உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/உடம்பு

இரகசியம் - 4
உடம்பு


யிர் வாழ்கின்ற கூட்டுக்கு உடல் என்று பெயர். உயிரை ஆடையாக உடுத்திக் கொண்டு இருப்பதால் அதற்கு உடல் என்று பெயர் வந்தது.

இந்த உடலுக்கு எத்தனை, எத்தனை பெயர்கள் இருக்கின்றன. சரீரம், உடம்பு, மெய், காயம், தேசம், யாக்கை, மேனி, பொன்.

‘'உடல்’ என்றாலே ‘மாறுபாடு’ என்பது அர்த்தம். இந்தச் சொல் காக்கின்ற இரகசியம் என்னவென்றால், உலகத்திலே நடமாடுகின்ற உடலானது, இயற்கைக்கு ஏற்ப மாறுபடும், இயற்கையைப் போல மாறுபடும். இயற்கைக்காக மாறுபடும் என்பதுதான்.

ஒரேநிலையில் உடல் எப்பொழுதும் இருக்காது. அது பிநாடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம், பொழுதுக்குப் பொழுது மாறிக் கொண்டே வரும். மருகிக் கொண்டே விழும்.

இயற்கையில் உள்ள வெப்பம், குளிர், தென்றல், புயல், காற்று, தண்ணீர் இவற்றின் அமைப்புகள் போல, உடலும், வெப்பம், நீர், காற்று இவற்றை மூலதனமாக வைத்துக் கொண்டே இயங்கி வருகிறது என்பதை மனிதன் புரிந்து கொண்டாக வேண்டும். இது உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் உடலை, மெய் என்றனர். உறுப்புக்கள் பலவற்றை ஒன்றாகக் கட்டி ஒரு உருவமாக ஆக்கி வைத்திருப்பதால், உடலுக்கு ஆக்கை என்று பெயர்.

தெய்வாம்சம் நிறைந்த சந்தோசத்தைக் கொடுப்பதால் தான் உடலைத் தேகம் என்றனர். (‘தே’ என்றால் தெய்வம், ‘கம்’ என்றால் சந்தோசம்.) அது தெய்வம் குடியிருக்கும் இடமென்பதால், ‘தேக அகம்’ என்றனர்.

உடல் அழகாய் இருக்கிறது. அந்த அழகைக் காப்பாற்று என்பதற்காகத்தான் அதைக் காயம் என்றனர். “கா” என்றால் காப்பாற்று என்று ஒரு அர்த்தம். காவல் செய் என்று ஒரு அர்த்தம். விழிப்பாய் இரு என்று ஒரு அர்த்தம். “காய்” என்றால் பூந்தோட்டம் என்று ஒரு அர்த்தம் உண்டு. ஆகப் பூந்தோட்டம் போன்ற உடலைட் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்பதற்காகத்தான் காயம் என்றனர்.

ஆனால், ‘காயமே இது பொய்யடா’ என்று, தேனான ஒரு உண்மையைத் திசை திருப்பிச் சென்று இருக்கிறார்களே.

சகல ஜீவராசிகளிலும் மனித உடலே, பார்ப்பதற்குச் கவர்ச்சியாகப் பளபளப்பும், மினுமினுப்பும் கொண்டு விளங்குவதால் அதை ‘மேனி’ என்றார்கள்.

உடலுக்கு இத்தனை பெயர்கள் இருந்தாலும், அதை உடம்பு என்று சொல்லும் பொழுதுதான் ஏதோ சுவை இருக்கிறது போல நமக்குத் தெரிகிறது அல்லவா? அப்படி ஏன் தெரிகிறது என்றால், உடம்பு என்கிற சொல்லுக்குள்ளேதான் ஓராயிரம் இரகசியங்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள்.

‘உடம்பு’ என்றாலே ‘ஆசையால் வருந்து’ என்றுதான் அர்த்தம். ‘யுத்தம் செய்’ என்று அர்த்தம்.

உடம்பு என்பது உல்லாசத்தின் ஊற்றுக்கிணறு அல்ல. அது உபத்திரங்களின் பொங்குமாங்கடல். உணர்ச்சி நெருப்பால் உருக்குலையும் இரும்புப் பெட்டகம். ஆக, உடம்பு என்பது உலக வாழ்க்கையை எதிர்த்துப் போராட உதவுகின்ற ஒரு உயிர் சாதனம் என்றே சொல்லலாம்.

மாறுபாடு கொண்ட இயற்கையுடன், கோபம் கொள்ளாது அதனை எதிர்த்து, யுத்தம் செய்து, உயிருக்கு இருப்பிடமான உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் ‘உடம்பு’ என்று இரகசியப் பேரிட்டு அழைத்தனர்.

உடம்பைப் பற்றியே ஆயிரம் ஆயிரம் பாடல்களை, உருகிப் பாடிய திருமூலர், ஒரு பாடல் வரியில் இந்த உலகளாவிய உண்மையை உருக்கமாகச் சொல்லி விடுகிறார்.

“உடம்பால் அழியின் உயிரால் - அழிவர்”

உடம்பினால் அழிகிறபோது உயிரும் அழிந்து போகிறது. எப்படி அழிகிறது? அதைத்தான் ‘உடம்+பால்’ ‘உடம்பால்’ என்றார். உடம்பு + ஆல் என்றார். உடம்பு + பால் என்பது, ‘உடம்’ ன்றால் ‘உடனே’ என்று அர்த்தம். அதாவது பால் உணர்வு செய்கைகளில் ஈடுபடும்போதே உடனே உடம்பு அழிந்துவிடுகிறது என்கிறார்.

‘உடம்பு+ஆல்’ என்கிறபோது, ‘உடம்பு’ என்றால் ஆசையால் வருந்து, ‘ஆல்’ - என்றால் ஆலகால விஷம்.

ஆக ஆசை என்கிற ஆலகால விஷம் உடம்பிலே பாயும்போது, அங்கே உடல் மட்டும் அழியவில்லை. உயிரும் அழிகிறது. உயிர் அழிந்தால் அம்சம் எங்கே? மனிதன் எங்கே? வாழ்க்கை எங்கே? அங்கே ‘திடம் படுமெய் ஞானம்’ எல்லாமே அழிந்து போகிறது என்கிறார்.

‘திடம்’ என்றால் தைரியமும், உறுதியும், வலிமையும் நிறைந்த கலங்கா நிலை. உடல் அழிகிறபோது, மேலே கூறிய எல்லாமே அழிந்து போகிறது அல்லவா!

‘படு’ என்றால் கூர்மை, நன்மை, பேரறிவு என்று அர்த்தம். உடலிலே வலிமை எல்லாம் குன்றுகிறபோது, அவனிடமுள்ள அறிவுக் கூர்மை. அதனால் அடைகிற ஆயிரமாயிரம் நன்மை, அவனுக்குள்ளே ஊறுகிற பேரறிவு எல்லாமே அழிந்து போகிறது.

‘மெய்’ என்றால் உண்மை, சத்தியம், திண்மை, நீதி, பசுமை, வாய்மை என்று பல அர்த்தங்கள் உண்டு.

‘ஞானம்’ என்றால் கல்வி, கேள்வி, விவேகம், தெளிவு, நல்லொழுக்கம், வித்தை.

ஆகவே உடம்பால் அழிகிறபோது மேலே கூறிய அத்தனை பயன்களையும் இழந்து போவீர்கள் என்று எச்சரித்த திருமூலர், கடைசியாக,

“உடம்பை வளர்த்தேன்

     உயிர் வளர்த்தேனே”

என்று பாடி முடிக்கிறார். உடம்பு என்பது உலக இன்பத்தைக் காட்டும் ‘வழிகாட்டி மரம்’ அல்ல. ஓரிடத்தில் நின்று கொண்டு பாதையைக் காட்டுகின்ற வழிப் போக்கனும் அல்ல. கூட இருந்தே குலத்தைக் காக்கும் குரு போன்றது.

எனவே ‘உடம்பு’ என்ற சொல்லைச் சொல்லுகின்ற போது, உடம்பைக் காக்கின்ற ஆசையும், ஆவேசமும் உடனே ஏற்பட வேண்டுமென்றுதான் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

உயிர் வளர்த்துக் கொள்வதற்குச் சுவாசப் பயிற்சி முக்கியம். அதாவது பிராணாயாமம் போன்றவை. உயிர் வளர்க்கக் காற்றுத் தேவை.

ஆனால் உடம்பை வளர்க்க எவையெவை தேவை. உடம்பை வளர்த்தல் என்பது, கண்டதைத் தின்று கொழுத்துச் சதை போட்டுக்கிடப்பது அல்ல. இயற்கையோடு மாறுபடாது, போராடி, எதிர்த்து நின்று, வெற்றி வாகை சூடிப் பாதுகாத்துக் கொள்வதுதான். நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும் கடைப்பிடித்து உடம்பைக் காப்பாற்றிக் கொள்வீராக.

☐☐☐