ஈசாப் கதைப் பாடல்கள்/நரிக்குத் தண்டனை

பளிங்குக் கோலிக் குண்டு போலப்
பளப ளக்கும் திராட்சைகள்
பழுத்துக் குலுங்கும் தோட்டம் தன்னைப்
பார்த்து நரிகள் சென்றன.

அந்தத் தோட்டம் தன்னில் சென்று
அட்ட காசம் செய்கையில்,
வந்து சேர்ந்தார் தோட்டம் வைத்து
வளர்த்த மனிதர் அவ்விடம்.

மெத்த கோபம் கொண்டு அவற்றை
விரட்டிப் பிடிக்க முயன்றனர்.
எத்தி விட்டு நரிகள் யாவும்
இங்கு மங்கும் ஓடின.


அந்த மனிதர் நரிகள் தம்மை
அயர்ந்தி டாமல் விரட்டியே
சென்று அவற்றில் ஒன்றை மட்டும்
சிரமப் பட்டுப் பிடித்தனர்.

பிடித்த நரியின் வாலில் துணியைப்
பிரிய மோடு சுற்றினர்;
எடுத்து வந்து துணியின் மீது
எண்ணெய் தன்னை ஊற்றினர்.

தீங்கு செய்த நரியின் வாலில்
தீயை வைத்து, முதுகிலே
ஓங்கி ஓங்கித் தடியி னாலே
உதைத்து விரட்ட லாயினர்.

பதறிக் கொண்டே ஊளை யிட்டுப்
பாய்ந்து ஓடும் நரியுமே
கதிர்கள் முற்றி யிருந்த வயலைக்
கடந்து செல்ல நேர்ந்தது.

நரியின் வாலில் வைத்த தீயும்
நன்கு பற்றி எரிந்ததால்,
அருமை யான கதிர்கள் யாவும்
ஐயோ, பற்றிக் கொண்டன!


28

சொந்த மாக அவருக் குள்ள
ஐந்து காணி நிலத்திலும்
நன்கு முற்றி யிருந்த கதிர்கள்
நாச மாகப் போயின!

“ஆத்தி ரத்தில், அவச ரத்தில்
அறிவி ழந்தேன். ஆதலால்.
நேத்தி ரம்போல் காத்து வந்த
நேர்த்தி யான பயிரெலாம்

எரிந்து சாம்பல் ஆன தய்யோ!
என்றன் வயிறும் பற்றியே
எரியும் விதத்தை எவரி டத்தில்
எடுத்து ரைப்பேன்!” என்றனர்.