இளையர் அறிவியல் களஞ்சியம்/ரப்பர்
இது 'ஹேவேயா’ எனும் ஒருவகை மரத்திலிருந்து எடுக்கப்படும் பாலாகும். ஹேவேயா ரப்பர் மரம் இயற்கையைப் போன்றே பழைமைமிக்கதாகும்.இம்மரம்மூன்று இலட்சம் ஆண்டுகட்கு முன்பிருந்தே பூமியில் இருந்து வருவதாகக் கண்டறிந்துள்ளனர். பழைமைமிக்க நாகரிக இனமக்களான இன்காகளும், மாயர்களும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே ரப்பர் பந்துகளைப் பயன்படுத்தி வந்ததாக இவ்வின மக்கள் வாழ்ந்த இடிபாடுகளிலிருந்தும் புதைபடிவங்களிலிருந்தும் கண்டறிந்துள்ளார்கள்.
கொலம்பஸ் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றபோது ஹைத்தி மக்கள் ஒருவகை மரப் பிசினிலிருந்து செய்யப்பட்ட பந்தை வைத்துக்கொண்டு விளையாடுவதைக் கண்டார். அதற்கும் முன்னதாகவே தென் கிழக்காசியாவில் மரச்சாற்றிலிருந்து பந்தையும் கூடை, நீர்ச்சாடி ஆகியவற்றையும் செய்து பயன்படுத்தி வந்தனர். இப்பொருட்கள் அனைத்துமே ரப்பர் பாலிலிருந்து உருவானவை தாம்.
ரப்பர் ஒட்டும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் உள்ள மரப் பாலிலிருந்து கெட்டிப் படுத்தப்படும் பொருளாகும். இது ரப்பர் மரத்திலிருந்து எடுக்கப்படும் திரவமாகும். இந்த ரப்பர் பால் திரவத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே ரப்பர் உள்ளது. மீதமுள்ளவை நீராகும்.
இயற்கையில் கிடைக்கும் ரப்பர் 'ஐஸோ பிரின்' (Isoprene) எனப்படும் சிறிய கரிம மூலக்கூறின் பல்படிச் சேர்மமாகும். இதன் மூலக்கூறு எடை 800,000. இயற்கையில் கிடைக்கும் ரப்பரின் பண்புகளை மாற்ற சல்ஃபருடன் சேர்த்து வெப்பப்படுத்தப்படுகிறது.
ரப்பரைக் கொண்டு பென்சில் எழுத்தை எளிதாக அழிக்க முடியும் என்பதை முதன் முதலாக பிரீஸ்ட்லி எனும் அறிவியல் அறிஞர் கண்டறிந்தார். பின்னர் 1828ஆம் ஆண்டில்தான் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் மாக்குண்டோஷ் என்பார் ரப்பரைக் கொண்டு மழைக்கோட்டு உருவாக்கினார். இதன் பிறகே இதன் உபயோகம் உலகத்திற்குத் தெரிய வந்தது. 1889ஆம் ஆண்டில் ரப்பரோடு கந்தகத்தைக் கலந்து வெப்பமூட்டினால் கடினத் தன்மை மிக்கதாக ஆக்க முடியும் என்பதைக் சார்லஸ் குட் இயர் என்பார் கண்டறிந்தார். இந்த ரப்பர் உறுதியாக இருந்தது. இதன் பிறகுதான் தொழில் துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் ரப்பரின் உபயோகம் அதிகரித்தது. இதன் மூலம் ரப்பர் தொழிலும் வெகுவாக வளர்த்தது.
ரப்பர் மரங்கள் பூமத்தியரேகையை அடுத்துள்ள ஆயிரம் கி.மீ. பகுதிகளிலேயே வளர்கின்றன. ஏனெனில், ரப்பர் மரங்கள் நன்கு செழித்து வளர நல்ல வெப்பம் தேவை. அத்துடன் ஈரப்பதமான சீதோஷ்ண நிலையும். நல்ல வளமான மண்ணும் அவசியம்.
ஆரம்பத்தில் ரப்பர் மரங்கள் தென் அமெரிக்காவில் பிரேசில், அமேசான் ஆற்றுப் பகுதிகளிலேயே வளர்ந்து வந்தன. பிற்காலத்தில் அங்கிருந்து ரப்பர் விதைகள் இங்கிலாந்து நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு பயிரிடப்பட்டது. அங்கிருந்துதான் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, பர்மா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு பயிரிடப்பட்டன. இந்நாடுகளே இன்றும் அதிக அளவில் ரப்பர் விளைவிக்கும் நாடுகளாக விளங்கி வருகின்றன. சாதாரணமாக, இருநூறு ஆண்டுகள்வரை வாழக்கூடிய ரப்பர் மரம் 18 முதல் 80 மீட்டர் உயரம்வரை செழித்து வளரும்.
ரப்பர் மரத்தின் அடிப்பகுதியை நன்கு கீறி விடுவார்கள். அங்கிருந்து வடிந்துவரும் ரப்பர் பாலை அருகே செறுகப்பட்டுள்ள கிண்ணங்களில் சேகரித்து பின் அவற்றைத் தொட்டிகளில் கொட்டுவர். அதோடு அமிலத்தைக் கலந்து ரப்பரைத் தனியேபிரித்தெடுப்பார்கள்.
நீர் பிரிக்கப்பட்ட ரப்பரை உலர்த்திச் சேகரிப்பர். அதன்பின் வேதியியல் பொருள்களைக்கலந்து பல்வேறு பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர்.
வாகனச் சக்கரங்களுக்கான டயர்கள், பெருமளவில் ரப்பரால் தயாரிக்கப்படுகின்றன. ரப்பர் மின்சாரத்தைக் கடத்தாததால் மின்காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மெத்தை, தலையணை முதல் பலூன், கையுறைவரை இன்று ரப்பரால் உருவாக்கப்படுகின்றன.
ரப்பர் விளைவைவிடத் தேவை அதிகமாக இருப்பதால் இன்று செயற்கை ரப்பரும் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று டயர், டியூப் முதல் காலணி, மழைக்கோட்டு வரை அனைத்துப் பொருட்களும் செயற்கை ரப்பரைக் கொண்டே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நியோபிரின் பியூனா-N, பியூனா-S மற்றும் GRS போன்றவை செயற்கை ரப்பர்களாகும்.