ஈசாப் கதைப் பாடல்கள்/முன் யோசனை

இரண்டு தவளைகள் ஒருகுளத்தில்
இருந்து வாழ்ந்திடும் நாளையிலே
வறண்டது அக்குளம். தவளைகளும்
வாழ்ந்திட வேறிடம் தேடினவே.

தேடிச் சுற்றித் திரிகையிலே
தெரிந்தது பெரிய கிணறொன்று.
நாடிச் சென்றே அக்கிணற்றை
நன்றாய் உற்றுப் பார்த்தனவே.

‘தண்ணீர் நிறைந்த இக்கிணற்றில்
தாவிக் குதிப்போம் இப்பொழுதே.
உண்ண உணவும், வாழ்ந்திடவே
உகந்த இடமும் பெற்றிடலாம்.’


இப்படி அவற்றில் ஒருதவளை
எடுத்துக் கூறிட, மற்றொன்று,
‘அப்பனே, நீயும் சொல்வதுபோல்
அவசரப் பட்டால் பயனில்லை.

ஏரியும் குளமும் வற்றிவிடின்
எங்கே யாவது சென்றிடலாம்.
கூறிய உனது மொழிகேட்டுக்
குதித்தால் இந்தக் கிணற்றினிலே,

தண்ணீர் முழுதும் வற்றிவிடின்
தாவி வெளியில் வந்திடவே
எண்ணக் கூட முடியாதே!
இறப்பது நிச்சயம்’ என்றதுவே.