இலக்கியத் தூதர்கள்/பாண்டவர் விடுத்த தூதன்
கம்பரும் வில்லியும்
பாரத நாட்டில் தோன்றிய பழைமையான வடமொழி இதிகாசங்கள் இராமாயணமும் பாரதமும் ஆகும். அவற்றைத் தமிழிற் பாடித்தந்த அருந் தமிழ்க் கவிவாணர் பலர். ஆயினும் இராமாயணத்தைப் பாடிய கம்பரும், பாரதத்தைப் பாடிய வில்லி புத்தூரருமே கற்றோரால் வியந்து போற்றப்படுகின்றனர். இப் பெருங்கவிஞர் இருவரும் அவ் விதிகாசங்களைக் கற்றவர் வியக்கவும் நயக்கவும் நற்றமிழிற் பாடிய பின்னர், முன்னர்த் தமிழில் தோன்றிய இராமாயண பாரத நூல்கள் வழக்காற்றினின்று மங்கி மறையலாயின.
தமிழுக்குக் கவி
நெஞ்சை யள்ளும் செஞ்சொற் காவியமாகிய சிலப்பதிகாரக் காலத்திற்குப் பின், அருந்தமிழிற் பெருங் காவியம் ஆக்கியவர்களில் சிறந்து நிற்போர் கம்பரும் வில்லிபுத்தூரருமே என்று சொல்லலாம். பிற்காலத்தில் தமிழுக்குக் ‘கவி’ என்று சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கார் கம்பரும் வில்லியும் என்று கவியுலகம் கொண்டாடும். இராமாயண பாரத வரலாறுகளைச் செவிக்கினிய செஞ்சொற் பாக்களால் தெவிட்டாத தெள்ளமுதமாக்கித் தந்த இவ்விருவர்க்கும் ஒப்பாவார் பிற்காலத்தில் எவருமிலர். கவிச்சக்கரவர்த்தி என்று கம்பர் சிறப்பிக்கப் பெற்றதுபோல், வில்லிபுத்தூரரும் ‘கவி சார்வ பௌமன்’ என்று சிறப்பிக்கப்பெற்றார். இவர் தம் காலத்தில் பிழையுடைய கவிபாடும் புல்லறிவாளரின் செவிகளைக் குடைந்து தோண்டி, எட்டின மட்டும் அறுத்து விடும் கொடுஞ்செயலைப் புரிந்து வந்தார் என்பர். ஆதலின், “குறும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி, எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை” என்று பிற்காலப் புலவர் ஒருவர் பாடினர்.
வில்லி பாரதச் சிறப்பு
இத்தகைய பெருங்கவிஞராகிய வில்லியார் தாம் ‘பிறந்த திசைக்கு இசைநிற்பப் பாரதமாம் பெருங் கதையைப் பெரியோர் தங்கள் சிறந்த செவிக்கு அமுதமெனப் பாடித் தந்தனர். இவர் பாக்கள் சொற்சுவை பொருட்சுவை மலிந்து மிடுக்கான நடைகொண்டு மிளிர்வனவாகும். இவர் தம் காலவியல்புக்கேற்ப மணியும் பவளமுங் கோத்தது போல, வட சொல்லையும் தொடர்களையும் இடையிடையே கலந்து வளம்படப் பாடுவதை இந்நூலிற் காணலாம். வீரச்சுவை, வெகுளிச்சுவை மிக்க கதைப்பகுதிகளில் சுவை கனிந்த சந்தப்பாக்களால் ஓசைகயம் சிறக்குமாறு இவர் பாடியுள்ள திறம் வியக்கற்பாலதாகும்.
பாரதக்கதை அமைப்பு
பாரதம் ஒரு குலத்துதித்த தாயத்தார்களில் ஒரு சாரார் ஒழுகிய அறநெறிகளையும், மற்றொரு சாராரின் மறநெறியான் விளைந்த தீய விளைவுகளையும் விரித்துக் கூறுவது. குருகுல வேந்தர்களாகிய கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் நிகழ்ந்த சூதுப்போரில் பாண்டவர் தம் அரசுரிமை யாவும் இழந்தனர். கௌரவர் தலைவனாகிய துரியோதனன் நியமித்தவாறே அப்பாண்டவர் பன்னிரண்டாண்டுகள் காட்டில் வாழ்ந்தனர்; ஓராண்டுக் காலம் விராட நகரிலே கரந்துறை வாழ்வை நடத்தினர். அங்ஙனம் பதின்மூன்று ஆண்டுகள் கழிந்ததும் பாண்டவர் ஐவரும் வெளிப்பட்டனர். தமக்குரிய தாயபாகத்தைத் தருமாறு வேண்டி முதலில் உலூக முனிவரையும், பின்னர்க் கண்ணபிரானையும் துரியோதனன்பால் தூது அனுப்பினர்.
கண்ணனைத் தூது செல்ல வேண்டுதல்
துரியோதனன் விடுத்த தூதனாய்ப் பாண்டவர் உறைவிடம் அடைந்த சஞ்சய முனிவன், நுமக்கு இனித் தவம் செய்வதே தக்கதென உரைத்து அகன்றான். அவன் சென்ற பிறகு, பாண்டவர் தலைவனாகிய தருமன் அரசர்க்குரிய அறநெறியை ஆராய்ந்தான். துரியோதனன்பால் கண்ணபிரானைத் தூதனுப்பி, இன்னும் ஒரு முறை அவன் எண்ணத்தைத் திண்ணமாகத் தெரியலாம் என்று எண்ணினான். பின்னர்க் கண்ணபிரானிடம், “நீ தூதாகச் சென்று எம்முடைய எண்ணத்தை அத் துரியோதனாதியர்க்குச் சொல் , அவர்கள் எமக்குரிய பங்கைக் கொடுப்பதற்கு மறுப்பராயின் போர் புரிந்தேனும் நாட்டைக் கைப்பற்றுவோம் ; நீ முதலில் எமக்குரிய பாகத்தைக் கேள் , அதனைத் தருதற்குத் துரியோதனன் மறுப்பானாயின் எங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து ஊர்களேனும் கேள்; அவன் அதனையும் மறுப்பானாயின் ஐவர்க்கும் ஐந்து இல்லங்களையேனும் கேள் ; அதனையும் அளிக்க மறுப்பானாயின் போருக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தி வருக ” என்று வேண்டினான்.
கண்ணன் அத்தினாபுரம் அடைதல்
பாண்டவர் தலைவனாகிய தருமன் வேண்டுகோளுக்கு இசைந்த கண்ணபிரான் அத்தினாபுரத்தை யடைந்தான். புறநகரில் அமைந்ததொரு பொழிலில் தங்கினான். அவனது வருகையைத் தூதர் துரியோதனனுக்கு அறிவித்தனர். துரியோதனன் நகரை அணி செய்யுமாறு கட்டளையிட்டுக் கண்ணனை எதிர் கொள்ளப் புறப்பட்டான். அவன் மாமனாகிய சகுனியோ, தன் மருகனைத் தடுத்து நிறுத்தினான். ஆதலின் துரியோதனன் கண்ணனை எதிர்கொள்ளாது, அவனுக்கு இருக்கை யமைத்துத் தம்பியர் புடைசூழ வீற்றிருந்தான்.
விதுரன் மாளிகையில் விருந்து
புறநகரில் வந்து தங்கிய கண்ணனை வீடுமன், விதுரன், துரோணன், அசுவத்தாமன் முதலிய பலர் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்களுடன் நகருள் நுழைந்த கண்ணன் எல்லோரையும் அனுப்பிவிட்டு, விதுரன் மாளிகையில் விருப்புடன் புகுந்து தங்கினான். தனது மாளிகையில் தங்கிய கண்ணனை விதுரன் பலவாறு போற்றி வழிபட்டான். “பெருமானே! எளியேனது இச்சிறிய குடிசை என்ன அரிய தவத்தைச் செய்ததோ ? நீ முன்பு அறிதுயில் புரிந்தருளிய பாற்கடலோ இது! அன்றி ஆதிசேடனாகிய பாம்புப் பாயலோ! பச்சை ஆலிலையோ? அல்லது நால்வகை வேதங்களோ ? நீ இங்கு எழுந்தருளியதை என்னென்று போற்றுவேன்?” என்று பாராட்டி மகிழ்ந்தான்.
- “முன்ன மேதுயின் றருளிய முதுபயோ ததியோ?
- பன்ன காதிபப் பாயலோ? பச்சை ஆல் இலையோ?
- சொன்ன நால்வகைச் சுருதியோ? கருதி எய்தற்
- கென்ன மாதவம் செய்ததுஇச் சிறுகுடில்! என்றான்.”
பின்பு கண்ணபிரானுக்கும் உடன் வந்தவர்க்கும் சிறந்த விருந்து நடைபெற்றது. எல்லோரும் தத்தம் உறையுள் எய்தினர்.
கண்ணனும் விதூரனும் கனிந்துரையாடல்
பின்னர்க் கண்ணனும் விதுரனும் தனியே அமர்ந்து உரையாடத் தொடங்கினர். விதுரன் கண்ணனை நோக்கி, “கருணையங் கடலே ! நீ இங்கு எழுந்தருளியதன் காரணத்தைக் கூறியருள்க” என்று அன்புடன் வேண்டினான். அது கேட்ட கண்ணன், “துரியோதனன் கருத்துப்படியே பாண்டவர்கள் காடு சென்று மீண்டுளாரன்றோ? அவர்கட்குரிய நாட்டைக் கேட்டற் பொருட்டே யான் இங்கு வந்தேன்!” என்று இயம்பியருளினான். அவ்வுரை கேட்ட விதுரன், “பெருமானே ! அத் துரியோதனன், தருமனுக்குரிய நாட்டை ஒழுங்காகத் தரமாட்டான்; அவன் அறநெறியினைச் சிறிதும் அறியாதவன் ; அவனைச் சூழ்ந்துள்ள கூட்டமும் அத்தகையதே. ஆதலின் அத் துரியோதனனைப் போரில் எதிர்த்துக் கலக்கினாலன்றி அறியான்” என்று உரைத்தான். “துரியோதனன் ஒழுங்காக நாட்டைக் கொடாவிடின் பாண்டவர் அரும்போர் புரிந்து அனைவரையும் அழித்தொழிப்பர்; இஃது உறுதியாகும்; மேலும் அத்துரியோதனன் அவர்கட்குரிய பாகத்தைக் கொடேன் என்று கூறுவது புதுமையன்று; இவ்வுலகத்தின் இயல்பே; போரில் எதிர்த்து அவர்கள் மீது பொன்றுமாறு அம்புகளைச் செலுத்தும் போதுதான் சொன்னவையெல்லாம் தருதற்கு முன் வருவர்” என்று கண்ணன் கட்டுரைத்து விதுரனுக்கு விடையளித்தான். துரியோதனன் அரசவையில் கண்ணன்
மறுநாட் காலையில் கண்ணன் துரியோதனன் அரசவை நண்ணினான். ஆங்கிருந்த வீடுமன் முதலிய பலர் கண்ணனைப் போற்றி வரவேற்றனர். அவ் வண்ணல் தனக்கென அமைத்த இருக்கையில் எழுந்தருளினான். உடனே துரியோதனன், கண்ணனை நோக்கி, இந்த நகருக்கு வந்த நீ எனது மாளிகைக்கு வராமல் விதுரன் மாளிகையிற் சென்று தங்கியதேன்?” என்று வினவினான். “என் வீடு, உன் வீடு என்று எனக்கு எந்த வேறுபாடும் இல்லை விதுரன் அன்புடன் எதிர்வந்து வரவேற்றுப் பேசினான் ; மேலும் நான் பாண்டவர் விடுத்த தூதனும் ஆவேன்; அவ்வாறிருக்க உனது வீட்டில் உணவுண்டு, பின்னர்; வெறுக்குமாறு உன்னுடன் உரையாடுவது முறை யாகுமோ ? அமைச்சர்களாக இருந்துகொண்டே ஒருவருடைய ஆட்சியினை அழித்தாலும், பெரியோர் அறிவுரையை மறுத்து கடந்தாலும், பிறர் செய்த நன்றியை மறந்தாலும், ஒருவர் மனையில் உண்டு பின்பு பகை கொண்டு அவருடன் பொருதற்குப் புகுந்தாலும் இவர்களுடைய பழி என்றும் அழியாது; இவர்கள் நால்வரும் நரகில் வீழ்தற்கே உரியவராவர்.” என்று கண்ணன் மறுமொழி யருளினான்.
- “அரவ மல்கிய பதாகை யாய்! மதி
- அமைச்ச ராய் அற சழிப்பினும்
- குரவர் நல்லுரை மறுக்கி னும்பிறர்
- புரிந்த நன்றியது கொல்லினும்
- ஒருவர் வாழ்மனையில் உண்டு பின்னும் அவ
- ருடன்அ ழன்றுபொற உன்னினும்
- இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும்
- இவர்களே நரகில் எய்துவார்.” கண்ணன் தூதுவந்த செய்தியை ஓதுதல்
- “அரவ மல்கிய பதாகை யாய்! மதி
கண்ணனின் கட்டுரையைக் கேட்ட கண்ணிலான் மகனாகிய துரியோதனன் நகைத்தான். ‘நீ தூது வந்த செய்தி யாது?’ என்று வினவினான். “சூதினால் அரசிழந்த நின் துணைவராகிய பாண்டவர் நீ சொன்ன சொல் தவறாத வண்ணம் பகைவர்களைப்போல் காட்டிற்குச் சென்று குறித்த காலத்தைக் கழித்து மீண்டுள்ளனர்; இனி அவர்கட்குரிய நாட்டை நட்புடன் கொடுப்பதே அறமாகும்; அங்ஙனம் செய்தால் பிற அரசர்களும் உன்னை உவந்து போற்றுவர்; மறுப்பாயானால் அஃது அறமன்று; ஆண்மையும் அன்று; புகழும் அன்று” என்று அருளோடு கண்ணன் அறவுரை கூறினான்.
துரியோதனன் மறுப்புரை
கண்ணன் மொழிகளைக் கேட்ட துரியோதனன் கடுஞ்சினத்துடன் பேசத் தொடங்கினான். இப் பாண்டவர் அன்று சூதாடித் தம் உரிமையெல்லாம் இழந்து வனம் புகுந்தனர்; இன்று அவ்வுரிமைகளை நீ சூழ்ச்சியாகக் கவர நினைத்தால் நான் அவரினும் எளியனோ? அவர்கள் இன்னும் காட்டில் சென்று திரிவதே உறுதியாகும் ; நீ என்னை வெறுத்தால் என்ன ? இங்குள்ள அரசர்கள் திகைத்தால் என்ன ? மறைவாகச் சென்று நகைத்தால்தான் என்ன? உண்மை பொய்த்துப்போய்விட்டது என்று தேவர்கள் கூறினால் என்ன ? பாண்டவர் என்னுடன் மாறுபட்டுப் போரைத் தொடங்கினாலும் என்ன? ஈ இருக்கும் இடங்கூட இனி நான் அவர்கட்குக் கொடுக்கமாட்டேன்” என்று கூறினான். கண்ணன் அறிவுரையும் அறவுரையும்
இவ்வாறு கூறிய துரியோதனனின் கொடுமொழிகளைக் கேட்ட கண்ணபிரான், “அவர்கட்குரிய நாடு முழுவதையும் கொடுப்பதற்கு விருப்பமில்லையானால் அதிற் பாதியாவது கொடு” என்றான். அதுவுங் கொடுக்க முடியாதென அவன் மறுக்கவே, கண்ணன், “ஐந்து பேர்களுக்கும் ஐந்து ஊரேனும் உதவுக” என்று கேட்டான். “காட்டில் திரிந்து நாட்டுள் புகுந்த அவர்கட்கு நாடும் ஊரும் வேண்டுமோ? ஐந்து வீடு கொடுப்பினும் அவர்கள் அவற்றை மறுப்பார்களோ?” என்று மறுமொழி பகர்ந்தான் துரியோதனன். அதனைக் கேட்ட கண்ணன், “தந்தையின் காதலுக்காகத் தன் தம்பிக்கு இந்த வாழ்வையும் அரசையும் கொடுத்த நின் குலத்து அரசன் ஒருவனும் இந்த அவையில் இருக்கிறான்; அவ்வாறாக இந்த நாடு முழுமைக்கும் உரிமையுடையவர்க்கு ஐந்து ஊர்களையேனும் நீ உதவமாட்டேன் என்றால் உனது அரசாட்சி அறநெறியுடையதாகுமோ?” என்று இடித்துரைத்தான். இதைக் கேட்ட துரியோதனன், “இவ்வுலகம் ஆண்மையுடையவர்க்கே உரியதாகும். இதற்கு உரிமை வேண்டுவதில்லை” என்று விளம்பினான். “அங்ஙனமாயின் போர் செய்வதற்காவது உடன்பட்டிருப்பதாக உறுதிமொழி கூறிக் கையடித்துத் தருக” என்று கண்ணன் கூறினான்.
துரியோதனன் பழித்துரைத்தல்
பொய்யனாகிய துரியோதனனுக்குப் புண்ணியனாகிய கண்ணன் புகன்ற மொழிகள் மேலும் சினத்தையே விளைத்தன. அவன் கண்ணனைப் பலவாறு இழித்தும் பழித்தும் உரைத்தான். யானைகள் பகை கொண்டு எதிர்த்தால் சிங்கங்கள் வாளாவிருக்குமோ? போருக்கு உடன்பட்டுக் கையறைய வேண்டும் என்று நீ கூறியது தகுமா? என்று சினந்தான். பாண்டவர்களைப் பலவாறு இகழ்ந்து பேசினான். அவன் பழித்துரைத்த மொழிகளையெல்லாம் கண்ணன் பொறுமையுடன் கேட்டான். பின்பு அந்த அவையினின்று நீங்கி விதுரன் மாளிகையை அடைந்தான். இனிமேல் பாண்டவர் எண்ணம் இனிது நிறைவேறும் என்று நினைந்து மகிழ்ந்தான்.
விதுரனை இகழ்தலும் வில்லை முறித்தலும்
கண்ணபிரான் அரசவையின் நீங்கிய பின்னர்த் துரியோதனன் கண்ணபிரானுக்கு விருந்தாட்டியதற்காக விதுரன்மீது சினங்கொண்டான். ‘விலைமகள் மகனாகிய விதுரன் இன்று கண்ணனுடன் உறவு கொண்டதாகிய வியப்பை என்சொல்லி வெறுப்பது?’ என்று கூறி அவனை இகழ்ந்தான். நாவைக் காவாமல் துரியோதனன் நவின்ற மொழிகள் விதுரனுக்குப் பெருஞ்சினத்தை விளைத்தன. ‘என்னை விலைமகளின் மகன் என்று இகழ்ந்துரைத்த உன் பக்கத்தில் துணையாக நின்று வில்லைத் தொடேன்’ என்று விதுரன் வஞ்சினம் கூறித் தன் வில்லை முறித்து இல்லம் நோக்கி விரைந்தான். அது கண்ட வீடுமர் துரியோதனனைக் கடிந்துரைத்தார். அவனோ வீடுமர் மொழிகளையும் பொருட்படுத்தாது, கன்னன் வில்லாண்மையையே வியந்து பேசினான்.
விதுரன் கண்ணனுக்கு விளம்பியன
விதுரன் வில்லை முறித்து விரைந்து வருதலைக் கண்ட கண்ணன், அதனை முறித்தற்குக் காரணம் என்னவென்று உசாவினான். “ஒருவன் நடக்கவேண்டியவற்றை ஆராய்ந்து பாரானாயினும், அமைச்சர்கள் அறிவுரையைக் கேளானாயினும், அழிவை எண்ணாதவனாயினும், நாவினைக் காவானாயினும் அத்தகையோனுக்குத் துணையாகச் சென்று போரில் இறப்பது வீணென்று உலகம் கூறும் ; அங்ஙணமிருக்கத் துரியோதனன் பொருட்டுப் போர்புரிந்து ஏனோ வீணில் இறக்கவேண்டும்? இவ்வுலகமக்கள் தமக்குச் செல்வம் வந்து சேரும் பொழுது அதற்குக் காரணமான தெய்வத்தைச் சிறிதும் போற்றமாட்டார்கள் ; எதனையும் எண்ணிப் பார்த்துப் பேசமாட்டார்கள்; உறவினர் என்றும் உற்ற நண்பர் என்றும் உள்ளத்திற் கொள்ளார்; தாங்கள் வெற்றியடைவது பற்றி எண்ணுவார்களே யல்லாமல், தம் பகைவர்களின் வலிமையை எண்ணிப்பாரார் ; ஊழ்வினையின் விளைவையும் உற்றுநோக்கார் நினைக்கவும் தொழவும் எட்டாத சிறப்புடைய நீ இங்கு எழுந்தருளப் பெற்றும் துரியோதனன் நின்னைப் போற்றாது ஒழிந்தான்; உறவினருடன் வாழ வெறுத்தான்; அவன் கூறிய கொடுஞ் சொற்களை என்னால் பொறுக்க முடியவில்லை; அதனாலேயே என் வில்லை முறித்தெறிந் தேன்” என்று விதுரன் விளம்பினான்.
- “செல்வம்வந் துற்ற காலைத்
- தெய்வமும் சிறிது பேணார்;
- சொல்வன அறிந்து சொல்லார் ;
- சுற்றமும் துணையும் நோக்கார்
- வெல்வதே நினைவ கல்லால்
- வெம்பகை வலிதென் றெண்ணார்;
- வல்வினை விளைவும் ஓரார்
- மண்ணின்மேல் வாழும் மாந்தர்.” அத்தினாபுரியில் கண்ணன் அருஞ்செயல்கள்
- “செல்வம்வந் துற்ற காலைத்
விதுரன் விளம்பிய மொழிகளைக் கேட்டுக் கண்ணன் மகிழ்ந்தான். “நெய்யைச் சொரிந்து விறகுகளை அடுக்கினாலும் காற்று வீசவில்லையாயின் அவ்விறகில் தீப்பற்றமாட்டாது. அதுபோல் நின் கைவில் முறிந்து போனதனால் துரியோதனன் படை அழிவது உறுதியாகும்; நின்னைத் துரியோதனன் இகழ்ந்துரைத்த சொற்களை மனத்திற் கொள்ளாமல் மறந்திடுக” என்று கூறினான். பின்னரும், இன்றியமையாத பல செயல்களைப் புரிந்தருளினான் பாண்டவர்களின் அன்னையாகிய குந்திதேவியைச் சந்தித்துக் கன்னன், அவள் பெற்றமைந்தனே என்பதை அறிவுறுத்தினான். அவனிடம் உள்ள அரவக்கணையை வரப்போகும் போரில் அருச்சுனன் மீது ஒரு முறைக்குமேல் செலுத்தாதிருக்குமாறு உறுதிமொழி பெற்றுவரச் செய்தான். இந்திரனைக் கன்னன்பால் அனுப்பி, அவனுடன் பிறந்த கவசகுண்டலங்களைக் கவர்ந்து வருமாறு செய்தான். துரியோதனன், தன்னைக் கொல்லுதற்கென்று செய்த சூழ்ச்சியினை வென்று, தன் பெரு வடிவைக் காட்டியருளினான். துரியோதனனுக்குப் போரில் துணையாவதில்லையென்று அசுவத்தாமனிடம் உறுதிமொழி பெறுபவனைப்போல் சூழ்ச்சி புரிந்தான்.
கண்ணன் தலைமைத் தூதன்
தூதனாக அத்தினாபுரம் அடைந்த கண்ணபிரான் திரும்பிச் சென்று தருமன் முதலியோரைக் கண்டு அத்தினாபுரத்தில் நிகழ்ந்த அரிய செய்திகளையெல்லாம் விரித்துரைத்தான். ஆனால் கன்னனுக்கும் குந்திதேவிக்கும் இடையே நிகழ்ந்த செய்திகளை மட்டும் வெளிப்படுத்தாது மறைத்தருளினான். இம்முறையில் தூது சென்று மீண்ட கண்ணபிரான் தலையாய தூதர்க்கு நிலையாய எடுத்துக்காட்டாக இலங்குவதைக் காணலாம்.