இலக்கியத் தூதர்கள்/வள்ளுவர் கண்ட தூதர்
திருக்குறளில் தூதர் இயல்பு
‘எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை’யென்று சொல்லிப் போந்தார் நல்லிசைப் புலவருள் ஒருவராய மதுரைத் தமிழ் நாகனார். அத்தகைய சிறப்பு வாய்ந்த அருந்தமிழ்த் திருமறையாம் திருக்குறளில் தூதரின் இயல்புகள் வகுத்தோதப்படுகின்றன. குறளாசிரியராகிய திருவள்ளுவர் ஒரு பொருளின் இலக்கணத்தைத் திறம்பட ஆராய்ந்து வகுத்துரைப்பது போன்று உலகில் வேறெந்தப் புலவரும் கூறினாரல்லர். அத்தகு முறையில் தூதினுக்கும் இலக்கணம் வகுத்தோதும் திறம் கற்பவர் கருத்தைக் கவர்வதாகும்.
அமைச்சியலுள் தூதியல்
முப்பாலுள் நடுவண் அமைந்த பொருட்பால் திருவள்ளுவரின் பல துறைப் புலமை நலத்தைப் புலப்படுத்தும் கலைக் கருவூலமாகும். எழுபது அதிகாரங்களைக் கொண்ட அப்பகுதியில் முதல் இருபத்தைந்து அதிகாரங்களான் அரசியலை வகுத்துரைத்தார் அப்புலவர். அரசுக்கு அங்கமாக அமைந்த படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறனுள் அரசற்கு இணையாய தலைமை சான்ற அமைச்சனின் இயல்புகளை அடுத்துள்ள பத்து அதிகாரங்களான் விளக்கினார். அமைச்சியலை விரித்துரைக்கப் புகுந்த பெருநாவலர், அமைச்சராயினர் தூது போதலும் உண்டென்னும் கருத்தானும் தலையாய தூதன் அமைச்சனோடு ஒப்பாவானாக லானும் தூதரியல்பை யோதும் ‘தூது’ என்னும் அதிகாரமொன்றை அமைச்சியலுட் புகுத்தியுள்ளார்.
பிரித்தலும் பொருத்தலும்
‘தூது’ என்னும் சொல்லுக்கு உரைவரைந்த பரிமேலழகர், ‘சந்திவிக்கிரகங்கட்கு’ வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை’ என்று குறிப்பிட்டார். பொருத்தலும் பிரித்தலுமாய செயல்களின் பொருட்டு வேற்று வேந்தர்பால் செல்லுதற்குரியார் தூதர் என்று கருதினார் அவ்வுரையாசிரியர். பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும், தம் பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக் கொள்ளுதலும், முன்னே தம்மினும் தம்பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலுமாய செயல்களே யாற்றுவதில் வல்லவராகத் தூதர் இருத்தல் வேண்டும். தன் பகைவரோடு சேராதாரைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளும் செயல், தன் நண்பர்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யத் தகுவதொன்றும். இவ்வுண்மையைத் தூதராயினர் நன்கறிந்து பொருத்தல் தொழிலைப் புரிதல் வேண்டு மென்பார் பொய்யில் புலவர்.
‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்’
என்பது அவர்தம் பொய்யா மொழி.
மூவகைத் தூதர்
திருவள்ளுவர் தூதரைத் ‘தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான்’ என இருவகைப்படுத் துரைத்தார். வடநூலார் இவ்விருவகையாருடன் ஓலை கொடுத்து நிற்பானையும் கூட்டித் தூதரைத் தலையிடை கடையென்று வகுத்துரைத்தனர். தான் வகுத்துக் கூறுவான் தலையாய தூதன் கூறியது கூறுவான் இடையாய தூதன் ; ஓலை கொடுத்து நிற்பான் கடையாய தூதன் என்பர்.
‘தானறிந்து கூறும் தலைமற் றிடையது
கோனறைந்த தீதன்று கூறுமால்-தானறியா
தோலையே காட்டும் கடையென்(று) ஒருமூன்று
மேலையோர் தூதுரைத்த வாறு’
என்னும் பெருந்தேவனாரின் பழந்தமிழ்ப் பாரத வெண்பாப் பாடல் வடநூலார் கருத்திற்கு அரண் கோலுவதாகும். தான் வகுத்துக் கூறுவாயை தலையாய தூதன் அமைச்சனுக்கு ஒப்பானவன். கூறியது கூறுவாயை இடைத் தூதன் அவனினும் காற்கூறு குணம் குறைந்தோன். கடைத்தூதனே தற்கால அஞ்சல்துறைக் கடைநிலை யூழியற்கு ஒப்பானவன்.
தலையாய தூதன் நிலை
தலையாய தூதனுக்கு அமைய வேண்டிய அரிய பண்புகளையெல்லாம் ஈரடியொருபாவில் ஆராய்ந்துரைக்கும் தெய்வப்புலவரின் திறம் எண்ணியெண்ணி இன்புறுதற் குரியதாகும்.
‘கடனறிந்து காலம் கருதி இடனறிக்
தெண்ணி யுரைப்பான் தலை’
என்பது அவர் வாய்மொழி. வேற்று வேந்தர்பால் தான் செயலாற்றும் முறைமையைத் தெரிதல், அவர் செவ்வி பார்த்தல், சென்ற கருமத்தைச் செப்புதற் கேற்ற இடமறிதல், சொல்லும் வகையினை முன்னே எண்ணியாய்தல் இவற்றையெல்லாம் நுண்ணிதின் நோக்கி யாய்ந்துரைக்கும் வாக்கு நலம் வாய்த்தவனே தலையாய தூதனாவான்.
திருவள்ளுவர் திறம்
வேற்றரசர்பால் தூது செல்வான், அவர் நிலையும், தன் அரசன் நிலையும், தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கேற்பக் காணும் முறைமையும், பேசும் முறைமையும் உடையனாதல் வேண்டும். அவ்வரசர் தன் சொல்லை ஏற்றுக்கொள்ளும் மனவியல்பைத் தெரிந்து பேசுதல் வேண்டும். தனக்குத் துணையாவார் உடனிருக்கும் இடனறிந்தும் இயம்புதல் வேண்டும். அவர்பால் தான் சொல்ல வந்ததனைச் சொல்லுந் திறமும், அதற்கு அவர் சொல்லும் மறு மொழியும், அதற்குப் பின் தான் சொல்லுவனவும் ஆயவற்றை மேன்மேல் தானே கற்பித்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வியல்புகளெல்லாம் ஒருங்கமையப் பெற்ற பெருங்கலைச் செல்வனே தலையாய தூதன் என்னும் உண்மையை இரண்டடிப் பாவில் எண்ணியமைத்துள்ள வள்ளுவரின் நுண்ணிய புலமைத்திறம் வியத்தற்குரியதன்றோ!
முதலிடைத் தூதர் பொதுவியல்
முதல் இருவகைத் தூதர்க்கும் பொதுவாக அமைய வேண்டிய இலக்கணங்களேயெல்லாம் இரு குறட்பாக்களால் வள்ளுவர் வகுக்கின்றார். தூது, பூணற்குரிய உயர்குடிப் பிறப்பு, தன் உறவினர் மாட்டு அன்புடைமை, வேந்தர் விழையும் பண்பு, தன் அரசன் மாட்டு அன்புடைமை, அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமை, அவற்றை வேற்றரசரிடை விளம்புங்கால் ஆராய்ந்து கூறும் வன்மை ஆகிய ஆறு இயல்புகளும் தூதுரைப்பானுக்கு அமைய வேண்டியனவாகும். பின்னர்க் கூறிய மூவியல்பும் ‘இன்றி யமையாத மூன்று’ என்று குறிப்பார் திருவள்ளுவர்.
குலவிச்சை நலம்
அரசியலிற் பட்டறிவுடைய நன்மக்கட் குடியிற் பிறந்தோனாயின் முன்னோர் தூதியல் கேட்டறிந்த வகை இருப்பான். உறவினர்மாட்டு அன்புடையோனாயின் அன்னவர்க்குத் தீங்கு வாராமல் தான் பேணி யொழுகுவான் ; இன்றேல் தன்னைப் பேணியொழுகும் பெற்றியினனாவன். தூதராயினார் குடியிற் பிறந்தோனாயின் அது குலவிச்சையாய்க் கல்லாமற் பாகம் படுமன்றோ? ‘பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்’ என்பர் ஆன்றோர். வழிவழியாகப் பல மன்னரைச் சேர்ந்தொழுகிய திறத்தான் வேந்தவாம் பண்பும் இயல்பில் அமைவதொன்றாம்.
மன்னர் மதிக்கும் மாண்பு
தூதனாவான் அமைச்சர்க்குரிய நீதி நூல்களையெல்லாம் ஓதியுணர்ந்து நூலாருள் நூல் வல்லனாக ஒளிர்தல் வேண்டும். இயல்பாகவே நுண்ணறிவைப் பெற்றவனாகவும், கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவைக் கொண்டவனாகவும், பலரோடும் பல காலும் ஆராயப் பெற்ற கல்விநலஞ் சான்றவனாகவும் திகழ்தல் வேண்டும். இவற்றால் அயல்வேந்தர் நன்கு மதிக்கும் திறம் தூதனுக்கு அமைவதாகும். அதனால் அவன் சென்ற வினை இனிதின் முடியும் என்பார்,
“அறிவுரு ஆராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு”
என்று குறிப்பிட்டார் திருவள்ளுவர். தூதோதும் திறம்
வேற்று வேந்தர்பால் தூதன் பேசவேண்டிய முறையினைப் பெருநாவலர் இரு பாக்களான் விளக்கியுள்ளார். அவரிடம் பல காரியங்களைக் கூற நேர்ந்த வழிக் காரண வகையால் தொகுத்துச் சொல்ல வேண்டும். அவர் விரும்பாத காரியங்களைக் கூற நேர்ந்த வழி வன்சொற்களை நீக்கி இன்சொற்களான் மனமகிழச் சொல்ல வேண்டும். தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்ல வேண்டும். அவர் வெகுண்டு நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாமல் காலத்திற்கேற்ப அது முடிக்கத் தக்க உபாயத்தை ஓர்ந்துணரவேண்டும். இத்தகைய சொல்வன்மையால் தன் அரசனுக்கு நன்மையை நாடி விளைப்பவனே நற்றூதனாவான்.
இடைத்தூதன் இயல்பு
இடைப்பட்ட தூதனாய கூறியது கூறுவான் இலக்கணத்தை வள்ளுவர் மூன்று பாக்களான் வகுத்துரைத்தார். அவனை வழியுரைப்பான், விடுமாற்றம் வேந்தர்க்குரைப்பான் என்னும் தொடர்களால் குறிப்பிட்டார். அன்னானுக்குத் தூய்மை, துணைமை, துணிவுடைமை, வாய்மை, வாய்சோரா வன்கண்மை, அஞ்சாமை எ ன் னு ம் இயல்புகள் அமைதல் வேண்டும் என்றார். பொருளாசையினாலோ சிற்றின்பத்தில் கொண்ட பற்று மிகுதியினாலோ வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மை வேண்டுவதாயிற்று. தூதன் தன் அரசனை உயர்த்துக்கூறிய வழி ‘எம்மனோர்க்கு அஃது இயல்பு’ எனக் கூறிப் பகை வேந்தன் வெகுளியை நீக்குதற் பொருட்டுத் தனக்கு அவனமைச்சர் துணை வேண்டுவதாயிற்று. இச்செய்தியினைக் கூறின் இவர் நமக்கு ஏதம் விளைப்பர் என்று அஞ்சி ஒழியாது அனைத்தும் உரைத்தற்குத் துணிவும் வேண்டுவதாயிற்று. யாவரானும் தெளியப்படுதல் நம்பப்படுதற் பொருட்டு வாய்மையும் வேண்டுவதாயிற்று. தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தன் அரசனுக்குத் தாழ்வு தரும் சொல்லை மறந்தும் சொல்லாத திண்மை வேண்டுமாதலின் அதனை வாய்சோரா வன்கண்மை என்று குறிப்பிட்டார். வேற்று வேந்தரிடைக் கூறும் அச்சொல் தன்னுயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சி ஒழியாது, தன் அரசன் சொல்லியவாறே சொல்லும் உள்ளுரமும் வேண்டும். ஆதலின்,
“இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாம் தூது”
என்று தூதிலக்கணத்தை அறுதியிட்டோதினார் திருவள்ளுவர்.
பெருந்தேவனார் பேசுவது
இவ்வாறு திருவள்ளுவர் வகுத்துரைத்த தூதிலக்கணத்தையெல்லாம், தொகுத்துப் பழந்தமிழ்ப் புலவராகிய பெருந்தேவனார் மூன்று வெண்பாக்களால் மொழியுந் திறம் படித்து இன்புறற் பாலதாகும்.
“அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை-நன்கமைந்த
சுற்ற முடைமை வடிவுடைமை சொல்வன்மை
கற்றடங்கல் தூதின் கடன்.”
“தடுமாற்ற மின்றித் தகைசான்ற சொல்லான்
வடுமாற்றம் வாய்சோரா னாகி-விடுமாற்றம்
எஞ்சாது கூறி இகல்வேந்தன் சீறுங்கால்
அஞ்சா(து) அமைவது தூது.”
“படையளவு கூறார் பெரியார்முன் மாற்றார்
படையளவிற் றென்று வியவார்-கொடைவேந்தன்
ஈத்ததுகண் டின்புறார் ஏந்திழையார் தோள்சேரார்
பார்த்திபர் தூதாயடைந்தார் பண்பு.”
(மாற்றார்-பகைவர், ஏந்திழையார்-பெண்கள், பார்த்திபர் - அரசர்.) .