ஈசாப் கதைப் பாடல்கள்/இரண்டு பெண்டாட்டிக்காரர்

அற்புத சாமி நல்லவராம்.
அவர்க்கு இரண்டு மனைவியராம்.

மூத்தவள் அவரைக் காட்டிலுமே
மூன்று வயது முதிர்ந்தவளாம்.

இளையவள் அவரது வயதைவிட
எட்டு வயது குறைந்தவளாம்.

ஒருநாள் இளையவள் அவர்தலையை
உற்றுப் பார்த்தனள்; பார்த்ததுமே,

“ஐயோ! தலைமயிர் நரைக்கிறதே.
அனைவரும் என்ன சொல்லிடுவர்?

‘கிழவரை மணந்த குமரி’யெனக்
கேலி செய்வரே ! என்செய்வேன்?”

என்றே அவளும் எண்ணினளே;
இதற்கொரு வழியும் கண்டனளே.


தினமும் காலையில் அவர் தலையில்
தெரிந்திடும் நரைமயிர் சிலவற்றை

‘வெடுக்கு வெடுக்’கெனப் பிடுங்கினளே.
வேதனை யால்அவர் குதித்தனரே!


மூத்தவள் மட்டும் சளைத்தவளா?
மும்முர மாக எண்ணினளே :

“எனது தலையில் பெரும்பகுதி
ஏற்கென வேதான் நரைத்துளதே.

என்றன் கணவரின் தலையுடனே
எனது தலையைப் பார்ப்பவர்கள்,

‘வாலிப ரான கணவர்க்கு
வாய்த்தனள் நரைத்த கிழவி’யென

என்னைக் கேலி செய்திடுவர்.
இதற்கொரு வேலை செய்திடலாம்”

என்றே எண்ணினள். அதன்படியே
எழுந்ததும் தினமும் அவர்தலையில்

கறுப்பாய் உள்ள மயிர்களையே
கருத்துடன் அகற்றிட லாயினளே.

தலையில் ஒருமயிர் பிடுங்கிடினும்
தாங்கிட நம்மால் முடிகிறதோ?


எப்படி அற்புத சாமியுமே
இதனைப் பொறுத்தனர்? யானறியேன்;

தினம்தினம் மனைவியர் இருவருமே
சிலசில மயிர்களை அகற்றியதால்

குறைந்தன; குறைந்தன; வெகுவிரைவில்
மறைந்தன தலைமயிர் யாவையுமே!

கத்திகள் எவையும் இல்லாமல்
கைத்திறம் ஒன்றே துணையாக

மொட்டை அடித்தனர் அவர் தலையை,
மூத்தவள், இளையவள் இருவருமே!

‘சீப்பும் எண்ணெயும் இனிவேண்டா.
சிக்கன மாக வாழ்ந்திடலாம்’

என்றே அற்புத சாமியுமே
எண்ணிட வில்லை, அச்சமயம்!

“இருவரை மணந்தேன். ஆதலினால்,
என்றன் தலையும், ஐயையோ!

பாலை வனமாய்ப் போனதுவே !
பட்டது போதும்” என்றனரே!