உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/முகம்



இரகசியம் - 6


முகம்

'ண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்' என்பார்கள். அந்த சிரசுக்கு முரசு கொட்டி முழங்கும் பேறாக, ஒளி மிகுந்த வாக்கியமாக, பூரிப்பாய் அமைந்திருப்பது முன்பகுதியாகிய முகம்.

ஒருவரின் முகத்தை வைத்துத்தான் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. பதினான்கு சிறு சிறு எலும்புகளால் ஆன மூட்டுக்கள், அந்த முட்டுக்களின்மேலே முப்பது சிறு, சிறு சதைத் துண்டுகள். அதனைப் பொறுத்தியுள்ளதோல்பகுதி, அந்த அமைப்பைப் பொறுத்துத்தான் ஒருவரது முகம் அழகாக விளங்குகிறது.

முகம் என்பது அகத்தின் சாரளம் அடங்கிக் கிடக்கும்ஆன்மாவை வெளிக்காட்டும் நிலைக் கண்ணாடி.

உள்ளேயுள்ள அகத்தை, அகத்தின் சக்தியை, அகத்தின் எண்ணங்களை, ஆசாபாசங்களை அருமை பெருமைகளை, அனைத்தையும் முகந்து வெளிக் கொண்டு வரும் முதிர்ந்த உறுப்புத்தான் முகம் ஆகிறது. அகம் அதனுள் விளையும் சுகம். சுகம் பொலிந்ததைச் சுற்றுச் சூழலுக்குக் காட்டுகிற முகம். எல்லாமே பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்திருக்கிறது.

அகம், என்ற சொல் அ+கம் என்று பிரிகிறது. 'அ' என்றால் அகச் சுட்டு, புறச்சுட்டு என்பார்கள். 'கம்' என்றால் சந்தோசம். ஆகவே, அகம் என்பது உள்ளேயும், புறத்தேயும் ஊடாடிக் கொண்டிருக்கிற சந்தோசத்தைச் சொல்லுவதாக அமைந்திருக்கிறது.

'சுகம்' என்ற சொல் 'சு+கம்' என்று பிரிகிறது. 'சு’ என்றால் நன்மை. 'சுய' என்றும் அர்த்தம் உண்டு. 'கம்’ என்றால் சந்தோசம். அதாவது சுய சந்தோசம். தன்னளவில் ஏற்படுத்திக் கொள்கிற தரமான தகுதி நிலையே சுயசந்தோசமாகிறது.

இந்த அகத்தையும், சுகத்தையும் முகர்ந்து கொண்டு வருவதால் முகமென்றோம். முகம் என்ற சொல் 'மு'+'கம்' என்று பிரிகிறது. 'மு' என்றால் மூன்று 'கம்’ என்றால் சந்தோசம்.

இயல், இசை, நாடகம் என்கிற மூன்று தமிழை முத்தமிழ் என்கிறோம். இந்து மகாசமுத்திரம், வங்காளக்கடல், அரபிக்கடல் இந்த மூன்றையும் முக்கடல் என்கிறோம். மா, பலா, வாழை என்கிற மூன்று கனிகளை முக்கனி என்கிறோம். அதுபோல மூன்று வகை சந்தோசத்தையும் வெளிப்படுத்துவதுதான் முகம் என்று அழைக்கப்படுகிறது.

மூன்று வகை சந்தோசம் என்பது எங்கே, எதனால், எப்பொழுது, எப்படி உண்டாகிறது என்கிற விபரத்தைச் சற்று விளக்கமாகக் காண்போம்.

உடலால் ஏற்படுகிற சந்தோசம். மனதால் ஏற்படுகிற சந்தோசம். ஆத்மாவால் ஏற்படுகிற சந்தோசம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். சந்தோசம்’ என்ற வடசொல் 'சன்+தோசம்’ என்று பிரிகிறது. 'தோசம்’ என்றால் குறை அல்லது நலிவு. 'சம்' என்றால் இல்லை என்று அர்த்தம்.

குறையோ, நலிவோ இல்லாத ஒரு நிலையைத்தான் சந்தோசம் என்கிறோம்.

1. உடலால் ஏற்படுகிற சந்தோசம் (Pleasure)

நாம் காரிலோ, பஸ்ஸிலோ ஏறிப் பயணம் செய்கிறோம். கூட்டமிருப்பதால் இடித்துக் கொண்டும், நெருக்கிக் கொண்டும் ஒருவித எரிச்சல் நிலையில் உட்கார்ந்து இருக்கிறோம். கூட்டம் குறைகிறது. நெருக்கம் விலகுகிறது. இப்போது உட்கார்வதற்கு, உடலுக்கு ஒரு இதமான இன்பம் கிடைக்கிறது.

இந்த இனிய நிலையைத்தான் ஆங்கிலத்திலே (Pleasure) என்பார்கள். இதுபோன்ற சுகமான சுய சந்தோசத்தை தருவதால்தான் காரைக்கூடப் 'பிளசர் கார்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். உடலுக்கு இதம் ஏற்படுகிறபோது பெறுகிற மகிழ்ச்சிதான் சந்தோசம்.

2. மனதால் ஏற்படும் சந்தோசம் (Joy)

இதை மகிழ்ச்சி என்று கூறுவார்கள். ஆங்கிலத்திலே Joy என்பார்கள். ஒருவரை நாம் எதிர்பார்த்துக் கொண்டு

இருக்கிறோம். அல்லது ஒரு காரியத்தைச் செய்துவிட்டு அதன் முடிவுக்குக் காத்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த மனிதர் வந்துவிட்டால் அல்லது நாம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அப்பொழுது நமது மனம் மகிழ்ச்சியால் விரிந்து கொள்கிறது. மகிழம் பூ விரிந்து மணம் பரப்புவது போல மனமும் விரிந்து இன்பத்தைத் தெளித்து விடுவதால் அதனை மகிழ்ச்சி என்று மங்கலகரமாகச் சொல்கிறார்கள்.

மனதால் ஏற்படுகிற மகிழ்ச்சி பூரிப்பையும், புத்துணர்ச்சியையும், புதிய சக்தியையும் அளிக்கின்ற காரணத்தால் அதை மகிழ்ச்சி என்று கூறுகிறார்கள்.

3. ஆத்மாவால் ஏற்படுகிற ஆனந்தம் (Happiness)

இதை ஆங்கிலத்தில் Happiness என்று சொல்வார்கள். தமிழிலே களிப்பு. அதாவது ஆனந்தக் களிப்பு என்று சொல்வார்கள்.

'ஆத்மா' என்றால் 'காற்று'. 'காற்று' என்றால் உயிர். ஆனந்தம் என்ற சொல், ஆன்+நந்தம் என்று பிரிகிறபோது, ஆன்மாவின் பெருக்கம். உயிரின் ஆற்றல், வலிமை என்று வளர்ந்து கொள்கிறது.

ஆன்மாவின் அதாவது உயிர்க்காற்று நிறைய, நிறைய உடலுக்கும் மனதிற்கும் ஏற்படுகின்ற மகிழ்ச்சி, சந்தோசம் மகிமை பெற்றுக் கொள்கிறது. இந்த ஆனந்தம் பெருகப் பெருகத்தான் மூச்சுப் பயிற்சி செய்கிற துறவிகளும், சித்தர்களும் அதை ஆனந்தம், பரமானந்தம், பேரின்பம் என்றெல்லாம் பேசுகின்றார்கள்.

இந்த இனிய நிலைக்குத்தான் சித்தர்கள் எல்லாம் தவம் கிடந்தார்கள். அவர்கள் கண்களிலே புத்தொளி பூரித்துக் கிடந்தது. உடலிலே மிடுக்கு, நடையிலே கம்பீரம்.

முகம்தான் ஒருவரது பண்பையும், பாங்கையும், வெளிப்படுத்தும் விதத்தில் பரிபூரண பிரதி பிம்பமாக அமைந்திருக்கிறது. உங்கள் முகம், முகம் என்று மற்றவர்கள் சொல்லுகிறபோது, அது உங்கள்.அகம், அகம் என்று, உங்கள் அகத்தின் சுகம், சுகம் என்று எதிரொலித்துக் கொண்டிருப்பதை நீங்கள் திவ்யமாகக் கேட்டு மகிழலாம்.

முகத்தில் சிறு கட்டியோ, சிறு கீறலோ, அல்லது விகாரமான தேமலோ வந்துவிட்டால் கூட நிலை பதறிப்போய், ஈரக்குலை குமுறிப்போவதை நாம் பார்த்து இருக்கிறோம். அப்படி என்றால் முகத்தை எவ்வளவு அருமையாகக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆர்வமானது அறிவு கொண்ட அனைவரிடத்துமே இருக்க நாம் வேண்டுகிறோம்.

இருந்தாலும், 'முகம்' என்று சொல்வதற்குப் பதிலாக 'மூஞ்சி' என்கிறார்கள். 'முகரைகட்டை', என்கிறார்கள். அவ்வாறு சொல்லுகிறபோது, அதன் அடிப்படை ரகசியந்தான் என்னவாக இருக்கும்.

முகத்துக்கு மூஞ்சி என்கிறார்கள். மூஞ்சைப்பார் என்கிறார்கள். அந்தச் சொற்களை வெறுப்போடு உமிழ்கிறார்கள். கேட்பவருக்கு வேதனை வருவதுபோல கூச்சலும் போடுகிறார்கள்.

மூஞ்சி அல்லது மூஞ்சை என்றால் கோணமுகம் என்று பொருள். காணச் சகிக்காத கோண முகம் அல்லது முகத்தைச் சரியாகப் பராமரிக்காததால் ஏற்பட்ட சாணி முகம் என்று கூடச் சொல்லலாம். முகம் என்றதும் வாய் நினைவுக்கு வந்து, வாய் என்றதும் சோறு நினைவுக்கு வந்து, சோற்றுப் பிண்டமாக அலைகின்ற சோம்பேறி மக்கள், கலைந்த தலைமுடியுடன், கொசு மொய்க்கும் கண்களுடன், சளி ஒழுகும் மூக்குடன், பக்கத்தில் வந்தால் பயங்கரமாக நாறுகிற பற்களுடன் காட்சியளிக்கின்ற போது, அது கோணல் முகம் அல்லது சாணி முகம் என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?

வெளிப்புறத்திலே சுத்தமாக வைத்துக் கொள்ளாத தால், வீணாகிப் போன முகம், ஆயிரம் போராட்டங் களினால் அவதிப்படுகின்ற அகத்தை வெளிப்படுத்து வதால், மாறிப்போய் அசிங்கமாகிவிடுகிறது.

இதனைத்தான் 'முகரைக்கட்டை' என்கிறார்கள். முகம் என்பது உயர் திணைப் பொருள். உயிருள்ள ஜீவனின் ஒப்பற்ற பரிமாணம், வாழும் வாழ்க்கையின் வடிவமைப்பைக் காட்டுகின்ற வண்ணத்திரை ஒவியம். ஆனால், கட்டை என்பது அஃறிணைப் பொருள். ஜீவனில்லாதது. வெளியிலே எறியப்பட வேண்டிய ஒன்று. அடுப்பில் எரியப்பட வேண்டிய ஒன்று.

அதற்கும் இதற்கும் உவமை காட்டினால் அதற்கு என்ன மரியாதை?

ஒருவனது முகம் முகரக்கட்டையாக ஆகிற பொழுது, அவன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறான் என்று அர்த்தம். அவன் சமுதாயத்தில் தொலைந்துபோய் விட்டான் என்று அர்த்தம். கரையிலே செய்யப்படுகின்ற கப்பல், கடலுக்குள் போய்விட்டால் அது மீண்டும் கரைக்கு வர முடியாது. ஒன்று கரைக்கு வந்து தரைதட்டி நிற்கும். பயன்படாமல் பாழாகிவிடும். அல்லது கடலுக்குள் புயலில் சிக்கி அமிழ்ந்து போகும். அழிந்து போகும்.

அதுபோலவே வாழ்க்கையைத் தொலைத்தவர் களும், மீண்டும் ஒரு அழகான முகத்தைப் பெறுவ தென்பது மிக மிகக் கஷ்டமாகும். ஏனென்றால் முகமானது முப்பது சிறு சிறு தசைத் துண்டுகளால் உருவாக்கப்பட்டிருப்பதாம். அதற்குச் சரியான பிராண வாயுவும், சரியான உணவும் கிடைக்காவிடில் நாளாக, நாளாக, அமைப்பில் நலிந்து நாசமாகி விடுவதால், அவை குற்றுயிராய்க் கிடக்குமே தவிரப் புத்துயிர் பெற்றுப் பொலிவு பெறுவது அரிதான ஒன்று.

பிறகு வசதியும், வாய்ப்பும் வந்தாலும், இழந்த வாழ்வை ஈடுகட்டிக் கொண்டாலும், உடல் அமைப்பில் கொஞ்சம் மாறுதல் உண்டாகலாமே தவிர முக அழகில் மந்தகாசம் தெரியாது. மங்கலான வெறும் மலுங்கலான தோற்றமே முகத்தில் தென்படும். அதனால்தான் முகம் என்னும் இரகசிய வார்த்தை மனிதர்களிடையே பிரபலமாக விளங்குவதுடன், மக்களால் அடிக்கடி பேசப்படுகிற மாதவச் சொல்லாகவும் விளங்குகிறது.

☐☐☐