலவர் புலப்படுத்துகிறார்.

அன்னம் தமயந்தியைக் கண்ணுறல்

நளன் அனுப்பிய காதல் தூதாகக் குண்டின புரச் சோலையைக் கண்டடைந்த அன்னம், ஆங்குத் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த தமயந்தியைக் கண்டது. அவளும் அவ்வன்னத்தைத் தனியிடத்தே அழைத்துச் சென்று, தன்னை நாடி வந்த செய்தியை நவிலுமாறு வேண்டினாள். அவள் உள்ளங் களிகொள்ளுமாறு, அன்னம் நளனது பெருமையை நன்கு விளக்கியது. “பெண்ணரசே! உனக்கேற்ற மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் அறநெறி பிறழாத அன்புடையான் ; தண்ணளி நிறைந்த உண்மையாளன் ; செங்கோன்மை தவறாத சீரிய வேந்தன் ; மங்கையர் மனங் கவரும் தடந்தோளான் ; மண்ணுலகிலும் விண்ணுலகிலும் தன்னேரில்லாத தலைவன்; அறங்கிடந்த நெஞ்சும், அருள் ஒழுகும் கண்ணும், மறங்கிடந்த திண்டோள் வலியும் கொண்டவன்; அவனுக்குத் திருமாலையன்றி உலகிலுள்ள தேர்வேந்தர் எவரும் ஒப்பாகார்; அன்னவனையே நீ நன்மணம் புரிந்து வாழவேண்டும்” என்று அவ்வன்னம் தூதுரை பகர்ந்தது. தமயந்தியின் உள்ளக் காதலை உணர்ந்தது. ‘வேந்தனுக்கு எனது உள்ள நிலையினை விளக்கியுரைப்பாய்’ என்று வேண்டிய அவள் விருப்பினை அறிந்து மகிழ்ந்தது. அவளுக்கு ஆறுதல் கூறி, வானில் பறந்து மாவிந்த நகரையடைந்தது.

அன்னம் மன்னனிடம் திரும்புதல்

தூது சென்ற அன்னத்தின் வரவை எதிர்நோக்கி நின்ற நளன் வானில் விரைந்து பறந்து வரும் அப் பறவையைக் கண்டான். அதனை அன்போடு வரவேற்றுத் தன்மீது தமயந்திக்கு உண்டான பெருங் காதலைக் கூறக்கேட்டு இன்புற்றான். ‘அன்னக் குலத்தின் அரசே! அழிகின்ற எனது உயிரை மீளவும் எனக்குத் தந்தாய்!’ என்று அதனைப் பாராட்டினான்.

நளன் இந்திரன் விடுத்த தூதனாதல்

தமயந்தியின் சுயம்வரத் திருநாளைத் தெரிவித்தற்கு விதர்ப்ப நாட்டினின்றும் வீமன் விடுத்த தூதர் மாவிந்த நகரை யடைந்தனர். நிடத நாட்டு வேந்தனாகிய நளனை நண்ணித் தாம் கொணர்ந்த நற்செய்தியினைத் தெரிவித்தனர். தமயந்தியின் சுயம்வரச்செய்தியைக் கேட்ட நளன் தேரேறி விதர்ப்ப நாட்டின் தலை நகருக்கு விரைந்தான். தமயந்தியிடம் சென்ற தனது மனத்தைக் காணாமல் தேடி வருபவனைப் போலத் தேரேறி வரும் நளனை இந்திரன் முதலான இமையவர் நால்வர் இடைவழியில் கண்டனர். இந்திரன், நளனை நெருங்கி, “வேந்தே! யாங்கள் ஏவும் தொழிலைச் செய்தற்கு நீ இசைய வேண்டும்” என்று வேண்டினான். அவன் ஏவக் கருதிய பணி இன்னதென அறியாத நளன் அத் தொழிலைச் செய்தற்கு இசைந்தான்.

நளனது உள்ளமும் இந்திரன் மந்திரமும்

இவ்வாறு நளனது இசைவைப்பெற்ற இந்திரன், “வேந்தே! தமயந்தி தன் சுயம்வர மாலையினை எங்களில் ஒருவர்க்குச் சூட்ட வேண்டுமென்று அவள்பால் தூது சென்று ஓதி வருக!” என்று வேண்டினான். இச் செய்தியைக் கேட்ட நளனது உள்ளம் தடுமாறியது; பாவினிடத்தே நூலைச் செலுத்தும் குழலைப் போல, அஃது அங்கும் இங்கும் திரிந்து தள்ளாடியது. அவன் தனது உள்ளத்தெழுந்த காதல் வெள்ளத்தை அடக்கிக் கொண்டான். இந்திரனை நோக்கி, “தேவர் கோனே! நீ ஏவிய பணியினைப் புரிய இசைந்து நின்றேன் ; காவலைக் கடந்து கன்னி மாடத்துள் புகுவது எங்ஙனம்?” என்று வினவினான். இந்திரன் அவனுக்கு மந்திரம் ஒன்றைக் கற்றுக் கொடுத்து, “இதனை நீ உச்சரித்துக் கொண்டு சென்றால் எவரும் உன்னைக் காணமாட்டார் ; நீ கன்னிமாடத்தில் புகுந்து தமயந்தியை எளிதிற் கண்டு வரலாம்” என்று கூறி, நளனை நகருள் அனுப்பினான்.

கன்னிமாடத்தில் தமயந்தியைக் காண்டல்

இந்திரன் விடுத்த தூதனாய்த் தமயந்தியின் கன்னி மாடம் புகுந்த மன்னனாகிய நளன் ஆங்கிருந்த அப் பெண்ணரசியைக் கண்ணுற்றான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நோக்கிய பொழுது கருங்குவளை மலரில் செந்தாமரை மலர் பூத்தது போன்றும், செந்தாமரை மலரில் கருங்குவளை மலர் பூத்தது போன்றும் விளங்கியது. தமயந்தியின் வேட்கை நிறைந்த உள்ள மாகிய உள்ளறையில் கற்பென்னும் தாழிட்டுப் பூட்டியிருந்த நிறைக்கதவம் அவள் காதல் வேகத்தால் தானே திறந்தது. அவள் நளனது பேரழகைத் தன் கண்களால் நன்கு பருகினாள். ‘காவலைக் கடந்து கன்னிமாடம் புகுந்த நீ யார்?’ என்று அவனை வினவினாள். ‘விண்ணவர் விடுத்த தூதனாக யான் இங்கு வந்தேன் ; நான் நிடத நாட்டு வேந்தன்; நளன் என்பது என், பெயர்’ என்று நளன் தன்னை இன்னானென அறிவித்தான்.

தமயந்தியின் வேண்டுகோள்

நளனது தூது மொழிகளைக் கேட்ட நங்கையாகிய தமயந்தி, “மன்னனே ! நின்னை மணம் புரிவதற் கென்றே இச்சுயம்வரம் நடைபெறுவது என்பதை அறிக” என்று மனமுருகக் கூறினாள். நான் சுயம்வர மணமாலையைச் சூட்டுவதற்கு அத் தேவர்களுடன் நீயும் சுயம்வர மண்டபத்திற்கு எழுந்தருள்க” என்று கனிந்துருகி வேண்டினாள்.

நளன் தலைத்தூதன்

தமயந்தியின் மனக்கருத்தை யறிந்து மீண்ட மன்னன், இந்திரனைச் சந்தித்தான். அவள் உரைத்த வன்மொழியும், தான் உரைத்த இன்மொழியும் எடுத்தியம்பினான். அவன், தமக்குச் செய்த நன்றியைப் பாராட்டி இந்திரன், இயமன், வருணன், தீக்கடவுள் ஆகிய தேவர்கள் நால்வரும் வரங்கள் பல வழங்கினர். இம்முறையில் இந்திரன் விடுத்த தூதனாய்த் தமயந்தி பாற் சென்ற நளன் காதலுரைக்கும் தூதனாயினும் தானே வகுத்துரைக்கும் வல்லவனாதலின், அவன் தூதருள் தலையாயவன் ஆவான்.