உமார் கயாம்/முக்காட்டுச் சிறைக்குள்ளே மூடி வைத்த கட்டழகி!

3. முக்காட்டுச் சிறைக்குள்ளே மூடி வைத்த கட்டழகி!

பள்ளி வாசலிலிருந்து புறப்பட்ட வீதியின் மறுகோடியிலே ஒரு பூங்காவனம் இருந்தது. அதில் திராட்சைக் கொடிகள் அடர்ந்து, படர்ந்து கூடாரம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நல்ல நிழல், கொஞ்ச தூரத்தில் வீதி திரும்பும் இடத்திலே ஒரு பெரிய மரமும், நீருற்று ஒன்றும் இருந்தன. இந்த நீர் ஊற்றிலேதான், நிஜாப்பூர் பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். வரும்பொழுது அந்த மரத்தடி நிழலிலே குளு குளுவென்று வீசும் காற்றிலே உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவதும் உண்டு. உமார் இங்கேதான் கால், முகம் கழுவுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் வருவது வழக்கம்.

ஒருநாள் யாஸ்மியின் தாயார் அவளைத் தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்படி அங்கே அனுப்பினாள். ஜாடியில் தண்ணீர் மொண்டு கொண்டு அதைத் தலையிலே தூக்கி வைப்பதற்காக யாஸ்மி முயற்சித்துக் கொண்டிருக்கும் போது உமார் தண்ணீர் குடிப்பதற்காக வந்து சேர்ந்தான். வழக்கத்திற்கு மாறாக அவன் கையில் எந்தவிதமான புத்தகமும் இல்லை. அவன் கூட யாரும் நண்பர்களும் இல்லை. தன்னந்தனியாக வந்திருந்தான்.

தண்ணீர் குடித்தவுடன் உமார் போய் விடுவானோ என்று நினைத்த யாஸ்மி அவனிடம் பேச்சுக்கொடுக்கத் தொடங்கினான்.

“விதண்டாவாதம் பேசுகிறவன் என்று உன்னைப்பற்றி அப்பா சொன்னார். நீ ஏன் இப்படிக் கெட்டுப் போகிறாய்?” என்று யாஸ்மி கேட்டாள்.

திடீரென்று பேசக் கற்றுக் கொண்ட பச்சைக் கிளியொன்றைப் பார்ப்பது போல் உமார் அவளைப் பார்த்தான். யாஸ்மி மேலும் பேசத் தொடங்கினாள். அவனைத் திருத்தி நல்லவழிக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ‘எதற்காக விதண்டாவாதம் பேசி பள்ளிக்கூட ஆசிரியர்களைக் கேலி செய்து கெட்டபெயர் எடுக்க வேண்டும்? பிறரோடு இனிமையாகப் பேசி நல்லவன் என்று பெயரெடுக்கக் கூடாதோ?’ என்று கேட்டுவிட்டு, “உன் வயதென்ன? பள்ளிக் கூடத்தில் படிக்காதபோதும் ரஹீமுடன் சுற்றாமல் இருக்கும்போதும், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டாள்.

“எனக்குப் பதினேழு வயதாகிறது. என் தந்தை கூடாரமடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர். சில சமயம் நான் அவருடைய கடைக்குச் செல்வேன். இப்பொழுது அவர் இறந்துவிட்டார், ரஹீம்தான் துணையாக இருக்கிறான்”, என்று உமார் சொன்னான்.

ஒரு பாறையின் மீது போய் உட்கார்ந்து கொண்டு யாஸ்மி அவனையும் அதில் வந்து உட்காரச் சொன்னாள்.

வேலையே ஒன்றும் பார்க்கவேண்டியதில்லாத நேரத்திலே நீ என்ன செய்வாய்? என்ன செய்ய விரும்புவாய்?” என்று கேட்டாள். அவன் தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணித்தான், அவள் அவ்வாறு கேட்டாள். அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டு உமார் சொன்னான் “ஓர் ஆராய்ச்சிகூடம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்றான். அது என்னவோ யாஸ்மிக்குப் புரியாத விஷயமாக இருந்தது, அப்புறம்...? என்றாள்.

“நட்சத்திர வட்டம் காட்டும்கோளம், டோலமி என்பவருடைய நட்சத்திரக் கணிதம் இதெல்லாம் வேண்டும்”: என்றான் உமார். ஆராய்ச்சிக்கூடம் என்றால் இன்னும் என்னென்ன வேண்டுமோ? தன்னுடைய இன்பக் கனவு போல, உமாருக்கும். ஏதோ இலட்சியக் கனவு இருக்கிறது என்பதை மட்டும் யாஸ்மி உணர்ந்து கொண்டாள். தான் எப்படி அமீரின் அரண்மனையிலே, வெள்ளிய அன்னம் மிதக்கும் தெள்ளிய நீர்த்தடாகங்களை உள்ளத்திலே எண்ணியிருந்தாளோ அதுபோல உமாரும் ஏதோ ஒரு இலட்சியத்துடன்தான் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. “தெரியும் தெரியும். நட்சத்திரங்களைக் கணக்கிட்டு விதியையறிந்து சொல்லுகிற சிதி அகமது போல நீயும் ஒரு சோதிடனாக விரும்புகிறாய். அதுதானே!” என்று யாஸ்மி கேட்டாள்.

சிதி அகமது என்பவன் பெரிய சோதிடப்புலி என்று பெரிய பெண்கள் பேசிக் கொள்வதை யாஸ்மி கேள்விப்பட்டிருந்தாள். “ஜாதகக் கட்டத்தைப் போட்டு வைத்துக் கொண்டு அர்த்தமில்லாமல் முனு முணுத்து அசைபோடும் கழுதை போன்ற அந்த முடர்களின் தலைவன் சிதி அகமது அவனைப் போல் நான் ஏன் ஆகவேண்டும்?” என்று ஆத்திரமாகப் பேசினான் உமார்.

அவனுக்கு சிதி அகமதின் பெயரும் பிடிக்கவில்லை; சோதிடத்தில் நம்பிக்கையும் இல்லை என்பதை யாஸ்மி புரிந்து கொண்டாள். ஆனால் உமார் என்ன செய்ய எண்ணுகிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை, காலத்தையும் நேரத்தையும் அளந்து கணக்கிடப் போகிறானாம்; கதிரவன் உதித்தால் காலை தோன்றுகிறது ஐந்து வேளைத் தொழுகையும் முடிந்து ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டால், இரவு வந்து விடுகிறது. மாதங்களைக் கணக்கிட நிலவு இருக்கிறது. வளர்பிறை, தேய்பிறை இரண்டும் சேர்ந்தால் ஒரு மாதம். இதுதான் கால அளவைப்பற்றி யாஸ்மி கண்டு வைத்திருந்த முடிவு.

ஆனால், உமாருக்கு மாதங்களைக் கணக்கிடும் பிறைக் கணக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஓர் ஆண்டில் பல மணி நேரங்கள் விடுபட்டுப் போகின்றன. ஏன் அப்படிப் பல மணிகளை நாம் இழக்க வேண்டும்? நிலவு ஒழுங்காக மணி காண்பிக்காவிட்டால், அதை விட்டு விட்டு வேறு வழி தேடக்கூடாதா என்ன? சரியான ஆண்டுக்கணக்கையுண்டாக்க வேண்டும் என்பது உமாரின் இலட்சியமாக இருந்தது.

யாஸ்மி அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டினாள். அவள் உள்ளத்தின் உள்ளே ஓர் கற்பனைகனவு உருவாகிக் கொண்டிருந்தது. உமார் ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால், யாஸ்மியிடம் தன் அன்பைச் செலுத்துவானேயானால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவனுடைய கூடம் முழுவதும் கூட்டிப்பெருக்கி, எல்லாச் சாமான்களையும் தூசி துடைத்து ஒழுங்காக வைத்து அவனுடைய ஆடைகளைத் துவைத்துக் காயப்போட்டு அவனுடைய கால் மிதியடிகளின் மேல் பகுதியில் பூ வேலை செய்து - ஆகா; அன்று முதலே அவனுக்கு அவளால் என்னென்ன உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டு, அவன் கூடவே அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து விடுவாள். இருவரும் ஒன்றாக இருப்பதைப் போல் இன்பமான வாழ்வு வேறு எதுவும் உண்டா? அவளுடைய பெண் உள்ளத்திலே வேறு எவ்விதமான கனவுதான் தோன்ற முடியும்? நெஞ்சில் நிறைந்த அன்பனை நீங்காமல் சேர்ந்திருப்பதுதானே எந்தப் பெண்ணும், எதிர்பார்க்கும் இன்பமாக இருக்கிறது! அவளுக்கு வீட்டுக்குப் போக வேண்டுமே என்ற எண்ணம் தோன்றவேயில்லை. அப்படியே உமாரின் அருகிலேயேயிருந்து, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவன் அங்க அசைவுகளையும், முக பாவத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களையும் பார்த்துக் கொண்டேயிருந்து விடலாம் போலிருந்தது. அவனைப் பிரிந்து அவளால் வாழ முடியுமா என்ற ஐயமே யாஸ்மியின் உள்ளத்தில் உருவாகிவிட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்திலே அந்த உமார் இல்லாத உலகம் வெறும் வெட்ட வெளியாய் பாலைவனமாய் வேண்டாத வெயிலாய் ஒன்றும் இல்லாத தன்மையாய்த் தோன்றியது. உமாருடன் இருப்பதைத் தவிர வேறு எதிலும் வாழ்வோ, இன்பமோ இல்லையென்று தோன்றியது. அவனுக்குச் சற்று நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். தான் சூடுவதற்காக யாஸ்மி பறித்து வைத்திருந்த ஒரு ரோஜாப்பூவை எடுத்து நீட்டி, “இது உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

உமார், அதை வாங்கி நுகர்ந்து பார்த்துவிட்டு, “இது உன்னுடையதல்லவா? நீயே வைத்துக் கொள்” என்றான்.

“இல்லை, அதை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். நீ அதை வைத்துக் கொள்கிறாயா?” என்று யாஸ்மி கேட்டாள். ஒருமுறை அவளுடைய அக்காள் தன்வீட்டு மாடியிலிருந்து ரோஜாப் பூவைக் கீழே போட்டாள். அவளை காதலித்த பாக்தாது நகரத்து இளைஞன் ஒருவன் அதை வாங்கித்தன் நெஞ்சில் பொருத்திக் கொண்டாள். அதுபோல உமாரும் செய்வானென்று யாஸ்மி எதிர்பார்த்தாள். ஆனால் உமாரின் மனமோ, பிறைக் கணக்கு மாதத்தைப் பற்றியும், பற்பல விஷயங்களைப் பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. கையிலிருந்த ரோஜாவை நோக்கிக் கொண்டிருந்த கண்களிலே அதன் உருவம் தெரியவில்லை, வேறு எவை எவையோ தோன்றி மறைந்து கொண்டிருந்தன. எங்கோ போய்க் கொண்டிருந்த உமாரின் உள்ளத்தை யாஸ்மி இந்த உலகத்திற்கு இழுத்து வந்தாள். அவன் அமைக்கப் போகும் ஆராய்ச்சிக்கூடம் ஏதோ பெரிய கோட்டைக் கோபுரத்தைப் போன்றது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

“நீ ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றாள் யாஸ்மி.

உமார் புன்சிரிப்புடன் “யாஸ்மி உனக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டான்.

“கிட்டத்தட்டப் பதின்மூன்றாகிறது” என்று யாஸ்மி மெல்லியகுரலில் சொன்னாள். பதின்மூன்று வயதாகிவிட்டால் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளத் தகுதியுடையவளாகி விடுவாள் என்று தன் தாயும் மற்ற பெண் மணிகளும் பேசிக் கொண்டது அவள் நினைவுக்கு வந்தது.

உனக்குப் பதின்மூன்று வயது நிறையும் பொழுது உனக்கு நான் நிறைய ரோஜாப் பூக்கள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, உமார் எழுந்து நடந்து விட்டான். அப்படி நடந்து போகும்போது அந்தச் சிறுமியிடம் எப்படி நான் இந்த மாதிரிச் சொல்லி விட்டேன் என்று நினைத்துக் கொண்டான். வயது வந்த பெண்ணிடம் சொல்ல வேண்டிய சொற்களை அவளிடம் சொல்ல நேர்ந்துவிட்டதே என்று அபாசப்பட்டான்.

ஆனால், யாஸ்மி அசையாத சிலைபோல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தாள். அவள் கண்களிலே ஆர்வஒளி நடமாடியது. அவள் உடலெங்கும் ஏதோ ஒரு இன்ப உணர்வு பரவியது. தன்னை மறந்து இவ்வளவு நேரமும் அசைவற்றிருந்த அவள் காதுகளில் கழுதைகளின் மணியோசை விழுந்தது. தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் உருவங்கள் தெரியத் தொடங்கின. இருந்தும், அவளுடைய இன்ப எண்ணங்கள் மாறுதலடையாமலே இருந்தன. “நீருற்றின் அருகிலேயே நேரத்தைக் கழிக்கிறாயே?” என்று சில பெண்கள் வந்து சுட்டிப் பேசியதும்தான் அவளுக்கு வீட்டு நினைப்பு வந்தது.

சிறிது நேரம் சென்றதும், யாஸ்மி ஏற்கெனவே ரோஜாப்பூப் பறித்த இடத்திற்குச் சென்று, மற்றொரு பூவைப் பறித்துக் கொண்டு தன்னுடைய பூனைக்குட்டியையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய படுக்கைக்குச் சென்றாள். “நீரூற்றுக்குப் பக்கத்திலே நேற்று முழுவதும் மீசை முளைக்காத ஒரு பையனோடு திரிந்து கொண்டிருந்தாள் உன்னுடைய யாஸ்மி! இனி அவளைவிட்டு வைக்கக்கூடாது. முக்காடு போட்டு முலையில் கிடத்த வேண்டியதுதான்!” என்று தன் வீட்டுப் பெண்மணிகளில் ஒருத்தி தன் தாயிடம் சொல்வதைக் கவனித்தாள் யாஸ்மி.

“இனிமேல், அவளைக் கடைக்கும் அனுப்பக் கூடாது!” என்று தாயார் சொன்னாள்.

யாஸ்மி ஒன்றும் பேசவில்லை. இது எதிர்பார்த்ததுதான் திருமணம் செய்யத் தகுந்தவள் என்பதற்கு அடையாளமாக முக்காடு தரப்போகிறார்கள் என்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. இனிமேல் யாரும் தன்னை அலட்சியப் படுத்த மாட்டார்கள் அல்லவா?

ஆனால், அவள் உமாரைப் பார்க்க முடியாதே! ஏன் பார்க்க முடியாது? எப்படியாவது பார்க்கத்தான் வேண்டும். நான்கு சுவர்களும் பலகணித் திரைகளுமா அன்பைத் தடுத்து நிறுத்திவிடும்? எப்படியும் உமாரைப் பார்ப்பேன், என்று யாஸ்மி உறுதி கொண்டாள்.

ஆனால், உமார் ஊரைவிட்டே போய்விட்டான்!