உமார் கயாம்/33. திடுக்கிடும் கழுகுக்கூடு

33. திடுக்கிடும் கழுகுக்கூடு

அக்ரோனோஸும், உமாரும் தங்கள் குதிரைகளிலே சென்று கொண்டிருந்தார்கள். மூன்றாவது நாள் கதிரவன் மறைந்த பிறகு, அக்ரோனோஸ், உமாரை நிறுத்தி “மன்னிக்கவேண்டும். இனிமேல் செல்லக்கூடிய பாதையை வெளி ஆட்கள் தெரிந்து கொள்வது தடுக்கப் பெற்றிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே, உமாருடைய கண்களைத் துணியால் கட்டினான். அவர்களுடைய குதிரைகள் காஸ்வின் பிரதேசத்திற்கு மேலேயுள்ள குன்றுப் பிரதேசத்திலே நுழைந்து போய்க் கொண்டிருந்தன. உமார் கடைசியாகப் பார்த்தது, பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்குப் பிரதேசமும் அதற்கப்பால் இருந்த மரங்கள் அடர்ந்த குன்றுகளும்தாம்!

“நீயும் ஏழாவது கொள்கைக்காரர்களைச் சேர்ந்தவன் தானா?” என்று உமார் கேட்டான்.

அதற்கு அக்ரோனோஸ், அந்தப் பாதையிலே யாருமே இல்லாவிட்டாலும் கூட, உமாரின் அருகிலே நெருங்கி வந்து மெல்லிய குரலிலே, “நான் மலைத்தலைவருக்குத் தொண்டு செய்கிறேன். இந்தக் குன்றுகளிலே, ஹாசான் இபின் சாபா என்ற பெயரில் அவர் அழைக்கப்படுவதில்லை. தங்களுக்குத் தெரிந்த ஹாஸான், பாபிலோன், கெய்ரோ, ஜெருசலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவன். அவனை இனிமேல் மறந்துவிடுங்கள். இப்பொழுது நாம் காணப்போகிறவர் மலைத்தலைவர். கொரசான் தேசத்திலே மட்டும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவர்கள் பதினாயிரம் பேர் இருக்கிறார்கள். அவருடைய ஆற்றல் பூமியை ஆளுகின்ற அரசர்களுக்கும் மேற்பட்டது.

பாபிலோனிய, புழுதி மண்ணில் கிடந்த பிணத்தின் அருகில் நடந்து சென்ற கழுகையும், வானத்தில் பறந்துசென்ற தபால் புறாவையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு உமார் பேசாமல் இருந்தான்.

“கடந்தவாரம் ரே நகரத்தில், நிசாம் அல்முல்க் அவர்களைப் பார்த்துவிட்டு வந்த மலைத்தலைவர் ஒரு விடுதிக்குள்ளே நுழைந்தார். அதை வீரர்களால் வளைத்துக் கொண்டு, உள்ளே நுழைந்து, ஒவ்வொரு அலமாரியையும் முட்டையையும் அவிழ்த்துப் பார்த்து மூலை முடுக்குகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்தும் கூட, அவ்ரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மலைத்தலைவர் கழுகுக் கூட்டுக்குப் புறப்பட்டு வந்ததை யூாருமே பார்க்கவில்லை. இருப்பினும், நம்மை எதிர்பார்த்துக் கொண்டு அவர் அங்கேயே இருக்கிறார்.”

“எங்கே!”

“கழுகுக்கூடு. அங்கேதான்! எல்லோருக்கும் இந்தப் பெயர் தெரியும். ஆனால் வழிதான் தெரியாது!”

“உனக்கு நன்றாகத் தெரியுமா”

“ஆம்! ஒருமுறைதான் கழுகுக்கூட்டின் வாசலைப் பார்த்திருக்கிறேன்” என்று அக்ரோனோஸ் ஒப்புக்கொண்டான்.

“என்னை அழைத்துவரச் சொல்லி, இந்த மலைத்தலைவன் உனக்கு ஆணையிட்டு ஒருவாரம் ஆகிறதா?”

“இல்லை. இரண்டு வருடங்கள் ஆகின்றன. உமார் கயாமுக்கும், நிசாம் அல்முல்க் அவர்களுக்கும் இடையே சச்சரவுப் புகையெழும்பும் நேரம் நெருங்கி வருகிறது. அது ஏற்பட்டதும், அவரைத்தேடி என்னிடம் அழைத்துவா. இங்கே அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்” என்றார்.

“ஆ! அப்படியானால், இந்த மலைத் தலைவனுக்கு மாயவித்தை தெரியும் என்று சொல்” என்று ஆச்சரியத்தோடு சொன்னான் உமார்.

“எனக்குத் தெரிந்த எந்த மனிதனைக் காட்டிலும், அவர் அதிக அறிவுள்ளவர். ஆற்றலின் இரகசியம் அவரிடம் அடங்கிக்கிடக்கிறது. அவருக்குப் பணியாமல் இருப்பதைவிடக் கீழ்ப்படிந்து நடப்பது நல்லது. நிசாம் அவர்கள் அவருடைய புத்தகத்தில் இவரைப் பற்றி எச்சரித்துச் சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். தான் சாகும் வரையில் வெளிப்படாமல் இருக்கும்படி அந்த அத்தியாயங்களை மூடி முத்திரையிட்டு வைத்திருக்கிறோம். அது யாருக்குத்தெரியும்? ஆனாலும், அவர் இவருக்குப் பயப்படுகிறார் என்பது உண்மை.”

“நீ?’ என்று உமார் கேட்டதும் அக்ரோனோஸ் பதில் சொல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். “அதோ கீழேயுள்ள சமவெளிப் பிரதேசத்திலே நடமாடும், வரி விதிப்பு என்னும் வாளுக்கும், மதகுருக்கள் என்னும் கொடுமைக்கும் தப்பி வந்துவிட்டோம். அரசரின் ஆதரவுபெற்ற குவாஜா உமார் அவர்களுக்கு அவை அற்ப விஷயங்களாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற முஸ்லிம் அல்லாத வியாபரிகளுக்கு அவை விலங்கு போன்றவைதாம். அர்மீனியர்களாகிய நாங்கள் அடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறோம். ஆனால் இங்கே, இந்த இடத்திலே சுதந்திரம் இருக்கிறது!”

அவனுடைய குரலிலே ஒரு புதுமை ஆர்வம் தொனித்தது. அந்த மலைப் பிரதேசத்திலே சந்திக்கவேண்டிய இடம் நெருங்கி வரவர அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. அடிக்கடி தன்னுடைய குதிரையை அடித்துக்கொண்டும் உமாருடைய குதிரையை நிற்கும்போதெல்லாம் இழுத்துக்கொண்டும் போனான். அந்தப் பாதை வழியாக வேறு குதிரைகளும் மனிதர்களும் போய் வந்து கொண்டிருந்தார்கள். மெதுவான குரலில் வரவேற்புகளும், அடங்கிய சிரிப்பொலியும் உமாரின் காதில் விழுந்தன. ஆனால், யாரும் ஒரு விளக்குக் கூட எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.

கண்ணுக்குத் தெரியாத காவல் வீரர்களால் அவர்கள் சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டபொழுது, கீழே ஓர் ஆற்றின் ஓசையைக் கவனித்தான். குளிர்ந்த காற்று அவர்களை உலுக்கிக்கொண்டு வீசியது. பைன்மரங்களின் வாசத்தை உமார் கவனித்துக் கொண்டான். உடைந்த கற்களின்மேல், மட்டக் குதிரைகள் ஏறிக்கொண்டிருந்தன.

கடைசியில் ஒரு குரல் அவர்களை நிறுத்தியது.

“நில்லுங்கள்! இருட்டில் சுற்றுகின்ற நீங்கள் யார்!”

“ஏழு கூட்டாளிகள்” என்று அக்ரோனோஸ் கூறினான்.

“என்ன தேடுகிறீர்கள்?”

“இன்னும் வராத அந்தநாளை!” அதற்குப் பின் தொடர்ந்து, கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை! மறுபடியும் குதிரைகள் முன்னோக்கிச் சென்றன. அவற்றின் காற் குழம்புகள், திடமான கற்களின்மேல் ஒலி யெழுப்பிக்கொண்டு சென்றன. அவர்களுடைய பாதை திடுமென்று திரும்பியது, செங்குத்தான ஒரு பாறையின் குறுக்காக ஏறிச்செல்வதுபோல் தோன்றியது. கீழே வெகுதூரத்திலே, பாறைகளின்மேல் அந்த ஆறு பாய்ந்து செல்லும் பேரோசை பேட்டது. கனமான காற்றுச்சூழல்கள், உமாரின் தளர்ந்த கால் சாராய்க்குள்ளே புகுந்து வீசின.

உமார் தன் முழங்கால்களை நெருக்கிக் கொண்டு குதிரையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். ஒன்றுமில்லாத வெட்ட வெளியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. அவனைச்சுற்றி விளக்குகள் பளிச்சிட்டன. அவனுடைய குதிரை தடுமாறி நின்றது. ஒரு பெரிய கதவின் இருப்பு முட்டுக்கள் கிரீச்சிட்டன. அவனுடைய பின்புறத்திலே, இரும்பு அடிக்கிற சத்தம்கேட்டது. அவனுடைய கண்கட்டை ஒரு கை அவிழ்த்து விட்டது.

சிறிதுநேரம், விளக்கின் வெளிச்சம் அவன் கண்ணைக் கூசச் செய்தது. பிறகு தன் தலைக்குமேலே நட்சத்திரங்கள் இருப்பதையும், தன்னைச் சுற்றிக் கோட்டைச் சுவர் இருப்பதையும் கண்டான். அக்ரோனோகம், வழியில் அவனுடன் வந்தவர்களும் மறைந்து போய்விட்டார்கள். சிரித்த முகத்துடன் ஒரு கரிய சிறுவன், குதிரைக் கடிவாளத்தைப் பிடித்திருந்தான். சிவந்த பட்டுச்சட்டை அணிந்திருந்த ஒரு சிறிய மனிதன் அவனுக்கு சலாம் செய்தான்.

“தலைவரே! தங்கள் வருகை அதிர்ஷ்டம் உடையதாகுக! நான் கெய்ரோ ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்தவன். ரக்கின உட்டின் என்பது என்பெயர். அறியாமை மிக்க நான், தங்கள் அறிவுநூல்களைக்கற்று மகிழ்ந்திருக்கிறேன். தயவு செய்து கீழே இறங்கித் தங்கள் அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்!” என்று அந்தச் சிறிய மனிதன் வரவேற்றான்.

களைத்துச் சோர்ந்துபோய் இருந்த உமார், தனக்கு வழிகாட்டிச்சென்ற அவன் பின்னால், ஒரு சிறு கதவு வழியாக, கல்பதித்த நடைபாதை வழியாகச் செல்லவேண்டியிருந்தது. இரவுநேரம் ஆகையால் ஆள் நடமாட்டமற்று அந்தப் பாதை விளங்கியது. கடைசியில் ஒரு படுக்கையறையை அடைந்தார்கள். அங்கு படுக்கையின் அருகிலே குளிர் போக்குவதற்காகக் கணப்பு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த தட்டுகளிலே, பழங்களும், கேக்குகளும், ஒரு கண்ணாடிக் கூஜாவிலே திராட்சை மதுவும் இருந்தன.

ரக்கின் உட்டின் கூடவந்த கரிய பையனைக் காட்டி, “இதோ இவன் தங்களை அடிமை. ஆபத்திலிருந்து தாங்கள் தப்பி வந்துவிட்டபடியால், அமைதியாக நீங்கள் தூங்கலாம். தங்கள் கனவுகள் இன்பமாக இருப்பதாக!” என்று கூறி விடைப்பெற்றுச் சென்றுவிட்டான்.

பிறகு, உமார் சிறிதளவு சாப்பிட்டு விட்டு தட்டை அந்த அடிமைப்பையனிடம் கொடுத்தான். அந்த மதுவில் ஒரு குவளை குடித்தான். அது காரமாகவும் மணமாகவும் இருந்தது. துப்பாக்கியால் வெளிநோக்கிச் சுடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சுவர்த்துவாரத்தின் வழியாக வெளியில் நோக்கினான் உமார்.

மலைக்காற்று மிகக் குளுமையாக வீசியது. எனவே போர்வைகளை எடுத்துத் தன் உடலைச் சுற்றி மூடிக்கொண்டு எரிந்து கொண்டிருக்கும் கணப்பில் இருந்த சிவந்த தணலைப் பார்த்துக்கொண்டிருந்தான். தூக்கம் கண்ணைச் சுற்றிக்கொண்டு வந்தது. நெருப்பின் சிவப்பு நிறம் நீலநிறமாக மாறியது. கதவுக்கருகே சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அடிமைச் சிறுவனைக் கவனித்தான்.

அவனுடைய கரியநிறம் இலேசான வெள்ளை நிறமாக மாறியிருந்தது. அந்த அறையும் முன்னிருந்ததைக் காட்டிலும் பெரிதாகியிருந்தது. உயரம்கூட அதிகரித்திருந்தது.

ஆனால், உமார் தன்னுடைய உடல் நல நிலையும், அறிவு நிலையும் மாறவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து காண்டான். கண்களை மூடிக்கொண்டே, “இந்த மலைப்பிரதேசத்துக்குத் தூக்கமே புதுமையானது” என்று எண்ணினான்.

கழுகுக்கூடு என்ற அந்தக் கோட்டை செங்குத்தான இரண்டு பள்ளத்தாக்குகளுக்கு ஊடே இருந்த ஒரு மலையின் உச்சியில் இருந்தது என்பதை மறுநாள் காலையில்தான் உமார் தெரிந்து கொண்டான்! தான் இருந்த இடத்திலிருந்து முன்னிரவு அவர்கள் வந்த பாதை எதுவென்று பார்த்துக் கண்டுகொள்ள முடியவில்லை.

ஏனெனில், கீழேயுள்ள வெள்ளிமயமான ஆற்றின் படுகை வரையிலே அந்தப் பாதை ஒரே செங்குத்தாக இருந்தது. அதற்கப்பால், பாறைகள் ஏறி ஏறி இறங்கி வரிசைபடிக்கு உள்ள கூரைக் கோபுரங்கள் போலக் காட்சியளித்தன.

அந்தக் கழுகுக்கூட்டில் அவர்கள், இயற்கையான மலைப் பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்டிருந்த படியால், மற்றொரு பள்ளத்தாக்கின் பக்கத்திலிருந்து அதைப் பார்த்தால், ஏதோ மலையின் உச்சி என்று தோன்றுமே தவிர, அங்கே ஒரு கோட்டை இருக்கிறதென்று தெரியாது. அதற்கு மேலே வட்டமிட்டுப் பறக்கும் கழுகுகளைத் தவிர, வேறு யாருக்கும், அங்கு ஒரு கோட்டை இருக்கிறது என்ற விஷயம் தெரியப் போவதில்லை. அந்தக் கோட்டையும் அதன் சுற்றுப்புறச் சுவர்களும், மலைமுடியில் உள்ள இடம் முழுவதும் பரந்து இருக்க வில்லை என்பதையும் அவன் தெரிந்து கொண்டான்.

கோட்டையின் குறுக்காக நடுமத்தியில் ஒரு சுவர் இருந்தது. அதற்கப்பால், மரங்களின் உச்சிப் பகுதிகள் தலைநீட்டிக் கொண்டிருந்தன. “அதோ அங்கே ஒரு தோட்டம் இருக்கிறது. தாங்கள் அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று ரக்கின் உட்டின் கூறினான்.

சில சமயம் சுவர்களின் மேல் காவல் வீரர்கள் இருப்பதையும் உமார் கவனித்தான். ரே நகரத்து நாற்சந்தியில் கொல்லப்பட்ட ஏழாவது கொள்கைக்காரர்களைப் போலவே அவர்களும், வெள்ளை மேல் சட்டையும் சிவப்புக் கால்சராயும் சிவப்பு மிதியடிகளும் அணிந்திருந்தார்கள்.

அங்கு ஏராளமாக வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவர்களிற் பெரும்பாலோர், எகிப்தியர்களும், கருப்பர்களுமே! சீன உடையில் இருந்த ரக்கின் உட்டின் போன்ற சிலரைத் தவிர அங்கு அதிகார அந்தஸ்துள்ள மனிதர்களையோ, பெண்களையோ ஒருவரைக் கூடக் காணோம். அவர்கள் ஒருவரோடொருவர் பேசும் பொழுது, வாய்க்கு வந்த எதாவது ஒரு மொழியில் பேசினார்களோ, என்று தோன்றியது.

“நாங்கள் வெறும் பிரசாரகர்கள் என்றுதான் தாங்கள் கருதுவீர்கள்!” என்று சிரித்துக் கொண்டே, கூறிய ரக்கின் உட்டின் “நாங்கள் வெகுதூரத்தில் உள்ள வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்களாகவும், அடிக்கடி பலப்பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதாலும் பல மொழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. நான் கெய்ரோவைச் சேர்ந்தவன்.

ஆனால், பாரசீக மொழியிலும் நன்றாகப் பேசுகிறேன்! இதை நீங்கள் கவனித்திருக்கலாம் நூல்நிலையத்திற்குச் செல்வது உங்களுக்கு விருப்பமாயிருக்குமோ? வந்து எங்கள் நூல் நிலையத்தைப் பாருங்களேன்” என்று அழைத்தான்.

நடுவில் இருந்த படிக்கட்டுப் பாதையின் வழியாக அவன் உமாரை யழைத்துக் கொண்டு சென்றான். முதல் தளத்தில் இறங்கியதுமே அவர்கள் ஒரு பெரிய கூடத்தின் உள்ளே நுழைந்து சென்றார்கள். அந்தக் கூடம் பலப்பல சிறுசிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறைகளுக்குள்ளே எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே படிக்கும் மேசைகளுக்கெதிரே பலவித மனிதர்கள், புத்தகங்களிலே ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்கள். கிரேக்க மொழிக்கையெழுத்துப் பிரதி நூல்கள் இருந்த அலமாரிகளை, அதிசயத்துடன் உமார் நின்று கவனித்தான்.

வரைவுப் படங்களைக் கொண்டு அவற்றில் ஒரு புத்தகம், அறிஞர் அரிஸ்டார்ச்சஸ் எழுதிய “நிலவு வழியும் கிரகணங்களும்” என்ற ஆராய்ச்சி நூலொன்று தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றொன்று அறிஞர் பிளேட்டின்ஸ் அவர்களின் பெரும் நூல்.

“நான் இந்த நூல்களை இதற்கு முன் பார்த்ததில்லை” என்று உமார் கூறினான்.

“ஆம்! அலெக்சாண்டிரியா நகரத்து நூல் நிலையத்திலே நெருப்பு வைத்தபோது, நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட புத்தகங்கள் இவை. இவற்றை எகிப்திலிருந்து இங்கு கொண்டு வந்தோம். தப்பிப்பிழைத்த சில புத்தகங்களையும், அவர்கள் அடுப்பெறிக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கதை வழங்குகிறது. இருப்பினும் பலநூல்கள் முஸ்லிம்கள் கையில் அகப்படாமல் காப்பாற்றப்பட்டன. எங்கள் தலைவர் அவற்றைக் கண்டுபிடித்தார். எங்களிடம் பூகோளப்படங்களும் இருக்கின்றன. அறிவுச் செல்வங்கள் பல எங்களிடம் இருக்கின்றன. பைசாண்டின் நகரைச்சேர்ந்த இரு பிரசாரகர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பினால் கிரேக்க நூல்களை அவர்கள் தங்களுக்குப் பாரசீகமொழியில் மொழிபெயர்த்துக் கொடுப்பார்கள்” என்று ரக்கின் உட்டின் கூறினான்.

பிளோட்டினஸ் எழுதிய நூலைக் கண்ட ஆச்சரியநிலையில் இருந்த போதும்கூட ரக்கின் உட்டின் பேசும் பொழுது முஸ்லிம்களை, அவர்கள் வேறு ஏதோ மதத்தைச்சேர்ந்த அந்நியர்கள் என்பதுபோல் பிரித்துப் பேசுவதைக் கவனித்தான் உமார்.

அவன் சிரித்துக்கொண்டே, “இது ஒரு பல்கலைக் கழகமா? அல்லது பாதுகாப்புக் கோட்டையா” என்று கேட்டான்.

“இரண்டும்தான்! இன்னும் சொல்லப்போனால் அதற்கு மேலும்கூட என்னலாம்! மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் எந்த விதமான எண்ணங்களும் இடையூறு செய்யாத முறையிலே இங்கு நாங்கள் அறிவைத் தேடுகிறோம். இதோ பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிறிய பிரசாரகன் அங்கிருந்த நூல்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக் காண்பித்தான்.

“இதோ, இதுதான் அடையாள முறைக் கணிதநூல் அடுத்தது, மூன்றாவது டிகிரியின் சரியளவுக் கணித நூல், அடுத்திருப்பது கிரகண ஆராய்ச்சிகளின் தொகுப்புநூல், அதற்கும் அடுத்தது, உமார்கயாம் அவர்களின் வான ஆராய்ச்சி. எல்லாம் கிடைத்தற்கரிய புத்தகங்கள். நான் தங்களுடைய கணித நூல்களைப் படித்திருக்கிறேன். மற்ற நூல்கள் எல்லாம் என்னுடைய புரியுந்தன்மைக்கு அப்பாற்பட்டவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், எங்கள் தலைவர் இந்நூல்கள் அனைத்தையும் கற்றிருக்கிறார்.”

“உங்கள் தலைவர் ஷேக் அல்ஜெபலா, அனைத்தும் படித்திருக்கிறாரா?”

“வேறு யார்? அவரேதான்! அடிப்படை விஞ்ஞானங்களான தருக்கனூல், கணிதம், இசை, இடைவெளிக் கணிதம், வானியல், பொருளியல், மனோவியல் ஆகிய ஏழிலும் எனக்கு ஓரளவு பயிற்சியும் திறமையும் உண்டு. ஆனால், எங்கள் தலைவர் இவற்றோடு, எல்லாவிதமான மதங்களிலும், யூதர்களின் வழிவழி வாய்மொழிக் கொள்கையிலும், கண்கட்டு வித்தையிலும் கூட நல்ல தேர்ச்சி பெற்றவர். அவர் நிறையறிவுடையவராக இருப்பதால், நாங்கள் மகிழ்ச்சியுடன் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.”

பிளேட்டினஸ் நூலின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த உமாரின் காதில் கடைசியில் அவன் சொன்ன விஷயம் படவில்லை. ஒரு முக்கோணப் பெருக்கலின் அடிப்படைபற்றிய பிரச்சினையில் அவன் மனம் ஈடுபட்டிருந்தது.

கழுகுக் கூட்டிலே, காலம் அலகிடப்படாமலே கழிந்துகொண்டிருந்தது. அந்த நிலையத்தில் உள்ள அரும்பெருஞ் செல்வங்களானவைகளில் ஆழ்ந்து ஈடுபட்டிருப்பதும், மற்ற நேரங்களில், வெளியுலகில் பல இடங்களிலும் சுற்றித் திரிந்துவிட்டு நிறைந்த அனுபவத்துடன் திரும்பி வந்துள்ள பிரசாரகர்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாகக் கொண்டான் உமார். அவர்கள், சீனதேசத்து விஞ்ஞானத்தின் பெருமையைப்பற்றியும் பைசான்டின நகரத்து இசைக்கலையின் அருமையைப் பற்றியும் விவாதித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ரக்கின் உட்டின், அதிசயக் கணக்குகளிலே தன் அறிவைச் செலுத்திவந்தான். எப்படி யெப்படியோ எண்களைப்போட்டுக் கூட்டுவதால் வரும் ஒரே விடையைப்பற்றியும் இன்னும் பல மாதிரியாகவும் வியப்பதற்குரிய வகையில் விடைவரும் கணக்குகளைப் பற்றியும் பேசினான், அவன். சில சமயம் செய்தும் காண்பித்தான். இதையெல்லாம் கண்ட உமார், “உன் கணக்குகள் அதிசயமானவைதாம்! ஆனால் அழுத்தமில்லாதவை” என்று கூறிவிட்டான்.

“சாதாரண மக்களுக்கு, அவை அழுத்தமில்லாதவையாகத் தோன்றுவதில்லை; தெய்வீகமாகத் தோன்றும்!” என்று கூறினான் ரக்கின். ஒவ்வொரு நாள் இரவிலும் உமார் தூங்கும்போது, அறைகுறையான விசித்திரக் கனவுகள், முந்திய மாலையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட கனவுகள் தோன்றின. அவனுடைய அறையின் சுவர் விசித்திரமான புதிய புதிய நிறங்களில் தோன்றின. இருப்பினும் தான் நல்ல உடல் நலம் மனநலத்துடன் இருப்பதாகவே தெரிந்து கொண்டான். ஒருவேளை மலைக்காற்றின் தன்மையாலும், தான் குடிக்கும் காரமான மதுவின் தன்மையாலும் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாமென எண்ணினான்.

இருப்பினும் வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக கூடுதலாக அந்தக் கனவுகள் வரவில்லை, நிசாப்பூரிலே தோன்றாத சிலಶ್ಗ வடக்குத் திசையின் அடிவானத்தின் ஓரத்திலே தோன்றியிருப்பதை அவன், அந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஒருநாள் பின் மாலைப் பொழுதிலே ஒரு கோபுரத்தின் மேலே நின்று வானை நோக்கிக் கொண்டிருந்த உமாரிடம் ரக்கின் உட்டின் வந்தான். ஆர்வமும் உணர்ச்சியும் கலந்த குரலில், “எங்கள் தலைவர், தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் விரைந்து செல்ல வேண்டும்” எனறான்.

உமார் தான் எழுதிக் கொண்டிருந்த வரைவு படத்தை அங்கேயே வைத்துவிட்டு, ரக்கின் உட்டினைப் பின் தொடர்ந்து போனான். போகும் வழியிலேயே “இந்தக் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள எந்த மனிதனும் பாராத விஷயங்களைத் தாங்கள் பார்க்கப் போகிறீர்கள். என்னைத் தொடர்ந்து வாருங்கள். காணும் விஷயங்களைப் பற்றி எதுவும் சொல்ல நினைத்தால் என்னிடம் சொல்லுங்கள் வேறு யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று அவன் குறிப்பாகச் சொன்னான்.

ஓடுவது போன்ற வேகத்துடன், அவன் உமாரை அழைத்துக் கொண்டு கோபுரத்திலிருந்து இறங்கி வந்து, நடுக்கூடத்தைக் கடந்து, புத்தக நிலையத்திற்குச் சென்றான். அங்கிருந்த வேறொரு கதவைத் திறந்து கொண்டு, பாதையில் செதுக்கிய படிக்கட்டின் வழியாக இறங்கிச் சென்றார்கள். படிக்கட்டின் பக்கங்களிலே திரும்பி எதையும் பார்க்க முடியவில்லை. குளிர்ந்த காற்று ஜில்லென்று மேல் நோக்கி வீசியது. படிகள் கீழே போய்க் கொண்டே இருந்தன. உமார் ஒரு குறுகிய மலைக் குகை பாதை வழியாகப் போவதாக அறிந்தான்.

படிகள் சில இடங்களில் சிதைந்திருந்தன. அந்தமாதிரிச் சந்தர்ப்பங்களில், தடுமாறும்படி நேரிட்டால் பக்கத்துச் சுவரைப் பிடித்துக் கொண்டான். ரக்கின் உட்டுக்கோ, அந்தப் பாதை சர்வசாதாரணமாக இருந்தது. கையில் உள்ள விளக்கைப் பிடித்தபடியே தாவித் தாவிச் சென்றது வேடிக்கையாக இருந்தது.