உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/அம்சம்



இரகசியம் - 3

அம்சம்

ருவனைப் பார்த்து அழகானவன், அறிவானவன், திறமையானவன், தேர்ச்சி பெற்றவன் என்று புகழும் போது, அது அவனைத் தனியாகக் குறித்துக் காட்டுவது போல் அமைகிறது. அது ஒரு முழுமையான போற்றுதலோ, புகழ்ச்சியோ இல்லை.

அதையே அவன் அம்சமானவன். அம்சமாக இருக்கிறான் என்று சொல்கிறபோது ஒரு முழுமையான திருப்தி ஏற்படுகிறது. 'அம்சம்' என்பது அனைத்துச் சிறப்புக்களையும் இணைத்துப் பிரிக்கிற சொல்லாக இருப்பதினால்தான், அம்பாளைக் குறிக்கும்போது, 'அம்சவர்த்தினி' என்று கூறுகிறார்கள்.

அப்படி என்றால் 'அம்சம்' என்ற சொல் அகில உலக இரகசியத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறதல்லவா? இந்த இரகசியத்தை அறிவதற்கு முன்னர், இந்த உலகத்திலே உலாவருகிற அதிசயமான, உடலுக்கு அவசியமான சுவாசத்தைப் பற்றி நாம் கொஞ்சம் புரிந்து கொண்டாக வேண்டும்.

'சுவாசம்' என்ற சொல் சு+வாசம் என்று பிரிகிறது. 'சு' - என்றால் சுகம், நன்மை என்று பொருள். 'வாசம்' - என்றால் இருக்குமிடம். வசிக்கும் இடம், பூவின் மணம் என்றுகூடச் சொல்லலாம். சுவாசம் என்பது சுகம் வசிக்கக்கூடிய ஒரு தன்மை என்று சொல்லலாம். ஆக, சுவாசம் செய்வது, உயிர் காக்கக்கூடிய, உடல் காக்கக்கூடிய ஒரு உயிர்மூச்சான செயல் என்பது நமக்குத் தெரியும்.

அப்படிப்பட்ட சுவாசம் செய்வதற்கு எது உதவுகிறது? காற்று, அந்தக் காற்றுக்கு ஒரு பெயர் வாசி. எல்லா லோகத்திலும் வாசம் வைத்திருக்கிற காற்றுக்கு வாசி என்று பெயர். அந்த வாசியைச் சுகத்திற்காகச் செய்கிற போது அதற்குப் பெயர்சுவாசி. இந்தச்சுவாசி வேலையை யார் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவருக்குப் பெயர்தான் சுகவாசி.

உடலுக்குள் காற்றை இழுத்துச் சுவாசித்துப் பிறகு வெளியே விடுவதுதான் சுவாச வேலை என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். காற்றை இழுப்பதும், வெளிவிடுவதும் ஆகிய இரண்டு வேலைகள் மட்டும் சுவாசம் அல்ல.

ஒரு முழுமையான சுவாசம் என்பது நான்கு வேலைகளைக் கொண்டது.

1. காற்றை ஆழ்ந்து உள்ளே இழுத்துச் சுவாசிப்பது.

2. இழுத்த காற்றை உள்ளே அடக்கி வைத்திருப்பது.

3. அடக்கிய காற்றை வெளியே விடுவது.

4. மூச்சை இழுக்காமல், அடக்காமல் விடாமல் கம்மா இருப்பது.

சுவாசத்திற்கும், அம்சத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும்.

உயிர்க் காற்று என்பது இறை சக்தி. அது உள்ளே புகும்போதும், வெளிவரும்போதும் ஒருவித இனிமையான ஒலியை அதாவது உயிரோட்டமுள்ள இசையை இசைத்துக் கொண்டு இயங்குகிறது.

'சம்' என்ற ஒசையுடன் உயிர்க்காற்றை உள்ளே இழுக்கிறோம்.

'சம்' என்ற ஒசையுடன் உள்ளிழுத்த உயிர்ப்புக் காற்றை வெளியே விடும் பொழுது 'ஹம்' என்று வெளிவிடுகிறோம்.

இப்படியாக வெளிக்காற்று உள்ளே போவதும், உள்காற்று வெளியே வருவதும், இயல்பாக, இயற்கையாக, இதமாக, பதமாக, சுகமாக நம்மை அறியாமல் செய்து கொண்டு இருக்கும்போதுதான், ஹம்சம் அதாவது, அம்சம், அம்சம், அம்சம் என்ற ஒசையால் அம்சமாகிவிட்டது.

இந்த அம்சப் பணியினால், உடலும்,மனமும், ஆத்மாவும் எவ்வாறு அம்சம் பெறுகிறது என்றால் மனிதன் செய்யும் சாதாரண வேலையல்ல. அது மந்திரம்போல இறைவனை நோக்கிச் செபிக்கின்ற பணியாக இருக்கின்றது.

அதாவது 'சம்' என்று காற்றை உள்ளே இழுக்கும் போது 'இறைவா நீ என் கூடவே வருகிறாய், இருக்கிறாய்' என்றும், காற்றை வெளியே விடும் பொழுது, "இறைவா நான் உன் கூடவே வருகிறேன்" - என்றும் மனதால் தன்னை அறியாமல் செய்கிற அன்றாடப் பிரார்த்தனையாக இது அமைகிறது. இதற்கு "அசபாமந்திரம்" - என்று பெயர்.

ஒரு இடத்தில் உட்கார்ந்து, எண்ணி, உணர்ந்து, மந்திரம் சொல்கிறபோது அதற்குப் பெயர் ஜெபம் (ஜெபம்). எதையுமே சிந்திக்காமல் எண்ண நீரோட்டத்தில், எப்பொழுதும் தேரோட்டமாக அமைந்து செய்கிற மந்திரம் ஒன்று உண்டு. அதற்கு 'அஜப மந்திரம்' - என்று பெயர்.

இப்படி மந்திரம் போலச் செய்கின்ற மணியான செயல்தான் அம்சமாகத் திகழ்கிறது. தொடர்கிறது. மனிதனை ஒரு மதிப்பிற்குரியவனாகத் தோன்றச் செய்கிறது.

இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள் காலமெல்லாம் களிப்போடும், கட்டுடலோடும், கலங்காத மனதோடும் வாழலாம்.

உடல் என்னும் பொருளைப் பதி, பசு, பாசம் என்று குறிப்பார்கள். 'பதி' என்பது உயிர் வாழ்கிற இடமாகிய உடல். 'பசு' என்பது உடலை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்ட உயிராகிய ஆன்மா. 'பாசம் ' என்பது உடலுக்குள்ளே கீர்த்தி இயற்கையாகத் தோன்றுகின்ற செயல்களின் சேட்டைகள். இந்த மூன்றையும் பக்குவப்படுத்துகிறபோதுதான் ஒருவனின் வாழ்வானது அம்சமாக விளங்குகிறது. வம்சமான வலிமையாகத் துலங்குகிறது.

நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய பெரியோர்களை மூன்று வகையாகப் பிரித்து மதித்து மரியாதை செய்வோம். முதலாமவரை வாத்தியார் என்போம். இரண்டாவது வருபவரை ஆசிரியர் என்கிறோம். மூன்றாமவரைக் குரு என்கிறோம். மூன்று பேர்களுமே வழிகாட்டிகள்தானே. ஆனால் அங்கே ஏதோ நுண்ணிய வேற்றுமை இருப்பது போல நமக்குத் தெரிகிறது.

உடலுக்குப் பயிற்சி தருபவரை வாத்தியார் என்கிறோம். மனதிற்குப் பயிற்சி தருபவரை ஆசிரியர் என்கிறோம். உணர்ச்சிகளை அடக்கி ஆளப் பயிற்றுவிப்பவரைக் குரு என்கிறோம்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் இதயத்தில் தெளிவு பிறக்கும் என்று நீங்கள் உங்களுக்குள் சொல்லிக் கொள்வது எனக்கும் காதில் விழுகிறத.

வடமொழியிலே, 'கவாத்து' என்றால் உடற்பயிற்சி என்று அர்த்தம். உடற்பயிற்சி கற்றுத் தருபவருக்குக் 'கவார்த்தியார்' என்று பெயர். கவாத்தியார் என்று அழைத்த சொல்தான் பிறகு வாத்தியாராக மாறியது. உடலுக்கும் பயிற்சி தருகிற உபாத்தியார் என்று மருவி 1. வாத்தியார்

உடலுக்குத் தினம் பயிற்சி செய்பவரைப் பயில்பவர் என்று சொல்கிறோம். தினம் உடலுக்குப் பயில்பவர்தான் பயில்பவராகப் பெயர்பெறுகிறார். அவ்வாறு பயில்பவர், பயில்பவன் என்ற சொற்கள்தான் பயில்வான் என்று மருவி வந்தது. ஆக, உடற்பயிற்சியைக் கற்றுத் தருகிறவர் வாத்தியார், கற்றுக் கொள்கிற சீடன் பயில்வானாக மாறுகிறான்.

ஆகவே உடலைப் பதப்படுத்துகிற, இதப்படுத்துகிற, சுகப்படுத்துகிற பணியை மேற்கொண்டு உடலைக் காப்பாற்றுகிறவர் வாத்தியார் ஆவார்.

2. ஆசிரியர்

மனதைப் பக்குவப்படுத்துகிறவரை ஆசிரியர் என்று அழைப்பது நமது மரபாக இருக்கிறது.

'ஆசு+ எறியவர்' என்று பிரிகின்ற ஆசிரியர் என்ற வார்த்தைக்கு ஆசு என்றால் குற்றம் என்றும், எறியர் என்றால் விரட்டி அடிப்பவர் என்றும் பொருள் உண்டு.

எங்கக் கற்றக்கை இவர் விரட்டியடிக்கிறார் எனபதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் ஆறு குற்றங்கள். அதாவது ஆறு மாசுகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன.

அவை காமம், குரோதம், மோசம், லோபம், மதம், மாச்சர்யம்.

இந்த ஆறு குற்றங்களும், ஆறு மாசுகளும், கால்கள், கைகளை அலட்டிப் பரப்பிக் கொண்டு மனது முழுவதையும் மறைத்துக் கொண்டு கிடக்கின்றன. இவை எல்லாம் குளக்கரை ஓரமாகக் கிடக்கும் பாசான்கள்போல, பாசான்களைத் தள்ளிவிட்டால் மீண்டும் வேகமாக வந்து சேரும்.

அதுபோலவே இந்த மாசுகளும், நாம் தீவிரமாக அகற்ற முயற்சிக்க, முயற்சிக்க அவை மீண்டும் மீண்டும் வந்து சேர்ந்து கொள்கின்றன. புதுப்புது வேடங்களிட்டு மனிதனைத் திக்கு முக்காடச் செய்கின்றன.

ஆசிரியர் என்பவர் ஒருவித கட்டுப்பாடான பயிற்சி மூலம் மனதின் மாசுகளை விரட்ட முயற்சிக்கிறார். மீண்டும் அவை வந்து சேராதபடி வேலியிட்டுத் தடுக்கிறார். இதற்காகத் தினம் மனப் பயிற்சி செய்கிற ஒரு மாணவன்தான் வித்வான் ஆகிறான். ஆனால் குரு என்று நாம் எல்லா ஆசிரியர்களையும் அழைப்பதில்லை. ஒரு சிலரைத்தான் நாம் குரு என்று போற்றி மகிழ்கிறோம்.

3. குரு

‘குரு’ என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ‘குரு’ என்றால் ‘இருட்டு’ என்றும், ‘குரு’ என்றால் ‘வெளிச்சம்’ என்றும் பொருள் உண்டு. அறியாமை என்ற இருட்டிலிருந்து, அறிவு என்கிற ஒளிமயமான உலகத்திற்கு அழைத்துச் செல்பவரைத்தான் குரு என்கிறோம்.

குருமார்கள் எல்லோருமே ஐம்புலன்களின் அர்த்தமற்ற அட்டூழியங்களிலிருந்து காப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர்கள் போல உதவி செய்கிறார்கள்.

குரு என்றால் இருட்டு என்றும், குரு என்றால் வெளிச்சம் என்றும் பொருள்.

குரு என்றால் மலம் என்றும் ஒரு பொருள். குரு என்றால் நீக்குபவர் என்று பொருள்.

குரு என்றால் சித்தியைக் கொடுப்பவர் என்றும், குரு என்றால் பாவத்தைத் தீர்ப்பவர் என்றும் கூறுவர். இப்படிக் குருமார்கள் எல்லோரையும், இறைவனுக்கு நிகராக வைத்துப் போற்றுகிற பழக்கம் நமது தமிழ் மரபாக இருக்கிறது. இப்படி அமைகிற குருமார்களைப் பலவிதமாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

சாதாரண சீடர்க்கு குருவாக இருப்பவர் சுபகுரு என்றும், சுபகுருவிற்கு வழிகாட்டுபவரைப் பரமகுரு என்றும், பரமகுருவின் குருவாக அமைபவர், பரமேஸ்டிகுரு என்றும் அழைக்கப்படுகிறார்கள். குருவைப் பற்றிய இலக்கணத்தை இப்படித் தெளிவாகக் கூறுவார்கள். தன்னை நம்பி வருகிற சீடர்களுக்குத் தெளிவான ஞானத்தை ஊட்டுகிறவர்கள் குருமார்கள்.

முன்னேற முடியாதவர்களுக்கு முன்னேற்றத்தைக் காட்டுகிறார்கள். முடிவற்ற மெய்யுணர்வை, அளிப்பவர்களாக குருமார்கள் திகழ்வதால்தான் திருமூலர் இப்படிப் பாடுகிறார்.

“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.”

- திருமந்திரம் (83)

☐☐☐