உமார் கயாம்/15. உதட்டோரம் மதுவோடவே உளம் நாடும் கவி பாடுவேன்
டுன்டுஷ் தன் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான். ஆற்றங்கரையில், புதைகுழிகள் நிறைந்த அந்த இடுகாட்டின் அருகிலே இருந்த அந்தப் பழங்காலத்துப் பாழடைந்த கோபுரம் பழுது பார்க்கப்பட்டது. உமாரின் கையில் சாவி மறுநாள் மாலை ஒப்படைக்கப் பட்டது. அதன் பிறகும், பல நாட்கள் பழுதுபார்க்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. தச்சு வேலைக்காரர்களும் கொத்துவேலைக்காரர்களும், கோபுரத்தை அழகுறச் செய்தார்கள். சுவர்களுக்கெல்லாம் வெள்ளையடிக்கப்பட்டது. கீழ்த் தளத்தின் தரையிலே ஒரு பெரிய மிதியிருப்பு ஒன்றை விரிக்கும்படி உமார் ஆணையிட்டான். அந்தக் கீழ்த் தளம்தான் விருந்தினரை வரவேற்கப்படும் கூடமாக உபயோகிக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தான்! இரண்டாவது தளத்தில் மிக அழகான தரை ரிப்பு ஒன்றை விரிக்கச் செய்தான். சீனத்து வண்ணப் பட்டுத்திரை யொன்றை அந்தக் கூடத்தின் இடையிலே தொங்கவிட்டான். அதிலே பறக்கும் நாகத்தின் படம் நடுவில் கொடுக்கப்பட்டிருந்தது. மின்னி யொளிவிடும் தங்கச் சரிகைக் கரையுடைய அந்தப் பட்டுத் திரையின் பின்னாலே அவனுடைய படுக்கையும் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய, சந்தனக் கட்டையால் செய்யப்பட்ட அலமாரி ஒன்றும் வைக்கப்பட்டன. அந்த அலமாரியிலே அவனுடைய ஆடைகளையும் பிற பொருள்களையும் வைத்துக் கொண்டான்.
மூன்றாவது தளத்தில், சில மேசைகளும், புறாக் கூடுகள் போன்ற அமைப்புள்ள அலமாரிகளும், இருந்தன. இந்தத் தளமே அவனுடைய ஆராய்ச்சிக்கூடமாக விளங்கும். மேசைகளில் வேலைகள் நடக்கும். கூடுள்ள அலமாரியில் கையெழுத்துப் படிகள் வைக்கப் பெறும். அவன் கேட்டிருந்த கருவிகள் முழுவதும் வந்து சேரவில்லை. ஏனெனில் அவை நிசாப்பூரில் கிடைக்கக்கூடிய சாதாரணக் கருவிகள் அல்ல. பாக்தாது தேசத்திலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்திருப்பதாக டுன்டுஷ் கூறினான். நிசாம் அல்முல்க்கின் அன்பளிப்பாக ஏராளமான புத்தகங்களை டுன்டுஷ் கொண்டு வந்திருந்தான்; அவை யாவும் அலமாரிகளில் வைக்கப்பட்டன.
ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற எண்ணமே உமாருக்கு அப்பொழுது ஏற்படவில்லை, யாருமில்லாத போது யாஸ்மியை அழைத்து வந்து அவளை ஆச்சரியத்தால் திணறடிக்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்தது. பெரும்பாலும் கோபுரத்து வாசல் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு நிசாப்பூர்க் கடைத் தெருக்களையும் அங்காடிகளையும் சுற்றிவந்தான். கையிலிருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் கடைகளிலே அள்ளியள்ளிக் கொடுத்தான். அதற்குப் பதிலாக, தன்னை மணம்புரிந்த பிறகு, யாஸ்மி உடுத்திக் கொள்வதற்காகப் பலவிதமான பட்டாடைகளை வாங்கினான். அவளுக்கு மிகவும் பிடித்தமான துல்லியமான வெண்பட்டுத் துகில்களை ஏராளமாக வாங்கினான். சீனியில் பதஞ்செய்யப்பட்ட பழங்கள் அடங்கிய பீங்கான் சாடிகளை வாங்கினான். மணங்கமழும் புகை எழுப்பும் பலவிதப் பொடிகளையும், தெளிந்த வானம் போன்ற நிறமுடைய நீலமணிக் கற்கள் அடங்கிய வெள்ளிப் பெட்டியொன்றும் வாங்கினான். கடைசியாக யாஸ்மியை அழைத்து வந்து இந்த வெகுமதிகளையெல்லாம் காண்பித்த போது, “ஆ! எல்லாம் மாய வித்தையாக இருக்கிறதே! இவ்வளவும் எனக்கா?” என்று யாஸ்மி பூரித்துப் போனாள்:
“அப்படியானால் நீ பெரிய மாயக்காரிதான். என் இதயத்தைக் கவர்ந்து விட்டாயே!”
யாஸ்மியின் மெல்லிய கரங்களைப் பிடித்து அவற்றிலே அவளுக்காக வாங்கிவைத்த வளையல்களை உமார் மாட்டினான். தரையில் விரிக்கப் பட்டிருந்த அந்தப் பெரிய விரிப்பையும், பட்டுப்படுதாவையும் அதிலேயிருந்த பறக்கும் நாகப்பாம்பையும் அகன்று விரிந்த தன் அழகிய கண்களால் ஆச்சரியத்துடன் யாஸ்மி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அவிழ்த்துவிட்ட கூந்தல் மார்பிலே புரண்டு கொண்டிருந்தது. உமார் தன் முரட்டுக் கைகளால், அந்த மெல்லிய கரிய மென்மையான கூந்தலை ஒதுக்கிவிட்டான். அப்படி ஒதுக்கிவிடும் போது அவனுடைய கைவிரல்கள் அவள் கழுத்தோரத்திலே நகர்ந்துவர, தொண்டையிலே துடித்துக் கொண்டிருக்கும் நாடியோட்டத்தை யுணர்ந்தன. திடுமென்று தோன்றிய இந்த இன்பமான காட்சிகளின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவளுடைய மனம் வேதனையடைவது போல் இருந்தது.
கூடத்திலேயிருந்த அத்தனை புத்தகங்களையும் பார்த்துவிட்டு, “இத்தனை புத்தகங்களும் நீ படிக்கிற புத்தகங்களா? நான் இல்லாத போது, இவற்றைத்தாம் படித்துக் கொண்டிருப்பாயா?” என்று கேட்டாள். அவளுக்கு அவனைப் பிரியும் போதெல்லாம் பயமாக இருந்தது. அவனைப் பிரிந்திருக்கும் போது, நீண்டு தோன்றும் காலமும், சிந்தனையில் மூழ்கி அமைதியான சூழ்நிலையில் இருக்கும் மனமும், எப்பொழுது அவனோடு என்றும் அருகில் இருக்கக்கூடிய காலம் வருமோ என்ற ஏக்கமும் எல்லாம் சேர்ந்து அவளை அப்படியொரு காலம் விரைவில் வந்து விடுமா என்று சற்று ஐயத்தோடு நினைக்கும்போது அவளுக்குப் பயமாகவே யிருந்தது! தான் அவனருகில் இல்லாத போது அவன் என்னென்ன செய்கிறான் என்பதையறிய அவளுக்கு ஆவலாயிருந்தது. "அத்தனை புத்தகங்களும் படித்து விடமுடியுமா? கவிதைகள் நிறைந்த ஒரு சிறு புத்தகம் மட்டும் நான் படித்து முடித்திருக்கிறேன்” என்றான் உமார்.
கவிதைகள் என்றதும் யாஸ்மிக்குப் பழைய காலத்துக் காவியங்களும் அவற்றிலே கவிஞ்ர்கள் பண்டைக்கால அரசர்களைப் பற்றியும், குதிரைகளைப் பற்றியும் போர்களைப் பற்றியும் பாடி வைத்திருப்பதாகக் கேள்விப் பட்டது நினைவுக்கு வந்தது.
“அந்தக் கவிதைகளிலே காதலைப் பற்றி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“என் இதயத்தின் மூலையிலே இருக்கின்ற ஒரு சிறு குண்டுமணி அளவு காதலுக்குக்கூட அந்தப் புத்தகத்திலேயுள்ள காதல் ஈடாகாது” என்று கூறிய உமார், அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பி அவளுடைய கண்களுக்குள்ளே, தன் கண்களைச் சொருகினான், அந்தக் காட்சி அவளுக்கு நினைக்கும் போதெல்லாம் இன்பவேதனையை யுண்டாக்கிக் கொண்டேயிருந்தது.
“வெட்கமா யிருக்கிறது” என்று கூறி விலகிக் கொண்டாள்!
“யாஸ்மி! தோழிமார்களால் அழகு செய்யப்பட்டிருக்கும் பட்டத்து ராணியைக் காட்டிலும் நீ அழகாக இருக்கிறாய்”
“அதுகூடப் புத்தகத்தில் இருக்கிறதா?”
“இல்லை! என் இதயப் புத்தகத்திலேதான் அப்படி எழுதியிருக்கிறது”
“சரி! என் இதயத்திலே என்ன இருக்கிறது? சொல் பார்க்கலாம்?”
“உன் இதயத்திலா? இந்த உமாரின் வேதனைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத, அலட்சிய மனப்பான்மையும் கொடுந்தன்மையும்தான் இருக்கின்றன”
யாஸ்மிக்கு உமாரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருந்தது. தன் காதலனுக்கு உலகத்தில் மற்ற எவருக்கும் இல்லாத ஒரு பேராற்றலும், அறிவும் இருப்பதை எண்ணி அவள் பெருமைப் பட்டாள். பண்டைக்காலத்து ஞானிகளின் அறிவும் அவர்களின் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் சக்தியும் அந்தக் கவிதைகளைக் காட்டிலும் அதிக இனிமையுள்ள இசையுடன் அவன்பேசும் தன்மையும் எண்ண எண்ண அவளுக்குப் பெருமையாக இருந்தது. பாழடைந்து கிடந்த ஒரு கோபுரத்தை அவளுக்காக அவன் சொர்க்கமாக மாற்றியமைத்து விட்டான். ஆனால், பெருமைக்குரிய இந்த எல்லா விஷயங்களைக் காட்டிலும் அவன் சாதாரண உமாராக, அவளைக் காதலிக்கும் உமாராக இருப்பதுதான் அவளுக்கு அதிகமான பெருமையைக் கொடுத்தது. கைகளை அகலமாக விரித்தபடி அருகில் இருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி, அவனைத்தன் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே, “உண்மையாகச் சொல்! நான் கொடுமைக்காரியா? உன்னை அலட்சிப் படுத்துகிறேனா?” என்று கேட்டாள்.
அவள் பார்வையால் உண்டாகிய மயக்கத்தில் குடிகாரனைப் போல், அவளைப் பிடித்துக் கொண்டு அவள் மேல் சாய்ந்தான் உமார்.
அந்தக் காதல் கோபுரத்துக்கு ஏதாவது பெயர் வைக்க வேண்டுமென்பது மிக முக்கியமாக யாஸ்மிக்குத் தோன்றியது. புதை குழிகளில் உள்ள ஆவிகளெல்லாம் அந்தக் கோபுரத்தில் வந்து கூடுவதாக நிசாப்பூரிலே மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் காதலன் அருகில் இருக்கும் போது எந்தவிதமான ஆவிகளுக்கும் யாஸ்மி சுண்டு விரல் முனையளவுகூடக் கவலைப்பட்வில்லை பயப்படவுமில்லை. அதற்கு ஏதாவது பெயர். நல்ல பொருத்தமான பெயர் வைக்க வேண்டுமென்பது அவளுடைய ஆவலாக இருந்தது. உமார் ஒவ்வொரு பெயராகச் சொல்லி வந்தான், அவளுக்கு ஒன்றுகூடப் பிடிக்கவில்லை.
“அருளின் இருப்பிடம்”
“சொர்க்க மகால்”
“தேவதையின் முகாம்”
இந்தப் பெயர்கள் எதுவும் யாஸ்மிக்குப் பிடிக்கவில்லை. நல்லதேவதையொன்று அங்கே இறங்கி வந்து, அவர்களிடையிலே காதலை உண்டாக்கி அருள்புரிந்தது என்று யாஸ்மி நம்பினாலும்கூட அவளுக்கு இந்தப் பெயர்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை.
“நீ நட்சத்திரங்களின் தன்மையை ஆராய்ந்து மற்றவர்களின் விதிப்போக்கை அறிவதற்குச் சோதிடம் பார்க்கத்தானே போகிறாய்! ஆகையால், இதற்கு “விண்மீன் வீடு” என்று பெயர் வைக்கலாம்” என்றாள் யாஸ்மி.
உமார் உன்னிப்பாக அவளைக் கவனித்தபடி “நான் சோதிடம் சொல்கிறேனா? யார் உனக்குச் சொன்னார்கள்?” என்று கேட்டான்.
“சுல்தான் மாலிக்ஷா அரசாட்சிக்கு வருவார் என்று சோதிடம் சொன்னது நீதானாமே?” உனக்கு எல்லாம் தெரியுமாமே... நிசாப்பூர் தெருக்கள் எல்லாம், இந்த நாடெல்லாம் தான் பேசிக் கொள்கிறார்கள்!” என்று யாஸ்மி சொன்னாள். ராஜாக்களின் விதியைக்கூட அறியும் ஆற்றல் உள்ளவன் அவன் என்பதில் யாஸ்மிக்குப் பெருமையாக இருந்தது. இந்தக் கோபுரத்தில் அவன் இடம் பிடித்தது கூட, சோதிடத்தின் மூலம் மக்களின் தலைவிதியை அறிந்து கொள்வதற்காகத்தான் என்றும் அவள் எண்ணினாள். வானநூல் ஆராய்ச்சி செய்பவன் சோதிடம் கூறுவதில் தேர்ச்சி பெறுவான் என்பது அவள் கொண்டிருந்த முடிவு ஆகும்.
“எனக்குத் தெரியும்! அதனாலென்ன?” என்று கேட்டான் உமார்.
“அதனால் என்னவா? அடுத்த மாதத்திற்குள்ளே நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்யும் கருவிகள் எல்லாம் உனக்கு வந்துவிடும். நீயும் வேலை தொடங்கிவிடுவாய் பிறகு, பணம் நிறையக்கிடைக்கும் கிடைத்தவுடன் என் தந்தையிடம் வந்து எனக்குள்ள பெறுமதிப் பணத்தைக் கொடுத்துப் பெண் கேட்டாய், அதன்பிறகு நாம் மணக்கோலத்தில் சாட்சிகளின் முன்னே வீற்றிருப்போம்!”
நிசாமிடம் வாங்கிய பணம் முழுவதையும் பொருள்கள் வாங்குவதில் செலவழித்துவிட்டோமே. இல்லாவிட்டால், இப்பொழுதே பெண் கேட்டிருக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது உமாருக்கு. “இந்தப் பெண்ணின் பெறுமதி எவ்வளவோ? அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியுமோ முடியாதோ?”
“முட்டாளே! நிசாம் அல்முல்க் அவர்களுடைய வானநூல் சாஸ்திரியிடம், பணத்துக்காகவா பேரம் பேசுவார்கள், நீ வந்து கேட்டாலே போதும். நல்ல சம்பந்தம் என்று கொடுத்ததை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பார்கள். அது நடக்க வேண்டும். என்னுடைய இந்த வீட்டிலே நான் வந்து தங்கவேண்டும். உன்னுடனேயே நான் எப்பொழுதும் இருக்கவேண்டும். இது நடக்காவிட்டால் என்னால் உயிர்வாழ முடியாது” என்றாள் யாஸ்மி.
“அப்படியானால், இப்பொழுது முதலே இங்கேயே இருந்துவிடு”
“அது எப்படி முடியும்? திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணையடைவது திருட்டுக்குச் சமமாயிற்றே! அவ்வாறு பெண்ணைக் கடத்திவருவது பெரும் பாவமாயிற்றே! திருமணத்தின் மூலமாகத்தான் நீ என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அந்த நிலை வெகுவிரைவில் வரவேண்டுமென்று அளவற்ற அருளாளனும் அன்பின் இருப்பிடமுமான அல்லாவின் கருணையை நாடித்தினமும் வேண்டித்தொழுது வருவேன். இதுவே என் இன்பம். இதைத்தவிர வேறு இன்பம் எதுவும் எனக்குத் தேவையில்லை!
மறுநாள் யாஸ்மி வரவில்லை பச்சைப் புல்வெளியும், கல்லறைகளின் மேல் பூத்திருந்த காட்டுமலர்ச் செடிகளும் காலைக் கதிரவன் ஒளியில் அழகுடன் விளங்கின. உள்ளத்தில் அமைதியில்லாமல், கையில் கவிதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை எடுத்துப்படிக்க முயற்சித்தான்.
பச்சைப் புல்வெளியிலே பூத்தமலர்ச் செடிகளைப்போல, புத்தகத்திலே நான்கு நான்கு வரிகளாகக் காட்சி தந்த அந்தக் கவிதைகள் தோன்றின. ஒரு வெள்ளைத் தாளிலே, அவன் உள்ளத்திலேயிருந்து புறப்பட்ட கீழ்க்கண்ட வரிகளை அவன் எழுதினான். இளவேனில் ஒளிமாயமே
இன்பப்புயல் வெளிமீலே.
விளையாடும் திரு நாளிலே
விழைவோ டென் மனமோகினி.
உளம் நாடும் கவி பாடுவேன்
உதட்டோரம் மது வோடவே.
இளந் தெய்வ அருள் யாதுதான்
என்னின்ப உலகாகுமே!
அன்புக்குரிய யாஸ்மியைப் பற்றி அவன் இதயத்தின் அடித்தளத்திலேயிருந்து கிளம்பிய இந்தப் பாடலை அவள் படித்தால் எத்தனை மகிழ்ச்சியடைவாள்! அவளைப் பற்றியே அவளுக்காகவே பாடப்பட்ட இந்தக் கவிதை சாதாரணமானதுதான்.
காதலைப்பற்றிய அழகு வருணனை யாதும் அவன் எழுதிவிடவில்லை. அவனுடைய எண்ணத்தில் எழுந்த கருத்தைத்தான் நான்கு அடிகளாக எழுதி வைத்திருந்தான். இருந்தாலும் யாஸ்மிக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும், அடுத்த நாள்வரும்போது அவளிடம் காண்பிக்க வேண்டுமென்று இருந்தான்.
ஆனால், யாஸ்மி, அடுத்த நாளும் வரவில்லை; அதற்கடுத்த நாளும் வரவில்லை!