ஈசாப் கதைப் பாடல்கள்/நல்ல பதில்!

சிங்கம், மனிதன் இருவரும்
சேர்ந்து கொண்டு நண்பராய்
அங்கு மிங்கும் காட்டிலே
அலைந்து திரிய லாயினர்.

‘சிங்க மேஇவ் வுலகினில்
தீரம் மிகவும் உடையவர்
எங்கள் மனித ரல்லவோ?’
என்று மனிதன் கேட்டனன்,

‘தீரம் மிகுந்த மனிதனைச்
சிங்கம் என்று புகழ்வதேன்?
வீரம் மிகவும் உடையவர்,
வெற்றி பெறுவோர் நாங்களே.’


என்று சிங்கம் உரைத்தது,
இருவர் பேச்சும் வளர்ந்தது.
சென்ற வழியில் அழகிய
சிலையைக் காண நேர்ந்தது.

மடக்கிப் போட்டுச் சிங்கத்தை
மனிதன் ஒருவன் வீரமாய்
அடக்கி ஆளும் காட்சியை
அந்தச் சிலையில் கண்டனர்.

‘பார்பார் இந்தச் சிலைதனை!
பார்க்கும் போதே தெரியுமே!
யார்தான் வீரம் மிகுந்தவர்?’
என்றான் மனிதன். சிங்கமோ

‘சிலையைச் செய்து வைத்ததே
சிங்க மல்ல; மனிதன்தான்!
சிலைகள் செய்யும் கலையெலாம்
தெரிந்தி ருந்தால் நாங்களும்.

மடக்கிப் போட்டு மனிதனை
மார்பில் கால்கள் ஊன்றியே
திடத்தைக் காட்டும் சிங்கத்தைச்
செய்து வைப்போம்’ என்றதே!