ஈசாப் கதைப் பாடல்கள்/குருவியும் கருமியும்

சிட்டுக் குருவி ஒருவீட்டின்

சிறிய அறைக்குள் மெதுவாக

எட்டிப் பார்த்தது. அங்கொருவர்

எண்ணிப் பார்த்தார் காசுகளை.

காசுகள் யாவும் பொன்னாகும்!

கருத்துடன் அவற்றைத் தினம்தினமும்

ஓசையில் லாமல் எண்ணிடுவார்.

ஒருமுறை யல்ல; பலமுறைகள்!

“காசே கடவுள் எனக்கருதும்

கருமி, கருமி, கருமியடா.

மோசக் காரர்!' என்றவரை

வெறுப்புடன் ஊரார் பேசிடுவார்.

அந்தக் கருமி சிறுபொழுது
அயர்ந்திடக் குருவி பாய்ந்தோடி
வந்தொரு காசைத் தூக்கியது;
வைத்தது அங்கொரு பொந்தினிலே.

கண்டனர் கருமி; பற்களையே
கடித்தனர்; கோபம் மிகமிகவே
கொண்டனர். “சிட்டே, உன்செயலால்
கொஞ்சமும் உனக்குப் பயனுண்டோ?

திருடிய காசைத் தின்பாயோ?
செலவிடும் வழிதான் தெரிந்திடுமோ?
திருகியே கொல்வேன் உன்கழுத்தை.
சீச்சீ,காசைக கொடு” என்றார்.

“ஐயா, உலகம் அறிந்தவரே!
அறிவுரை கூறும் பெரியவரே!
மெய்யைச் சிறிதும் உணராமல்
வீணாய்க் கோபம் கொள்ளுவதேன்?

தேவையும் பயனும் தெரியாமல்
திருடினேன் எனவே கூறுகிறீர்.
தேவையும் பயனும் தெரிந்தும்நீர்
செய்திடும் வேலை தெரியாதோ?

எவர்க்கும் உதவி செய்யாமல்,
ஏதும் இன்பம் அடையாமல்,
பவுனாய்ச் சேர்த்துத் தினம்தினமும்
பார்த்துக் காத்து வருகின்றீர்.

ஒற்றைக் காசை நானெடுத்து
ஒளித்தது மிகமிக மிகப்பெரிய
குற்றம் என்றீர்; என்னையுமே
கொல்லுவ தாக மிரட்டுகிறீர்!

ஒற்றைக் காசை ஒளித்ததற்கே
உயிரை வாங்குவ தெனச்சொன்னால்,
இத்தனை காசையும் ஒளிப்பவர்க்கே
எப்படித் தண்டனை கொடுப்பதுவோ!'”

என்றே கூறிப் பொற்காசை
எறிந்தது; குருவி பறந்ததுவே!
ஒன்றும் கூறிட முடியாமல்
உயரப் பார்த்தனர் கருமியுமே!