உமார் கயாம்/34. கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட புலிகள்!

410093உமார் கயாம் — 34. கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட புலிகள்!பாவலர் நாரா. நாச்சியப்பன்

34. கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட புலிகள்!

கடைசியாக அந்தக் குறுகிய பாதையின் அடித்தளத்திலே நின்ற போது, இந்தப் படிக்கட்டுகள் எந்தக் காலத்தில் செதுக்கப் பெற்றனவோ? இது என்ன சுரங்கமா? என்று உமார் கேட்டான் ஆச்சரியத்தோடு.

“தாங்கள்தான் முதன் முதலில் இந்த இடத்திற்கு வந்து இது மாதிரியான கேள்வியைக் கேட்கிறீர்கள். கதிரவனையும், நெருப்பையும் மனிதர்கள் கடவுளாக வணங்கிக் கொண்டிருந்த காலத்திலே கட்டப்பட்டவைதான் இந்தப்படிக்கட்டுகள். இங்கு அவர்கள் தங்கத்தைத் தேடவில்லை. அதைக் காட்டிலும் பெரு மதிப்புள்ள அறிவுப் பொருளைத் தேடினார்கள், சரி. இப்பொழுது கவனியுங்கள், மீண்டும் பேசாதீர்கள்” என்று எச்சரித்தான் அந்தக்குள்ள அறிஞன்.

ஒரு நடைபாதை வழியாகத் திரும்பி அது ஒர் இயற்கையான குகை என்ற நினைப்பில் கடைசி வரை உமார் ஓடினான். கடைசியிலே, ஒரு தாழ்ந்த மரக்கதவின் அருகிலே ஒரு வேலின் மேல் சாய்ந்தபடி இருந்த ஒரு காவல் வீரனுடைய உருவம் அந்த இருளின் இடையிலும் தெரிந்தது ரக்கின் உட்டின் கதவைத் திறந்தான்.

அந்தக் காவல் வீரன் இவர்களைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அந்தக் குள்ளனைத் தொடர்ந்து, அந்தத் தாழ்ந்த கதவின் கீழே குனிந்து சென்ற உமார் உள்புறம் வந்து நிமிர்ந்து பார்த்த பொழுது, ஒரு பரந்த வெளியிலே, பல நபர்களின் இடையே தானும் இருப்பதை அறிந்தான். உட்கார்ந்திருந்த மனிதர்களுக்கு முன்னால், ரக்கின் உட்டின் உமாரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். குறுக்கில் இவர்கள் போவதைக் கண்டு மற்றவர்கள் முணுமுணுத்தார்கள். ஓர் இடத்திலே அவன் உமாரை உட்காரவைத்தான்.

எங்கும் இருள் நிறைந்திருந்தது. உமாருக்கு முன்னும் பின்னும் பலர் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் தெரிந்த தலைகளுக்கும் அப்பால் ஓர் இடத்திலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பு அல்ல. உற்று நோக்கியதில். கீழே உள்ள பாறை வெடிப்புகளின் இடையிலிருந்து நெருப்பு நாக்குகள் மட்டும் வெளியிலே தோன்றியது. அந்த நாக்குகள் அசல் நெருப்புப் போல சிவப்பாக இல்லை, ஒரு வித நீல நிறத்துடன் விளங்கின. அந்த நெருப்பு நாக்குகளின் ஆட்டத்திற்குத் தகுந்தாற்போல் ஓர் இசை யெழுந்தது. அந்த இசை, முதலில் குழலிசை போலத் தோன்றியது. பிறகு அதற்கிடையிடையே தாளத்தின் சத்தமும், குகையின் மேல் பகுதிகளிலே ஆடிக்கொண்டிருந்த மணிகளின் எதிரொலியும் கூட அந்த இசையுடன் கலந்து வருவது தெரிந்தது.

முன் புறத்தில் இருந்தவர்கள், தூரத்திலிருந்து வந்த இசையோசைக்குத் தகுந்தாற்போல் தம் தலைகளை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டிருந்தாலும், எரியும் நாக்குகளுக்கு அப்பால் இருந்த இடைவெளியை நோக்கியபடியே இருந்தன. சிறிது நேரம் உமார் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கினான். அங்கு இருந்த அவர்கள் அனைவரும் இளம் வயதினராகவும் வெள்ளை மேலாடையும் - சிவப்புக் கால்சராயும் அணிந்த கழுகுக் கோட்டைக் காவலர்களைப் போல உடையணிந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்! அரபியர்களைப் போல் மெலிந்த உடலும் கருந்தலையும் உடைய சில உருவங்களும், இந்துக்கள் அல்லது சீனர்கள் போன்ற பிற பல வகைகளும் தென்பட்டன.

“இவர்களெல்லாம் புதிய கொள்கைக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். இன்று இரவு இவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடுதலைத் திருநாள். பிறப்பு இறப்புத் தலைவரின் திருமுகத்தை இவர்கள் விரைவில் காணப் போகிறார்கள்” என்று ரக்கின் உட்டின் உமாரின் காதுக்குள்ளே ரகசியமாகச் சொன்னான். தீநாக்குகளுக்கப்பால் நடக்கப் போகும் அற்புதம் எதையோ அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே ஒரு நாட்டியம் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டியமென்றால் பெண்கள் நடனமல்ல, நட்ட நடுவிலே இடுப்பில் மட்டும் உடை தரித்த ஒருவன் தன் கைகளை உயரே தூக்கிக் கூப்பியபடி நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றிப் பலர் கத்திகளைச் சுழற்றிக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தார்கள். அவன் தன் குதிகாலை உயர்த்தியபடியே மெதுவாகத் திரும்பியபடி,

“அல்லா இல்லாஹி அல்லல்லாகி இல்லாகி...”

என்று ஓதிக் கொண்டிருந்தான்.

இசையும், மணியோசையும், சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கத்தி நடனக்காரர்களின் இல்லாஹி இல்லாஹி என்ற ஒலியும் எங்கும் நிறைந்திருந்தது, கத்திகள் மின்வெட்டுப் போல் சுழன்றனவே தவிர ஒன்றுடன் ஒன்று மோதவில்லை. ஒவ்வொருவரும் இரு கரங்களிலும் இரண்டிரண்டு கத்தி வைத்துக் கொண்டு சுழற்றி ஆடிய வேகத்தில் அடுத்தவனின் உடல் துண்டித்து விழுந்து விடுமோ என்று பயப்படும்படியாக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் உடல்களிலிருந்து வியர்வை முத்து முத்தாக அரும்பி வழிந்து கொண்டிருந்தது. இல்லாஹி இல்லாஹி என்ற தொழுகை ஓசை இடைவிடாது கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

எவ்வளவு நேரம் இப்படியே கத்தி நடனம் நடந்துகொண்டிருந்ததோ தெரியாது. ஆனால், முடியப்போகிற மாதிரி இருந்தது. ரக்கின் உட்டின் உமாரின் கையைப் பிடித்துக் கொண்டே மிக்சிரமத்தோடு, மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு மறுபக்கத்தில் ஒரு பையன் அழுதுகொண்டிருந்தான்.

திடீரென்று, ஒரு குரல் கிரீச்சிட்டது. “நேரம் வந்துவிட்டது. அவனைச் சொர்க்கத்துக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. சொர்க்கம் சொர்க்கம்” என்று கூவியது அந்தக் குரல்.

இன்னும் கைகளை மேலே தூக்கிக் கொண்டிருந்த அந்த அரை ஆடை மனிதன் பின்னுக்குத் தொங்கிய தன் தலையைத் திருப்பிச் சுழலும் கத்திகளைப் பார்த்தான்.

நடனக்காரர்களின் பின்புறத்தில் ஏதோ ஒன்றை உமார் கண்டான். ஆம், கொழுந்துவிட்டெரியும் நெருப்புக்கு ஊடே, ஓர் உருவம் தோற்ற மெடுத்தது. புலிநகப் பாதங்களும், சிங்கக்கால்களும், காளை மாட்டின் உடலும் சுருண்டு கிடக்கும் முடியுடன் கூடிய மனிதத் தலையும் கொண்ட பயங்கரமான ஒரு பிராணியின் உருவம் தோன்றியது. அதன் தலையின் இருபுறமும் இறக்கைகள் தோன்றின. அது கல்லால் ஆகிய உருவமாக இருந்துங்கூட, மங்கலாகத் தோன்றிய வெளிச்சம் அதற்கு உயிர் இருப்பதுபோல் தோன்றச் செய்தது. “இதோ, இப்பொழுது அவன் சொர்க்கத்திற்குப் போகிறான்” என்று ரக்கின் உட்டின் கூவினான்.

கத்திகள் சுழன்ற பக்கமெல்லாம் கழுத்தைத் திருப்பிக் குதிகாலால் சுழன்றுகொண்டிருந்த அந்த அரை ஆடை மனிதன், அசையாமல் நின்றான். கத்தி முனைகள் அவன் உடலைத் தீண்டின. சதையைக் கிழித்தன. சிவந்த குருதி அவன் அரையில் கட்டியிருந்த வெள்ளை ஆடையின் மீது பாய்ந்து ஓடியது. பெருத்த வேதனையுடன் அவன் கதறிக் கொண்டிருக்க இரத்தக் கறை எங்கும் படிந்தது. அவனுடைய தூக்கியிருந்த கைகள் பக்கவாட்டில் தொங்கி விழுந்தன.

அவனுடைய தோளுக்கு மேலே பாய்ந்து சென்ற ஒரு வாள் அவனுடைய தலையைத் துண்டித்தது. சிறிது நேரம் உடல் துடி துடித்தது; கைகள் ஆடின; பிறகு தரையிலே விழுந்து பட்டது.

அந்த உடல் துடித்து விழுந்த உடனே அங்கு ஒலித்துக் கொண்டிருந்த இசையும் இல்லாஹி என்ற ஓசையும் நின்றன. உமாரும் ரக்கின் உட்டினும் தவிர மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்புறம் நோக்கிப்பாய்ந்து சென்றார்கள்.

அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் “பிறப்பிறப்புப் பெருந்தலைவர்” என்று கூவியது.

தாடிக்காரன் காளை உருவத்தின் கால் நகங்களுக்கு இடையேயுள்ள இடத்திலிருந்து மின்னும் வெள்ளாடையணிந்த ஒரு நீண்ட உருவம் அடியெடுத்து வைத்து வெளியில் வந்தது. கைமணிக் கட்டிலிருந்து கழுத்து வரைக்கும், சவத்துக்குச் சுற்றியதுபோல அந்த உடல் சுற்றப்பட்டிருந்தது. ஆனால், அந்த உடலின்மேல் தோன்றிய தலை ஹாஸான் இபின் சாபாவினுடையதாக இருந்தது. காலடியில் கிடந்த செத்த மனிதனின் உடலை அவன் குனிந்து மேலே தூக்கினான்.

“அர்ப்பணம் செய்தவர்களே! இதோ பாருங்கள், இந்த மனிதன் சொர்க்கத்துக்குப் போய்விட்டான்” என்று அவன் கூறினான்.

உமாரைச்சுற்றிலும் இருந்தவர்கள் எழுந்திருந்தார்கள். கல் மிருகத்தின் கால் நகத்திற்கிடையிலே நின்ற ஹாஸானை அவர்கள் பார்த்தார்கள். முண்டமான அந்த உடலை அவன் தன் கைகளிலே பிடித்திருந்தான். ஆனால், அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினரிடையே வியப்புப் பெருமூச்சு ஒன்று எழும்பியது.

அந்த முண்டத்தின் உடலிலே கத்திக்காயம் எதுவும் காணப்படவில்லை. அதன் ஆடையில் இரத்தக் கறை எதுவும் தென்படவில்லை. அணுவுக்கு அணு, வரிக்கு வரி, மயிரிழைக்கு மயிரிழை அது கத்திகளுக்கிடையே சற்றுமுன் சுழன்று கொண்டு நின்று சவமான அதே மனிதனுடைய உடல்தான்!

அந்த உடலைத் தூக்கிக்கொண்டே, அந்தக் கல் மிருகத்தின் கால்களுக்கிடையிலே சென்று நிழலிலே மறைந்து பின் சென்றுவிட்டான் ஹாஸாள்!

“வைபவம் நிறைவேறி விட்டது” என்று கூட்டத்தினர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். கத்தி நடனக்காரர்களும் கூட்டத்தினருடன் கலந்து கொள்வதற்காக நெருப்பைச் சுற்றிக் கொண்டு வந்தார்கள். வெள்ளாடையணிந்த அந்தக் கூட்டத்தின் ஊடே சிறுவர்கள், மது ஊற்றி நிறைந்த சடடிகளை ஒவ்வொருவருக்காக கொடுத்துக் கொண்டு வந்தார்கள். ஆவல் அதிகமுள்ள சிலர், பிறரை முந்திக்கொண்டு, கைநீட்டிக் கேட்டார்கள்.

“எல்லாக் கடவுள்களின் சாட்சியாகவும் கூறுகிறேன், இப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கண்ட பிறகு மது குடிப்பது நல்லது. எதையும் இறைந்து பேசாதீர்கள். இப்பொழுது அந்தக் கத்தி வீரர்கள் அந்தக் கல் எருதைக் கூட வெட்டி வீழ்த்திவிடக்கூடிய வெறியில் இருக்கிறார்கள், தாங்கள் சிறப்புக்குரியவர் என்பது அவர்களுக்குத் தெரியாது” என்று ஹாஸான் மெதுவாகக் கூறினான்.

அந்தக்குள்ள மனிதன் நடுங்கும் கரங்களுடன், ஒரு மதுச் சட்டியை வாங்கி, இருந்த மது முழுவதும் குடித்து விட்டான், அந்தச் சமயத்தில் அவர்கள் அருகிலே இருந்த ஒரு கத்தி நடனக்காரன். ஒரு துணியை எடுத்து, அந்தக் கத்தியில் படிந்திருந்த இரத்தக் கறையைத் துடைத்தான்.

‘அது உண்மையான இரத்தந்தானே?” என்று உமார் கேட்டதும், அந்த வீரன் உறுமிக் கொண்டே, அந்தக் கொடுவாளை உமார் கண்ணுக்கு முன்னாலே நீட்டி, தொட்டுப் பார்; நுகர்ந்து பார்! அதற்கும் மேலாக நீ சந்தேகப்பட்டால் உன்னுடைய சொந்த இரத்தத்தையே, உண்மையானதா? பொய்யானதா? என்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத் தருவேன்.” என்று கூவியபடி நின்றான்.

மற்றவர்களும் இதைக் கேட்டுவிட்டுத் தங்கள் கொடுமையான பார்வைகளை உமாரின் பக்கம் திருப்பினார்கள்! அந்த நடனமும், அவர்களுடைய உணர்ச்சியும், அப்பொழுது ஏதாவது கொடுஞ் செயல் புரியக்கூடிய பீதியான ஒரு மனோ நிலையை அவர்களுக்கு உண்டாக்கியிருந்தன.

“யா, அல்லா! அவன் யார்? எப்படி நம்மிடையே வந்தான்? யார் அவனை அழைத்து வந்தது? என்ற கேள்வி எழுந்தது!

ரக்கின் உட்டின் அவசர அவசரமாக அருகில் இருந்த ஒரு சட்டிமதுவை வாங்கி உமாரிடம் கொடுத்து’ “இதைக் குடியுங்கள்! கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்ட புலிகளைக் காட்டிலும் கொடுமையானவர்கள் இவர்கள்” என்று உமாரிடம் கூறிவிட்டு, கூட்டத்தை நோக்கி, “இவர் நம்முடைய விருந்தாளி. நம் தலைவரின் திருமுகத்தைக் காண இவன் வரவேண்டுமென்பது அவருடைய உத்தரவு” என்றான்.

“அவனுக்காகப் பதில் பேசுவது யார்?” என்று மறுபடியும் ஒருவன் கேட்டான்.

உமாரைச் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஒரு இளைஞன் முன்னுக்கு வந்தான். உமாரின் எதிரே வந்து நின்று கொண்டு இடுப்பில் சொருகியிருந்த குத்துக் கத்தி யொன்றைக் கையில் பிடித்துக் கொண்டு, “இப்பொழுது சொல்லுங்கள் யார் இவனுக்காகப் பேசுவது?” என்று கூவினான், அவனுடைய வாய் அகன்று கண்கள் தன்னைச் சுற்றியிருந்தவர்களின் ஊடே பார்த்துக் கொண்டிருந்தது.

“நான்தான்!” என்று கூறிக் கொண்டே, அந்த இளைஞனை அப்பால் தள்ள முயற்சித்தான் ரக்கின் உட்டின். ஆனால் அவனால் முடியவில்லை. “அவன் நம் மலையைச் சேர்ந்தவன் அல்ல. இதோ பாருங்கள்; அவன் தாடியிலே சாயம், கைகளிலே வெள்ளைத் தோல். நம் தலைவரின் தொண்டர்களே, நம்மிடையிலே, இந்த மனிதன் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறான்” என்று அந்த இளைஞன் மீண்டும் கூவினான், பயங்கரமாக.

உறுமும் முகங்கள் உமாரை நோக்கி நெருங்கின. குமுறும் இதயங்கள், கொதிக்கும் கண்கள் அவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. அவர்களுடைய கத்தியின் இரத்த நாற்றமும், வியர்வை நாற்றமும் அவன் மூக்கைத் துளைத்தன. உமாரின் மூளையிலே திடீரென்று ஒரு கதகதப்பு உணர்ச்சி பெருகியது. அந்தக் குகையின் பக்கங்கள் அகன்று கொண்டு சென்றன, இடைவெளி அதிகமாகியது பூமியின் அடித்தளமான இந்த இடத்திலே தொடக்க காலமுதல் பிரார்த்தனை மேடையில் பணிபுரிந்து வரும் மத குருக்கள் பல பேர் இருப்பதைக் கண்டான். அந்தக் கல் மிருகம் மிகமிகப் பெரியதாக வளர்ந்திருந்தது. அந்தக்கல் இறக்கைகள் ஆடி அசைந்தன. அந்த மிருகத்தின் கால் நகங்களுக்கிடையே அந்த மேடையிருந்தது. அந்தப் பழங்காலத்துத் தெய்வத்தின் மேடையிலே என்றும் அழியாத நெருப்பின் இருப்பிடத்திலே தான் எல்லா உடல்களும் வந்து சேரவேண்டும். அந்தப் பெரிய மிருகத்தின் பேராற்றலை எதிர்த்து, அவன் தன்னுடைய எளிய உடலைக் காப்பாற்றுவதென்று நினைப்பது முட்டாள் தனமானது.

“வழிவிடுங்கள், வழி!” கனமான காலடி ஓசைகள் கேட்டன. அருகில் வந்து கொண்டிருந்தன. அணியணியாகப் பல கரிய நிறமுள்ள அடிமைகள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, உமாரை நோக்கி வந்தார்கள்! உமாரின் அருகில் நெருங்க முயன்ற கத்தி வீரர்கள் அடிமைகளால் அடித்துத் தள்ளப்பட்டார்கள். பலமான கைகளால் அவன் தூக்கப்பட்டு, அந்த நெருப்பிருக்கும் இடத்தை விட்டு அகற்றிக் கொண்டு போகப்பட்டான். முணுமுணுக்கும் குரல்களின் ஓசை குறைந்து, கரிய அடிமைகளின் காலடி ஓசை பலத்தது, அவர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு இருண்ட நடைபாதை வழியாகச் சென்றார்கள். தாங்க முடியாத சோர்வு உமாரைத் தழுவிக்கொண்டு வந்தது.

சந்தடிகள் எல்லாம் நின்ற பிறகு, ஏதோ கனமான புகைநாற்றம் ஏற்பட்டது. உமார் மிகுந்த முயற்சியுடன் தன் கண்களைத் திறந்தான்.

தன் தலையைத் திருப்பிப் பார்த்த போது, கணப்பிலே சிவந்த கரித்தணல் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்தக் கணப்பிலிருந்து எழுந்த புகை தன் முதத்திலே வந்து படுவதையும் அறிந்தான். அந்தப் புகையிலே நல்ல வாசம் கலந்திருந்தது. அவனுடைய நெற்றியின் குறுக்காக ஒரு கை வந்து தன்னைத் தொடுவதைக் கண்டு திரும்பிய உமார், ஹாஸான் தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஹாஸனுடைய வாய் “சொர்க்கத்திற்கு, சொர்க்கத்திற்கு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தன!