உமார் கயாம்/14. ஆசைக்கனவுகள் யாவும் பலித்தன.
“அவள் யார் அடிமைப் பெண்ணா? திருமணமானவளா? எப்படியிருப்பாள்?’ என்று டுன்டுஷ் கேட்டான். டுன்டுஷக்கு விவரம் சொன்ன அந்தப் பிச்சைக்காரன் “இருட்டிலே எதைச் சரியாகப் பார்க்க முடிகிறது. அவனோ இளைஞன், இரவும் பகலும் தொடர்ந்து விழித்துக் கொண்டேயிருப்பான் போலிருக்கிறது. எனக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்துங்கூட, வெள்ளிக்கிழமை இரவு விடாமல் தொடர்ந்து சுற்றினேன். அந்தப் பெண்தான் வீட்டு வேலைகளைப் பார்க்கும்படி ஏவப்படுகிறாள். கடுமையான வேலைகள் எல்லாம் கூடச் செய்கிறாள். ஆனால் அடிமைப் பெண் அல்ல. கலியாணமும் இன்னும் ஆகவில்லை” என்று சொல்லிக் கொண்டு வந்தான்.
“அவள் பெயர் என்ன?”
“யாஸ்மி, அப்துல் சாயித் என்ற மீஷத் நகரத்துத் துணி வியாபாரி அந்தக் கிழட்டுப் புத்தகக் கடைக் காரனிடம், அவன் மகள் யாஸ்மியைத் தனக்கு மணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறான்!”
“அப்துல் சாயித்! ஆம், அவன் ஒரு பெரிய கூடாரமும் ஏராளமான ஒட்டகங்களும் வைத்திருக்கிறான்” என்று டுன்டுஷ் தனக்குத்தானே பேசிக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரன் கூலியை எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தெரிந்து கொண்ட டுன்டுஷ் அவனைப் பார்த்து, “அப்படியானால், அந்தக் கூடாரம் செய்பவனின் மகன் புத்தகக் கடை வீதியை விட்டுப் போக மாட்டான். அங்கேதான் சுற்றிக் கொண்டிருப்பான். என்னிடமிருந்து செய்தி கிடைக்கும் வரை அவளைத் தொடர்ந்து கவனித்து வா. போ” என்றான்.
“செய்தி கொண்டு வருபவன் உங்களுடைய ஆள்தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது பிரபுவே?" "உன்னை இந்த மாதிரி காலால் உதைத்து, “கூடாரம் செய்பவன் எங்கேயிருக்கிறான்? என்று கேட்பவன் என்னுடைய ஆளென்று தெரிந்து கொள். அதுவரையிலே தூங்காமல் அவளைத் தொடர்ந்து திரி தெரிகிறதா! நீ தூங்கினால் அதைப் பார்ப்பதற்கும், உன் குறட்டையைக் கேட்பதற்கும் வேறு ஆட்களுக்குக் கண்ணும் காதும் இருக்கின்றன என்பதை மறவாதே’ என்று சொல்லிக் கைநிறைய செப்புக் காசுகளை அள்ளித் தரையிலே கொட்டினான். வீதியில் திரிந்தவர்கள் அதை அள்ளிக் கொள்ளுவதற்குள் பிச்சைக்காரன் குனிந்து புழுதியிலே கிடந்த அந்தக் காசுகளை அவசர அவரசமாகப் பொறுக்கினான். பொறுக்கும் பொழுதே வாயினால் அவற்றை எண்ணிக் கொண்டே வந்து “ஒரு வெள்ளி நாணயத்தின் அளவு மதிப்புக் கூட இல்லையே, உன்மையான உழைப்புக்குக் கிடைத்த பணம்! - பிரபுக்களின் கைப்பிடி தண்ணீர்போன்ற தாராளத்தன்மையாக இருக்கும்!” - என்று முனகி வைது கொண்டிருந்தான். இருப்பினும் டுன்டுஷக்கு அவன் மிக மிகப் பயந்தான். அவன் எந்த மனிதனிடம் வேலை செய்கிறான் என்பது அவனுக்குத் தெரியாமலிருந்தது. அந்த பெரிய மரத்தடியில் இருந்த நீருற்றுக்கு விரைந்து சென்று அங்கே உள்ள கல்லில் உட்கார்ந்து கொண்டான்.
அங்கிருந்தவாறே அவன் பள்ளிக்கூட வாசல் புறத்தில் நடந்த செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். நீண்ட தாடியுடைய பெரிய மனிதர்கள், தங்கள் வேலைக்காரர்களுடன், அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். பூங்காவனத்தின் வேலி ஓரத்திலே, வீதியின் வழியாக குதிரைப் படைகள் போய்க் கொண்டிருந்தன. விதியின் சக்கரம் சுழலுவதால் ஏற்பட்ட விந்தை மாற்றத்தின் காரணமாகச் சிந்தனையும் பரபரப்பும் கொண்டவர்களாக நிசாப்பூர்வாசிகள் இருந்தார்கள்.
சுல்தான் இறந்ததால், நகரமக்கள் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்பொழுது மசூதிகளில் தொழுகை நடத்துவார்கள். பிரார்த்தனையின் மத்தியிலே புதிய சுல்தானின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்கள்.
அழகும், இளமையும் பொருந்திய சுல்தானின் பெயர் மாலிக்ஷா, மக்கள் அவரை இளஞ்சிங்கம் என்று அழைத்து வந்தார்கள்! புத்தகங்களையும் ஆசிரியர்களையும், போலோ விளையாடும் மைதானத்தையும் விட்டு விட்டு விரைந்து வந்த அந்த மாலிக்ஷா முகத்தில் முழுவதும் தாடிவளராத - மத நம்பிக்கையுள்ளவர்களின் காவலனாகவும், கிழக்குக்கும் மேற்குக்கும் பேரரசராகவும் உலகத்தின் இறைவனாகவும், கதிரவனின் உலகமான கொரசான் தேசத்து அமீர்கள் அனைவரும் அடிபணியும் தலைவராகவும் இப்பொழுது விளங்குகிறார்.
இந்த விஷயங்களையெல்லாம் அந்தப் பிச்சைக்காரன் அரைகுறையாகவே தன் காதில் போட்டுக் கொண்டான். அவன் முழுக் கவனமும் உமார் - யாஸ்மி இவர்கள் மேலேயே பதிந்திருந்தது. பகல் நேரத்திலே அவர்கள் இருவரையும் பார்ப்பது அரிதாகவே இருந்தது. இருள் என்னும் திரையுலகத்தை வரைந்த பிறகு, இருளில் உலவும் இரு நிழல்கள் போல அவர்கள் நீருற்று அருகிலே சந்தித்தார்கள். சந்தித்த பிறகு, அவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகை மறந்தார்கள். வீதியிலே விரைந்து செல்லும் பலவகையான மக்களின் காலடியோசையையும் கூட அவர்கள் கவனிப்பதில்லை.
அந்தப் பெண் போட்டிருக்கும் அந்த கனத்த முக்காடு, அவளுடைய அளவை மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தையும் மறைத்தது.
அந்த முக்காடு மட்டும் இல்லையானால் அவளுடைய அழகை மட்டும் வெளியுலகம் அறியுமானால், எத்தனை பேர் அவளைச் சுற்றி வருவார்கள்; எத்தனை பேர் அவளைப் பற்றிப் பேசுவார், எவ்வளவு அதிர்ஷ்டம் வரும்! அவளைப் பற்றிப் பிச்சைக்காரன் கொண்டிருந்த கருத்து இது. உமாரைப் பற்றியும் அவன் உள்ளத்திலே ஒரு கருத்து உருவாகியிருந்தது.
படித்த மனிதனான இவனுக்குப் பார்வையும் பழுது, சாப்பாடைப் பற்றிய நினைவே இந்தப் பைத்தியக்காரனுக்குக் கிடையாது. எப்பொழுதாவது மசூதிக்கு அருகிலே உள்ள இறைச்சிக் கடையிலே யாத்திரீகர்களுடன் சாப்பிட்டு விட்டு வருவான். நீரூற்றுக்கு வந்ததும் தண்ணிரைக் குடிப்பான். யாருடனும் பேசுவதில்லை. வெறுந் தண்ணீரைக் குடித்து விட்டுப் பெரிய குடிகாரனைப் போல் திரிவான். பெரிய தோல் பையில் அடைத்து வைத்திருக்கும் மது முழுவதையும் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்ட குடிகாரன் போல் காணப்படுவான். இந்தக் குடிகாரத் தன்மையை அடைவதற்கு அந்தப் பைத்தியக்காரனுக்கு ஒரு செல்லாத செப்புக் காசுகூடச் செலவானதில்லை. இதுதான் உமாரைப் பற்றி அவன் உருவாக்கியிருந்த குணச் சித்திரம்.
அடுத்த நாள் காலையில் ஒரு காவற்காரன் வந்து அந்தப் பிச்சைக்காரன் இடுப்பில் தன் செருப்புக் காலால் ஒரு உதைகொடுத்தான். “அழுக்குமுட்டையின் அரசே, தங்களின் பைத்தியக்காரக் கூடாரமடிப்பவன் எங்கே திரிகிறான்?” என்று கேட்டான்.
எரித்து விடுவது போல் அவனைப் பார்த்த பிச்சைக்காரன், உயர்ந்த பதவியில்லாத ஒரு சாதாரண வேலைக்காரன் அவன் என்பதைத் தெரிந்து கொண்டு “மதம் பிடித்த உளறு வாயனே! உன்னையனுப்பியவன் யார்?” என்று பதிலுக்குக் கேட்டான்.
“உன்னுடைய பிணத்தைக் கோட்டை வாசலிலே தொங்கவிட்டுக் காக்கைகள் கொத்தித் தின்னும்படி செய்யக் கூடியவர் யாரோ, அவர்தாம் என்னை அனுப்பினார்” என்று கூறி மற்றும் ஓர் உதை விட்டான்.
“என் கூலி?” என்று அந்த உதையையும் வாங்கிக் கொண்டு பிச்சைக்காரன் கேட்டான். ஒரு வெள்ளி நாணயம் அவன் கைக்கு மாறியது. நீருற்றின் பக்கம் கையைக் காட்டி விட்டு அவன் சென்றவுடன், “உன்னுடைய புதை குழியிலே நாய்கள் வந்து மலங்கழிக்கட்டும்! கழுகுகள் உன் எலும்பைக் கவ்விக் கொண்டு போகட்டும்! ஏழு நரகத்து நெருப்புகளும் உன் உடலை எரித்துச் சாம்பலாக்கட்டும்!” என்று அந்தக் காவற்காரனைச் சபித்தான்!
நீருற்றின் அருகிலமர்ந்திருந்த உமாரை கவனித்துவிட்ட அந்த காவற்காரன், அவனருகில் சென்று, “கோட்டையிலிருக்கும் அதிகாரி உன்னை அழைக்கிறார். உடனே என் பின்னால் வரவும்” என்று உரத்த குரலில் கூறினான்.
அந்தக் காவற்காரனைத் தொடர்ந்து உமார் கோட்டையில் உள்ள முதல் முற்றத்திற்கு வந்தான். அங்கே சேணம் பூட்டிய குதிரைகளின் அருகிலே ஆயுதமணிந்த ஆறு பிரபுக்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே டுன்டுஷ் காவற்காரர்களுக்கு ஆணையிட்டபடி, இரைந்து கத்திக்கொண்டு உமாரின் கையைப் பிடித்து வெகுவேகமாகக் காவல்களைக் கடந்து அழைத்துக் கொண்டு, ஆசனங்கள் எதுவும் இல்லாத ஒரு சிறிய அறைக்குள்ளே போய்ச் சேர்ந்தான்.
“அட கடவுளே! குறிப்பிட்ட நேரம் கடந்து எவ்வளவு நேரமாகிவிட்டது. உன்னை அழைத்து வரச் சொன்னது யார் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே, ஒரு மாதிரியாக உமாரைப் பார்த்துக்கொண்டு, “அமைச்சர் நிசாம் அல்முல்க்” என்று கூறினான் டுன்டுஷ்.
உமாருடைய நாடித்துடிப்பு அதிகமாகியது. பெரும் வியப்பாக இருந்தது. உலக அமைப்பாளர் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற நிசாம் அல்முல்க் அவர்கள் இறந்துபோன சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களின் அமைச்சர். சுல்தானுடைய மகன் மாலிக்ஷாவுக்கும் அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர். சுல்தானுடைய அதிகாரத்தின் கீழே, சர்வாதிகாரியாக விளங்குபவர் என்று கூடச் சொல்லலாம். கற்றறிந்த மேதை அறிவுப்பெருங்கடல் - அவர் ஒரு பெர்ஷியக்காரர். படை தவிர மற்றுமுள்ள அதிகாரம் அனைத்தும் தன்வசப்படுத்திக் கொண்டவர். மாணவனான தன்னை அவர் அழைக்க வேண்டிய காரணம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.
“தாக்கின் கோட்டை வாசலில் நான் உன்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டேன். அது ஒரு சோதனைக்காக நடத்தியதே. நிசாம் அல்முல்க் அவர்களின் உத்திரவுப்படி உன்னைத் தொடர்ந்து கவனித்து பாதுகாவலும் செய்து வந்தேன். நீ இளைஞனாகவும் கவலையற்றவனாகவும் இருக்கிறாய். ஆனால் இந்த நேரத்தில் உன்னுடைய முடிவு ஊசலாட்டத்தில் இருக்கிறது. நிசாம் அவர்களே உன்னைச் சோதிக்கப்போகிறார்கள். ஆகையால் நீ கவனமாக இரு” என்று டுன்டுஷ் உபதேசம் செய்தான். அவன் இவ்வளவு பேசியும் உமாருக்குப் புதிர் விளங்கவில்லை. தன்னை அழைத்திருப்பது தேவையற்ற ஓர் விஷயமாகவே அவனுக்குப் பட்டது.
இப்பொழுது சுல்தானாக இருக்கும் இளஞ்சிங்கம் தன்னை, அழைத்திருந்தால் அதில் பொருள் உண்டு. அவனுடைய எண்ணப் பாதையிலே இளஞ்சிங்கம் எங்கோ தூரத்தில் இருந்தார். யாஸ்மியின் அந்த அழகிய கண்கள்தான் அருகில் இருந்தன. இப்படி அவன் எண்ணத்தை ஓட விட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஓர் அடிமை எதிரே இருந்த கனமான திரையை அகற்றினான். அவர்கள் நின்றிருந்த அறை உண்மையில் நீண்ட சபா மண்டபம் ஒன்றின் நடுப் பகுதியேயாகும். ரோஜாப்பூவின் நிறமுள்ள ஒரு கனத்த திரையால் அது அறையாகத் தடுக்கப்பெற்றிருந்தது.
சபா மண்டபத்தின், நடுச்சுவரின் எதிரில் ஒரு மேசையின் முன்னே அறுபது வயது மதிக்கத்தகுந்த ஒருமனிதர் ஏதோ, வேலை செய்து கொண்டிருந்தார். கவனமாகச் சீவி விடப்பட்ட மெல்லிய பழுப்பு நிறத்தாடி அவர் மேலில் அணிந்திருந்த பட்டாடையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அங்கு நின்ற சில மனிதர்களிடம் சுருக்கமாக ஏதோ பேசிவிட்டுக் கையில் இருந்த தாள்களைப் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் நீட்டினார். அவருடைய செயலாளர் போல் தோன்றிய அவர் அவற்றை வாங்கிக் கொண்டார்.
பிறகு எல்லோரும் அவருக்கு சலாமிட்டுவிட்டுக் குனிந்தபடி தூரத்தில் இருந்த கதவை நோக்கி நடந்தனர்.
டுன்டுஷ் உமாரை அழைத்துக் கொண்டு அவர் அருகில் போனான். எதிரில் சென்றதும், இருவரும் நிசாம் அல்முல்க் அவர்களின் முன்னே இருந்த கம்பளத்தில், மண்டியிட்டுச் சலாமிட்டு எழுந்தனர். அடர்த்தியான புருவங்களுக்குக் கீழேயிருந்த அவருடைய கண்கள் சில வினாடிகள் உமாரை ஆராய்ந்தன.
பிறகு எதிரில் இருந்த சில தாள்களை விரல்களால் எடுத்து ஒரு பார்வை பார்த்தார்.
கூடாரம் அடிப்பவனான இப்ராகீம் மகனும் பேராசிரியர் அலியின் மாணவனும் கணித நூல் பயில்பவனும் ஆகிய உமார்கயாம் என்பது நீதானே! நீ சிறுவனாக இருந்தபோது அபி இமாம் முபாரக் என்பவரிடம் தத்துவ நூல் பயின்றிருக்கிறாயா?” என்று அவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் சொல்லிக் கேட்டார். அவருடைய குரல், பொதுக் கூட்டங்களிலே நீண்ட நேரம் சொற்பொழிவாற்றக் கூடிய, ஒரு சொற்பொழிவாளருடையதைப் போலப் பெருமிதமானதாகவும், கவனத்தைத் தன்பால் இழுக்கக் கூடியதாகவும் இருந்தது.
டுன்டுஷ் உமாரை விட்டு விலகியிருந்தான். எதுவுமே பேசவில்லை.
“பேராசிரியர் அலி, உன்னிடம் ஏதோ விசித்திர ஆற்றல் இருப்பதாக எழுதியிருக்கிறார். அல்லாவின் ஆற்றலைத் தவிர வேறு எவ்விதமான ஆற்றலும் இந்த உலகத்திலே கிடையாது. ஆனால், நீ எந்த விதமான தெய்வீக சக்தியைக் கொண்டு, முன்பு இளவரசராயிருந்த நம் சுல்தான் அவர்களுக்குச் சோதிடம் சொன்னாய் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மாலங்கார்டில் நடந்த போரின் முடிவைப் பற்றியும், கிறிஸ்தவப் பேரரசரின் சாவைப் பற்றியும், புகழுக்குரிய நம் பெரிய அரசருடைய முடிவைப் பற்றியும் நீ எவ்வாறு முன்கூட்டியே சொன்னாய்? சொல்” என்றார். உமாரின் முகம் குருதியோடிச் சிவந்தது. ஏதாவது பொருத்தமான கற்பனை யொன்றைக் கூறினால் என்று யோசித்தான். கூரிய பார்வையும் கடிய குரலும் கொண்ட அவர் எந்த விதமான ஏமாற்றுதலையும் எளிதில் உடைத்துவிடுவார் என்பது தெரிந்தது.
“மேன்மை தங்கிய அமைச்சர் அவர்களே, உண்மையாகச் சொல்லப் போனால், அது அர்த்தமற்றது.”
“எது அர்த்தமற்றது? விளக்கமாகக் சொல் - அது அர்த்தமற்றதாக இருக்க முடியாது” என்று தன் பொறுமையிழந்து நிசாம் பொங்கினார்.
உமார் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். பிறகு மெதுவாக தன் திடமான குரலில் “உள்ளபடியே அது அர்த்தமற்றதுதான்! அன்றைய இரவில், படைவீரர்களின் கூடாரங்களைப் பார்வையிட்டுக் கொண்டே நடந்து சென்றேன். அப்படிச் செல்லும்போது, துருக்கிய வீரர்கள் காவல் புரிந்த ஒரு கூடாரத்திற்குச் செல்ல நேரிட்டது. அவர்களுடைய பேச்சும் எனக்குப் பெரும்பாலும் புரியவில்லை; அங்கிருந்தவர் இளவரசர் என்றும் எனக்குத் தெரியாது. அவருடன் கூட இருந்த அறிஞர்கள், மூடத் தனமான ஒருதவறு செய்தார்கள். ஏதோ ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்து இதுதான் வடமீன் என்றார்கள். அவர்கள் கூறியது தவறு என்ற விளக்கப் போன என்னைக் குறி கேட்டதினால் திடீரென்று என் உள்ளத்தில் தோன்றிய கற்பனையை அவர்களுடைய ஆடம்பரப் போக்கிற்குத் தகுந்தபடி நான் அளந்து விட வேண்டியதாயிற்று. அதுவே நான் கூறிய அர்த்தமில்லாத ஜோதிடம்! வேறு ஒன்றுமில்லை!”.
“அர்த்தமில்லாத சோதிடம் எப்படி மூன்று விஷயங்களிலும் பலிக்க முடியும்? போரின் முடிவும், இரண்டு பேரரசர்களின் சாவும், கற்பனை ஜோதிடத்தின் மூலம் எப்படி நிறைவேறும். நீ இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறாய்?”
உமார் சிறிது நேரம் சிந்தித்தான். “மேன்மையுள்ள பெரியவரே; நான் எப்படி இதற்குக் காரணம் கூற முடியும் அல்லாவின் விருப்பம் இல்லாமல் எந்தவிதமான செயலும் நடப்பதில்லை. இருந்தும் இது நடந்திருக்கிறது. நான் என்ன செய்வேன்?”
உண்மை. அல்லாவின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை! ஆனால் உன்னை அவ்வாறு குறி சொல்லத் தூண்டியது எது என்பதையே நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ரோமானியப் பேரரசர் பிறந்த தேதியும் நேரமும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது என்பது உண்மைதான்! அவர் பிறந்த ஜாதகத்தை நீ குறித்திருக்கவோ, சோதிடம் கணித்திருக்கவோ முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நம் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய ஜாதகத்தை நீ எப்படிக் கணித்தாய்?”
நிசாம் அவர்களுடைய பேச்சு உமாரை ஒரு பரிசோதனைக்குரிய உயிரற்ற பொருளாக மதித்துப் பேசுவது போலிருந்தது. சுற்றி வளைத்து தப்பித்துக் கொள்ள முடியாதபடி பேசும் அவருடைய ஆற்றலை வியந்தபடி டுன்டுஷ் வாயைப் பிளந்து கொண்டிருந்தான்.
“நான் அதைக் கணிக்கவில்லையே!” என்று உமார் அழுத்தந்திருத்தமாகக் கூறினான்.
“ஆனால் அப்படிப் பட்டவற்றைக் கணிக்கக்கூடிய ஆற்றல் உன்னிடம் இருக்கிறதல்லவா? "உண்மை! இதே ஆற்றலுடன் இன்னும் ஐநூறு பேர் இருக்கிறார்கள்!”
“இருக்கலாம், ஒரே ஜோதிடத்தில் மூன்றுகுறிகள் கூறியவர்களைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மேலும் பேராசிரியர் அலி உன்னிடம் ஓர் அதிசய ஆற்றல் இருப்பதாக எழுதியிருக்கிறார்”.
டுன்டுஷ் அதை அமோதிப்பவன் போல் தலையை ஆட்டினான். உமார் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.
“இப்ராஹீம் மகனே! உன் சுல்தான் மாலிக்ஷா அவர்கள் தன் தந்தை இறந்ததிலிருந்து, உன்னைக் காணவேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே! அது உனக்குத் தெரியாதா?”
“தெரியாது!”
அவர்கள் இருவரும் உமாரைக் கவனித்தார்கள். நிசாம், அவனைப் பரிசோதனை செய்ததில் திருப்தி அடைந்தவர் போல் காணப்பட்டார். ஆனால் அதைப்பற்றி எதுவும் வெளிக்காட்டிப் பேசவில்லை.
“உமார்! அரச சபையில் இருக்க வேண்டிய வயது இன்னும் உனக்கு வரவில்லை, அதுவும் உன்னுடைய சோதிடமானது அர்த்தமற்றதாக இருப்பதால் சபையின் முன்னாலே நீ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். சுல்தான் மாலிக்ஷா அவர்கள் உன்னை அன்போடு வரவேற்பார் என்பதில் ஐயமில்லை. அதை நான் உன்னிடம் மறைக்கவும் விரும்பவில்லை. ஆனால் என்னிடம் பேசியதைப் போல், ஒரு வார்த்தை அவருடைய சபையில் நீ சொல்லிவிட்டாலும், நீ அவமானப் படுத்தப் படுவாய் அல்லது துன்பப்படுத்தப்படுவாய். உன்னுடைய இந்த விசித்திர சோதிடத்திற்காக, நீ சுல்தான் அவர்களிடம் என்ன வெகுமதி கேட்கப் போகிறாய்?”
நிசாம் இந்தக் கேள்வியை திடீரென்று கேட்டதும் உமார் திகைத்துப் போனான். வாய்க்கு வந்தபடி சொல்லி வைத்த அந்தச் சோதிடம் தலையின் மேல் வீழக் காத்திருக்கும் அரவைக் கல்லாக மாறி விட்டதே! என்று வருந்தினான். “அரச சபையில் நான் என்ன செய்வதற்கிருக்கிறது? எனக்கு வெகுமதி எதுவும் வேண்டாமென்று கதறினான். “சரி உனக்கு வெகுமதி எதுவும் தேவையில்லை என்றால் அதைப்பற்றிக் கவலையில்லை. உன் உடலுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவும், உன் ஆராய்ச்சிக்கு ஆதரவு கொடுக்கவும், என்னை ஆதரவாளனாக ஏற்றுக் கொள்கிறாயா” என்று தொடர்ந்து கேட்டார் அமைச்சர் நிசாம்.
“நன்றாக ஒப்புக் கொள்கிறேன்” என்றான் உமார். அவன் கண்களிலே மகிழ்ச்சியின் ஒளி மலர்ந்தது. அந்தக் கிழவனுக்கு அவனுடைய உள்ளம் நன்றி கூறியது. ஞானக் கண்ணாடியின் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, கடந்த சில தினங்களாக அவன் பிச்சைக்கார வாழ்க்கை நடத்தி விட்டான். அது போதுமென்று தோன்றியது எப்படியாவது யாஸ்மியுடன் இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்து விட்டால் நல்லது என்று கூடத் தோன்றியது.
“உனக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவற்றையெல்லாம் சொல்”
“ஓர் ஆராய்ச்சிக் கூடம், வான கோளங்களை அளக்கும் கருவி ஒன்றும், அறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையும் வேண்டும்.”
“இன்னும் வேறு என்னென்ன வேண்டும்?”
“மெருகு தீட்டிய வெண்கல பூகோள வட்டம்; அதைத்தொட்டுக் கொண்டிருக்கும் வளையம்; நட்சத்திரம் பார்க்கும் விளக்கு; இவற்றுடன் ஒரு நீர்க்கடிகாரம்.”
“சரி, இந்த ஆராய்ச்சிக் கூடத்தை எந்த இடத்திலே வைத்துக் கொள்ளப் போகிறாய்?”
“அறிவும் மேன்மையும் மிக்கவரே! பழங்காத்தில் நிசாப்பூர் நகரைச் சுற்றிப் பல காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பல வீதியோரங்களிலே இன்னும் கவனிப்பாரற்று நிற்கின்றன. ஆற்றங்கரையோரத்திலே, இடுகாட்டின் ஓரத்திலே அம்மாதிரியான காவல் கோபுரம் ஒன்று இருக்கிறது. அதைப் பல இரவுகள் நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதைச் சிறிது பழுது பார்த்து அதற்கொரு பூட்டுஞ்சாவியும் கொடுக்க வேண்டுகிறேன். சிலநல்ல ஜமுக்காளங்களும், தலையணைகளும், சீனத்துப் பட்டுத் திரையொன்று, வெள்ளித் தண்ணீர் குடம் ஒன்றும் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று உமார் கூறினான்.
“வல்லாஹி! வான நூல் ஆராய்ச்சிக்கு இத்தனை பொருள்கள் தேவைப்படுவது இல்லையே. இவையெல்லாவற்றையும் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், அதற்கொரு கட்டுப்பாடு இருக்கிறது. அது என்னவென்றால், உன்னுடைய மாலஸ்கார்டு சோதிடம் அர்த்தமற்றது என்று யாருக்குமே நீ சொல்லக்கூடாது.
“நான் சொல்லவில்லை?”
“அப்படி யாரும் கேட்டு நீ சொல்ல வேண்டி நடந்து விட்டால், அது கடவுளின் அருள் வாக்கு என்று சொல்லிக் கொள்ளலாம்” என்று டுன்டுஷ் கூறினான்.
“அப்படியே! நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்று உமார் மகிழ்ச்சி பொங்கக் கூவினான்.
“ஆமாம், பட்டுத் திரையும், வெள்ளித் தண்ணிர்ப் பானையும் கேட்டாய், உணவைப் பற்றியும் வேலையாட்களைப் பற்றியும் கேட்கவில்லையே. சரி! இந்தா இதை வைத்துக் கொள்” என்று பணம் அடங்கிய சிறுபையொன்றைக் கொடுத்து, டுன்டுஷை உமாருக்காக இரண்டு வேலைக்காரர்கள் சேர்த்துக் கொடுக்கும்படி கூறினார்.
உண்மையில் உமார் தன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பூப் போட்ட அந்தப் பணப்பையை ஒருமுறை புரட்டிப் பார்த்தான். இதுவரை அவன் இவ்வளவு பணம் கண்டதில்லை. அவனுக்கு ஒரு விதமான இன்ப உணர்வு பெருக்கெடுத்தது.
“அந்தக் கோபுரம் என்வசம் எப்பொழுது கிடைக்குமென்று அறிந்து கொள்ளலாமா?” என்று உமார் கேட்டான்.
நிசாம் டுன்டுஷைத் திரும்பிப் பார்க்க, “நாளை நடுப்பகல் நேரத்துக்குள் எல்லாம் தயார் செய்து விடுகிறேன்” என்றான்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யக்கூடிய அதிசய வித்தையின் தன்மையை உமார் உணர்ந்து கொண்டான். “அருளாளனாகிய அல்லாவின் புகழ் ஓங்குக!” என்று கூவித் தலைகுனிந்து நிசாமை வணங்கிச் சலாமிட்டு விட்டு உமார் வெளியே கிளம்பினான். “பணப் பையை மறந்து விட்டாயே!” என்று டுன்டுஷ் குசுகுசுவென்று கூறியதும் திரும்பவும் போய் அதைக் கையில் எடுத்துக் கொண்டு கதவருகிலே சென்றதும் டுன்டுஷ் சொல்லிக் கொடுத்தபடி, மறுபடித் திரும்பி சலாம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.
டுன்டுஷம் நிசாமும் மட்டும் தனியே யிருந்தார்கள்.
“ஐயா, இவன் தங்கள் கைக்கருவியாக உபயோகப் படுத்துவதற்க்கு சரியான ஆள். இந்த நிசாப்பூர் முழுவதும் தேடினாலும் இவனைபோல ஒருவன் கிடைப்பது அபூர்வம். அதிசயமான அவனுடைய ஆற்றலும், விசித்திரமானமுறையில் உண்மையை ஒப்புக் கொள்ளும் களங்கமற்ற மனப்பான்மையும், வான நூல் ஈடுபாடுள்ள அவன் போக்கும் நமக்கு மிக மிகப் பயன் படக்கூடியன” என்று டுன்டுஷ் கூறினான்.
“அவனுடைய இரகசியத்தை அறிந்து கொள்ளவே நான் விரும்பினேன். ஆவனிடம் எந்த விதமான இரகசியமோ, அதை மறைக்கக்கூடிய தன்மையோ கிடையாது” என்று அமைச்சர் நிசாம் தம்முடைய சிந்தனையின் முடிவைத் தெரிவித்தார்.
“இரகசியமா? அப்படி எதுவும் அவனிடம் கிடையாது. அவன்பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை அவன் சொல் ஒவ்வொன்றும் உண்மையின் ஆதாரங்கள்! அவனை உண்மையின் அத்தாட்சி, என்றே அழைக்கலாம். அவனுக்கு ஒரு பேராசிரியருடைய உடுப்புக்களை அணிவியுங்கள். தெய்வீக அருள் வாய்த்தவர் போல் நடந்துகொள்ளும்படி அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதிகம் பேசாத அமைதி உடையவனாக நடந்து கொள்ளும்படி கூறுங்கள்! இந்தப் பாடங்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சியடைந்த பிறகு சுல்தான் மாலிக்ஷா அவர்களிடம் அழைத்துச் சென்று “மாலஸ்கார்டு போர்க்களத்தில் குறிசொல்லிக் கூடார மடிப்பவர் உமார் இதோ இருக்கிறார். அல்லாவின் அருட்பெருங்கருணையினால், யான் அரும்பாடுப் பட்டுத் தேடிக் கொண்டு வந்த செல்வம் இதோ இருக்கிறது” என்று கூறுங்கள். ஆடும் அழகு மங்கையின், பூவினும்மெல்லிய பொற்பாதங்களுக்குப் போடக் கிடைத்த பொருத்தமான மிதியடி போல இவன் நமக்குக் கிடைத்திருக்கிறான்” என்று நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவனான தந்திரம் வல்ல டுன்டுஷ் தெளிவு படக் கூறினான்.
“இருந்தாலும் அந்த இரகசியம், கண்ணுக்குத் தெரியாத ஒரு தேவதையின் அருளாக இருக்கலாம். இது போன்ற மனிதர்களுக்கு யாவும் தெரியும். ஆனால் தங்களுக்கு எப்படி அது தெரியவருகிறது என்ற விஷயம் மட்டும் தெரியாமல் இருக்கும்” என்றார் அமைச்சர் நிசாம்.
“உண்மை! உண்மை! தேவதைகளும் அல்லாவின் ஆணைக்கு அடங்கியவைதானே?”
“அவனுடைய அற்புதச் செயலான சோதிடத்திற்கு வேறு எந்தக் காரணமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று மீண்டும் நிசாம் அழுத்தந் திருத்தமாகக் கூறினார்.
“உண்மை! உண்மையிலும் உண்மை” என்று ஒத்துப் பாடினான் டுன்டுஷ். அவனுக்கு அற்புதச் செயல்களில் எந்த விதமான நம்பிக்கையும் கிடையாது. நடந்ததாகச் சொல்லப்படுகின்ற அற்புதச் செயல்கள் அனைத்தும் வெறும் கட்டுக் கதைகள் என்பது அவனுடைய முடிவு. உமார் மீண்டும் சோதிடம் கூறத் தொடங்கி, அந்தச் சோதிடமும் பலிக்குமானால் என்ன ஆகும் என்று சிறிது நேரம் சிந்தித்தான். என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது! அவன் என்ன சொன்னாலும் இன்னொருமுறை பலிக்கப் போவதேயில்லை. உமார் கூட அப்படி எதுவும் பலிக்காது என்று உறுதியாகக் கூறிவிட்டான். கொஞ்ச நஞ்சம் அற்புதச் செயல்களில் அரைகுறை நம்பிக்கை வைத்திருக்கும் நிசாம் கூடப் பாதியளவு நம்பிக்கை யற்றவராகவேயிருக்கிறார். சே! சே! இந்த மாதிரியான விஷயங்களுக்கும் அதிசய நம்பிக்கைகளுக்கும் நம் வேலைக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லை; என்று டுன்டுஷ் தனக்குள் முடிவுகட்டிக்கொண்டான். தனக்கு உளவு கூறிய அந்தப் பிச்சைக்காரனையனுப்பி, எச்சரிப்பாக இருக்கக் கூடியவர்களாகவும், நம்பிக்கையான ஒற்றுச் சொல்லும் உளவாளிகளாகவும், கணவன் மனைவியாக உள்ளவர்களாகவும் உள்ள இரண்டு வேலைக்காரர்களை, உமாரின் கோபுரத்தில் வேலை செய்வதற்கு அமர்த்திவரும்படி அனுப்பினான்.
நிருற்றிலே, தன் தண்ணிர்ப் பானையை நிரப்பிக் கொண்டிருந்த யாஸ்மியின் காதிலே ஓர் இன்பகீதம் இசைத்தது. ஆம் உமார் தன் உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தை அவளிடம் கூறிக் கொண்டிருந்தான்.
“என் இதயப் பூவில் வீற்றிருக்கும் இன்பமங்கையே, உனக்கு இடமளிக்கக் கூடிய இடம் ஒன்று எனக்குக் கிடைத்து விட்டது. மதுவினும் இனிய உன் உதடுகளுக்கு மதுவில் ஊறிய திராட்சைப் பழங்களும், பசியைத் தணிக்கப் பலவிதமான உண்டிகளும், கிடைக்கும்! அவை மட்டுமல்ல, என்னருகிலேயே நீ என்றும் இருப்பாய்!”
“அது பாழடைந்த கோபுரம், ஆயிற்றே?” என்றாள் யாஸ்மி.
“பாழடைந்த மண்டபமானாலும் நீ பக்கத்திலே யிருந்தால், பாதி ரொட்டிதான் கிடைக்கு மென்றாலும் கூட, அரண்மனைச் சுல்தானைக் காட்டிலும் நான் அதிக இன்பம் அடைவேன்” என்றான் உமார்.