உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் கொள்கைகள்
மனிதர்களும் கொள்கைகளும்
முற்கால மனிதர்களின் வாழ்வானது இயற்கையோடு இயைந்தது. இணைந்தது. இயற்கையினூடே அவர்கள் வாழ்வு இதமாக இயங்கிச் சென்றது.
இயற்கை ஏற்படுத்திய அழகை, அதிசயங்களை மனிதர்கள் வியப்போடு பார்த்தார்கள். வியந்து ரசித்தார்கள். புரியாமல் சில சமயங்களில் திகைத்தார்கள். இயற்கை கொடுத்த இன்னல்களை ஏற்று அவர்கள் பகைத்தார்கள். பகை முடிக்கவும் முயற்சித்தார்கள்.
இயற்கையை அவர்கள் தங்களுக்குத் துணையாகவும் வசதியாகவும் மாற்றிக் கொள்ளத் துடித்தார்கள். அவர்கள் துடிப்பும், ஆர்வப் பிடிப்பும், முயற்சிகளும் ஆயிரக்கணக்கான அனுபவங்களை அள்ளி அள்ளி வழங்கின.
இயற்கைச் சூழ்நிலையை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினர். அதிகமாக அதற்காக சிந்தித்தனர். அற்புதமான அனுபவங்களைப் பெற்று, அவற்றையும் அலசிப் பார்த்து சிந்தித்தனர். அவர்கள் உயிர் வாழ மேற்கொண்டமுயற்சிகளை “வாழ்வு பெற வாங்கிக் காெண்ட வருத்தங்கள்” (Struggle for existcance) என்று அழைத்தும் மகிழ்ந்தனர்.
அந்தகால மனிதர்கள் வயதால் மட்டும் வளரவில்லை. அனுபவங்கள் கொடுத்த அறிவாலும் வளர்ந்தனர். அந்த அறிவின் துணை கொண்டு வாழ்வின் இலட்சியங்களை வடித்தனர். அந்த இலட்சியங்களை அடைந்திட, பல எண்ணங்களைத் தொகுத்தனர். வழிகளை அமைத்தனர். அதுவே அவர்களது கொள்கைகளாக வடிவெடுத்தன.
கொள்கை வந்த விதம் :
ஆதிகால மனிதர்கள் வாழ்வில் எந்திரங்கள் இல்லை. பரிசோதனைச் சாலைகளும் கிடையாது. அவர்கள் எதிர்நோக்கிய இடங்கள் யாவும் இயற்கையாகவே இருந்தன. அவர்களின் பார்வைகள், அவற்றின் காரணங்களை அறிய முயன்றன. அதிலே புரிந்தும் புரியாததுமாக பல நிகழ்ச்சிகள் இருந்தன.
நன்றாகப் புரிந்தாலும் புரியாவிட்டாலும், அவர்களுக்குள்ளே அவைகள் ஆழமாக ஊன்றிப் போயின. அவையே நம்பிக்கைகள் (Beliefs) என்ற பெயரைப் பெற்றன.
நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை அப்படியே மனிதர்கள் ஏற்றுக் கொண்டனர். ஏன் என்று காரணம் கேட்க, எதற்கு என்று விளக்கம் கேட்க, எப்படி என்று உண்மையை அறிய யாருமே முன் வரவில்லை. விரும்பவும் இல்லை.
நம்பிக்கைகள் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வந்தன. அறிந்து கொண்டு வந்த அறிவும் ஞானமும், முன்னோர்கள் கொண்டு தந்த நம்பிக்கைகளும், மக்கள் வாழ்வில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டன.
மக்களிடையே முகிழ்த்த அறிவும் ஞானமும், புதிது புதிதாக எந்திரங்களை உருவாக்கின. வாழ்க்கையை வசதியாக்கித் தந்தன. தர்க்க ஞானம் தணலாக எழுந்தது. பகுத்துணருகின்ற அறிவு பரிமளித்தது. விஞ்ஞான அறிவு சுடராக வெளி வந்தது. அதுவே ஆராயும் அறிவாகப் பொங்கி வழிந்தது. மக்களை மலர்ச்சிப் படுத்தியது.
இவ்வாறு ஒருபுறம் நம்பிக்கை மறுபுறம் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் அறிவு. இப்படியாக இரண்டு கொள்கைகள் உருவாயின.மக்களிடையே முரண்பாட்டில் ஒற்றுமை கண்டன.
கொள்கைகள் என்றால் என்ன?
கொள்கை (Principle) என்றால் அடிப்படை உண்மை, சட்டம்; முன்னேற்றுகிற சக்தி; பொதுவிதி; செயல்பட உதவும் வழிகாட்டி என்று அகராதி, பல அர்த்தங்களைக் கூறுகிறது.
சமுதாயத்தில் வாழும் பல மனிதர்கள், சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செம்மையான கருத்துக்களையே கொள்கைகள் என்று கூறி வருகின்றனர்.
அப்படிப்பட்டக் கொள்கைகள், சமுதாயத்தில் உலவுகிற செம்மாந்த நடைமுறைகளாகவும் இருக்கலாம். அல்லது விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகளின் முடிந்த முடிவாகவும் இருக்கலாம்.
உதாரணமாக, உண்மை பேசுதல் என்பது சமுதாயத்தின் சிறந்த எதிர்பார்ப்பாகும். இது நம்பிக்கை வழியாக, பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வரும் மேன்மையான கொள்கையாகும்.
பூமி உருண்டை வடிவமானது. அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. காற்றிரண்டு ஒன்று சேர்ந்து நீராகியது என்பன போன்ற கருத்துக்கள் பல உண்டு. கலிலியோ, நியூடன் எய்ன்ஸ்டீன் போன்ற அறிவியல் வல்லுநர்கள் பலர், கொடுத்த ஆய்வுக் கொள்கைகள் இவை என்று நாம் இங்கே அறிந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட கொள்கைகள் யாவும், அறிவை வளர்க்கப் பயன்படுவதுடன், வாழ்வை வசதியாகவும் அமைதியாகவும் அனுபவித்து வாழ்ந்து செல்ல, ஆழ்ந்த துணையாகவும் உள்ளன.
காலத்திற்குக் காலம் கொள்கைகள் மாறும் என்பார்கள். புதியன புகுதலும், பழையன கழிதலும் என்றும் கூறுவார்கள். கொள்கைகளில் மாற்றம் இருக்குமே தவிர, அடிப்படை கருத்து மட்டும் மாறாது என்றும் உரைப்பார்கள். அதுதான் உண்மை.
காலத்திற்கேற்ப, கொள்கைகளில் புதுமை சேர்ந்து கொண்டு, இதமான பாதையை அமைத்துக் கொள்ளும் என்பதுதான் காலத்தின் கட்டளை.
ஆக, கொள்கைகள் என்பவை, ஆழ்ந்த அறிவின் முதிர்ச்சி காரணமாகவும்.அப்பட்டமான நம்பிக்கையின் எழுச்சி காரணமாகவும் தோன்றுகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
கொள்கையின் விளக்கம் :
“அனுபவங்கள் மூலமாக அல்லது அறிவின் முதிர்ச்சியின் காரணமாக எழுகின்ற விஞ்ஞானக் கருத்துக்கள் அல்லது தத்துவார்த்தக் கருத்துக்கள் தாம், மக்களின் தலையாய கொள்கையாக மலர்கிறது” என்று கூறுகிறார் JF வில்லியம்ஸ் அவர்கள்.
ஆக, கொள்கை என்பது ஒர் உண்மையான கருத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் ஆரம்பமாகிறது. அதைத் தொடர்ந்து, அந்த உண்மையைச் சார்ந்த கருத்துக்கள் கொள்கைகளாக மாறி, வாழ்வுக்கு வழி காட்டும் வண்ணம் மாறிவிடுகின்றன.
அப்படிப்பட்ட கொள்கைகளை நாம் இரண்டு வகையாகப் பெறலாம்.
- 1. தத்துவங்களிலிருந்து பெறுபவை (Philosophy)
- 2. விஞ்ஞானத்திலிருந்து பெறுபவை (Science)
1. தத்துவக் கொள்கை :
தத்துவம் என்பது ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக அறிந்து கொண்டதும், நம்பிக்கை நிறைந்ததுமான உண்மைகளாகும்.
இத்தகைய உண்மைகள், இயற்கையை ஆய்ந்து அறிந்து கொண்டதிலிருந்து, அவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களிலிருந்தும், கண்ட காட்சிகளில் பெற்ற களிப்பிலிருந்தும் உருவானவைகளாகும்.
அந்த உண்மைகளே நாளடைவில் கொள்கைகளாக மாறிவிடுகின்றன. மாற்றம் பெறுகின்றன. அப்படிப்பட்ட உண்மைகள் தனிப்பட்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். அல்லது சமுதாயத்தின் செழுமைக்கும் சீர்மைக்கும் உதவுவதாகக் கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாம் உலகத்தின் உன்னத உயர்வுக்கு உபயோகமானவைகளே.
தத்துவங்கள் நிறைந்த நம்பிக்கையிலிருந்து பெறப்படுகிற கொள்கைகள், உயர்ந்த வாழ்க்கையை மனிதர் வாழ உதவி உற்சாகம் ஊட்டுபவைகளாகவே உள்ளன. அத்தகைய கொள்கைகள் நிதர்சனமாக நேரில் பார்க்க முடியாதவை. ஆனால் அவை பண்புகளாக விளங்குபவையாகும்.
அதாவது நன்னெறிக் கொள்கைகள் (moral), அழகை ஆராதிக்கும் கலையுணர்வு கொள்கைகள் (Aesthetic) சமூகப்பண்பாடுகள் (Social values) போன்றவையெல்லாம் இந்தப் பிரிவில் அடங்கும்.
மனித சமுதாயம் எப்பொழுதுமே புத்துணர்ச்சி மிக்கது. அது புதிய அனுபவங்களிலும், கண்டுபிடிப்புகளிலும் மகிழ்ந்து திளைக்கின்ற சக்தியைப் பெற்று விளங்குகிறது. அது மரபுகளையும் தொன்று தொட்டுத் தொடர்ந்துவரும் சமூக நலங்களையும் சந்தித்து, அவை களை நேரத்திற்கு நேரம் காலத்திற்குக் காலம் மாற்றி அமைத்துப் புதுப்பித்துக் கொண்டு, பயன்படுத்திக் கொள்கிற ஆற்றலையும் பெற்றிருக்கிறது.
அந்த அரிய பண்புகளில்தான், உலகக் கலாசாரம் உருவாகிறது; உலக நாகரிகமும் முகிழ்த்தெழுகிறது.
இதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றுகிற கலாசாரமும், நாகரிகமும் மக்களுக்கு மக்கள், தேசத்துக்குத் தேசம், இடத்துக்கு இடம் மாறுபட்டும் வேறு பட்டும் கிடக்கிறது. அதாவது மனித இனத்துக்கு, நம்பிக்கை மூலம் உருவான கொள்கைகளே வாழ்க்கை நடத்திக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த நாகரிகம் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணமாகவே இவை அமைந்துள்ளன.
ஒரு நாட்டிற்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு உகந்த கொள்கைகள், மற்றொரு நாட்டிற்கு அல்லது சமுதாயத்திற்கு ஏற்புடைத்ததாக இருக்கவில்லை என்பதையே சரித்திரம் நமக்கு நன்றாகச் சுட்டிக் காட்டுகிறது.
அந்நாளில், ஆரிய இனத்திற்குரிய நாகரிகக் கொள்கையெல்லாம் அப்படி அப்படியே மாற்றம் பெற்றுக் கொண்டிருப்பதை, இன்று நாம் அறிந்து கொண்டிருக்கிறோமே! திராவிட கலாசாரமும் அப்படித் தானே திரிந்து விரிந்து கொண்டிருக்கிறது.
மாற்றம் என்பது இயற்கையின் சட்டமாகும்.மாறிக் கொண்டு வருவது மனிதர்களுக்குரிய பண்பும் ஆகும். இன்று உண்மையாகத் தெரியும். உண்மைக் கருத்துக்கள் நன்மை தருபவையாக விளங்கினாலும், நாளைய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாமற் போனாலும் அது ஆச்சரியமாக இருக்காது. ஏனெனில் இதுவே இயற்கைத் தத்துவமாக இருக்கிறது.
கலாசாரம், நாகரிகம் பெறுகிற மாற்றங்களைப் போலவே, கல்வித்துறையிலும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அரசியலில், சமூக அமைப்பில், பொருளாதாரத்தில், நன்னெறிக் கொள்கையில், மதக் கோட்பாடுகளில், மரபுகளில் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்து தானே ஆக வேண்டும்!
கல்விக் கொள்கையில் நல்லது எது? தீயது எது? ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கை எது? எதிர்பார்ப்புக்கு மாறாக இயங்குவது எது? மக்களின் மன விருப்பத்திற்கு முற்றிலும் ஈடுகொடுக்க முடியாத கொள்கைகள் எவை என்றெல்லாம், கல்விக் கொள்கை பற்றிய ஆய்வில் முடிவெடுக்கப்படுகின்றன.
அதுபோலவே, உடற்கல்வியிலும் ஆய்வு நிகழ்ந்து கொண்டு வருகிறது. உடற்கல்வியை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறவர்கள், வட்டார அளவில், மாநில, தேசிய, உலக அளவில் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப உடற்கல்வியை மாற்றி அமைத்துக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொள்வது, நிகழ்ச்சித்திட்டங்களை இன்னும் மக்களுடன் நெருக்கமாக உறவாட வைத்திட உதவுகிறது. அதனால், உடற்கல்வியும் மக்களின் நெஞ்சத்தில் ஆழமாக இடம் பெறவும், வெளிப்புற செயல்களில் விரிவாக வளர்ச்சியடையவும் வாய்ப்பு பெருகிவருகின்றது.
தத்துவ நம்பிக்கையில் தவழ்கிற உடற்கல்விக் கொள்கைகள் மக்கள் மனதில் வேரூன்றிக் கிடப்பதால், அவற்றையே செயல்பட வேண்டும் என்பது கட்டாய மில்லை.இன்னும் நன்றாக உடற்கல்வி முன்னேற மாற்றங் கள் தேவையென்றால், மரபுகளை சற்று மாற்றிக் கொண்டு, மேன்மையுடன் நடத்திச் செல்லவும் வேண்டும்.
நிலையாக எதையும் வைத்துக் காப்பாற்றுவது, ஒரு நிறைவான முன்னேற்றத்தை நல்கிவிடாது, ஆகவே, உடற்கல்வியாளர்கள், பழையதில் உள்ள நல்லனவற்றை வைத்துக் கொண்டு, புதியனவற்றை தேர்ந்தெடுக்கும் போது, வளர்ச்சியையும் எழுச்சியையும் மனதில் கொண்டு ஏற்று, புதுமையைப் புகுத்திச் செயல்படுவது, சிறந்த எதிர் காலத்தை அமைத்துத் தரும் என்பதில் ஐயமேயில்லை.
2. விஞ்ஞானக் கொள்கை
ஒரு சில கொள்கைகள் விஞ்ஞான பூர்வமான கருத்துக்களிலிருந்து உருவாகி வருகின்றன. அப்படிப்பட்ட கருத்துககள் உண்மையானவைகள் : ஆதாரபூர்வ மானவைகள் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஏனென்றால், விஞ்ஞானக் கொள்கைகள் யாவும், ஆய்வு மூலமாகவும்,தொடரும் பரிசோதனை மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுபவையாகும்.
இன்னும சில விஞ்ஞானக்கொள்கைகள் நிலையற்ற, தற்காலிகமானவை என்று இருப்பதையும் காணலாம். ஏனெனில், அவைகள் இன்னும் ஆராயப்படவேண்டும், அறிந்து கொள்ளப்பட வேண்டும் என்று அறிஞர்கள் அபிப்ராயப்படுவதால்தான்.
இயல்பியல், வேதியல், உயிரியல் போன்ற அறிவியலில் உரைக்கப்பட்ட கண்டுபிடிப்பு உண்மைகள் பல, இந்த நூற்றாண்டில் மாறிப் போயிருக்கின்றன என்ற உண்மையும் நமக்குத் தெரியும். ஆகவே, விஞ்ஞானக் கொள்கைகள் யாவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாளையே அது உண்மையல்ல என்று மறுத்துரைக்கப் படுகின்ற நிலைமையும் உண்டாகும்.
ஆனால், உடற்கல்வியில் உள்ள விஞ்ஞானக் கொள்கைகள் யாவும், ‘இயக்கத்திற்குரியவன் மனிதன்’ ‘மனிதனே ஒரு இயக்கம் தான்’ என்று ஆணித்தரமாக விளக்கும் அமைப்பிலேதான் உருவாகியிருக்கின்றன.
உடற்கூறு நூல்; (Anatomy) உடல் இயக்க நூல் (Physiology); மனிதனைப் பற்றிக் கூறும் அறிவியல் (Arthropology); பயோ கெமிஸ்டிரி, பயோ பிசிக்ஸ், பயோ மெக்கானிக்ஸ் போன்ற விஞ்ஞானங்கள் எல்லாம், மனிதன் இயக்கத்தினைப் பற்றியே விரிவாக விளக்குகின்றன.
இவைகள் உடற்கல்வியை முழுதுமான விஞ்ஞானக் கல்வியாக மேன்மைப் படுத்துவதிலேயே முக்கியப் பணியாற்றுகின்றன.
இப்படிப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகள் ஒரு சிறிதுதான் மாற்றம் பெறுமே தவிர, எல்லாமே மாறிப்போகும் என்று நாம் எண்ணிவிடக் கூடாது.
உடல்கூறு நூல், உயிரியக்க நூல் எல்லாம் செம்மையாக அமைந்து விட்ட நூல்கள் என்பதால், அவையாவும், மாறா தன்மை உடையவை. அதில் மேலும் நுண்மை ஏற்படுமே தவிர, வன்மை மிகுந்த மாற்றம் இருக்காது.
விஞ்ஞான பூர்வமான கொள்கைகளைக் கொண்டிருக்கும் உடற்கல்வியானது, தவறாகிப் போகும் என்ற நிலையே ஏற்படாது, காரணம் அவைகள் யாவும் அறிவு பூர்வமானவை. மக்களிடையே நிலவியுள்ள மரபுகள், பரம்பரைப் பழக்கங்கள், சமூக வழக்கங்கள் யாவிலும் உள்ள கருத்துக்களுடன் கலந்து போகின்ற பண்புகள் நிறைய கொண்டிருப்பதுதான் காரணமாகும்.
இப்படிப்பட்ட உடற்கல்வியானது காலங்காலமாக விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து கொண்டே வந்து, மனித சமுதாயத்தை மேம்படுத்திக் கொண்டு வாழ்கிறது.
தத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் வழியாக வந்த கொள்கைகளானாலும் அறிவு பூர்வமான விஞ்ஞானத் தின் வழியாக வந்த கொள்கைகளானாலும், அவை மனித இனத்தைப் பற்றி மகிமைப்படுத்துகின்ற நோக்கத்தை, குறிக்கோளை, கொள்கைகளைக் கொண்டவையாகவே விளங்குகின்றன என்பதுதான் உடற்கல்வியின் உன்னதமான கொள்கைகளாகும்.
உடற்கல்வி கொள்கை பற்றிய குறிப்புக்கள்
உடற்கல்வி என்பது ஒழுக்கம் கற்பிக்கும் உயர்ந்த கலை. உன்னதமான தொழில்.
உடற்கல்வியின் தொழிலானது குழந்தைகளுக்குப் பெருந்தசை வளர்ச்சிக்கான செயல் திட்டங்களைத் தொகுத்துத் தந்து, ஆளுமை (Personality) போன்ற பெரும் பண்புகளை வளர்த்துத் தருவதாகும்.
தாெழில் (Profession) என்பது கொள்கைகளையும், வழிநடத்தும் வளமான, பயிற்சி முறைகளையும் கொண்டதாகும். அது அற்புதமான அறிவியல் கொள்கைகளையும் கொண்டிருப்பதாகும்.
உடற்கல்வி என்பது வணிகம் (Trade) அல்ல.தொழில்.
தொழில் என்பது விஞ்ஞானக் கருத்துக்களையும், நம்பிக்கையுள்ள தத்துவார்த்தக் கருத்துக்களையும் உள்ளடக்கி உருவானதாகும்.
வணிகம் என்பது சட்டங்கள்,சட்டத்தைநடத்துகிற விதிமுறைகள், மார்க்கங்கள், நோக்கங்கள் கொண்ட அமைப்புகளால் ஆனது.
உடற்கல்வி என்பது சிறந்த தொழிற் பணியாகும். அதன் அடிப்படை ஆணிவேர் போன்ற கருத்துக்கள் எல்லாம் அறிவானவை, தெளிவானவை. தீர்க்கத் தரிசனம் நிறைந்தவை. தேடிவந்து சுகம் கொடுக்கும் திவ்யமானவை. உடற்கல்வியே உலகுக்கு வழிகாட்டும் உயர்ந்த தொழில் என்றால் அது உண்மைதான், இதற்கு வேறு விளக்கம் வேண்டியதே இல்லை.
உடற் கல்விக் கொள்கைகள்
- 1. மனிதர்களது செயல் திறனை வளர்த்து, வெளிப்படுத்துகிற சீரான சிறப்பியக்கச் சக்திகளை (Motor skills) இயக்கும் மேன்மையான முறைகளை உடற்கல்விக் கொள்கைகள் கற்றுத் தருகின்றன.
- 2.பல்வேறுபட்ட வயதுக் குழந்தைகளுக்கேற்ப, மனிதர்களுக்கேற்ப திட்டங்களை வகுத்து, செயல்படுத்தும் வழிகளைக் காட்டுகின்றன.
- 3.மனித இயக்கத்தின் முறையான தன்மைகளை விளக்கி, அவற்றைப் புரிந்து கொள்ளும்படியாகவும், வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை, சந்தர்ப்பங்களை உண்டுபண்ணி உதவுகிறது.
- 4.குழந்தைகள், மனிதர்கள் எந்த வழியெல்லாம் தங்கள் திறமைகளை, ஆற்றலை, ஆண்மையை வெளிப்படுத்திக் காட்டக் கூடுமோ, அப்படிப்பட்ட வாய்ப்புக்களை அளித்து உற்சாகப்படுத்துகின்றன.
- 5.கொள்கைகளில் எது நல்லது? எது ஏற்புடைத்த தல்ல? எது உண்மை, எது நன்மை என்பனவற்றை அறிந்து நடந்துகொள்ளும் அறிவைத் தந்து, நேர்வழியில் நடக்கத் துண்டுகின்றன.
- 6.மாறி வரும் உலகத்திற்கேற்ப, தங்களை மாற்றிக் கொள்ளும்படி, திட்டங்களைத் தீட்டவும் வேண்டாதனவற்றிலிருந்து விலகிக் கொள்ளவும் கூடிய பக்குவமான மனதைப் படைத்து விடுகின்றன.
இனி, உடற்கல்விக்கான விஞ்ஞானக் கருத்துக்களை வழங்கிய பல விஞ்ஞான நூல்களைப் பற்றி விளக்கமாகக் காண்போம்.
1. உடற் கூறு நூல் (Anatomy)
உடல் அமைப்பைப் பற்றி விளக்கமாகக் கூறுவது உடற் கூறு நூல் ஆகும். இது மாணவர்களுக்கு உடல் அமைப்பைப் பற்றிய உண்மையான அறிவைக் கொடுக்கிறது. உடல் அமைப்பு, அதன் இயக்கம், எலும்பு மற்றும் தசைகள் இயக்கம் பற்றிய உண்மைகளை அறிய உதவுகிறது.
2. உடல் (உறுப்பு) இயக்க நூல் (Physiology)
உடல் உறுப்புக்களின் இயற்கையான அமைப்பு, அதன் வழியாக உயிர் இயங்கும் இயக்கம் மற்றும் உறுப்புக்களின் தனித்தன்மை, செயல்கள் பற்றி விரிவாகக் கூறும் நூலாக இது அமைந்திருக்கிறது.
தசைகளின் இயக்கம், தசைகளின் களைப்பு, இதயத்தின் பணி, அதன் அயராத உழைப்பு நாளமில்லா சுரப்பிகள், அவற்றின் இயல்புகள், சுரப்பிகளின் பயன்கள் இவற்றைத் தெளிவாகக் கூறுகிற நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது.
உடற்கல்வியானது உடலுக்குப் பயிற்சி தருவதில் தான் முனைப்புடன் பணியாற்றுகிறது. ஆக, இவ்விரண்டு அறிவியல்களும் உடற்கல்வியுடன் இரண்டறக் கலந்திருக்கின்றன.இணைந்து செயலாற்றுகின்றன.
“உடல் நூலும், உடலியக்க நூலும் உடல் நிமிர்ந்த தோரணை, சீரான சிறப்பியக்கச் சக்தியின் செயல் பாடுகள், தசைத்திறன்கள், அவற்றின் விசைச் சக்திகள், இரத்த ஒட்டம், சுவாசம், ஜீரணம் போன்றவற்றை நன்கு விளக்கிக் கூறுகின்றன. அவற்றின் மேம்பாட்டுக்குத்தான் உடற்பயிற்சிகள் உத்வேகம் ஊட்டுகின்றன. ஆகவே உடற்கல்வியின் உன்னத கொள்கைகளின், சிறப்புபற்றி,நாம் நன்கு அறிந்து கொள்ளமுடிகிறது.
3. உயிரியல் (Biology)
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற உயிர்வாழ் இனங்களைப்பற்றி விவரமாகக் கூறும் நூல் இது.
உயிர்கள் யாவும் பரிணாம வளர்ச்சியின் (Evolution) மூலமாகவே இத்தகைய நிலைகள் அமைந்துள்ளன என்று விளக்குவதால், இந்த நூல் உடற்கல்வியுடன் ஒத்துப் போகிறது.நிறையவே உதவுகிறது.
பரிணாம வளர்ச்சியால்தான் மனிதன் பக்குவமான தேகத்தைப் பெற்றிருக்கிறான் என்றால், அவனது எதிர்கால நல்ல வளர்ச்சியைப் பற்றியும் உடற்கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும்.
ஆக, எந்தெந்த செயல்களில் மனிதரை ஈடுபடுத்தினால், நல்ல வளர்ச்சியையும், சிறந்த எதிர்கால எழுச்சியையும் பெறமுடியும் என்பதில் கவனம் கொண்டு திட்டங்களை தீட்டவேண்டும்.
ஆதிமனிதர் நடந்து, ஒடிதுள்ளித்தாண்டி எறிந்து மரம் ஏறி, நீந்தி என்பனபோன்ற செயல்களில் ஈடுபட்டுத் தான் தங்கள் உணவுகளைத் தேடிக்கொண்டனர். பாதுகாப்புடன் வாழ்ந்துகொண்டனர்.
அப்படிப்பட்ட ஆதாரமாய் அமைந்து, அடிப்படை இயக்கங்களை இன்னும் செழுமையாக்கி, மனிதர்களை சிறப்பான வாழ்வு வாழத்தான் உடற்கல்வியின் கொள்கைகள் திட்டங்களைத்தீட்டி செயல்படுத்துகின்றன. மிருகங்களைப்போல அல்லாமல், உடல் இயக்கத்தில் நல்ல சமநிலையான இயக்கத்தை உண்டுபண்ணி மனிதர்களை மகாநிலையில் வைத்துக்காத்து வாழ்விக்க, உடற்கல்விக் கொள்கைகள் உதவுகின்றன.
4. உளவியல் (Psychology)
தனிப்பட்ட மனிதர் ஒருவரின் உடல் மற்றும் சமூக அமைப்பைச் சேர்ந்த செயல் முறைகளில், எவ்வாறு சிந்தனையுடன் செயல்படுவது என்று விளக்கமாக விவரிப்பது உளவியலாகின்றது.
மனிதரின் இயற்கையான சுபாவம், அவரது நடத்தை பற்றி விளக்கிக் கூறுவது உளவியலாகும்.
குழந்தைகளின் உளப்பாங்கை அறிந்து கொண்டு ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும் என்பது உளவியல் கொள்கையாகும்.
நவீன உளவியலானது அனுபவங்களின் இயல்பு; கற்றல் விதிகள், மனிதத் தேவைகள், உற்சாகம் ஊட்டும் முறைகள், தனிப்பட்டவர்களின் ஒற்றுமை வேற்றுமைகள், உணர்வுகள், பயிற்சிகளில் பரிமாற்றம் செய்து கொள்ளும் முறைகள் போன்றவற்றில் புதிய புதிய உத்திகளை உருவாக்கியிருக்கின்றது.
தனிப்பட்டமனிதர்களின் இயல்பையும், அவர்களுக்குரிய தேவைகளையும் ஆராய்ந்தே, உடற்கல்வியும் செயல்முறைத் திட்டங்களை வகுக்கிறது.
உடற்கல்வியானது மனிதர்களைத் தகுதியுள்ளவர்களாக, தன்மையுள்ள மனிதர்களாக, சேவை மனப்பான்மை கொண்ட பயனுள்ள மக்களாக மாற்றிடஎல்லா வகையான நோக்கங்களையும், முறைகளையும், தத்துவங்களையும் ஆராய்ந்து சிறந்த வழிகளை வகுத்தளிக்கிறது.
அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான பெருந்தசைச் செயல்கள் மூலமாக, மக்களிடையே விளையாட்டுப் பெருந்தன்மைகளை வளர்த்து, நீதி, நேர்மை, நாணயம் ஒழுங்கான ஆட்டம், வீரம், நம்பிக்கைக்குரியவராக வாழ்தல், கீழ்படிதல், பணிவுடமை போன்ற அற்புத குணங்களையும் உடையவர்களாக மாற்ற முயல்கிறது.
உளவியல் மூலமாக உடற்கல்வி செயலாற்றுகிறது என்பதை ஸ்காட் (Scot) என்ற அறிஞர் 7 தலைப்புகளில் பிரித்துக் காட்டுகிறார். அவற்றையும் அறிந்து கொள்வோம்.
- 1. உடற்கல்வி மூலமாக மனிதரின் நடை முறைப் போக்கு (Attitude) மாறுகிறது.
- 2. சமூகத்தில் சமர்த்தாக நடந்து கொள்ளும் சாமர்த்தியம் அதிகமாகிறது.
- 3. ஐம்புலன்களின் செயலாற்றல் விருத்தி யடைகிறது. அதாவது காண்பதில், கேட்பதில், விரைவாக செயல்படுவதில் ஆற்றல் மிகுதியாகிறது.
- 4. நலமான உடல், அமைதியான மனம் பெற உதவுகிறது. நல்ல சலனமற்ற மனம். உடல் சக்தியை அதிகப்படுத்துவதுடன், விளையாடுவதற்கேற்ற விருப்பத்தையும், மனோகரமான மனப்பாங்கையும் அளிக்கிறது.
- 5. உழைத்த நேரம்போக மேற்கொள்கின்ற ஓய்வும் சரியாக அமைகின்றது. தசை விறைப்பு, தசைபடபடப்பு, மன பதைபதைப்பு போன்றவற்றிலிருந்து எளிதாக விடுபட்டு இதமாக நேரத்தைக் கழிக்கும் இனிமையான சூழ்நிலையைப் பெற்றிட உடற்கல்வி உதவுகிறது.
- 6. உடல் மற்றும் மன வேதனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
- 7. ஒருவரின் திறமைகள் தேர்ச்சி பெறுகின்றன.
5. சமூகவியல் (Sociology)
மனிதர்களைப் பற்றியும், அவர்கள் கூடி வாழும் முறைகள் மற்றும் அவர்களது குழு நடவடிக்கைகள் பற்றியும், கூறுவது சமூக இயலாகும்.
மனிதனை ஒரு சமூக மிருகம் என்றும் கூறுவார்கள் கூடி வாழும் சமூக வாழ்க்கை முறையிலிருந்து மனிதன் பிரிந்து தனித்து வாழ முடியாது என்பதுதான் சமூகவியல் கூறும் உண்மையாகும்.
தனிப்பட்ட மனிதர்களை, ஒரு சமூக அமைப்பும், சமூகக் கலாச்சார நினைப்பும், மத சக்தியும் மாற்றி அமைக்கக் கூடிய வலிமையைப் பெற்றிருக்கின்றன இதுவே சமூகவியல் சரித்திரத்தின் உண்மையான கூற்றாகும்.
உடற்கல்வியாளர்கள் மேலே கூறிய கருத்துக்களை உன்னிப்பாகக் கருதல் வேண்டும். அப்படி நடந்து கொள்ளும் பொழுதுதான் ஒரு சமூக ஒழுங்கையும் சமதர்ம அமைப்பையும் உருவாக்க முடியும்.
சமூகவியலின் கொள்கையாவது, தனிப்பட்ட மனிதர்களை எப்படி சமுதாயத்துடன் ஒத்துத் திறம்பட இயங்கச் செய்வது என்பதுதான், அப்படிப்பட்ட நோக்கத்திற்கு உதவுவன - கூட்டுறவு, ஒற்றுமை, பேதமற்ற பகிர்வு; அன்பு; கூடி வாழ்தல்; போன்ற குணங்களாகும்.
உடற் கல்வி மனிதர்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் பொழுது, மேலே காணும் நோக்கங்கள் யாவற்றையும் எளிதாகக் கற்றுக் கொள்ளச் செய்து விடுகிறது.
சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மன திருப்தியுறும் வாழ்க்கை முறைக்கும். உடலியக்க செயல்கள் சிறந்த உத்வேகத்தை அளிக்கின்றன.
மனிதர்களை ஒன்று சேர்க்கும் முயற்சிகளில் மட்டுமல்ல; ஒருவரை ஒருவர் உணர்ந்து கொள்ள வைப்பது, நட்பு கொள்ளச் செய்வது மற்றவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வது, மற்றவர்கள் நலத்திற்காகச் சேவை செய்வது, தியாகம் புரிவது போன்ற குணங்களை வளர்க்கும் முயற்சியில் உடற்கல்வி ஈடுபட்டு வெற்றி பெற்று வருகிறது.
விளையாடும் சந்தர்ப்பங்களில் நிறைய கற்றுக் கொள்ள நேரிடுகிறது என்பதுடன், உடற்கல்வி மேலும் தருகின்ற சந்தர்ப்பங்களாக மாணவர் சாரணர் இயக்கம்,
நாட்டுப்புற நாட்டியங்கள், முகாம் வாழ்க்கை போன்றவைகளும் நல்ல பலன் அளிக்கின்றன.
உண்மையான சுதந்திர குடிமக்களாக மட்டுமன்றி, குடியரசு நாட்டின் கொள்கைப் பற்றுள்ள குடிமக்களாக வாழவும் உடற் கல்வி வழிகாட்டுகிறது.
5. உடல் இயக்கவியல் (Kinesiology)
உடல் இயக்கவியல் என்பது மனித உடல் பெறும் இயக்கத்தை ஆய்ந்து, அறிந்து கொள்ள உதவுவதாகும்.
இந்த மனித உடல் இயக்கவியல், நம் உடற்கல்விக் கொள்கைகளின் அடிப்படை ஆதாரமாகும். உடற் பயிற்சிக்கும், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவும் உதவக் கூடிய வகையில், இவ்வியல் விளக்கம் கூறி வழி காட்டுகிறது.
அவ்வாறு உடல் உறுப்புக்களின் இயக்கத்தை சரியாக அறிந்து கொள்வதன் மூலம், தெளிவாக இயங்கவும், திறமையுடன் இயக்கவும் கூடிய வல்லமையை வளர்த்துக் கொள்ளமுடிகிறது.
இவ் விளக்கவியலின் மூலம் பெறக் கூடிய நன்மைகள் இரண்டு.
- 1. உடலையும், உடல் உறுப்புக்களையும் ஒரு சீராக இயக்கவும், தேவையற்ற முறையில் இயக்காமலும் சரியாக இயக்க முடிகிற போது, எப்படி உடல் சக்தியை அதிகம் செலவழிக்காமல், பத்திரமாக, சிக்கனமாக சேகரிக்க முடிகிறது என்பது முதல் நன்மை.
- 2. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க எவ்வளவு சக்தியை செலவழிக்கலாம்:- அதையும் எப்படி சிக்கனமாக, புத்திசாலித்தனமாக, சாமர்த்திய மாக செலவழிக்கலாம் என்பதைக் கற்றுக கொள்வது இரண்டாவது நன்மை.
ஆக, உடல் இயக்கவியலான இவ்வறிவியல், நமது உடல் உறுப்புக்களின் உண்மையான அமைப்பையும் ஆற்றலையும் அறிந்து கொண்டு அவற்றை சுய இயக்கச் சக்திகளில் (Motor functioning) எப்படி திறமையாக இயக்கலாம் என்பதைக் கசடறக் கற்றுத்தர முயல்கிறது.
உடற்கல்விக்கு இவ்வியலின் அவசியம் எவ்வளவு முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பது புரிகிறதல்லவா!
7. இயல்பியல் (Physics)
இயற்கையின் இயல்பான ஆற்றலை விளக்கிக் கூறும் இயல் இது.
இயற்கையின் முக்கியமான மூன்று நிலையைக் கூறும் பாேது,இயக்கம் (Motion): சமநிலை (Equilibrium); சக்தி (Force) என்று கூறுவார்கள்.
அதுபோலவே மனித இயக்கத்தினை மூன்று பிரிவாகக் கூறும் போது, தசை விரிவாக்கம் (Muscle Contraction) புவியீர்ப்புச் சக்தி (Gravitational Attraction); வெளிப்புற சமாளிப்பு (External Application)என்று விளக்குவார்கள்.
விளையாட்டுக்களிலும் ஒட்டப் பந்தயங்களிலும் இயங்கக் கூடிய மனித சக்திக்குரிய இலக்குகள் அதிக துரம் ஒடுதல், அதிக தூரம் தாண்டுதல், அதிக தூரம் எறிதல் என்பவையாகும்.
இதற்குத்தான் முன்னேறும் இயக்கமும், சமநிலையும் சக்தியும் வேண்டுமென்று முதலில் கூறினோம்.
அதிவேகமாக உடலை இயக்கும் போது, உடல் சமநிலை இழந்து போகிறது. அத்துடன் சக்தியும் சேர்ந்து கொள்ளும்போது, உடல் விழாமல், அதே நேரத்தில் சக்தியுடன் கூடிய விரைவான இயக்கத்தை மேற்கொள்வதைத்தான் திறன் (Skill) என்று அழைக்கிறோம்.
ஆக, இயல்பியல் கூறும் இயற்கை விதிகள் யாவும் உடற்கல்விக்குப் பொருந்திவருவதை நாம் காணலாம்.
எனவே, உடற்கல்வி, எல்லாவகையான விஞ்ஞானங்களின் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் ஏற்று, உள்ளடக்கிக் கொண்டு, ஓர் ஒப்பற்ற உலகம் போற்றும் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு, மனித இனத்தை மேன்மையுறக் காத்துக் கொண்டு வருகிறது என்ற உண்மையை நாம் இங்கே புரிந்து கொள்கிறோம்.
இனி, உடற்கல்வியின் தத்துவங்கள் பற்றிய தனிச் சிறப்பினை அடுத்து வரும் பகுதியில் அறிந்து கொள்வோம்.