ஈசாப் கதைப் பாடல்கள்/வித்தியாசம்

வெள்ளை முயல் வேக மாக
ஓட லானது.
வேட்டை நாயும் அதைத் துரத்தி
விரட்ட லானது.

துள்ளித் துள்ளி அந்த முயல்
அதிக தூரத்தைத்
துரித மாகக் கடந்து சென்று
மறைய லானது.

முயலைத் தொடர்ந்த வேட்டை நாயும்
அயர்ந்து போனது;
மூச்சுத் திணறி ஓரி டத்தில்
அமர்ந்து விட்டது.


வயலில் ஆடு மேய்த்த சிறுவன்
இதனைக் கண்டனன்;
வந்து வேட்டை நாயி டத்தில்
கேட்க லாயினன்;

“சின்னஞ் சிறிய முயலைப் பிடிக்க
முடிய வில்லையே?
‘தீரன், வேட்டை வீரன்’ என்று
பெருமை கொள்வதேன்?

என்ன கார ணத்தி னாலே
தோல்வி வந்ததோ?”
என்று கேட்க, வேட்டை நாயும்
பதிலுரைத்தது:-

“எனக்கும் அதற்கும் உள்ள தான
வித்தி யாசத்தை
எளிதில் அறிந்து கொள்ள லாமே!
தெரிய வில்லையா?

உணவுக் காகத் தொடர்ந்து சென்ற
எனது ஓட்டத்தால்,
உயிரைக் காக்க ஓடும் முயலை
வெல்ல முடியுமோ?”