உமார் கயாம்/22. அனாதைகளின் கூட்டத்தில் ஆருயிரின் மாதரசி
அலெப்பா நகரில் உள்ள ஜம்மீ மசூதியின் அருகே இருந்தக் குளத்தின் அருகிலே, மாலைத் தொழுகை நேரத்திலே, ஆறு பிச்சைக்காரச் சாமியார்களும் ஒரு கூனனும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் பழைய போர்வைகளைக் கொண்டு தங்கள் உடலைச் சுற்றியிருந்தார்கள். பிச்சைக்காரர்களுக்கே உரிய கந்தைத் துணிகளை உடுத்தியிருந்தார்கள்.
அந்தக் கூணன், ஒரு கைத்தடியின்மேல் சாய்ந்து கொண்டு, தன்னுடைய வளைந்த கைகளை நீட்டி, வழியில் வருவோர் போவோரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த வழியாகப் பலப்பல விதமான மனிதர்கள் சென்று கொண்டிருந்தார்கள். படோடோபமான உடையணிந்தவர்களும், முக்காடிட்ட முகங்களுடன் அருகே நெருங்கி ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும், தாங்கள் வாங்கியுள்ள சாமான்களைப் பற்றியும், துணிமணிகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டு செல்லும் பெண்களும், தங்கள் தம்பிமார்களை முதுகிலும் இடுப்பிலும் தூக்கிக்கொண்டு கிடுகிடுவென்று ஓடும் சிறுமிகளும் இப்படிப் பலப் பலர் சென்றனர். கழுத்தில் மணி கட்டிய ஒரு கழுதையுடன் தொழுகைக்கு வந்த ஒரு பணக்கார அராபியன்தன் கையில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக எண்ணி மற்றொரு பையில்போட்டுக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்துவிட்ட கூணன், “ஏழைகள்! ஏழைகள் கருணைக்காக ஏங்குகிறார்கள். ஆண்டவன் பெயரால் அருள் காட்டுங்கள்! அன்பு காட்டுங்கள்! ஆதரவு தாருங்கள்!” என்று கூவினான்.
“இழவு பிடித்தவர்கள்” என்று முணுமுணுத்துக் கொண்டே, எண்ணிய பணத்தை ஒரு பெரிய பையில் போட்டு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான் அந்தப் பணக்கார அராபியன்.
“கருணை காட்டுங்கள்! அல்லாவின் பெயரால் ஆதரவில்லாத ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு அருள் புரியுங்கள்! என்று மீண்டும் கத்தினான் கூனன்.
தன்னுடைய நீண்ட அங்கி தரையிலே உள்ள தூசியிலே புரண்டு வர நடந்து வந்த ஒரு முல்லா “மசூதிக்கு வா, ஏதாவது உண்ணக் கொடுக்கிறேன்.” என்றார்.
“எனக்கல்ல, பசியோடிருக்கும் இன்னோர் ஆத்மாவுக்கு ஏதாவது வேண்டும்” என்றான் கூனன். முல்லா போய்விட்டார். அந்த வழியாக இதைக் கவனித்து கொண்டே வந்த பெண்மணியொருத்தி, அங்கே நின்று, அவனைக் கூப்பிட்டு, “உலகத்துப் பாவங்கள் அனைத்தும் ஒழிவதற்காக கண்ணிர் விடும் அந்தப் புனிதமான ஏழைக்கு இதைக் கொடு” என்று தான் வாங்கிக் கொண்டு சென்ற பொட்டலத்தை அவிழ்த்து ஒரு ரொட்டியைக் கொடுத்து விட்டுப் போனாள். இந்த உலகத்தின் பாவங்களை கழுவுவதற்காகவே ஏழைகள் கண்ணிர் விடுகிறார்கள் என்று அந்தப் பெண்மணிக்கு தெரிந்திருந்தது.
அதை வாங்கிக் கொண்ட கூணன், “அம்மா, இது சாதாரண ஆளுக்கல்ல, இரத்தக்கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஏழைக்கு உதவியாகும்” என்று நன்றியுடன் கூறினான். அந்த வழியாக, கம்பீரமான ஒரு குதிரையிலே, வெள்ளிச் சரிகையிட்ட கெளரமான ஆடையணிந்து உமார் வந்தான். உமாரைக் கண்டதும், கூனன் ஓடோடி வந்து, “தலைவரே! நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று சொல்லியபடியே குதிரையின் சேணத்து மிதியை நடுங்கும் தன் கைகளினால் பிடித்துக் கொண்டான். “இரண்டு வருடம் பத்து மாதங்களாகத் தங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
உமார் அந்தக் கூனனுடைய ஆவல் நிறைந்த முகத்தை உற்றுப் பார்த்தான். முன் ஒரு நாள் நள்ளிரவிலே, ஒரு குளத்திற்குள்ளே நிலவு முழுகிக் கொண்டிருப்பதைக் கண்டு அழுது கொண்டிருந்த அந்தக் கூணன், பழைய சுல்தானுடைய விகடன் என்ற விவரங்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று கூட இருந்த வெள்ளைக் கழுதையை விட்டுப் பிரிந்து கிழிந்த கந்தலாடையுடுத்திப் பிச்சைக்காரனாகத் திரியும் அந்தக் கூனனைக் கண்டு வியந்தபடி, “ஜபாராக்” என்று கூவினான்.
“ஜபாரக்! ஏன் இப்படி ஏழைகளுக்கும் சாமியார்களுக்கும் இடையே கிடந்து அவதிப்படுகிறாய்? எனக்குச் சொல்லியனுப்பக்கூடாதா?” என்று உமார் கேட்டான்.
“சொல்லி அனுப்புவதா? நான்தான் தங்கள் வீட்டுக்கு வெள்ளி வளையல்களைக் கொண்டு வந்தேனே! தங்களைப் பார்க்க முடியவில்லை. பிறகு அலெப்பா நகருக்கு வந்தேன். ஒவ்வொரு பிறையாகத் தாங்கள் வருவீர்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். முதலில் அவளுக்குத் தங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் அதிகமாக இருந்தது. தங்களை நினைத்து அடிக்கடி பைத்தியம் போல் சிரிப்பாள். தங்கள் வீட்டுக்கே அவளை அழைத்துக்கொண்டு வரலாமென்று எண்ணினேன். ஆனால், ஓர் அழகான பெண்ணோடு முழு முட்டாளான நான் வழிப் பயணம் செய்வது ஆபத்தென்று பட்டது. எங்களிடம் பணமும் இல்லை. நீங்கள் எப்படியும் வந்து விடுவீர்கள் என்றே அவள் சொல்லிக் கொண்டிருப்பாள். தாங்கள் அவளை மறந்து விட்டீர்களா? யாஸ்மியைப் பற்றிய நினைப்பே இல்லையா? என்று கூனன் கேட்டதும், உமார் அவனுடைய மெலிந்த கைகளைப் பிடித்துக் கொண்டு, “இங்கே யிருக்கிறாளா? இப்பொழுது இருக்கிறாளா?” என்று படபடப்புடன் கேட்டான்.
ஜபாரக் என்ற அந்தக் கூனன், தன் கையிடுக்கில் வைத்திருந்த அந்த ரொட்டியைக் காட்டி, “நான் பிச்சையெடுத்து அவளைக் காப்பாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாள் மாலையிலும், தங்களிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்ததா என்று கேட்டுக் கொண்டேயிருகிறாள்” என்று பதில் கூறினான்.
“இப்பொழுதே நான் அவளைப் பார்க்கவேண்டும். அவள் எங்கே இருக்கிறாள்?” என்று உமார் பறந்தான்.
முன் கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையை நடத்திக் கொண்டு ஒரு சந்து வழியாகச் சென்றான் ஜபாரக் கூனிக் கூனித் தவளை போல் நடந்த அவன், தன் கையில் இருந்த ரொட்டியை விடவில்லை. அந்தச் சந்திலே ஓரிடத்தில் குதிரையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து உமாரை நோக்கி, - ‘அவ்ளை நோய் அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். தாங்கள் சற்று இங்கே காத்திருங்கள். நான் போய், அவளிடம் அல்லா அருள் புரிந்து விட்டார் என்ற விஷயத்தைக் கூறிவிட்டு வந்து விடுகிறேன்.” என்று சொல்லிவிட்டு, எதிரில் இருந்த ஒரு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். உமார், குதிரையை விட்டுக் கீழே இறங்கி அதன் முதுகிலே தன் தலையைச் சாய்த்தபடி, யாஸ்மியின் நினைப்புடன் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில், புன்னகையுடனும் பூரிப்புடனும் ஜபாரக் வெளியில் வந்தான்.
“என்ன ஆர்வம்! எத்தனை உணர்ச்சி! இவ்வளவு நாளும், கூட்டுப் புறாப்போல் அடைந்து கிடந்தவள், இப்பொழுது ஆடுவதும், பறப்பதும், வண்ணப் பூச்சைத் தேடுவதும் கண்ணுக்கு மை போடுவதுமாக இருக்கிறாள். உடுத்திக் கொள்ளப் பட்டாடையில்லை என்று தங்களுக்கு எச்சரிக்கை செய்யும்படி கூறினாள்”.
“அவள் என்னைப் பார்க்கத் தயாராக இருக்கிறாளா? நான் மேலே போகலாமா?” என்று உமார் கேட்டான். கேட்டுக் கொண்டே கதவை நோக்கிச் சென்றான்.
இருள் நிறைந்த பாதை வழியே, கற்படிகளின்மேல் தட்டுத் தடுமாறி ஏறிச் சென்று, வீட்டின் உச்சிக்குச் சென்றான். வழியிலே ருந்த தளங்களிலே, மங்கலான உருவங்கள் அவனைக் கூர்ந்து நோக்கின. ஈரத் துணிகளும், நார்த்தங் காய்களும் காயவைக்கப் பட்டிருந்த உச்சித் தளத்திலே, ஒரு மூலையிலே ஒரு கூரையின் அடியிலே, கறை பிடித்த ஒரு படுக்கையிலே யாஸ்மி படுத்துக் கிடந்தாள். அவன் அவளுடைய உருவத்தைக் காணவில்லை, அவள் இருந்த நிலையைப் பார்க்கவில்லை. ஆவல் ததும்பும் அவளுடைய கண்களை மட்டுமே பார்த்தான்.
அவள் அருகிலே சென்று மண்டியிட்டு அமர்ந்து, “என் உள்ளத்தின் உள்ளமே.” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.
“பெருமை மிகுந்த என் பிரபுவே! தங்களுக்கு ஒரு கந்தைத் துணிகூடக் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாத ஏழை நான்” என்று கூறியவள் அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். சூடேறிப் போயிருந்த அவளுடைய கன்னங்களின் மேலே, கண்ணிர் ஓடுவதை அவனுடைய கைகள் தெரிந்து கொண்டன. அழுது ஓய்ந்த பிறகு, அவன் அருகிலே நெருங்கி வந்தாள். அவளுடைய முகம் வெளுத்து, ஒளியிழந்து மெலிந்து காணப்பட்டது. ஆளே மாறியிருந்தாள். அவளுடைய காதல் பொருந்திய கரிய விழிகளும், இருண்ட மணம் பொருந்திய கூந்தலும் மட்டுமே முன்போல இருந்தன.
“நான் இங்கே நோயாகக் கிடக்கும்பொழுது, இரவு நேரத்தில் உச்சியில் தெரியும் விண்மீன்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஏனென்றால், அவைதாம், தங்கள் நட்சத்திர வீட்டுக்கு மேலேயும் தெரியும். தாங்களும் அவற்றையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்! அங்கே பட்டுத் திரையிலே பறக்கும் பாம்பு இருந்ததே; அது அப்படியே இருக்கிறதா? உயிருக்குயிரானவரே! என் மனக் கண்முன்னே, அந்த நட்சத்திர விடும், தங்கள் அறையும், அதில் இருந்த பொருள்களும் அப்படியப்படியே இருக்கின்றனவா? நான் பார்த்தபொழுது இருந்தபடியே இப்பொழுதும் இருக்கின்றனவா?”
“அப்படியே இருக்கின்றன அன்பே ! அவை உன் வரவுக்காகக் காத்திருக்கின்றன!” யாஸ்மி நிம்மதியான ஒரு பெருமூச்சு விட்டாள். “அப்படித்தான் நினைத்தேன்! நட்சத்திரங்களின் பெயரையெல்லாம் என்னால் நினைவு வைத்திருக்க முடியவில்லை. இரண்டொன்றின் பெயர்தான் எனக்குத் தெரியும். ஜபாரக் சில நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்வான். நட்சத்திரங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் தங்கள் உருவம் தோன்றும். சுல்தான் அவர்களின் சபையிலே தாங்கள் மிகப் பெரியவராக வந்து விட்டீர்களாமே! இந்த அங்கியில் உள்ள ஜரிகை எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று அன்பு மொழிகளை அள்ளி வீசினாள்.
“நான் உனக்கு காத்தயானியப் பட்டாடையும், பூ வேலை செய்த நடையனும் வாங்கி வருகிறேன்” என்றான் உமார்.
“சர்க்கரைப் போட்ட சுக்குத் தண்ணிரும் வாங்கி வாருங்கள்” என்று கூறிச் சிரித்தாள். “நாம் விருந்து சாப்பிடவேண்டும். அந்த விருந்திலே குடிப்பதற்குச் சர்பத்தும் இருக்க வேண்டும்” என்றாள். “உன்னுடைய உதட்டு மதுவும் இருக்குமல்லவா?” என்று உமார் கேட்டான். வெட்கத்துடன் அவள் அவனுடைய அழகிய கன்னத்தைத் தொட்டாள். அவனுடைய அழகிய கால் சோடுகளை ஆவலோடு பார்த்தாள். “எனக்குப் பலமில்லை! இன்பத்தால் இதயம் வேகமாகத் துடிக்கும் போது வேதனையாக இருக்கிறது. தங்கள் அடிமையான நான், அழகையும் இழந்து விட்டேன்!” என்றாள்.
“அன்பே என் கண்ணுக்கு நீ அதிகமான அழகுடன் தோன்றுகிறாய்!” என்று அவளை மகிழ்வித்தான் உமார். அவள் அவன் உதடுகளில் தன் மெல்லிய விரல்களை வைத்தாள். அவன் அவற்றிற்கு முத்தம் கொடுத்து “இதோ என்னைப் பாருங்கள்! உண்மையாகச் சொல்லுங்கள்! நட்சத்திர வீட்டில் என்னுடைய அறையில், தங்களின் வேறொரு மனைவியிருக்கிறாளா?” என்று கேட்டாள்.
உமார் இல்லை என்பதற்கடையாளமாகத் தலையை அசைத்தான். அவள் அமைதியடைந்தாள்.
“எனக்குத் திருமணம் நடந்தபொழுது, என் உள்ளத்திலே கொள்ளி வைத்ததுபோல் இருந்தது. ஓடி விட முயற்சித்தேன். அப்துல் சையிது என்னை அணைக்கும் பொழுதெல்லாம் எனக்கு வேதனையாக இருந்தது. பிறகு இந்தக் காய்ச்சல் நோய் வந்தது. ஒட்டகத்தின் மேல் வைக்கும் பிரம்புக் கூடைகளில் வைத்து என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றார்கள். சில சமயம் எந்த ஊருக்குப் போகிறோம் என்றே தெரியாது. மலைப் பிரதேசத்திலே இருந்த ஒரு விடுதியிலே, இந்தக் கூனன் ஜபாரக்கைச் சந்தித்தேன். அவன் என் மீது இரக்கம் காட்டினான். உடனே அவசர அவசரமாக என்னுடைய நீலக்கல் பதித்த வெள்ளி வளையல்களைக் கழட்டி அவனிடம் கொடுத்தேன். நிசாப்பூருக்குச் செல்வதாக இருந்த அவனிடம் அதைக் கொடுத்து தங்களிடம் என்னைப் பற்றிக்கூறும்படி கேட்டுக் கொண்டேன். இங்கு அலெப்போ வந்ததும், என் கணவனுக்கு என் மேல் கோபம் கோபமாக வந்தது. தனக்கு இணங்காமல் இருப்பதால், நான் அவனைப் பழிப்பதாக முடிவு கட்டினான். வெளியில் சென்று சாட்சிகளைக் கூட்டி வந்து, என்னை மணவிலக்குச் செய்து விட்டதாக அறிவித்து விட்டான். நான் பெருநோய் பிடித்தவளென்றும், கொடுமனம் படைத்தவளென்றும் சாட்சிகளிடம் காரணம் கூறினான். என்னை இங்கே அனாதையாக விட்டு விட்டு அவன் போய்விட்டான்” என்று யாஸ்மி தன் கதையைக் கூறினாள்.
“வளையலைப் பற்றியும் உன் செய்தியைப் பற்றியும் எனக்கு ஒன்றுமே தெரிவிக்கப்படவில்லை” என்று வருந்தினான் உமார்.
“நான் இப்பொழுது மணவிலக்குச் செய்யப்பட்டவள்!”
“இல்லை. நீ மணப்பெண். இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் உன்னை என்னுடைய மனைவியாக்கிக் கொள்ளப்போகிறேன். புதுப் பெண்ணே உனக்கு இது சம்மதமா?”
“இந்த மணப்பெண்ணுக்கு அழகும் இல்லை. வரதட்சயணையளிக்கப் பொருளும் இல்லை” என்று வருத்தத்தோடு பரிகாசமாகப் பேசினாலும், யாஸ்மியின் கன்னக் கதுப்புகளில் சூடான இரத்தம் பரவிச் சிவந்து விளங்கின. கண்கள் புதிய ஒளி பெற்றன. அந்த மகிழ்ச்சியில் எழுந்து உட்கார்ந்த யாஸ்மி தன் வேதனையை மறந்து உமார் எழுந்து செல்லும் வரை உட்கார்ந்தேயிருந்தாள். அவன் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் வலி தோன்றியது; படுக்கையில் சாய்ந்தாள்.
ஜபாரக் குதிரையைப் பார்த்துக் கொண்டு கீழே நின்றிருந்தான். கடிவாளத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, குதிரையின் மேல் ஏறியுட்கார்ந்து கொண்டு ஜபாரக்கோடு பேசினான் உமார். “இன்று மாலை நான் யாஸ்மியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். காஜீயொருவரையும் சாட்சிகளையும் அழைத்து வரச் சொல்லுகிறேன். நீ ரொட்டிக் கிடங்கிற்கு சென்று, இனிய கேக்குகளும், அரிசிக் கூழும் இனிப்பான ஷெல்லிப் பழங்களும், சிவந்த திராட்சை மதுவும் மற்ற பொருள்களும் வாங்கி வா. இந்தத் தெருவில் உள்ள மக்களையெல்லாம், மணவிழாவில் பங்கெடுத்துக் கொள்ளும்படி அழைத்து வா! குழல் ஊதுபவன் ஒருவனையும், மெழுகுவர்த்திகளையும் கொண்டுவர மறந்து விடாதே!” என்று கூறிவிட்டு, குதிரையைத் திருப்பிக் கொண்டு சென்றான். அதிசயத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டு, ஏந்திய கைகளுடன் நின்ற பிச்சைக் காரர்களைக் கவனிக்க அவனுக்கு அப்போது நேரமில்லை.
சாக்கு முட்டை நிறையச் சாமான்களுடன் வந்த ஜபாரக் வழி நெடுகிலும், “நம்பிக்கையுள்ளவர்களே! ஓ! மத நம்பிக்கை உள்ளவர்களே! திருவிழாக் கதவு திறந்திருக்கிறது! எல்லோரும் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்துக் கொண்டே வந்தான்.
திருமணச் சடங்கு தொடங்கியது. முக்காடுடன் ஒரு மூலையிலே இருக்கும் யாஸ்மியைப் பற்றியே உமார் நினைத்துக் கொண்டிருந்தான். அவனருகிலே விரிப்பில் உட்கார்ந்திருந்த காதியின் கர கரத்த குரல் கேட்டது. “புத்தக வியாபாரி ஒருவரின் மகள். சரி, அவள் வரதட்சணையாக என்ன தருகிறாள்? அதாவது அவள் உனக்கு என்ன சொத்து தரப் போகிறாள் என்று கேட்கிறேன்” என்று காதி திரும்பத் திரும்பக் கேட்டார்.
நீதிபதியின் பின்னால், ஒரு குறிப்பெடுக்கும் எழுத்தாளர், திருமண ஒப்பந்தத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்.
“சொத்துத்தானே! புயற்காற்றைப் போன்ற கருத்த கூந்தலும், பூங்கொடி போன்ற அவளுடைய மெல்லிய இடையும், காதல் ஒன்றைத் தவிர வேறு எதையும் அறியாத அவள் இதயமும், இவை போதுமே! வேறு சொத்து எதுவும் அவள் தர வேண்டியதில்லை. விரைவில் மணத்தை முடியுங்கள்!” என்றான் உமார்.
“விலைமதிப்புள்ள பொருள் எதுவும் இல்லை என்று எழுது” என்று குறிப்புக்காரனிடம் கூறிவிட்டு உமாரை நோக்கி, “தாங்கள் அவள் பெயரில் என்ன சொத்துக்களை எழுதி வைக்கப் போகிறீர்கள்?” என்று காதி கேட்டார். அவன் சொன்னதைக் கேட்டதும் அவருக்கு சிரிப்புதான் வந்தது. “என்னிடம் இருக்கும் எல்லாப் பொருள்களையுமே எழுதி வைக்கிறேன்” என்றான் உமார்.
காதி தன் கைகளைக் கட்டிக் கொண்டார். சங்கடமான குரலில் குமுறியெழும் கோபத்தை வெளிக்காட்டாமல் மிக மரியாதையுடன் உமாரிடம் கூறினார். “நாம் இப்பொழுது, சட்டப்படி ஓர் ஒப்பந்தம் செய்கிறோம். காரணத்திற்கு உட்பட்ட வார்த்தைகளைக் கொண்டு பத்திரம் எழுதப்படவேண்டும். எல்லாம் என்பது எதையும் குறிப்பிடக்கூடிய சொல் அல்ல. சட்டத்தின் முன் அது பயனற்றதாகும், விவரத்துடன் ஒவ்வொரு பொருளாகக் குறிப்பிட்டு எழுதவேண்டும். எத்தனை ஏக்கர் நிலம் என்பதும் அது இருக்கும் இடமும், எல்லைகளும் அதில் இருக்கும் அசையும் பொருள், அசையாப் பொருள்களைப் பற்றிய விவரங்களும், நீர்க்குளங்களும், குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையும், நிலத்தின் ரொக்க மதிப்பும் குறிப்பிடப்பட வேண்டும். அடுத்துக் கொடுக்கும் பொருள்களைப் பற்றிய விவரங்கள், ஆடைகள், துணிகள் கஜக்கணக்கு, கம்பளிகள் பட்டாடைகள் பற்றிய கணக்கு, ஒட்டகங்கள், ஆடு மாடுகள், பறவைகள் எத்தனையெத்தனை என்ற விவரம், தந்தம், மான்கொம்பு, மீன் எலும்பு, இரத்தினம், வைரம், நீலம், பச்சைக் கற்களின் விவரங்கள், எத்தனை அடிமைகள் கொடுக்கிறீர்கள். இவைகளின் தனித்தனி விலைமதிப்பு...” என்று காதி அடுக்கிக் கொண்டு போனார்.
“விலை மதிப்புள்ள எல்லாப் பொருள்களுமே கொடுக்கப்படுகின்றன என்று எழுதிக்கொள்” என்று உமார், நீதிபதியின் தோளுக்கு மேலே எட்டிக் குறிப்பாளனிடம் கூறினான். ஏற்கெனவே கட்டிக் கொண்ட தன் கைகளைத் தளர்த்திக் கொண்டே காதி ஆயாசத்துடன், “ஆண்டவனே! அல்லா! திருமண ஒப்பந்தப் பத்திரத்தில் இப்படிப்பட்ட சொற்களை இதற்கு முன் யாரேனும் கேட்டதுன்டா? இப்படிப்பட்ட அறிவிப்பு இதுவே முதன் முறையாகும். மேலும் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டால் இதற்குமுன் மணம் செய்து கொண்ட அத்தனை மனைவியரின் உரிமைகளையும் பாதிக்காதா?” என்று அந்த நீதிபதி விவகாரம் பேசிக்கொண்டிருந்தார். உமார் எழுந்து சென்று கை நிறையத் தங்கநாணயங்களை அள்ளிக் கொண்டு வந்தான். தன் அடிமைகளையும் அள்ளி வரச் செய்தான். நீதிபதி பேசுவதற்காக வாயைத் திறந்த போதெல்லாம், அவருடைய தாடியின் மத்தியில் இருந்த உதடுகள் விரிந்த போதெல்லாம் ஒவ்வொரு தங்க நாணயத்தை வாயினுள் போட்டு அவர் பேச்சை ஒரு வழியாக நிறுத்தினான். சுற்றியிருந்த சாட்சிகள் மடியில் எல்லாம் கை நிறையப் பொன் நாணயங்களை அள்ளிக் கொட்டினான். குறிப்பாளனிடமிருந்து காகிதச் சுருளைப் பறித்துச் சாட்சிகளைக் கையெழுத்திடும்படி ஆணையிட்டான். குறிப்பாளனின் எதிரேயிருந்த கோப்பையிலே நல்ல மதுவைக் கொண்டுவந்து ஜபாரக் ஊற்றினான். மதுவின் ஊடே, தன்னுடைய அருமையான வைர மோதிரமொன்றை நழுவ விட்டான் உமார். காதியைப் பார்த்து “தங்கள் சொற்களெல்லாம் பொன் மொழிகள்” என்று உமார் கூறினான்.
கூட்டத்தினர் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் ஆடும் பொம்மைபோல அந்தக் காதியாகிய நீதிபதி விளங்கினார். திருமணம் முடிந்து “உங்கள் அனைவரின் சாட்சியாக இன்று இந்தப்பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மறந்து விடாதீர்கள். விருந்து காத்திருக்கிறது. குழல் வாத்தியம் வாசியுங்கள்! விருந்து சாப்பிடுங்கள்!” என்று உமார் எல்லோரையும் கேட்டுக் கொண்டான்.
எழுந்து சென்று, வராந்தா ஓரமாக நின்று தெருவைப் பார்த்தான். அங்கே எரியும் விளக்குகளின் பிரகாசமான வெளிச்சத்திலே இருக்கும் ஏழை மக்களையும், பிச்சைக்காரர்களையும் குழந்தைகளையும் குட்டிகளையும் கண்டான். குழல் வாசிப்பவன் காதல் கீதம் ஒன்றை அருமையான ராகத்திலே ஆலாபனம் செய்தான். உமார் அங்கே கூடியிருந்த அனைவரையும் நோக்கி, “நன்றாக உண்ணுங்கள்! உண்ணுவதற்குப் போதுமான அளவு கேக்குகள் இல்லாமல் இருந்தால், கேக்குக் கிடங்கிலிருப்பவைகள் அனைத்தையுமே உண்டு விடுங்கள். சர்பத்தும், மதுவும், மாமிசமும் அரிசிக் கூழும் எல்லாம் வயிறு நிறைய உண்ணுங்கள். மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியில்லாதவர் யாருமே இங்கு இருக்கக் கூடாது. அப்படி யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டான். “இல்லை! இல்லை! அல்லாவின் அருளால் எல்லோரும் இன்பமாகவே இருக்கிறோம்!” என்று பதில் குரல்கள் பலப்பல ஒலித்தன.
உமாருக்கு மகிழ்ச்சி பொங்கியது. “எல்லாரும் மட்டற்ற மகிழ்ச்சியடைய வேண்டும். என் அன்புக்குரிய யாஸ்மியை நான் அடையும் இந்தத் திருமண நன்னாளிலே யாவரும் இன்பமாக இருக்க வேண்டும்!” என்று விரும்பினான். அவன் பார்வை பக்கத்திலே, இருந்த கணக்கனின் கைகளிலே இருந்த பணப் பெட்டியின் மேல் விழுந்தது. “அந்தப் பணப்பெட்டியை வெளியே தூக்கியெறி!” என்றான்.
“தலைவரே! இது பணப்பெட்டி” என்றான் அவன்.
“தெரியுமடா தெரியும் ! இந்தப் பணம் போனால் எனக்கென்ன பணமா இல்லை. என்னைப்போல் பணக்காரன் எவனடா இருக்கிறான்? இன்ப சொர்க்கத்தின் மதுவை குடித்துவிட்ட என்னைக் காட்டிலும் எவனடா பணக்காரன் இருக்கிறான்? என்று சொல்லிக் கொண்டே பணப் பெட்டியைப் பறித்து மேலேயிருந்தவாறு திறந்து தெருவிலே கொட்டினான். ஏழைகளும் பிச்சைக்காரர்களும், குழந்தைகளும், குட்டிகளும், ஆடவரும், பெண்டிரும், இளைஞர்களும் முதியவர்களும் எல்லோரும் விழுந்த பொன் நாணயங்களின் மேலே விழுந்து விழுந்து பொறுக்கினார்கள். வயிறாற உண்டறியாத அந்த வறுமையாளர் கூட்டம் அன்று வயிறாற உண்டதுடன் மின்னும் பொற்காசுகளும் கிடைத்த மிக்க மகிழ்ச்சியிலே ஆடிப்பாடிக் கொண்டு சென்றது. இவ்வாறு சீரும் சிறப்பும் பாட்டு, கூத்தும் கேளிக்கையும் வேடிக்கையுமாக உமார் கயாம்-யாஸ்மி திருமணம் நடைபெற்று முடிந்தது;