உமார் கயாம்/11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!

406883உமார் கயாம் — 11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!பாவலர் நாரா. நாச்சியப்பன்

11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை அன்று காலையில், பேராசிரியர் அலி அவர்கள் கொடுத்த கடிதத்தை வாங்கிக் கொண்டு நிஜாப்பூரை நோக்கிப் பயணம் புறப்பட்டான். கால்நடையாகவே போய்க் கொண்டிருந்த உமார் வழியில் உப்பு ஏற்றிக் கொண்டு போகும் ஒட்டகச் சாரி ஒன்றைக் கண்டான். ஒட்டகங்களை நடத்திக்கொண்டு சென்ற அந்த மனிதர்கள் இரக்கப்பட்டு, உமாரைத் தங்கள் கழுதைகளில் ஒன்றின்மேல் ஏறி வரச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டும் அவர்கள் பாடிய தில்லானாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டும், சென்றபடியால் கொளுத்தும் வெயிலின் கொடுமையையும் பொறுத்துக் கொண்டு போக முடிந்தது.

நிஜாப்பூருக்கு வந்தவுடன் அவன், நேரே தக்கின் வாசல் என்கிற இடத்திற்குப் போனான். ஒரு மசூதிக்கும் தக்கின் வாசலுக்கும் இடையேயுள்ள சந்தில் வரிசையாக உள்ள இறைச்சிக் கடைகளில் ஒன்றில் உட்கார்ந்து உமார் வறுத்தக்கறியும் கவாபும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். காலை முதல் வெயிலில் பிராயணம் செய்து, அலுத்துப் பசியோடிருந்த அவனுடைய உடல் தளர்ச்சி, சாப்பிட்டவுடன் குறைந்தது. அந்தச் சந்தில் வெயில் குறைந்து நிழலும் வரத்தொடங்கியது, மாலை பொழுது நெருங்கிக் கொண்டிருந்த படியால் பள்ளிக்குத் தொழுவதற்காக மக்கள் வரத் தொடங்கினார்கள்.

ஒல்லியான உருவமொன்று உமாரைக் கடந்து, மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. முக்காட்டுக்கு மடிப்புகளுக்கிடையே தோன்றிய அந்தப் பெண்ணின் கரிய விழிகளை உமார் உற்று நோக்கினான். முக்காட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டு வளைந்திருந்த அவளுடைய பழுப்பு நிறக் கூந்தலின் சுருளும் அந்தக் கடைக்கண்பார்வையும் உமாருக்கு எங்கோ முன் பழக்கமான மாதிரியாகத் தோன்றியது.

போர்க்ளத்திலே கண்ட அந்த அடிமைப் பெண் ஸோயியின் நினைவு அவனுக்கு ஏற்பட்டது. கடையிலிருந்த அவன் விரைவாக எழுந்து, தன் புத்தகங்களையும் கையில் எடுத்துக் கொண்டு, திரும்பிப் பார்த்த அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து சென்றான்.

அவள் மசூதிக்குள்ளே நுழைந்து விட்டாள். பின் தொடர்ந்து சென்ற உமாரின் காதுகளிலே, “நம்பிக்கையுள்ளவர்களே! தொழுகைக்கு வாருங்கள்! எல்லாம் வல்ல அல்லாவை ஏற்றிப் பணிவதற்கு வாருங்கள்!” என்ற அழைப்பு விழுந்தது. உள்ளே நுழைந்து ஓரிடத்தில் மண்டியிடுவதும், பிறகு எழுந்திருந்து மற்றோர் இடத்திற்கு நகருவதும் அந்த இடத்தில் மண்டியிடுவதும் இப்படியாக உமார் முன்னேறிக் கொண்டிருந்தான்.

அவனைச் சுற்றி எல்லோரும் வாய் முணுமுணுத்துக் கொண்டே தொழத்தொடங்கியதும் அவனும், தன்னுடைய செயலை விட்டு விட்டு மண்டியிட்டபடியே தொழுகையில் ஈடுபட்டான். தொழுகை முடிந்ததும் எல்லோரும் எழுந்து செல்ல வெளியே கிளம்பினார்கள். அவன் பெண்கள் பக்கம் தன் கண்களைச் செலுத்தினான். நீல முக்காட்டுக் காரியான அந்தப் பெண், மற்ற பெண்களுக்குப் பின்னே நிற்பதும், வேலைக்காரி யொருத்தியுடன் வெளியே புறப்படுவதையும் கண்டு பின்தொடர்ந்தான். வெளி முற்றத்தில் வந்து தன் கால் மிதியடியை மாட்டிக் கொண்ட அவள், அதைச் சரியாக மாட்டிக் கொள்ளாததால் சிறிது நடந்தவுடன் ஒரு மிதியடி சிதறிக் காலிலிருந்து நழுவிச் சிறிது தூரத்தில் விழுந்தது. அதை எடுப்பதற்காக குனிந்த அவள் அருகில் நிற்கும் உமாரைக் கண்டாள்.

“உமார்! என் பிறந்த தினத்தன்று நீ ரோஜாப் பூ அனுப்பி வைக்கவில்லையே? ஏன்?” என்று கேட்டு விட்டு, அவன் பதில் கூறுவதற்கு முன்னாலேயே, நழுவிபோய் வேலைக்காரியுடன் சேர்ந்து நடை கட்டி விட்டாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலே சிறுமியாயிருந்த யாஸ்மி தனக்கொரு ரோஜாப் பூக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

பிறகு அவன் இறைச்சிக் கடைகளைக் கடந்து தாக்கின் வாசலுக்கு வந்தபோது, அந்த வாசல் கதவுகள் மூடப்பட்டிருந்தன. துருக்கிய வீரர் ஈட்டிகளுடன் அங்கே காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

“கயாம்! ஏன் இவ்வளவு காலந் தாழ்ந்து வருகிறாய்?” என்ற கரகரத்த குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். குதிரை மீது வந்து நின்று கொண்டிருந்த டுன்டுஷை அவன் அடையாளங் கண்டுகொண்டான்.

பேராசிரியர் கொடுத்த கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் அதை உடைத்து அருகில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் படித்துப் பார்த்தான்.

பிறகு அதை மடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டான். ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அவன் உமாரிடம் கொடுத்தான். பேராசிரியர் கடிதம் அவன் உள்ளத்தில் விருப்பம் உண்டாக்கியதா இல்லையா என்பது உமாருக்குப் புரியவில்லை. பேராசிரியரோ, அவன் உமாரிடம் அன்பாக நடந்து கொள்வான் என்றுதான் கூறியிருந்தார்.

“நிசாப்பூரில் உன் வீடு எங்கேயிருக்கிறது?” என்று டுன்டுஷ் உமாரைக் கேட்டான்.

“குவாஜா அலி அவர்களின் நட்புக்குரிய பெரியவரே! தற்சமயம் எனக்கென்று ஒரு வீடும் கிடையாது”

“அப்படியானால் எனக்குத் தெரிந்த குதிரைச் சேணம் செய்பவன் ஒருவன் இருக்கிறான். உன்னை ஆதரித்துக் காப்பாற்றும்படி அவனிடம் சொல்லுகிறேன். நீ அதற்குப் பதிலாக அவனுடைய எட்டு குழந்தைகட்டும் புனிதமான கொரான் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

அவன் பேசிய போக்கும் அலட்சியமான பார்வையும் ஏதோ நாய்க்கு ரொட்டித் துண்டை விண்டுத் தூக்கி எறிவது போல் இருந்தது. உமாரை அவமதிப்பதற்காகவே அவன் பேசியது போலிருந்தது.

உமாருக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “இந்த மாதிரியான ஆதரவை எழுதப் படிக்கத் தெரிந்த யாராவது ஒரு காஜாப் பையனுக்குக் கொடுங்கள். ஏழைகளைக் காப்பாற்றும் இதயம் வாய்ந்தவரே! நான் விடைப் பெற்றுக் கொள்ளுகிறேன்” என்று எரிச்சலோடு கூறினான்.

“தாராளமாக” என்று கூறிவிட்டுத் தன் குதிரையைத் தட்டிவிட்ட டுன்டுஷ், வழியில் பழங்கந்தைகளுக்குள்ளே நெளிந்து கொண்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரன் அருகில் நின்று, அவன் பாத்திரத்தில் ஒரு நாணயத்தைப் போட்டான்.

“பழுப்புநிற உடையணிந்த அந்த இளைஞனைப் பின்பற்றிச் செல். அவன் என்ன செய்கிறான் என்பதையும் எங்கு தங்குகிறான் என்பதையும் கண்டு அறிந்து வந்து எனக்குச் சொல்” என்று வேறு யாருக்கும் கேட்காமல், பிச்சைக்காரன் காதில் மட்டும் படும்படியாக மெல்லிய குரலில் கூறினான்.

“உத்திரவு” என்று வணங்கிக் கூறிய அந்தப் பிச்சைக்காரன், அன்று கிடைத்த பெரும் வரும்படியை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.

உமாரோ, பல நிழல்களுக்கிடையே ஒரு நிழல்போல் அங்கிருந்து நடந்து செல்லத் தொடங்கினான். டுன்டுஷ் தன்னை அப்படி ஏளனப்படுத்தியதை நினைக்க அவனுக்குப் பொறுக்க முடியாமல் வந்தது. அவன் ஆதரிக்காவிட்டால் பிழைக்க முடியாதா என்ன? தன் கையிலே உள்ள இரண்டு நாணயங்களையும் எடுத்துப் பார்த்துக் கொண்டான். அவை உள்ள வரையிலே அவன் தனக்குத்தானே ஒரு ராஜாதான்! மேலும், முன் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, புல்காயும் அந்த மொட்டை மாடியிலே படுத்துக் கொள்ளலாம். ஏதாவது உலகச் செய்திகளை உரைத்தால் அங்குள்ளவர்கள் தாமாகவே அவனுக்கு உணவு படைக்கத் தொடங்குவார்கள். சாப்பிட்டு விட்டு மேலே படுத்துக் கொள்ளலாம். ஆனால் ரஹீம் மட்டும் அங்கேயிருந்தால்...? எந்தவிதமான கவலையும் பட்டிருக்க வேண்டாமே!

நடந்து கொண்டே வந்தவன் புத்தகக் கடை வீதி வழியாக வந்து அந்த நீருற்றின் அருகிலே நின்றான். தண்ணீர் பானையுடன் அங்கு வந்து சேர்ந்த அந்தப்பெண், குனிந்து பானையில் தண்ணீர் எடுக்க வளைந்தாள். பானையை அமிழ்த்திப் பிடித்துத் தண்ணீர் மொண்டு கொண்டிருந்தாள். அவன், பக்கத்திலேயிருந்த பாறையில் போய் உட்கார்ந்தான். அவள், அவனைக் கவனிக்கவில்லை.

“யாஸ்மி” என்று அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.

அந்தப் பெரிய மரத்தடியிலே இருட்டின் ஊடேயும், முக்காட்டுத் துணிக்கு ஊடேயிருந்த அவளுடைய கண்கள், அவனுடைய கண்களைச் சந்தித்தன.

நெற்றியிலே புரண்டு கொண்டிருந்த கூந்தலின் சிறு கற்றையை ஒதுக்கி விட்ட அவளுடைய மெல்லிய மூச்சு வேகமாக ஓடிக் கொண்டிருப்பது அவன் செவிகளில் தெளிவாகக் கேட்டது.

இருட்டிலே நிற்கும் அந்த யாஸ்மி, புதுமையானவள், முன்போல் சிறுமியல்ல, அழகுவந்த பருவமங்கை. பன்னீர் மணம் கமழும் ஆடைகளும், முக்காடும் அணிந்து அமைதியே உருவமாக நிற்கிறாள். அவளுடைய கையிலிருந்த பானை ஒரு பக்கமாகச் சாய்ந்து அதில் இருந்த தண்ணீர் கீழே வழிந்து கொண்டிருந்தது. இருந்தும் அவள் அசையவில்லை.

“யாஸ்மி யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று மெல்லிய குரலிலே உமார் ஆசை பொங்கக் கேட்டான்.

“முட்டாளே! பெரிய அடி முட்டாளே! நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை” என்று குறும்புச் சிரிப்புடன் கூறிவிட்டுக் கையிலிருந்த பானை நழுவிக் கீழே விழுந்ததையும் கவனியாமல் ஓடினாள். பைத்தியம் பிடித்தவள் போல் ஓடினாள். ஓடி மறைந்தே போய் விட்டாள்.
framless
framless

அவன் திரும்பி வருவான் வருவான் என்று ஒவ்வொரு நாளும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தது மூன்று வருடங்கள்! காத்துக் காத்திருந்து, அலுத்துச் சலித்துப்போன உள்ளம் பித்துப் பிடித்துப் போன்தில் வியப்பில்லை.

உமாரோ ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

மரத்தின் அடியிலிருந்து, கந்தையுடை பூண்ட ஓர் உருவம், நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தது.

பிறகு, “ஐயா! ஏழை, அருள் புரியுங்கள்! ஆண்டவனின் பெயரால் யாசிக்கிறேன், அருள் புரியுங்கள்!” என்று அந்தப் பிச்சைக்காரன் கெஞ்சினான்!