உமார் கயாம்/38. பாடும் புறா பறந்துவிட்டது!
தன் அறிவிலே ஒருவிதமான மயக்க நிலையை ஏற்படுத்திய மருந்து எது என்பதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதே முதல் வேலை என்று உமார் தீர்மானித்துக் கொண்டான். அறிவைக் குழப்பித் தொடர்ந்து பல காட்சிகளைத் தோற்றுவித்துத் தன்னை ஏமாற்றுவதற்கு ஹாஸான் உபயோகித்த பொருள் மதுவிலே மட்டும் கலக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நன்றாக உணர்ந்தான். மதுவின் தன்மையை உணர்ந்த அவன், அதை நன்கு தெரிந்து கொண்டான். மதுவிலே கலக்கப்பட்டிருந்ததை விட அதிகமான காட்டமுள்ள பொருள் ஒன்றுதான் தன் மூளையைக் குழப்பியிருக்க வேண்டும். அது கணப்பிலிருந்து வந்த புகையிலே கலந்திருக்க வேண்டும். தான் குடிக்கும் மதுக்கோப்பைகளிலும் கலந்திருக்க வேண்டும். அதையகற்றினால்தான் தான் தன் உணர்வோடு இருக்கமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டான்.
கணப்பை அகற்றுவது மிக எளிது. தன் வேலைகளைச் செய்யவரும் அடிமையிடம், கோபமாயிருப்பது போல் நடந்து, இனிமேல் இந்த அறைக்குள்ளே கணப்பை வைக்காதே என்று கூச்சலிட்டுக் கடிந்து கொண்டால் போதும். ஆனால் மது வேண்டாம் என்று கூறினால் அந்த மயக்க மருந்தை வேறு முறையிலே உபயோகிக்க முயற்சி நடக்கும். மேலும் நம்மைப்பற்றி மிக எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கி விடுவார்கள், தான் அறியாமலே தன்னை உளவு பார்க்கிறார்களே அவர்கள், தன்னை நம்பவேண்டும். தினந்தோறும் தான் மது குடிப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளவேண்டும். ஆனால், தான் மதுவைக் குடிக்கக்கூடாது. இதற்கு என்னவழி? வேலைக்காரன் தினமும் கோப்பையிலே மது கொண்டு வருகிறான். அதைக் குடிக்காமல் இருக்கமுடியாது, என்ன செய்வது? அவர்கள் தினமும் நடுப்பகலிலும், இரவிலும் கொண்டுவரும் மது தனக்குப் போதவில்லை என்றும் ஒரு சாடிநிறையக் கொண்டுவந்து வைக்கும் படியும் உமார் கேட்டுக் கொண்டான். அதன்படி ஒது பெரிய ஜாடி நிறைய மருந்து கலந்த மதுவைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஹாஸான் இந்த ஒரு வாரமும் உமார் மதுக்குடித்து மயங்கிக் கிடந்தால் நல்லது என்று எண்ணியிருக்க வேண்டும். அந்த மதுச்சாடியைப் பார்த்து “இனி ஒவ்வொரு நாள் இரவும் உன்னிடமுள்ள மதுவை இந்தப் பள்ளத்தாக்கு தவறாமல் குடிக்கும்” என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டான்.
இருள் சூழ்ந்து கொண்டு வந்ததும், அந்த அடிமைப் பையன் வெளியில் செல்லும் தருணம் பார்த்து. ஒரு குவளை நிறைய மதுவை ஊற்றி சுவர்த் துவாரத்தின் வழியாக வெளியே ஊற்றி விட்டான். ஆனால், அவன் படுத்துக் கண்ணை மூடும்போது, தான் ஒரு கோப்பை மதுக்குடித்தால் தேவலாம் போல் இருந்தது. ஏற்கெனவே, குடித்து அனுபவப்பட்ட உள்ளம் மதுவுக்காக மயக்க மருந்து கலந்த அந்த மனோகரமான மதுவுக்காக ஏங்கியது. உமார் மனதை அடக்கிக் கொண்டான். பக்கத்திலே ஜாடி நிறைய மதுவை வைத்துக் கொண்டு, தாகத்தோடு கிடப்பது சங்கடமாக இருந்தது. அந்த மதுவின் சுவையும் மணமும் உமாரை அழைத்துக் கொண்டிருந்தன. உமார் எழுந்து சென்றான். மதுக்குவளையைக் கையில் எடுக்கும்போதே மனசாட்சி எச்சரிக்கை செய்தது. பேசாமல் திரும்பி வந்து படுக்கையில் விழுந்து சாய்ந்து கொண்டான்.
அடுத்த நாள் இரவு குடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் சாடியைத் தொடக்கூட அவன் முயற்சிக்கவில்லை. மனத்தை அடக்கிக் கொண்டான். இப்படியாக மனத்தை அடக்கி மயக்கத்தையும் கனவையும் தவிர்த்தான். நான்காவது நாள் இரவு வந்தபோது, அவனுக்கு அந்த ஆவல் எண்ணமே அடியோடு அற்றுப்போய் விட்டது. தன்னடக்கம் கைவந்தோர்க்கு எந்த கவலையுமில்லை என்பதைப் போல அவன் பேசாமல் படுத்துக் கொண்டே, அந்த மதுவில் கலந்துள்ள மயக்க மருந்து, மனிதர்களின் உடலிலே ஏற்படுத்தும்