இளையர் அறிவியல் களஞ்சியம்/நிலக்கரி

நிலக்கரி : நீராவி ரெயில் வண்டி, அனல் மின் நிலையம் போன்றவற்றில் வெப்பம் உண்டாக்க நிலக்கரி எரி பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது. சிறந்த இயற்கை எரி பொருளான நிலக்கரி நிலத்தடியிலிருந்து இயற்கையாக வெட்டி எடுக்கப்படுவதால் ‘நிலக்கரி’ எனப் பெயர் பெற்றது.

சுமார் முப்பத்தைந்து கோடி ஆண்டுகட்கு முன்னர் பூமியின் மீது பெரும் பெரும் மரங்களும் அடர்ந்த செடி கொடிகளைக் கொண்ட காடுகளும் செழித்து வளர்ந்திருந்தன. நாளடைவில் அவை பல்வேறு காரணங்களால் மண்ணுள் புதையுண்டன. பாறை போன்ற கடினப்பொருட்களின் இடையறாத அழுத்தத்தாலும் பூமிக்கடியில் இயற்கையாக இருந்து வந்த வெப்பத்தாலும் அவை மக்காமல் கருகி கெட்டித்தன்மை பெறலாயின. இவ்வாறு, இறுக்கமடைந்து கல் போன்ற கடினத்தன்மை பெற்று கரியாகியது. நிலக்கரி இந்நிலையைப் பெற பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின.

நிலக்கரி படிவுகளாகப் பல கி.மீ. சுற்றளவில் பூமிக்கடியில் பாளம் பாளமாக அமைந்துள்ளன. சில இடங்களில் இந்நிலக்கரி படிவுகள் ஏழு அல்லது எட்டு மீட்டர் கனத்திற்குப் பாறை புதைவுகளுக்கிடையே இருப்பதும் உண்டு. பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி நிலக்கரிப் படிவுகள் வெட்டி எடுக்கப்பட்டு வெளிக்கொணரப்படுகின்றன.

நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை அப்படியே நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்தலாம். சிறு சிறு கட்டிகளாகவோ தூளாக ஆக்கியோ

நிலக்கரிச் சுரங்கம்

பயன்படுத்துகிறார்கள். வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை மேலும் பல வேதியியல் மாறுதல்களுக்கு உட்படுத்தி, சிறந்த எரி பொருள்களாக உருமாற்றிப் பயன்படுத்தப்படுவதும் உண்டு.

நிலக்கரியைக் காற்றுப்புகாத நிலையில் எரிக்கும்போது அதிலிருந்து பல புதிய பொருட்கள் வெளிப்படுகின்றன. அவற்றைத் தனித்தனியே பிரித்தெடுத்துப் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நிலக் கரியிலிருந்துநிலக்கரி வாயு (Coal Gas) பெறப்படுகிறது. இதுவே கரிப்புகைக்குக் காரணமானதாகும். நிலக்கரியை மேலும் கெட்டிப்படுத்தி கல்கரி (Coke) தயாரிக்கப்படுகிறது. நிலக்கரியிலிருந்து முழுமையாக வாயுவை வெளியேற்றிய பின்னர் மீண்டும் உலையியிலிட்டுக் காய்ச்சி கரித் தார் பெறப்படுகிறது. இவ்வாறே அம்மோனியா திரவமும் பெறப்படுகிறது.

நிலக்கரியில் பல வகைகள் உண்டு. நன்கு முதிர்ச்சி பெறாத நிலக்கரி (Peat), புகை நிலக்கரி (Bituminous), பழுப்பு நிலக்கரி (Lignite), அனல் நிலக்கரி (Anthracite) என அவை அழைக்கப்படுகின்றன. இவற்றுள் புகை நிலக்கரி எரிக்கப்படும்போது மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்தும். இதை மிகு வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் ஆளாக்கும்போது அனல் மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் அனல் நிலக்கரி கிடைக்கிறது. ஈரப்பசையே இல்லாத சுத்தமான கரியான இஃது மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்தும், பூமிக்கடியில் முழுமையும் கரியாகாமல் அறைகுறையாகக் கரியாகும் தாவரப் பொருளே முதிர்ச்சி பெறாத நிலக்கரி. இத்தகைய முதிர்ச்சி பெறா நிலக்கரி மிகுந்த அழுத்தத்திற்காளாகும்போது அது பழுப்பு நிலக்கரியாக மாறுகிறது.

உலகிலேயே மிக அதிகமாக நிலக்கரி கிடைக்கும் நாடுகள் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ் நடுகளாகும். இந்தியாவில் பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி பெருமளவில் வெட்டியெடுக்கப்படுகிறது. இங்குக் கிடைப்பவை உயர்வகை நிலக்கரியாகும். பழுப்பு நிலக்கரி தமிழ்நாட்டில் நெய்வேலியிலும் காஷ்மீரப் பகுதிகளிலும் கிடைக்கின்றது.