ஈசாப் கதைப் பாடல்கள்/அழகுக் கொம்புகள்

கலைமான் ஒன்று காட்டினிலே.
கடுமை யான வெய்யிலிலே,
அலைந்து சுற்றித் திரிந்ததுவே;
அதிகத் தாகம் கொண்டதுவே.

அருகில் இருந்த ஓடைதனை
அடைந்தது, தண்ணீர் அருந்திடவே.
உருவம் நீரில் தெரிந்திடவே,
உற்றே அதனைப் பார்த்ததுவே.

தண்ணீர் தன்னில் அழகுடைய
தனது கொம்புகள் தெரிந்திடவே,
“என்னே அழகு, ஆஹாஹா!
எனது கொம்புகள்!” என்றதுவே.

கொண்டது பெருமை; அப்பொழுதே
கோபம் வந்தது கால்களின்மேல்.
“கண்டவர் இகழ அழகின்றிக்
கால்கள் நான்கும் உள்ளனவே!

ஈசன் தந்தான் அழகுடைய
இரண்டு கொம்புகள், ஆயினுமே,
மோச மான கால்களினால்
மிகவும் கேவலம் ஆகிறதே!”


இப்படி மானும் எண்ணுகையில்
எங்கிருந் தோஒரு சிங்கமுமே
‘குப்’பெனப் பாய்ந்து வந்ததுவே,
கொன்று மானைத் தின்றிடவே.

சப்தம் கேட்டுக் கலைமானும்
தாவிக் குதித்து ஓடியதே.
தப்பிப் பிழைக்க அதன்கால்கள்
தகுந்த உதவி செய்தனவே.

‘காற்றைப் போலப் பறக்கின்ற
கலைமான் தன்னைப் பிடிக்காமல்
தோற்றுப் போனது சிங்கம்’ எனச்
சொல்லி யிருப்பேன் கதைதனையே.

ஆனால், அந்த மானுக்கே
அதிர்ஷ்டம் இல்லை. ஆதலினால்,
தானாய் மாட்டிக் கொண்டதுவே,
தன்னுடை அழகுக் கொம்புகளால்!

ஓட்டம் பிடிக்கையில் வழியினிலே
உள்ள மரத்தின் கிளையொன்றில்
மாட்டிக் கொள்ளக் கொம்புகளும்
வகைதெரி யாமல் விழித்ததுவே!


சிங்கம் உடனே விரைவாகச்
சீறிப் பாய்ந்தது மான்மேலே;
அங்கே சாகும் தருவாயில்
அந்தக் கலைமான் உரைத்ததுகேள்:

“அழகே இல்லாக் கால்களினால்
அதிகத் தூரம் தப்பிய நான்
அழகு மிக்க கொம்புகளால்.
ஐயோ! உயிரைக் கொடுத்தேனே!”