உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/உறக்கம்

இரகசியம் - 7

உறக்கம்

வெளிச்சத்தை விழுங்குகின்ற திமிங்கிலமாய் விளங்குவது இருட்டாகும். திருட்டுத்தனமாக வரும் இருட்டு என்பார்கள். இல்லை அது தேனிசை பாடும் தேவதையாக மக்களைத் தேடி வருகிறது.

மனச்சாந்தியை உங்கள் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கிறது. சிங்காரம் பேசுகிற சபலத்தை, சூறாவளியாக வீசுகிற சலனத்தை, உங்களிடமிருந்து கழற்றிவிடக் கை கொடுக்கிறது.

மண்ணின் மைந்தர்களே! ஆறறிவு ஜீவிகளே! அகிலத்தை ஆளவந்த அற்புதப் பிறவிகளே! உங்கள்தேகம் அக்னியின் ஊற்றுதான். உங்கள் நெஞ்சம் அக்னிப் பிழம்புதான்.

உங்கள் நினைவுகள் அக்னி ஜூவாலைதான், என்றாலும் அக்னி அனலில் நீங்கள் உருக வேண்டாம். உடல் கருகி மருக வேண்டாம். அமைதி கொள்ளுங்கள். ஆனந்தமாய் இருங்கள் என்று அரவணைக்க வருவதுதான் இருட்டாகும். அது தரும் இனிய சுகந்த மலர்தான் உறக்கமாகும்.

உறக்கம் என்றதும் ஏதோ ஒரு பொழுது போக்குகிற வேலை. நேரத்தைக் கொல்கிற வேலை என்று பலர் நினைத்துக் கொண்டு, தூக்கம் தானாக வந்து துளைக்கும் வரை தடித்தனமாகத் திரிவார்கள்.

பேயாகப் படுக்கையில் விழுந்து, கோட்டானாக குறட்டை விட்டு அந்த அற்புதமான சூழ்நிலையையே அலங்கோலப்படுத்தி விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உறக்கம் என்றாலும், தூக்கம் என்றாலும் என்னவென்று தெரியாததுதான் காரணம்.

பெற்றோர்களும், பெரியோர்களும் பிள்ளைகளைப் பார்த்துத் தூங்கித் தொலையுங்கள் என்றுதான் சொல்வார் களே தவிர அதைச் சாந்தமாகவும், சந்தோசமாகவும் சொல்லாததும் ஒரு காரணமாக அமையலாம் அல்லவா.

'உறக்கம்' என்ற சொல் 'உற+கம்' என்று பிரிகிறது. 'உற' என்றால் பொருந்துதல் என்றும், 'கம்' என்றால் ‘சந்தோசம்' என்றும் பொருள்.

உடலுக்குச் சந்தோசம் வருவதுபோல உறக்கம் வேண்டும் என்பது ஒரு அர்த்தம். மனதுக்குச் சந்தோசம் வருவது போல உறங்க வேண்டும் என்பது இன்னோர் அர்த்தம்.

உறக்கம் என்பது உடலுக்கு என்ன செய்கிறது. மனதுக்கு என்ன செய்கிறது என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

உடல் அயர்ந்து உறங்குவதால் உறுப்புக்களுக்கு, உழைப்பால் ஏற்பட்ட களைப்பும், இழப்பும் எல்லாமே மாறி, ஒரு புதிய தெம்பை உண்டு பண்ணுவதாக அமைந்திருக்கிறது.

உழைப்பால் திசுக்கள் சேதம் அடைகின்றன. பழுதடைகின்றன. பங்கப்படுகின்றன. பணியில் ஈடுபடும் வேகத்தை இழக்கின்றன. பார்த்துப் பெருமைப் பட வைக்கிற உடலின் வலிவையும், வனப்பையும் உருமாற்றிவிடுகின்றன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் நன்றாக அயர்ந்து உறங்கும்போது அங்கே ஆழ்ந்த சுவாசம் ஏற்படுகிறது. தேவையான திசுக்கள் பகுதிகளுக்கு இரத்த ஒட்டம் தேடி வருகிறது.

அங்கே பிராண வாயு கலந்த தூய இரத்தத்தைத் திசுக்கள் மேல் பொலிந்துவிட்டு, அவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்குகளையும், கேடுகளையும் இழுத்துக் கொண்டு போகிறது. இப்படிப்பட்ட பணிமாற்றத்திற்குத்தான் ஆழ்ந்த உறக்கம் தேவை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வள்ளுவர் கூட உறக்கத்தைப் பற்றி மிகத் தெளிவாகப் பாடியிருக்கிறார். எப்படி உறங்க வேண்டும் என்று வற்புறுத்தியே சொல்லியிருக்கிறார்.

"உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி

விழிப்பதுபோலும் பிறப்பு"

என்றார்.

ஆனால், அவர் சொல்ல வந்தது சாக்காடு போலும் உறங்குவது என்பதே. அதாவது செத்தவர் கிடப்பதைப் போல உறங்க வேண்டும் என்றார். இதைத்தான் ஆங்கிலேயரும் (Dead Sleep) டெட் ஸ்லீப், என்றனர். அதை ஆழ்ந்த உறக்கம் என்பதாக டீப் ஸ்லீப் (Deep Sleep) என்றனர்.

குறைவான உறக்கம் உடலைச் சீர்குலைத்துவிடும். அரைகுறை உறக்கம் மனதை அலைபாய வைத்து அலைக்கழித்துவிடும். உறக்கம் வராமல் திண்டாடுகின்ற உங்கள் ஆன்மாவைப் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும்.

அதனால்தான் வள்ளுவர் செத்துக் கிடப்பதுபோல உறங்குங்கள் என்றார். நீங்கள் உறங்கி விழித்ததும் பாருங்கள் உங்கள் உடம்பிலே, புத்துணர்ச்சியும், பூரிப்பும், புதுத் தெம்பும் காண்பீர்கள். நீங்கள் இந்த உலகத்தையே பேரின்பமாக வரவேற்பீர்கள்.

அப்படியென்றால் எப்படித் தூங்குவது? எவ்வளவு நேரம் தூங்குவது? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஒரு அறிஞர் சொல்கிறார். 'உறங்கச் செல்லும் இடத்திற்குச் செல்வதற்கு முன்னும், உணவு உண்ணச் செல்லும் இடத்திற்குச் செல்லும் முன்னும் நீ முட்டாளாகப்போ' - என்கிறார். எப்படி முட்டாளாக உடனே ஆக முடியும் என்று கேட்கிறீர்களா? முட்டாளுக்கு எதையும் சிந்திக்கத் தெரியாது. அப்படி ஏதாவது யோசனை வந்தாலும் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்வதும் கிடையாது. அவனது எந்த உணர்வும் உறுத்துவதும் கிடையாது. வருத்துவதும் கிடையாது. அவன் சாப்பிடும்போதும், உறங்கும் போதும், நிம்மதியாகச் சாப்பிட்டு, நிம்மதியாக உறங்குகிறான்.

ஆகவே, பிரச்சினைகளை வேலை செய்யும் இடத்திலேயே விட்டுவிடுங்கள். வீட்டுப் பிரச்சனைகளை முற்றத்திலேயே விட்டு வையுங்கள். படுக்கை அறை பதமாக உறங்குகின்ற இடம்.

சாப்பாட்டு அறை உடலைக் சமர்த்தாக வளர்த்துக் காட்டுகிற இடம். இந்த இரு இடங்களிலும், உங்களுடைய பிரச்சனைகளைக் கொண்டு செல்லாதீர்கள்.

ஒரு சிலருக்குப் படுக்கையில் படுத்தவுடன்தான் பலப்பல சிந்தனைகள், பலப்பல நிந்தனைகள், பலப்பல உபாதைகள் படையெடுக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்டவைகளால் உறக்கமும், மனதிலே ஏற்படுகிற துடிதுடிப்பும், சொல்லிலே ஏற்படுகிற படபடப்பும் அவர்களைப் பந்தாடிவிடுவதால் நொந்து போய் விடுகிறார்கள். புரண்டு புரண்டு படுத்து, வாழ்வையே வெறுத்துச் சலித்துப்போய் அவர்களை அறியாமலேயே உறங்கிவிடுவார்கள்.

உறங்கும் நேரம் போதாததால், விடியற் காலையிலே அவர்களது முகத்தைப் பார்த்தால், அவர்கள் முகம் வெளிறிப்போய்க் கிடக்கும். சில முகங்கள் வற்றிக் கிடக்கும்.

இன்னும் சில முகங்கள் வீங்கிக் கிடக்கும். இப்படிப்பட்ட முகத்தில் எப்படிச் சந்தோசம் வரும். குறைந்தது எட்டு மணி நேரமாவது உறங்க வேண்டும் என்பதுதான் அறிஞர்களின் அறிவுரையாகும்.

எட்டு மணி நேர உறக்கந்தான் ஒருவரை ஆசுவாசப் படுத்துகிறது. அன்றலர்ந்த மலராக அவரைத் துயில் எழுப்புகிறது. தூக்கம் என்பதற்கும் இதே மாதிரிப் பொருள்தான் உண்டு.

‘தூ’ என்றால் தூய்மை , நன்மை . ‘கம்’ என்றால் சந்தோசம் என்பது பொருள். நல்ல தூக்கமென்பது, தூய்மையைக் கொடுத்து, நன்மையைச் செய்து சந்தோசத்தை நிலை நிறுத்துவது ஆகும்.

யாராவது ஒருவர் எனக்குத் தூக்கம் வரவில்லை என்று சொன்னால் அவர் உழைக்க மறுக்கிறவர், உழைப்பை வெறுக்கிறவர். உடலால் செய்யும் சேவைகளைக் கேவலம் என்று நினைக்கிறவர். தூக்கம் வராததால் நான் தூக்கமாத்திரை போட்டுக் கொள்கிறேன் என்று தன் செல்வச் செழிப்பைக்காட்டிக் கொள்பவர். அவர்களுக்கு உறக்கம் என்பது வேதனை தரும் விஷயந்தான்.

தூக்கம் வராத பெண்ணொருத்தியைப் பத்துப் பட்டு மெத்தைகளை அடுக்கி அதில் படுக்க வைத்தபோது, புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், ஏதோவொன்று உறுத்துகிறது என்றாளாம். அது என்னவென்று பார்த்தால் அது மயிலிறகாக இருந்ததாம்.

அதே நேரத்தில் தொழிலாளி ஒருவன் வீதியோரத்தில், சாக்கடை நாற்றத்தில், கொசுக்கடிகளுக்கு மத்தியில் ஆழ்ந்து உறங்குகிறான் என்றால் அது அவனது உழைப்புத் தந்த ஒய்வு அல்லவா. தூங்குவதற்கு இடம் தேவையில்லை. மனம்தான் முக்கியம். இந்த இரகசியத்தைத்தான் உல்லாசமான வாழ்விற்கு உறக்கம் முக்கியம் என்று சொல்ல வைத்தார்கள்.

இரவை வீணாக்காமல் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஆழ்ந்து உறக்கம் கொள்ளுங்கள். உடலில் புத்துணர்ச்சி பெற உறங்குங்கள். மனதில் பூரிப்பு வர உறங்குங்கள். ஆன்மாவில் ஆனந்தம் அரசாள உறங்குங்கள்.

‘தூங்காமல் தூங்கிச்சுகம் பெறுவது எக்காலம்’ என்று சித்தர்கள் சொன்னார்கள். அவர்கள் உடலால் தூங்கி, ஆன்மாவால் விழித்துக் கொண்டு இருந்தவர்கள். அந்தச் சுகம் அவர்களுக்குத் தெரியும். உங்கள் ஆன்மா உறங்கினால்தான் உடல் உறங்கும். மனம் உங்களை மகிழ்விக்கும்.

☐☐☐