உமார் கயாம்/அறியாமல் சொன்ன ஆபத்தான சோதிடம்!
நிஜாப்பூருக்கு மேற்கே, கொராசான் பாதையில் ஓர் ஒட்டகச்சாரி போய்க் கொண்டிருந்தது. குதிரைப் படையொன்று அதைத் தொடர்ந்தது, நெடுந்துரப் பயணத்திற்குப் பிறகு, அவ்வழியில் மலைப்பாங்கான இடத்தில் உள்ள சத்திரம் ஒன்றில் அதன் பிரயாணிகள் தங்கினார்கள். முதல்நாள் இரவு, அங்கே யாரும் தூங்கவும் முடியவில்லை.
திறந்த வெளியில், முட்செடிகளின் சுப்பிகள் எரிந்து கொண்டிருந்தன. ஒட்டகங்கள் ஒருபுறம் அசைபோட்டுக் கொண்டிருந்தன. குதிரைகள் ஒருபுறம் புல்மேய்ந்து கொண்டிருந்தன. படையாட்கள் சோற்றுப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, கடைசிப் பருக்கையைக் கூட விடாமல் வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களைச் சுற்றி ஒரே பிச்சைக்காரக் கும்பல். அத்தனை பேருக்கும் இல்லையென்று சொல்லாமல், செப்புக் காசுகளையும், காய்ந்த பழங்களையும் பிச்சையோடுகளிலே போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் போகும் பயணம் சாதாரணமானதல்ல. ஆபத்து நிறைந்த இடம் நோக்கிப் போகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து, வெற்றி தோல்வி பார்க்க வேண்டிய போர்க் களம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் விதி நல்லமுடிவாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலே தருமம் கொடுக்கச் சளைக்காதவர்களாக இருந்தார்கள். போர் அணியிலே கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டு வரும் வீரர்கள், கூட்டம் கூட்டமாகத் தினந்தோறும் வந்து கொண்டிருப்பதால், சத்திரக்காரனுக்கு நல்ல வரும்படி! பணத்தை மறைமுகமாக எண்ணி எண் பெட்டிக்குள்ளே போட்டுக் கொண்டிருந்தான் அவன். வீரர்கள் அடிக்கடி, தண்ணிர் கேட்டார்கள். இருந்த தண்ணீர் எல்லாம் தீர்ந்து போய்விட்டது, நான் என்ன மூசாநபியா நினைத்ததும், தண்ணிரைக் கொண்டுவர? என்று சத்திரக்காரன் கத்திக் கொண்டிருந்தான். தோலாடைகளை விரித்துப் படுக்கைகளைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தனர் சிலர். கணப்புகளை எரித்து மலைக்காற்றின் குளிர்ச்சியைத் தடுப்பதற்காக அதைச் சுற்றி இருந்தார்கள் பலர். கொரசானியர்களும் அரேபியர்களும் பாரசீகர்களும் கணப்புகளைச் சுற்றி இருக்கும்போது அந்த நெருப்பின் ஒளியிலே தாடி நிறைந்த முகங்கள் மின்னி ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. துருக்கியர்கள்தான் அந்தக் குளிர்க்காற்றைத் தாங்கும் வலுவுடையவர்களாக இருந்தார்கள். போரும் அலைச்சலும் அவர்களுக்குப் புதிதல்ல.
இப்படிப்பட்ட போர்மறவர் கூட்டத்திலே, நிஜாப்பூர் நிலச் சுவான்தார் புதல்வன் ரஹீம் சேடாவும் இருந்தான். அவன் தனக்கெனத் தனியே ஒரு கணப்புடன் தோல் அடைப்புடன் கூடிய கதகதப்பான அறையொன்றில் இருந்தான்.
நிஜாப்பூரில் ஒருநாள் இரவு, அவன் தன் அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, திராட்சை மது, குடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அந்த ஆர்வமான போரழைப்பு கூக்குரல் கேட்டது. அந்தக்குரல் போரழைப்பாக மட்டுமில்லை; எச்சரிப்பாகவும் இருந்தது. ரஹீம் சாதாரணமாக கேளிக்கைகளில் விருப்பங் கொண்டவன். மற்ற விஷயங்களில் அவன் விருப்புக் காட்டுவதே கிடையாது. ஆனால் இந்தப் போரழைப்பில் கலந்திருந்த ஏதோ ஒரு சக்தி அவனையும் இந்தப் போரில் கலந்து கொள்ளும்படி தூண்டியது. தூரமேற்குப் பிரதேசத்திலே, சுல்தான் ஆல்ப் அர்சலான் நடத்தப்போகும், அந்தப் போரிலே, மதவிரோதிகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அவன் கிளம்பி வந்திருந்தான். அவனுடன் அவனுடைய உயிர்த் தோழன், உமார் கூட வந்திருந்தான். ரஹீம், இரானிய பரம்பரையிலே வந்த பாரசீகப் பெருங்குடியைச் சேர்ந்தவன். அவன் குடிமரபு கிரேக்கர்கள் மரபினும் பழமையானது.
அவனிடம் குற்றமற்ற தன்மைகளும், நற்குணங்களும் நிறைந்திருந்தன. இருந்தாலும் இனிப்புக் கலந்த மதுவிலே விருப்பமுடையவன். சிறுவயதில் போலோ முதலிய விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும், பின்னால் அவன் விளையாட்டுக்களை அதிகமாக விரும்பவில்லை. அவனுக்குப் போர் கூட ஏதோ மான்களை வேட்டையாடுவது போலத் தான் தோன்றியது, கூட இருந்த ஒருவன், குளிர்தாங்க முடியவில்லையே என்று கூறினான். ரஹீமுக்கும் குளிராகத்தான் இருந்தது. கொட்டாவி வந்தது. ஆனால், அவனால் அமைதியாகத் தூங்கமுடியவில்லை. தோல்படுக்கைகளின் ஊடே, மூட்டைபூச்சிகள் வேறு புகுந்து கொண்டு அவனுக்குத் தொல்லை கொடுத்தன. சத்திரக்காரன் அவன் எதிரே வந்து நின்று கொண்டு போகாமல் அங்கேயே நின்றான்.
பேச்சுக் கொடுத்த பிறகுதான் அவன் அங்கேயே நின்று கொண்டிருப்பதன் காரணம் புரிந்தது. சத்திரத்துக்குப் பின்னாலேயுள்ள வீட்டில் சில பெண் பிரயாணிகள் வந்து தங்கியிருக்கிறார்களாம். அவர்களில் சில பெண்கள் பாக்தாதிலிருந்து வந்தவர்களாம், அழகிகளாம். இரவுப் பொழுதைச் சுவையாக்கும் பயிற்சி பெற்றவர்களாம். ரஹீம் இரவை இன்பமாகக் கழிக்க விரும்பினால் ஏற்பாடு செய்ய அவன் ஆயத்தமாக இருக்கிறானாம். இதுதான் விடுதிக்காரன் கூறிய செய்தி. ரஹீம் இந்த மாதிரி விஷயங்களில் பின்வாங்குவது கிடையாது. உடனே எழுந்து அங்குள்ள வேலைக்காரர்களை நோக்கி, உமார் வந்தால் தான் சில நண்பர்களைக் கண்டு பேசச் சென்றிருப்பதாகச் சொல்லும்படி கூறிவிட்டுக் சத்திரக்காரனைத் தொடர்ந்து சென்றான். கூட இருந்த சிப்பாய்கள் ரஹீமைப் பொறாமைக் கண்களோடு பார்த்தார்கள். சாதாரண மனிதர்களாகிய அவர்கள் இந்த மாதிரியான இன்பத்தை இந்தச் சமயத்தில் அனுபவிப்பதென்பது இயலாது. ரஹீம் போன்ற செல்வந்தர்கள் தான் நினைத்ததைச் செய்யமுடியும். அல்லா அருள் புரிந்தால், சண்டையிலே வெற்றி பெற்றுத் திரும்பும்போது, மதவிரோதிகளின் பெண்களை அடிமைகளாகப் பிடித்துவரும் நேரத்திலே ஒவ்வொரு சாதாரணச் சிப்பாயும் கூட ஆளுக்கு ஒன்றிரண்டு பெண்களோடு மகிழலாம். ரஹீம் போன திசையைப் பார்த்து ஏங்கிவிட்டுக் கணப்பிலே கதகதப்பேற்றிக் கொண்டு சிப்பாய்கள் தூங்கத் தொடங்கினார்கள்.
ரஹீம், அலுத்துச்சலித்துப் போய் நெடுநேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தான். என்னவோ அவனுக்கு நாடிப்போன இடத்தில் இன்பம் இல்லை போலிருக்கிறது. சத்திரக்காரனைத் திட்டிக் கொண்டே வந்தான், படுக்கையில் இருந்த உமார் எழுந்து நின்று கணப்புத் தீயை அதிகமாக விசிறிவிட்டுத் தன் உயிர்த்தோழனுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தான். எங்கே போயிருந்தாய் என்று கேட்ட உமாருக்குப் பதில் சொல்லாமல் சத்திரக்காரனைக் கண்டபடி திட்டிக் கொண்டே அருகில் உட்கார்ந்த ரஹீம், “நீ எங்கே போயிருந்தாய்?” என்று உமாரைத் திருப்பிக் கேட்டான்.
உமார், சண்டைக் களத்திற்கே புதியவன். ஆனால் பாலைவனப் பிரதேசங்களிலே அலைந்து திரிந்து அனுபவப்பட்டவன். அதிலும் அந்தக் கொரசான் வீதி நெடுகிலும் அந்தச் சமயம் கலகலப்பாக இருந்தது. ஆங்காங்கே நடந்துவரும் படைகளும் வழிச் சத்திரங்களில் தங்கியிருக்கும் வீரர்களும், போரிலே பங்கு கொள்ளத் தேசத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து கூடாரமடித்துக் கொண்டிருக்கும் இளவரசர்களும் இப்படியாக அந்தப் பாதை நெடுகிலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. உமாருக்கு எல்லா விஷயங்களிலும் ஆர்வமாயிருந்தது. பலப்பல பகுதிப் படைகள் தங்கியிருக்கும் இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் விசாரிப்பதும், பேசிக் கொண்டிருப்பதும், அவர்கள் கொண்டு வந்திருக்கும் சாமான்களைப் பார்வையிடுவதுமாக அவன் திரிந்தான். ஓர் ஆற்றைக் கடந்து செல்லும் போது உமார் கண்ட அதிசயங்கள் அபூர்வமானவை. இப்படியே அவன் அந்தச் சாலைவழிக்குப் போகும்போது தூரத்திலே ஓர் அமீரி (இளவரசனின்) கூடாரத்திற்குச் செல்லும்படி நேர்ந்தது. அந்தப் பெரிய கூடாரத்திற்குள் சென்று அந்த இளவரசனைக் கண்டு பேசும் வாய்ப்பு உமாருக்குக் கிடைத்தது. அந்த இளவரசனைச் சுற்றியிருந்த துருக்கி வீரர்கள், தங்கத் தலைக்கவசம் அணிந்திருந்தார்கள். கூடாரத்தின் நடுவிலே நெருப்புக் கணப்பின் அருகிலே ஒரு சிவந்த விரிப்பின் மீது அந்த இளவரசன் அமர்ந்திருந்தான். அவனோடு அவனுடைய ஆசிரியர்களான சட்டநுணுக்கக்கலை அறிஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் ரஹீமைக் காட்டிலும் இரண்டு வயது இளையவன். அவனிடம் அந்த அறிஞர்கள் அவன் கண்ணில்பட்ட அந்த நட்சத்திரம் வடமீன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உமார் அது வடமீன் அல்லவென்றும் அந்த இடத்திலிருந்து பார்த்தால் வடமீன் தெரிவதற்கு மார்க்கமில்லையென்றும் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அறிஞர்கள் பெயர் அளவில் அறிஞர்களே தவிர எந்தவிதமான அறிவும் இல்லாத முட்டாள்கள். உமார் அந்த இளவரசனிடம் போய் அந்த வடமீன் நட்சத்திரத்தை இங்கிருந்து பார்க்க முடியாது என்று கூறினான். தன் ஆசிரியர்களின் பேச்சை மறுத்துச் சொல்லும் ஒருவனை செருப்பால் அடித்து விரட்டுவதை விட்டு விட்டு இளவரசன் “நட்சத்திரங்கள் மூலம், ஏதாவது, போரைப்பற்றிய செய்திகள் அறிந்து சொல்ல முடியுமா” என்று கேட்டான். வருங்காலத்தைப்பற்றிக் குறி சொல்ல முடிந்தால் ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம். உமாருக்கு இதில் நம்பிக்கையில்லை, இருந்தாலும் இளவரசன் கேட்பதற்காகச் சொன்னான். தான் சொல்கிறபடி நடக்கும் என்பதில் அவனுக்கு நம்பிக்கையே கிடையாது. ஏதோ கேட்கிறான் சொல்லுவோம் என்ற முறையிலே சொல்லி வைத்தான்.
இரண்டு அரசர்கள் போரிடப் போவதாகவும், அந்தப் போரிலே, கீழைநாட்டைச் சேர்ந்த அரசன் மேலோங்கி வெற்றி பெறக் கூடுமென்றும், மேலைநாட்டுப் பேரரசன் தோற்றுவீழப் போவதாகவும் சொன்னான், முடிவில் அந்த இரண்டு அரசர்களுமே சாவுக்குப் பலியாவார்களென்றும் கூறினான். ஆனால் இதைக் கேட்ட அந்த இளவரசன் பேயையோ பூதத்தையோ கண்டு மிரண்டவன் போல விழித்தான். இந்த விபரங்களையெல்லாம் உமார் தன் உயிர்த் தோழனான ரஹீமிடம் கூறியபோது, அவன் அந்த இளவரசன் யார் என்று கேட்டான். உமார் “அதைத்தானே நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவனை எல்லோரும் இளஞ்சிங்கம், இளஞ்சிங்கம் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்” என்றான்.
“உமார் இளஞ்சிங்கம் யார் என்று நீ கேள்விப்பட்டதே இல்லையா? அதுதான் நம் பேரரசர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களின் முத்தமகன். சுல்தானை வீரசிங்கம் என்றும் மகனை இளஞ்சிங்கம் என்றும் மக்கள் குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. நீ சோதிடம் சொல்லிவிட்டு வந்தாயே அதை கேட்டவன் நம் இளவரசன். அவனுடைய தந்தையின் மரணத்தைப்பற்றி அவனிடமே சொல்ல எவனுமே துணியமாட்டான். நீ துணிந்து சொல்லிருக்கிறாய் உன்னை அவன் சும்மாவிட்டதே பெரிது இருந்தாலும் அவன் ஆட்சிக்கு வருவதுபற்றி நீ குறிப்பிட்டிருக்கிறபடியால் அவன் மனதுக்குள் மகிழ்ந்திருக்கவும்கூடும். அவன் உன்னைப்பற்றி எதுவும் கேட்கவில்லையா” என்று ரஹீம் கேட்டான்.
“என் பெயரைக் கேட்டான், சொன்னேன். எங்கே வேலை செய்கிறாய் என்று கேட்டான். நிசாப்பூர் பள்ளிக்கூடத்திலே படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்” என்றான் உமார்.
“உமார், நீ சொன்ன சோதிடம் பலித்து வெற்றியும் கிடைத்துத் தந்தையும் இறந்து தான் அரசனாக வந்தால் அப்போது, நீ அந்த இளஞ்சிங்கத்திடம் சென்று கேட்டால், நிச்சயமாக உன்னை அரசாங்கச் சோதிடனாகப் பதவி கொடுத்துப் பெருமைப் படுத்துவான். அப்படி நடந்தால், உனக்கு சமுக்காளம் விரிக்கும் வேலைக்காரனாகவாவது என்னை ஏற்றுக் கொண்டு நல்லசம்பளம் கொடுப்பாயா?” என்று கேட்டான் ரஹீம். உமார் திரு திருவென்று விழித்துக் கொண்டு பேசாமல் இருந்தான். “உமார், நிச்சயமாக நீ ஒரு ஜோதிடனாக விளங்குவாய் ! உன்னைக் கண்ட எல்லோரும் அதை நம்புவார்கள்!” என உறுதி கூறினான்.
பிறகு அவன் அங்கு துங்கிக் கொண்டிருந்த ஒரு வேலைக்காரனை எழுப்பி தோல் பெட்டியில் இருக்கும் ஜாடியையும், கண்ணாடிக் குவளையையும் எடுத்து வரும்படி கட்டளையிட்டான். அது மது. திருமறையால் தடைசெய்யப்பட்ட பொருள். ஆனால் அந்தப் புனிதமான மகத்தான போரிலே அடையப்போகும் வெற்றிக்கு முன்னாலே, மது குடிக்கும் இந்தச் சிறிய பாவம், கடலில் கரைத்த பெருங்காயம் போல் மறைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே அதைக் குடித்தான். உமாரும் உயிர்த் தோழனின் பாதையைப் பின்பற்றி அவனும் குடித்தான்.
“இருந்தாலும் நான் தோற்றுப்போக நேரிட்டாலும் நேரிடலாம்” என்று உமார் சொன்னதற்கு, “இல்லை, நாம் தோற்கவே மாட்டோம். நம் துருக்கிய சுல்தான் சாதாரண வீரராக இருக்கலாம். ஆனால், அவர் எந்தச் சண்டையிலும் தோற்பதேயில்லை. இது சரியான குறிச்சொல்லாகும், நாம் நிச்சயம் வெற்றியடைவோம்!” என்று கூவினான் ரஹீம்.
இனிக்கும் அந்த மது அவனுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. மறுபடியும் ஒரு குவளை ஊற்றிக் குடித்தான்.
சுல்தானுடைய செங்கொடியின் கீழே தன் அருமையான கருப்புக் குதிரையின் மேலே வீசிய வாளுடன் தான் பறந்து செல்வது போலவும், படைவீரர்களின் அணிவரிசைகளின் ஊடே, தன் குதிரை செல்வது போலவும். எதிரிகளான கிறிஸ்தவர்களின் சேனைகளை நோக்கிச் சென்று, அவர்களில் ஒரு தலைவனை நேருக்கு நேரே சந்தித்து வாளைச் சுழற்றிப் போருக்கு இழுத்து, அந்த மாற்று மதக்காரனுடைய தலையைத் தன்னுடைய வாளால் துண்டித்து விடுவது போலவும், இஸ்லாமியப் படைகள் உடனே ஜெயபேரிகை முழக்கித் தன்னைப் புகழ்ந்து கூவித் துள்ளிக் குதிப்பது போலவும், தான் வெட்டி வீழ்த்திய அந்த வீரனின் தலை துடித்துப் பறந்து சென்று தன் சுல்தானுடைய குதிரையின் காலடியிலே போய் விழுந்து மிதிபடுவது போலவும் ஒரு கற்பனை அவன் உள்ளத்திலே உருவாகியது.
அந்தக் கற்பனை வெறியிலே தன்னை மறந்து ரஹீம் தன் வெற்றியை உயிர்த்தோழன் உமாரும் காணவேண்டும் என்று அவனைக் கூவியழைத்தான்.
ஆனால், அந்த உயிர்த்தோழன் உமாரோ, போரையும் பூசலையும் வெற்றியையும் விழாவையும் சற்றும் எண்ணாமல் ஒட்டகத்தோல் ஆடைகளின் ஊடே ஆழ்ந்து அயர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்!