ஈசாப் கதைப் பாடல்கள்/குட்டிக் கதை மன்னன்

குட்டிக்கதை மன்னன்

தெருவில் குழந்தைகள் ஆடிப் பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தார் ஒரு பெரியவர். உடனே, குழந்தைகள் கூட்டத்தில் புகுந்தார்; அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.

அச்சமயத்தில் அவ்வழியாக வந்தான், ஒருவன். ஒரு பெரியவர் குழந்தைகளுடன் சேர்ந்து குதித்து விளையாடும் காட்சியை அவன் கண்டான். உடனே, அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“ஓய் பெரியவரே, உமக்கு என்ன வயதாகிறது! நீர் இப்படிக் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு கும்மாளம் போடுகிறீரே! தராதரமே உமக்குத் தெரியவில்லையே!” என்று கேட்டான், அவன்

உடனே, அந்தப் பெரியவர் சிரித்தார், சிரித்துக் கொண்டே அங்கிருந்த ஒரு வில்லை எடுத்தார். வில்லின் இரு நுனிகளுக்கும் இடையே கட்டப்பட்டிருந்த கயிற்றை நன்றாக அவிழ்த்தார். பிறகு அதைக் கீழே போட்டு விட்டு அந்த மனிதனைப் பார்த்தார். பார்த்து,

“நண்பரே, இதோ இருக்கிறதே வில், இதை எப்போதும் கட்டியே வைத்திருந்தால், இது நன்றாக வேலை செய்யாது. அதாவது, அம்பை எய்யும் போது இது நன்றாக வளைந்து கொடுக்காது. அதனால், அம்பும் வேகமாக நீண்ட தூரம் செல்லாது. சில சமயங்களில் முறிந்து கூடப் போய் விடலாம்! தேவையில்லாத போது, கயிற்றை அவிழ்த்து விட்டால்தான் வில் நன்றாக வேலை செய்யும்; அம்பும் வேகமாகச் செல்லும். வில்லைப் போல்தான் நாமும். எப்போதும், பெரியவர்களாகவே இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது நல்லதல்ல. கொஞ்ச நேரமாவது நாம் பெரியவர்கள் என்பதை மறந்து, குழந்தையோடு குழந்தையாக இருந்தால்தான், நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது; வாழ்க்கை திருப்தியளிக்கிறது” என்றார்.

இதைக் கேட்டதும், அந்த மனிதனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை; பேசாமல் அவ்விடத்தை விட்டு நழுவி விட்டான்!

அந்தப் பெரியவர் இம்மாதிரி எத்தனையோ உதாரணங்களைக் காட்டியிருக்கிறார். எத்தனையோ குட்டிக் கதைகளைக் கூறியிருக்கிறார். அவர் கூறிய குட்டிக் கதைகள் ஒன்றா, இரண்டா? சுமார் 300-க்கு மேலிருக்கும். அந்தக் கதைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. கிறிஸ்தவ வேதமான பைபிளுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகமானவர்கள் படித்து வரும் கதைகள் அவருடைய கதைகள்தாம்! ஒவ்வொன்றும், ஒவ்வொரு நீதியைக் கூறும் உயர்ந்த கருத்தை எடுத்துக் காட்டும்.

இப்போது பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் நாம் பல கதைளைப் படிக்கிறோம். ஆனால், அந்தப் பெரியவர் காலத்தில் பத்திரிகையும் இல்லை; புத்தகமும் இல்லை. அவர் இதை எதிலுமே எழுதி வைக்கவில்லை. அப்படியானால், அவருடைய கதைகளை உலகிலுள்ளவர்கள் எப்படிப் படிக்க முடியும்?

அவர் தெருவிலே போய்க் கொண்டிருப்பார். அப்போது இருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். உடனே அவர், சண்டை போடாமல் அவர்களைத் தடுப்பார்; அங்கேயே, ஓர் அழகான கதையையும் கூறுவார். உடனே, அந்த இருவரின் கோபமும் பறந்து விடும், சண்டை போட்டது தவறு என்று உணர்ந்து விடுவார்கள்.

இதே போல், அவர் கதைகளைக் கூறிக் கூறி, நாட்டில் நடக்கும் கலகங்கள், சண்டைகள் முதலியவற்றையெல்லாம் அடக்கியிருக்கிறார்.

ஒரு சமயம், ஒரு பெரிய நகரத்தில் மக்கள் கலகம் செய்து வந்தார்கள். அவர்களுக்கு அங்கிருந்த அரசனைப் பிடிக்கவில்லை. வேறு ஓர் அரசன் வேண்டுமென்றுதான் அவர்கள் கலகம் செய்தனர்.

அப்போது, அந்தப் பெரியவர் அங்கே சென்றார். அவரிடம் கலகக்காரர்கள், “எங்களுக்கு இந்த அரசர் வேண்டாம், வேறு யாராவது அரசராக வரட்டும்” என்றனர்.

உடனே, அந்தப் பெரிவர் அவர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒரு குளத்தில் சில தவளைகள் வசித்து வந்தன. அவைகள் தங்களுக்குள்ளேயே ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. வெளியிலிருந்து யாராவது தங்களது அரசராக வர வேண்டுமென்று கடவுளை வேண்டின.

கடவுள் அவற்றின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஒரு நாரையை அரசனாக அனுப்பி வைத்தார். நாரை வந்ததும், ஒவ்வொரு தவளையாகப் பிடித்து விழுங்க ஆரம்பித்து விட்டது. உடனே, அவை கடவுளிடம் திரும்பவும் முறையிட்டன. அப்போது கடவுள், “உங்களுக்குள்ளேயே ஒரு தவளையை அரசனாகத் தேர்ந்தெடுக்காமல், வெளியிலிருந்து யாராவது அரசனாக வர வேண்டும் என்கிறீர்களே, அதன் கதி இதுதான்!” என்றார்.

—இந்தக் கதையை அவர் கூறியதுமே, கலகக்காரர் உண்மையை உணர்ந்தனர். வேறு ஒருவரை அரசனாக்கி, அவனால் நிலைமை மோசமாகி விட்டால், என்ன செய்வது? ஆகையால், அவர்கள் கலகத்தை நிறுத்தி விட்டனர். சமாதானம் நிலவியது.

இப்படி அரசர்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட பல விரோதங்களையெல்லாம், அவர் தம்முடைய குட்டிக் கதைகளால் தீர்த்து வைத்திருக்கிறார். அவ்வப்போது அவர் கூறி வந்த கதைகளை, அவர் காலத்தில் இருந்தவர்களும், பின்னால் வந்தவர்களும், வாய் மொழியாகக் கூறி வந்திருக்கிறார்கள்.

அவர் இந்தக் கதைகளை எந்த மொழியில் கூறி வந்தார்? தமிழிலா? இல்லை, ஆங்கிலத்திலா? அதுவும் இல்லை. கிரேக்க மொழியில்தான் கூறி வந்தார்! ஆம், அவருடைய தாய்மொழி அதுதான், அவருடைய தாய் நாடும் கிரேக்க நாடுதான்.

கிரேக்க நாட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 620 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்ததாகத் தெரிகிறது. ஆனால், கிரேக்க நாட்டில் அவர் எந்த ஊரில் பிறந்தார் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. “எங்கள் ஊரில்தான் பிறந்தார்; எங்கள் ஊரில்தான் பிறந்தார்” என்று இப்போது ஆறு ஊர்க்காரர்கள் பெருமையாகக் கூறி வருகிறார்கள். ஒருவர் எப்படி ஆறு ஊர்களில் பிறந்திருக்க முடியும்? ஏதாவது ஒரே ஓர் ஊரில்தானே அவர் பிறந்திருப்பார்? சில ஆராய்ச்சியாளர்கள் அவர் ‘சாமோஸ்’ என்ற ஊரில்தான் பிறந்திருக்க வேண்டும் என்கிறார்கள், ஊரின் பெயரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். ஆளின் பெயரைத் தெரிந்து கொண்டாலே போதும். அவர்தாம் ஈசாப்.

ஈசாப் சொன்ன கதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, 1485-ஆம் ஆண்டு முதல் முதலாக வெளியிட்டார்கள். அதன் ஒரு பிரதி இப்போது கூட பத்திரமாக பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் (British-Museum) கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறதாம். இப்போது பல மொழிகளில் அந்தக் கதைகள் வெளி வந்து விட்டன. தமிழில் கூட அவரது கதைகளில் பலவற்றை நீங்கள் படித்திருப்பீர்கள். இப்போது அவற்றைப் பாடல்களாகப் படிக்கப் போகிறீர்கள்.

ஈசாப்

ஸ்பெயின் தேசத்து ஓவியர் வெலாஸ் குயிஸ் என்பவரால் கற்பனை செய்து எழுதப்பட்ட படம் இது.