ஈசாப் கதைப் பாடல்கள்/அதிக ஆசை

சிங்கம் ஒன்று இரைதனைத்
தேடித் திரியும் வேளையில்
அங்கே வழியில் ஒருமுயல்
அயர்ந்து துரங்கக் கண்டது.

“இந்த முயலைக் கொல்லுவோம்”
என்று சிங்கம் செல்கையில்,
அந்த வழியில் வந்தஓர்
அழகு மானைக் கண்டது.

“துள்ளி ஓடும் மானைநாம்
துரத்திக் கொல்வோம் முதலிலே,
மெள்ள வந்து, தூங்கிடும்
முயலைப் பிறகு தின்னலாம்”

சிங்கம் இதனை எண்ணியே
‘திடுதி’டென்று ஓடியே,
அங்கு வந்த மானையே
அடித்துக் கொல்லச் சென்றது.


சத்தம் கேட்டு முயலுமே
‘சட்’டென் றுடனே விழித்தது;
‘செத்துப் பிழைத்தோம்!’ என்றது;
சென்று எங்கோ மறைந்தது!

பள்ளம், மேடு யாவிலும்
பாய்ந்து சிங்கம் ஓடியும்,
துள்ளி ஒடும் மானையே
துரத்திப் பிடிக்க வில்லையே!

தோற்றுப் போன சிங்கமோ
தொங்கிப் போன முகத்துடன்
பார்த்து வைத்த முயலினைப்
பாய்ந்து கொல்ல வந்தது.

முன்னே பார்த்த இடத்திலே
முயலைக் காணாச் சிங்கமோ
ஒன்றும் தோன்றி டாமலே,
உள்ளம் வெம்பி உரைத்தது.

“கையில் கிடைத்த பொருள்தனைக்
காற்றில் பறக்க விட்டேனே!
ஐயோ! இரண்டும் போனதே !
அதிக ஆசை கெடுத்ததே!”