உமார் கயாம்/12. இடு காட்டின் பக்கம் பூத்துக் குலுங்கிய மணம்!

12. இடு காட்டின் பக்கம் பூத்துக் குலுங்கிய மணம்!

அன்று வெள்ளிக் கிழமை; சாந்தி தரும் நாள். கல்லறைகளே எங்கும் நிறைந்த அந்த இடுகாட்டை நோக்கிப் பெண்கள் கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். இறந்து போனவர்கள் சாந்தியடையப் பிரார்த்திப்பதற்காக அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இடுகாடு முழுவதும், இடிந்து கிடக்கும் கல்லறைகளின் மீதுங் கூட, என்னென்னவோ மாதிரியான பூஞ்செடிகள் எப்படியோ முளைத்துப் பூப்பூத்து அந்த இடுகாடு முழுவதும் ஒரு விநோதக் கம்பளம் விரித்து வைத்தது போல் காட்சியளித்தது. ஆண்களின் கல்லறைகளின் மீது தலைப்பாகை உருவமும் பெண்களின் கல்லறைகள் மீது மலர்க் கொத்துகளின் உருவமும் பொறிக்கப் பட்டிருந்தன. அவற்றின் மீது சூரிய ஒளி பட்டுத் தகதகத்தது, மரங்களின் நிழலிலே, முக்காடிட்ட வனிதாமணிரத்தினங்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் கல்லறைகளைச் சுற்றி வட்ட வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் செம்மலர் வாயிதழ்கள் அசைந்து கொண்டிருந்தன. அதாவது பேசிக் கொண்டிருந்தன. சிறு குழந்தைகள் புற்றரையிலே தவழ்ந்து கொண்டிருந்தன. பிரார்த்திப்படைவிடப் பேசிக் கொண்டிருப்பதில் அவர்களுடைய உற்சாகம் அதிகமாயிருந்தது. சில பெரிய பெண்கள் ஒரு வட்டத்திலிருந்து ஒரு வட்டத்திற்கு மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தங்களைப் பார்க்காத போது மரங்களினூடே மறைந்து போனார்கள். பெண்கள் பிரார்த்தனை செய்யும் நேரத்திலே ஆண்கள் அங்கே நுழைவது கிடையாது.

அந்தக் கூட்டத்தின் கண்களுக்குத் தப்பி வந்த யாஸ்மி, மரங்களினூடே புகுந்து ஆற்றங்கரையோரமாக வெகுதூரம் வந்து விட்டாள். கடைசியில் அலுத்துப் போய் ஒரு கற்பாறையின் மேலே கால் நீட்டியபடி உட்கார்ந்தாள். அவள் தலைக்கு மேலே புறாக்கள் வட்டமிட்டன. அந்தப் புறாக்கள் பக்கத்திலே பாதியிடிந்து கிடந்த சுவர்களையே தங்கள் இருப்பிடமாகக் கொண்டிருந்தன. அந்தச் சுவருக்கு மேலே கூரை கிடையாது. ஏனெனில் அது அந்தச் சுவருக்குள்ளே உயர்ந்து விளங்கிய பாழடைந்த கோபுரத்தின் சுற்றுச் சுவராகும். ஆற்றையும் இடுகாட்டுக்கப்பால் இருந்த வெளியையும் கண்காணித்துக் காவல் செய்வதற்காகக் கட்டப்பட்ட கோபுரம் அது. ஆனால், இப்பொழுது பல ஆண்டுகளாக நாட்டிலே அமைதியே நிலவி வருவதால், காவல் தேவையில்லையென்று கை விடப்பட்டது. கோபுரமும் ஓரளவு பாழாகி விட்டது. இப்பொழுது அந்தக் கோபுரத்திலே புறாக்கள் குடியிருக்கின்றன. உமாரைப் போல் அலைந்து திரிபவர்க்கும் சமயா சமயங்களில் அது பயன்பட்டு வந்தது. இரவில் நட்சத்திரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு, அது உமாருக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தது.

உமாரும், யாஸ்மி அருகில் வந்து சேர்ந்தான். கதிரவனுக்கெதிரே புறாக்கள் வட்டமிட வட்டமிட, புறாவின் இதயம் போல வெண்மையான யாஸ்மியின் ஆசை எண்ணங்களும், சுழன்று சுழன்று எழுந்தன. இந்த மாதிரியான நேரத்தில் என்ன செய்வதென்று யோசித்தாள். தன் அக்காள் செய்தது போல, பக்கத்தில் இருந்தவன் மீது பார்வையை வீசி, அவன் தன்னை முழுமையாக மறந்து, தன்மேல் மாறாக்காதல் மயக்கங் கொள்ளும்படி ஆசை மொழிகளை அடுக்கிப்பேச எண்ணினாள். ஆனால் அவளுடைய கைகள் நடுங்கின. வார்த்தைகள் தடுமாறின. அவனோ நெடுநேரத்திற்குப் பேசாமலே உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்களிலே ஒரு பசியிருந்தது.

“ஏதாவது பேசு!” என்றாள் அவள் ஆசையோடு.

“எதைப்பற்றிப் பேசுவது? யாஸ்மி” என்று முகத்தைக் கூடத் திருப்பாமல் உமார் பதில் சொன்னான்.

“நீ போருக்குப் போயிருந்தாயே, அங்கே சுல்தானைப் பார்த்தாயா? பல நகரங்களிலும் பல பெண்களைப் பார்த்திருப்பாயே? வேறு என்ன என்ன பார்த்தாய்! அவர்கள் எப்படி எல்லாம் இருந்தார்கள்? அவற்றை யெல்லாம் சொல்லு” என்றாள். அந்த நீண்ட கொரசான் வீதியும், ருஸாவும் அவன் நினைவுக்கு முன்னே தோன்றக் கண்டான்.

“அதுவா? விஷயம் ஒன்றுமில்லை, சொக்கட்டான் காய்களைப்போல அங்குமிங்கும் நாங்கள் உருட்டப்பட்டோம். கடைசியில் பெட்டிக்குள் அள்ளிப் போட்டு மூடப்பட்டவர்களாகி விட்டோம். போரைப் பற்றி யாரால் விளக்கிப் பேச முடியும்?" யாஸ்மி, தன்னுடைய இள வயதுக் கனவையும், வெள்ளைக் குதிரையில் ஏறி வரும் இளவரசனையும், அவன் தன்னை அழைத்துச் சென்று இருக்க வைக்கும் அன்னத் தடாகமுள்ள அரண்மனையையும் நினைத்துக் கொண்டாள்.

“நீ நிசாப்பூரிலே என்ன செய்யப் போகிறாய்?”

“யாருக்குத் தெரியும்?

“நீ திரும்பவும் போய்விடப் போகிறாயா?”

உமார் தலையை “இல்லை” என்பது போல ஆட்டினான். அவனுக்கு நிசாப்பூரை விட்டுப் போகவே மனமில்லை. யாஸ்மியைத் தவிர வேறு எதையும் நினைக்கக்கூட அவனால் முடியவில்லை. யாஸ்மிதான் எவ்வளவு தூரம் மாறிவிட்டாள்? சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த அவள், கருத்தைக் கலைக்கக் கூடிய அழகிய வெளவன மங்கையாக மாறிவிட்டாள். இருந்தும் அவள் மாறி விடவில்லை.

கன்னத்திலே கை வைத்தபடி தூரத்திலே இடுகாட்டிலிருந்து வெளிக்கிளம்பி நகரத்தை நோக்கி நகரும் பெண்களின் சிறிய உருவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஞானக்கண்ணாடிப் பேராசிரியரின் அன்புக்குரிய மாணவன் நீயென்றும், நீயே ஒரு பேராசிரியராகப் போகிறாயென்றும் பேசி கொள்கிறார்களே, அது உண்மைதானா?”

உமார் இதைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட இந்த வதந்தி, அந்தத் தெருவில் உள்ள புத்தகக் கடைக்காரர்களிடமெல்லாம் பரவிவிட்டது. அதையே யாஸ்மியும் கேள்விப்பட்டிருக்கிறாள். புன்சிரிப்புடன் அவன் சொன்னான்.

“எனக்கு வேலை செய்வதற்கு ஓர் இடமும் கிடைக்கவில்லை; என்னை ஆதரித்துக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை; எனக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை. ஆசிரியருக்கு அவர் தொழில் பிழைப்பைத் தருகிறது. மதவாதிக்கு அவனுடைய சூழ்ச்சிகள் வாழ்வைத் தருகிறது. எனக்கு என்ன இருக்கிறது?" யாஸ்மி மகிழ்ச்சியுடன் நெருங்கி வந்து நின்று கொண்டாள். உமார் உண்மையாகவே பிச்சைக்காரனாகவே இருந்தாலும் நல்லதுதான். தன்னிடமிருந்து பிரிந்து போகமாட்டான் அல்லவா? அந்த அளவிற்கு அது நல்லது தான் “உனக்கு புத்தியே இல்லை. சோதிடம் சொல்லும் அகமதை விட நீ பெரிய முட்டாள்தான்! அவன் நட்சத்திரங்களைப் பார்த்துக் குறி சொல்வதற்காக நிறையப் பணம் பெறுகிறான். அவனுக்கு ஒரு கருப்பு அடிமையும் பட்டுச் சால்வையும் கூடக் கிடைத்தன. உனக்கு என்ன கிடைத்தன? அதோ பார்! கூட்டம் முழுவதும் கலைந்து விட்டது. பெண்களின் கடைசிக் கும்பல் கூடப் புறப்படத் தொடங்கி விட்டது. நான் போக வேண்டும்” என்றாள் யாஸ்மி.

யாஸ்மியின் பசுமை பொருந்திய கையை உமார் பிடித்துக் கொண்டான். இறுகிய அந்தப் பிடியிலிருந்து அவளுக்கு எழுந்து செல்ல மனம் வரவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தாள். வானத்திலே வட்டமிட்டுக் கொண்டிருந்த புறாக்கள் அந்தப் பாழடைந்த காவல் கோபுரத்தில் அடைந்து விட்டன. வானம் வெறும் வெளியாகக் காட்சியளித்தது. சிறிது நேரம் சென்றதும் இருண்ட வானிலே பிறை நிலா எழுந்து தோன்றியது.

“அதோ பிறை தோன்றி விட்டது. நான் போகிறேன்” என்றாள் யாஸ்மி தீனமாக.

“அந்தப் புது நிலவின் இரு கொம்புகளுக்கும் ஊடே ஒரு நட்சத்திரமும் விரைவில் தோன்றப் போகிறது யாஸ்மி” என்றான் உமார் மெதுவாக ஆசை பொங்கும் குரலில்.

“நான் அதைப் பார்க்கப் போவதில்லை. உன்னுடைய அந்தப் பெரிய கோபுரத்திலே அடைந்து கொண்டு, நீ மட்டும் தன்னந்தனியாகப் பார்! அந்த ஒரு நட்சத்திரத்தை மட்டும் என்ன. எல்லா நட்சத்திரங்களையுமே பார்த்துக் கொண்டிரு! ஆமாம், இரவில் புதை குழிகளிலிருந்து வெளிக்கிளம்பி வரும் பிசாசுகளுக்கு நீ பயப்படுவத்தில்லையா?”

“அந்தப் பேய்கள் என்னுடைய நண்பர்கள், தெரியுமா? அளவுக் கருவிகளையும், நட்சத்திர விளக்குகளையும், கொண்டுவந்து, அவை எனக்கு நட்சத்திரங்களைப்பற்றிய எல்லா ஷயங்களையும் சொல்லித் தரும்!” என்று வேடிக்கையாக யாஸ்மியிடம் உமார் கூறினான். ஆனால் யாஸ்மியின் கண்கள் பயத்தால் விரிந்தன. பல அதிசயமான விஷயங்களைத் தெரிவிக்கக்கூடிய விசேஷ அறிவு ஒன்று உமாரிடம் இருப்பதாக ஊரில் பேசிக் கொண்டார்களே, அது நினைவுக்கு வந்தது. இறந்து போனவர்களின் ஆவிகளோடு அவன் பேசுவது உண்டு போலிருக்கிறது என்பதை கலவரத்தோடு நிச்சயப் படுத்திக் கொண்டாள்.

“அந்தப் பேய்களோடு நீ எப்படிப் பேசுவாய்? எந்த மொழியில் பேசுவாய்?” என்று கேட்டாள் குழந்தைத் தனமாக.

“கண்ணுக்குத் தெரியாத வானதேவதையொன்று, இந்தக் கோபுரச் சுவரிலே இரவில் தினமும் வந்து உட்காருவது வழக்கம். ஆவிகள் பேசுகிற எல்லா விஷயங்களையும் அது தான் எனக்குச் சொல்லும், அதற்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும்!”

“சும்மா புளுகாதே! தேவதைகளைப் பற்றிப் புளுகுவது சரியல்ல! உண்மையில் பேய்கள் இங்கே வருமா? அதை மட்டும் எனக்குச் சொல்லு.”

தேவதையைப் பற்றி அவன் கூறியது புளுகென்று நினைத்த யாஸ்மிக்குப் பேய்களைப் பற்றிச் சொன்னது மட்டும். ஏதோ உண்மையாகத் தோன்றியது. இருளில் அரைகுரையாகத் தெரியும் கல்லறைகளின் பக்கம் சென்ற கண்ணைத் திருப்பவும் முடியாமல், பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாமல், ஓரக் கண்ணாலே பார்த்துக் கொண்டே, பயந்தபடி அவனை ஒட்டி உரசி உட்கார்ந்து கொண்டாள். உமார் தன் கைகளால் அவளை வளைத்து இறுக அனைத்துக் கொள்ளத் தொடங்கியபோது, பயந்து நடு நடுங்கி விடுவித்துக் கொள்ள முயன்றாள். உடலெல்லாம் வியர்த்தது. அவளுடைய நிலை தாழ்ந்தது. கண்கள் மூடிக் கொண்டன. பயத்தால் அவள் நெஞ்சு பட படவென்று துடித்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். அவள் உதடுகள் வேகமாகத் துடித்தன. “பயமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது” என்ற மெல்லிய ஒலி அவள் உதடுகளிலே பிறந்தது. அவனுக்கோ விரகதாபத்தால் ஏற்பட்ட உள்ளத் துடிப்பு, அவளுக்கோ கன்னி பயம், பயத் துடிப்பு முனு முணுக்கும் குரலிலே இருவரும் பேசிக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவனுடைய கைகள் அவள் உடலைத் தழுவியபடியே ஊர்ந்து வந்து அவள் கன்னங்களைப் பிடித்துக் கொண்டன. அவளுடைய முகத்தைத் திருப்பியபடியே தன் முகத்தின் எதிரே வைத்தபடி “என்னைப் பார்!” என்றான். ஆனால், அவளுடைய கண்கள் மூடிய படியே இருந்தன. இன்னும் பயம் போகவில்லை.

வெள்ளி நிலவின் வளைவு சிறிது மங்கியது. அதன் நடுவிலே, ஒரு நட்சத்திரம் தோன்றி ஒளி விட்டது. இருண்டவானத் திரையிலே எழுதி வைத்தது போல அது தோன்றியது. உமாரின் உள்ளத்தில் ஒரு விசித்திரமான ஆசையும் உடலெங்கும் தினுசான வேதனையின் துடிப்பும் தோன்றின. துடிக்கும் அவளுடைய வாயிதழ்கள் அவனுடைய உதடுகளிலே பொருந்திய அந்தக் கணத்திலேயே அந்தப் பசி அடங்கியது. அந்த வேதனை தீர்ந்தது!

இறுக்கி அவளை அணைத்துக்கொண்டான். “போதும்! வலிக்கிறது” என்று கூறிய யாஸ்மி பெருமூச்சு விட்டாள். நட்சத்திர வெளிச்சத்திலே அவளுடைய தோள்களிலே ஒளிபட்டுத் தெறித்தது. அவன் கழுத்தைக்கட்டிப் பிடித்திருந்த அவள் கைகள் அவனுக்கருகிலே அவளுடைய உதடுகளைக் கொண்டுவந்து நிறுத்தின. அந்த அழகிய உதடுகளின் கதகதப்பும், தன் நெஞ்சோடு ஒட்டியிருந்த அவளுடைய நெஞ்சின் ஓட்டமும், கண் பார்வையிலே தோன்றிய அவளுடைய காதல் நெருப்பின் வேகமும், அவனுடைய பசியை அடக்கி விட்டன. உலகை மறந்து, ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒருவர் அணைப்பிலே மற்றொருவர் பிணைந்து நெடுநேரம் அங்கேயே அவர்கள் கிடந்தார்கள்!

இரவு தொழுகை நேரம் கழிந்து வெகுநேரத்திற்குப் பிறகு அவர்கள் நகரத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். விஷந் தோய்ந்த வாள் போன்ற பிறை மதி விளங்க, தங்கள் காலடியின் கீழே தரையிருப்பது கூடத் தெரியாமல், கனவுலகில் மிதந்து செல்பவர்களைப் போல அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். புத்தகக்கடை வீதியின் அருகிலே அந்தப் பெரிய மரத்தடியின் கீழேயுள்ள நீருற்றின் பக்கத்திலே வந்ததும், யாஸ்மி அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “என் இதயத்தில் வீற்றிருக்கும் இதயமே! உன்னை எப்படிப் பிரிந்து செல்வேன்?” என்று ஆசைப் பொங்கத் தவிப்போடு கேட்டாள். அவளுடைய காதலும் ஒன்றேதான். காதலனும் அவன் ஒருவனேதான். பிரிவின் வேதனை அவளைப் பெரிதும் வருத்தியது. கோபுரச் சுவருக்கு வான தேவதை வருவது உண்மைதான். கண்ணுக்குத் தெரியாத அந்த வான தேவதை பாழடைந்த கோபுரத்திற்கு வந்து அவளுடைய ஆத்மாவைத் தொட்டிழுத்து அவள் உடலில் உள்ள ரத்தம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போனது உண்மைதான், என்று அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன!