உமார் கயாம்/5. ஆருயிர்த் தோழனின் ஆவி பிரிந்தது!
கிழக்கையும், மேற்கையும் ஒருங்கே ஆண்ட பேரரசர், உலகத்தின் இறைவர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் தம்முடைய படை பயணிகளுடன் போர்க்களத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அவர்களுடைய ஒட்டகங்களும், குதிரைகளும், கழுதைகளும் அர்மீனியன் மலைப்பள்ளத்தாக்கில் உள்ள அர்சானா ஆற்றங்கரைச் சமவெளியை நோக்கி நடந்து கொண்டிருந்தன. அரசருடைய விகடனான ஜபாரக்கும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருந்தான். குள்ளமான அவனுடைய கால்கள் இரண்டையும் இரு பக்கங்களிலும் தொங்கவிட்டுக் கொண்டு, கழுதையின் மீது உட்கார்ந்திருந்தான். குறித்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் அவனைச் சாமான்களும் மிருகங்களும் இருக்கும் இடத்திலேயே இருக்கச் சொன்னார்கள். இஸ்லாமிய மதத்தலைவர்களான முல்லாக்களும் கூட அங்கேயிருந்தார்கள். ஏனென்றால் அதுதான் போர்க்களத்தின் ஆபத்தில்லாத பகுதியாகும். ஆனால் கோமாளி ஜபாரக் சுல்தானுடைய முதுகுப்புறம்தான் ஆபத்தில்லாத இடம் என்று கூறினான். இஸ்லாமியர்கள் அவர் முதுகை நோக்கி அம்பு எய்ய மாட்டார்கள் என்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர் முதுகு தெரியவே தெரியாதென்றும், ஆகவே முதுகுப் புறத்தில் இருப்பவனை எந்தவிதமான அம்பும் தாக்க இடமில்லை என்றும் அவன் விளக்கம் கூறினான். சுல்தான் அவர்களுக்கு ஜபாரக்கின் இந்த அபூர்வ யோசனையைக் கேட்டதும், சிரிப்பு வந்தது. போர் பற்றிய சிந்தனை ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை ஒருமுறை கூடச் சிரித்தறியாத சுல்தான் அன்று சிரித்துவிட்டார். அவருடைய ஆணைப்படி, ஜபாரக் அவர் அருகிலேயே இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அடிமைகள் படைக்கலங்கள் அணிந்து, செங்கொடியும் ராஜகுடையும் பிடித்துவர சுல்தான் அவர்களின் அருகிலேயே ஜபாரக்கும் இருந்து வந்தான்.
பள்ளத்தாக்குப் பிரதேசத்தின் தொடக்கத்திலேயே மாலஸ்கர்டு பட்டணத்தின் கோட்டைச் சுவர் அருகே தம்முடைய கொடியை நாட்டச் சொன்னார். அவருக்கு எதிரிலே நீண்டு விளங்கிய வளமான அந்தப் பள்ளத்தாக்கின் மேற்பகுதியிலிருந்து கிறிஸ்துவர்களின் படை முன்னேறி வந்து கொண்டிருந்தது. அந்த ரோமன் படைகளைத் தலைமையரசரான கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரே நடத்திக்கொண்டு வந்தான். கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரின் முன்னோர்கள், பரம்பரையாகவே கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாகவே இஸ்லாமிய மதத்தின் நேர் எதிரிகளாக விளங்கி வந்திருக்கிறார்கள்.
சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள், அந்தப் பேரரசரின் ஆளுகைக்குட்பட்ட தேசங்களிலே அடிக்கடி தன் படைகளை அனுப்பிப் பலபகுதிகளைத் தாக்கிக் கொண்டு வந்தார். இது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருமுறை ஆசியா தேசத்தின் ரோமாபுரி என்று பெயர் பெற்று விளங்கிய ஆசியா மைனர் வரையிலும் சென்றுகூட அவருடைய குதிரைப்படை தாக்கிவிட்டு வந்திருக்கிறது. சுல்தானின் படையினர் ரோமர்களைத் தாக்கிக் காயப்படுத்திப் பெருங்கோபம் கொள்ளும்படி செய்துவிட்டு வந்தது, கான்ஸ்டாண்டி நோபிள் பேரரசரின் பெருஞ்சினத்தைக் கிளப்பிவிட்டது. தன்னை எதிர்த்துப் படைதிரட்டி வந்து, தம்முடைய எல்லைக்குள்ளேயே நடந்து வந்துவிட்ட இஸ்லாமியப் படைகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அந்தப் பேரரசர் தம் வசமுள்ள எல்லாவிதமான ஆயுதங்களையும் ஒன்று திரட்டினார். விற்பயிற்சியில் தேர்ந்த பல்கேரியப் படைகளும், வாட்போரில் இணையில்லாத ஜார்ஜிய சேனைகளும், இஸ்லாமியரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக இணைந்து வந்த ஆர்மீனியப் படைகளும்; தன்னுடைய திறமை பெற்ற குதிரைப் படைகளும், எண்ணிக்கை மிகுந்த காலாட்படைகளும் ஒருங்குசேர ஒரு பெருஞ்சேனையையே நடத்திக்கொண்டு ரோமர்களின் பேரரசர் கான்ஸ்டாண்டி நோபிளின் கிறிஸ்தவ மன்னர், துருக்கிப் படைகளை விரட்டியடித்துக் கொண்டு முன்னேறி வந்தார். துருக்கிப் படைகளின் எண்ணிக்கை பதினையாயிரம். எதிர்த்து வந்த ரோமர் படைகளின் எண்ணிக்கையோ எழுபதினாயிரம். கிறிஸ்தவர்களின் பேரரசர் பேராண்மைமிக்க ஒரு வீரர். துருக்கியரின் குதிரைப் படையினர் எத்தனையோ நாட்களாகத் தனக்குக் கொடுத்து வந்த தொல்லைகளைக் கண்டு பொறுமை மீறப் போருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். அவருடைய ஆவேசமும் அதிகம்! படைகளும் அதைவிட அதிகம்! சுல்தான் ஆல்ப் அர்சலான், தம் படைத் தலைவர்களே வியப்படையும்படி, தரையில் தமது கொடியை ஊன்றி நட்டு, தம் படைகளை அந்தப் பள்ளத்தாக்கின் குறுக்கே அணிவகுத்து நிறுத்தினார். சீறிவரும் கிறிஸ்தவப் படைகளை எதிர்ப்பதற்காக அந்தப்படை காத்திருந்தது.
ஜபாரக்கிற்கு இது எதோ முட்டாள்தனமான காரியமாகத் தோன்றியது, பதினையாயிரம் பேர் எழுபதினாயிரம் பேரை, எதிர்த்து வெற்றி பெறுவதென்பது எளிதான செயலல்ல, விகடனைத்தவிர வேறு யாரும் கவனிக்காதபோது சில அமீர்கள் பேசிக் கொண்டார்கள். ரோமர்கள் பெரிய வேற்படையினரின் தாக்குதலை, நன்கு தேர்ச்சி பெற்ற துருக்கிக் குதிரைப்படைகூடத் தாக்குப் பிடிக்க முடியாதென்று அவர்கள் கருதினார்கள். போரில் வெற்றி கிடைக்குமென்பதில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை, கிறிஸ்துவப் படைகள் சேறு நிறைந்த வயல்களின் வழியாகச் சிறிது சிறிதாக முன்னேறி வந்து கொண்டிருந்தன. அஞ்சா நெஞ்சம், உறுதியும் ஆண்மையும் படைத்த சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் தம் குதிரைப்படையை அங்கே நிறுத்தி, அவர்கள் நெருங்கி வருவதற்காகக் காத்திருந்தார். எதிரிகளைத் தாக்கித் துரத்துவதற்கும், அதே சமயம் வேகமாய் பின்வாங்குவதற்கும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். தாங்கள் அடியுண்டு வீழ்ந்து மரணமடைய நேரிடுமோ என்று பல தலைவர்கள் பயந்து கொண்டிருப்பது ஜபாரக்கிற்குத் தெரியும்.
நாம் பின்வாங்க வேண்டியதேயில்லை. ரோமர்களின் முகாம், பள்ளத்தாக்கின் கோடியில் வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களோ, நம்மோடு பொருதுவதற்கு வெகு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள், நாம் அவர்களை எதிர்த்துத் தாக்குவதற்காகவே இங்கே காத்திருக்கிறோம். இது தான் முடிவானபேச்சு, இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது, எழுதப்பட்ட படிக்குத்தான் நடக்கப் போகிறது.
சுல்தானின் இந்தப் பேச்சு அவருடைய முத்தமகனின் முகத்தில் பயத்தையுண்டாக்கியதை ஜபாரக் கவனித்தான். சோதிடர்கள் குறிசொன்னபடியும், முல்லாக்கள் அறிவித்தபடியும் நாளைய சண்டையின் முடிவு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டபடியே நடக்கும் போலும், கிறிஸ்தவப் பேரரசனின் அவசரத் தன்மையும், சேறு குழம்பிய வயல் வெளியும், எந்தப் போரிலும் தோல்வியே கண்டறியாத துருக்கிப்படைகள் ஆடாதசையாமல் நிற்கும் வன்மையையும் பார்க்கும் பொழுது, விகடன் ஜபாரத்திற்கு இது ஏற்கெனவே விதியால் எழுதப்பட்டபடிதான் நடந்தாலும் நடக்கும் போலவும், வெற்றி தோல்வி முன்னாலேயே நிச்சயிக்கப்பட்டது போலவும், விதியின் சொக்கட்டான் விளையாட்டில், நாளைக்கு இந்தப் படைகளெல்லாம் அங்கும் இங்கும் காய்கள் உருட்டப்படுவது போல் நகர்த்தப்படப் போவது போலவும் தோன்றியது.
சுல்தான் ஆல்ப் அர்சலான் அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை.
குளிர் நடுக்கத்தைத் தாங்க முடியாமலும், உள்ளத்திலே ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சியின் காரணமாகவும், விடிவெள்ளி தோன்றுவதற்கு முன்னாலேயே ரஹீம் எழுந்து விட்டான். யார்மார்க் என்ற வேலைக்காரனிடம் வாளைக் கொடுத்து அதைத் தீட்டிக் கூராக்கி வைக்கும்படி அடிக்கடி ஆணையிட்டான், மற்ற வேலைக்காரர்களை விட்டு அவனுடைய கருப்புக் குதிரையைத் தேய்த்துவிடச் சொன்னான். அவசர அவசரமாக ஊற வைத்த பார்லியையும் பேரீச்சம் பழத்தையும் கொஞ்சம் விழுங்கினான். போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், மான் வேட்டையாடுவது போல் அது தோன்றவில்லை. அல்லது அவன் எதிர்பார்த்தபடியும் இல்லை. காலை விடிந்தவுடன் போரழைப்பு வருமென்றும், வந்தவுடன் முழக்கமிட்டுக் கொண்டு கிளம்ப வேண்டுமென்றும் காத்திருந்த ரஹீம், அமைதியில்லாமல் அவனுடைய குதிரையைச்சுற்றி வந்தான். திரைக்கு அப்பால் அவனுடைய ஆட்கள் சொக்கட்டான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் குதிரை மேல் ஏறிய சமயம் அவனைக் கடந்து நடந்து செல்லும் ஈட்டிபிடித்த வீரர்களின் எண்ணற்ற தலைகளைக் கண்டான். சில சமயங்களில், தூரத்தில் உள்ள காட்டின் ஊடே காற்று துளைத்துக் கொண்டு அடிப்பது போன்ற ஓசை கேட்டது. நிஜாப்பூர் பகுதியில் மக்கள் கூடும்போது ஏற்படும் இரைச்சல் போலப் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இருந்து பெருங்கூச்சலும் சப்தமும் அடிக்கடி எழுந்ததையுணர்ந்தான். முன்பின் அறியாத ஒரு மனிதன் குதிரை மீது விரைந்து கொண்டிருந்தபோது, அவனை நிறுத்திப்போரின் விவரத்தைப்பற்றி ரஹீம் விசாரித்தான். அந்த மனிதன் ஒரு துருக்கியன். வெறுமனே ரஹீமை உற்றுப்பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான். பொறுமையில்லாத ரஹீம் அவனுடைய சேனைக் தளபதியான ஓர் அமீரிடம் சென்றான். அவனுடைய கொடியைச்சுற்றி, நிஜாப்பூர் வீரர்கள் கூடியிருந்தார்கள்.
“நாங்கள் களத்திற்குச் செல்ல ஆணையிடுங்கள், போர் துவங்கப்படுவதைப் பார்க்க வேண்டும் முதற்போரிலேயே நாம் கலந்து கொள்ள வேண்டும்” என்று ரஹீம் ஆவலோடு கூறினான்.
பள்ளத்தாக்கில் போர் தொடங்கி வெகுநேரம் ஆகிவிட்டதென்பதை அறிந்து அவன் வியப்படைந்தான். இன்னும், அங்கிருந்தவர்கள் கூறிய பல்மாதிரியான புதுமையான செய்திகளையும் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். கிறிஸ்தவர்கள் இரும்புக்கூண்டுகளில் அடைத்து வைத்திருக்கும் பூதங்களை முஸ்லிம்களின் மேல் ஏவிவிடுகிறார்களாம். முஸ்லிம் பட்டாளத்தின் சேனையின் ஒருபகுதி முழுவதும் அப்படியே ஆற்றுக்குள் முழுகிப் போய்விட்டதாம், ஜார்ஜியர்களும் அர்மீனியர்களும் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்களாம். பள்ளத்தாக்கு முழுவதும் வெகு தூரத்திற்கு வெறும் கிறிஸ்தவப் படைகளாகவே காட்சியளிக்கிறதாம். சுல்தானும் வலப்புறத்தில் உள்ள மலைகளின் ஊடே ஓடி ஒளிந்து விட்டாராம். இவ்வாறு ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, மற்றொருவன் “பொய்! பொய் ! அதோ பாருங்கள் நம் பேரரசர் சுல்தான் அதோயிருக்கிறார்!” என்று கூவினான். ரஹீம் குதிரைச் சேணத்தின் மிதியில் எழுந்து நின்றபடி உற்று நோக்கினான். அவனுக்குச் சமீபத்தில் இருந்த மணல் மேடொன்றின் மீது குதிரைப் படைவீரர்களின் கூட்டமொன்று, பாய்ந்து செல்வதைக் கண்டான். அந்தப் படையின் தலைவன் ஒரு வெள்ளைக் குதிரையின் மீது ஒரு வெள்ளிய தந்தக்கோலும் கடிவாளமும் பிடித்த கையுடன், முதுகுப் புறத்தில், அம்புறாத்துணியும் கொண்டிருந்தான். அவனுடைய, நெஞ்சு அகன்று தோள்பட்டைகள், புடைத்துச் சுருண்டு கட்டியாகி வீங்கியிருந்தன. கருப்புக் குல்லாயுடன் பழுப்பு நிறங்கொண்டு விளங்கிய அவன், அரண்மனைக் காவலாள் போல் தோன்றினான்.
“சுல்தான் எங்கேயிருக்கிறார்? என படைத் தலைவர்களின் பக்கம் திரும்பி கேட்டான் ரஹீம்.
“அல்லாஹீ! அதோ படைவீரர்களுக்கெல்லாம் முன்னாலே போகிறாரே அவர்தான்!”
சுல்தான் என்றால், பட்டாடை காற்றில் பறக்க பாய்ந்துவரும் குதிரைமேல் ஏறிப் பவிசாக அலங்காரத் தலைக்கவசம் அணிந்து பறக்கும் கொடிகளும் முழங்கும் முரசும் சூழ்ந்துவர வருவார் என்று ரஹீம் எண்ணிக் கொண்டிருந்தான். சாதாரண மனிதனைப் போல் தோன்றிய அந்தச் சுல்தானைப் பார்க்க அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பேசாமல் அவனுடைய இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.
நடுப்பகலிலே, அலுப்பும் பசியுமாக அவன் இருந்தபோது உமார் அவனை அழைத்தான்.
“ரஹீம் ! போர் நம்மை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் துருக்கியர்களுடன், மணல் மேட்டிலிருந்து கவனித்தேன். இங்கே வா” என்று அழைத்தான்.
அவர்கள் இருவரும், சுல்தான் கடந்துபோன அந்த மணல் மேட்டின் உச்சியில் ஏறி நின்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான தேன் கூடுகளிலிருந்து எழும் ஒசை காதில் வீழ்ந்தது. குதிரைக் குளம்படிகளின் சத்தமும், வாட்படையும், பிற படைகளும் மோதும் ஓசையும் மிக மென்மையாக இருந்தன. சூரிய வெளிச்சம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் தெளிவாகப்பட்டு அங்கே நடந்த காட்சியை விளக்கமாக எடுத்துக் காட்டியது.
நகர்ந்து கொண்டிருக்கும் குதிரைப்படைகளும் பொருதிக் கொண்டிருக்கும் வீரர்களும், உயரத்திலிருந்து பார்ப்பதற்கு மிகமிகச் சிறிய உருவங்களாகத் தெரிந்தன. சில சமயங்களில் அவை மிக மெதுவாகவே நகர்ந்தன. ஆடு மாடுகள் புல் மேய்வதைப் போல், சாவதானமாக நகர்ந்து கொண்டிருக்கும் படைகள், சில சமயங்களில், புயல் காற்றடிப்பது போல் வெகு வேகமாகப் பாய்வதையும், ஓடுவதையும் கூடப் பார்க்க முடிந்தது. நான்கு மணி நேரம், கிறிஸ்தவப்படைகள் துருக்கிப்படைகளின் மேல் தங்கள் அம்புகளை ஏவிப் பின்வாங்க வைத்தன. மெதுவாகப் பின்வாங்கிக் கொண்டிருந்த துருக்கிப்படைகள் திரும்பவும் சிறுகச் சிறுக முன்னேறத் தொடங்கின. துருக்க வில்லாளிகளின் அம்புகளின் ஓசை குறையவேயில்லை. இந்தத் துருக்கி தேசத்துப் பெரும் படையில் ஒரு பகுதியான அந்தக் குதிரை வீரர்கள், அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் கைப்பற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டது போல் தோன்றியது.
சிறிது நேரத்தில் கொரசானியப்படைகளும் போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னேறத் தொடங்கிவிட்டன. போர் முரசுகள் பேரொலி எழுப்பிய அந்தக் காட்சியை உமார் சுட்டிக் காண்பித்தான். வேலைக்காரர்கள் இவர்களை அழைத்தார்கள்.
“அப்பா! அவர்களும் போரில் இறங்கிவிட்டார்கள்!” என்று ரஹீம் கூவினான். உமாரும், ரஹீமும் அவர்களோடு கலந்து கொள்ளப் புறப்பட்டார்கள். அப்பொழுது, நீண்ட வேல் ஒன்றை இழுத்துக் கொண்டு வந்த ஒரு பையன் ரஹீமின் குதிரைச் சேணத்து மிதியை பிடித்துக் கொண்டு, அல்லல்லா இல்லல்லா என்று கத்திக் கொண்டே குதிரையோடு தொடர்ந்து ஓடி வந்தான்.
தான் காத்துக் கொண்டிருந்த நேரம்வந்து விட்டதென்று ரஹீமுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன் வாளை உருவினான். ஆனால், மறுகணமே, தன் வாளை உறைக்குள் போட்டு விட்டான். கூட வந்தவர்கள், கேடயத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னேறினார்களே தவிர வாளையுருவவில்லை. “கொல்லுங்கள் கொல்லுங்கள்!” என்று கூவிக்கொண்டே, இழுத்து வந்த வேலுடன் ஓடிய பையன், குதிரையோடு தொடர்ந்து ஓட முடியாமல், கீழே, தரையில் வீழ்ந்து விட்டான். சேறும், நீரும் நிறைந்த நிலத்தின் குறுக்கே, அவர்கள் குதிரைகள் போய்க் கொண்டிருந்தன. சுமார் ஒருமணி நேரமாக ஓடிக் கொண்டிருந்துங்கூட அவர்கள் அந்த பள்ளத்தாக்கிலேயே சென்று கொண்டிருந்தார்கள். போர் செய்யும் இடம் அவ்வளவு தூரத்தில் இருந்தது. போகும் வழிகளில், சகதிகளில், பாதிபுதைந்த உடல்களும், வெட்டுப்பட்ட முண்டங்களும் ஆங்காங்கே கிடந்தன. அவற்றைக் கண்ட குதிரைகள், மிரண்டு விலகித் திசைமாறித் திரும்பி ஓடின. ஆளில்லாத குதிரைகளும் அவர்களைப் பின்பற்றி ஓடிவரத் தொடங்கின. ஆங்காங்கே சிதறிக்கிடந்த பொருள்களை அரபியர் சிலர் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது நிச்சயமாக சுல்தான் நம்மையும் போரில் குதிக்கச் சொல்லுவார் என்று ரஹீம் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது சாய்ந்து இருண்டுவரும் நேரத்தில் ஒரு தோட்டத்தில் வந்து இறங்கிய துருக்கிக் குதிரைப் படைகளின் அருகே, வந்து சேர்ந்தார்கள். துருக்கிப் படைகள் எங்கோ கிடைத்த காய்ந்த சுப்பிகளைக் கொண்டுவந்து எரித்து நெருப்பு காய்ந்து கொண்டிருந்தார்கள்.
அங்கேயே, இரவு தங்கும்படி, ஆணையிடப்பட்ட கொரசானியப் படைக்கு உணவும் கிடைக்கவில்லை; குளிர்காய நெருப்பும் கிடைக்கவில்லை.
இந்த சங்கடமான சூழ்நிலையில் அன்றைய இரவைக் கழித்துக் கொண்டிருந்த அவர்கள், காலை வெளிச்சம் தோன்றிய சமயத்தில் தூரத்தில் பேரிகை முழக்கம் கேட்டு எழுந்தார்கள்.
அந்தப் பேரிகையொலி கிறிஸ்தவர்களின் முகாமிலிருந்து கிளம்பியது. இருட்டில் நடந்த ஏதோ ஒரு சூழ்ச்சியினால், கிறிஸ்தவப் பேரரசருடைய பின்னணிப்படை, வெகு தூரத்திற்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது. காலாட்படைகளோ, மலைப்புறத்திலே துண்டிக்கப்பட்டு தனியாக சுல்தானுடைய படைகளால் சூழப்பட்டுச் சரண் அடைந்துவிட்டது. இந்த இக்கட்டான, சூழ்நிலையில் கிறிஸ்தவச் சக்கரவர்த்திக்கு, தன்னுடைய படையைச் சிறிது பின்வாங்கிக் கொள்ளும்படி நேர்ந்துவிட்டது. இப்பொழுது, பொழுது விடிந்ததும் புதிய படையெடுப்புக்குக் கிளம்பும்படி தன்னுடைய குதிரைப் படையை அழைக்கும் அடையாளமாகத்தான் பேரிகையொலி எழுப்பப்பட்டது. உமாரும், ரஹீமும், குளிர்தாங்காமல், ஒடுங்கி உறங்கிக் கிடந்தார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்களே அடியோடு தெரியாது. அவர்களுடன் கூட வந்தவர்கள் அவர்களுடைய குதிரைகளுக்கும், சேணம் பூட்டி ஆயத்தம் செய்து, அவர்களையும் எழுப்பிக் கிளம்பச் செய்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமலே அவர்கள் இருவரும், பாய்ந்தோடும் குதிரைகளின் மேலே, பக்கமெல்லாம் படைவீரர்கள் சூழப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது, உமாருக்குப் பார்த்த இடமெல்லாம் குழப்பமாகவேயிருந்தது. ஒரு குதிரை வீரனின் தலைப்பாகை சரியாகக் கட்டப்படாமல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் வாயைத் திறந்தபடியே, வெறுங்காலால் ஓடிக் கொண்டிருந்தான். ஒரு வண்டி கவிழ்ந்து கொண்டிருந்தது. அதன் கீழே, ஒரு குடியானவன் நசுங்கிக் கிடந்தான்.
திடீரென்று ஒரு பக்கத்திலே ஒரு மனிதன், மண்டியிட்டு ஊர்ந்து வருவது தெரிந்தது. காயமடைந்திருந்த அவன் அருகிலே குதிரையை நிறுத்தித் தன் கைவேலால் அவனைக் குத்தினான், ஒருவீரன். அந்த வேல், கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவனுடைய உடலிலே, ஆழப் பதிந்தது. அவன் வாய்வழியாக, குருதி கொட்டித் தலைசாய்ந்து, கீழே விழுந்தான். அப்படியிருந்துங்கூட அவன் உடல் நகர முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்படிச் செத்து வீழ்ந்த வீரனை உமார் ஆச்சரியத்தோடு உற்று நோக்கினான். அவன் ஒரு கிறிஸ்தவ வீரன் போல் இருந்தது.
ரஹீம் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பிப்பார்த்தான் உமார். தலைப்பாகை சரியாகக் கட்டாமல் வந்து கொண்டிருந்த வீரன், தன் இடுப்பிலே பாய்ந்த ஓர் அம்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வலிதாங்காமல் முனகிக் கொண்டிருந்ததைக் கண்டான்.
குதிரைகள் போய்க் கொண்டேயிருந்த பாதையில் இங்குமங்கும் கூடாரங்கன் தெரிந்தன. இரும்புகள் மோதும் சத்தமும், அலறும் ஒலியும் எழுந்தன. தன்னுடைய குதிரை நுரை தள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட உமார் தன் கடிவாளத்தைத் தளர்த்தினான்.
இவ்வளவு நேரமும் போர்க்களத்தின் உள்ளே சண்டையின் மத்தியிலே புகுந்து வந்திருக்கும் தான் அதையுணராமலும், உறையில் இருந்த வாளை உருவாமலும் இருந்தது நினைப்புக்கு வந்தபோது உமாருக்குச் சிரிப்பாய் வந்தது. ஒரு பெரிய கூடாரத்தின் அருகிலே ரஹீம் நின்று கொண்டிருந்தான். அவனைச்சுற்றி எங்கும் நிறைந்திருந்த கொரசானியர்கள் கூடாரங்களுக்குள் ஏதும் பொருள்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை எதுவும் செய்யும்படி யாரும் சொல்லவில்லை. அவர்கள் குழந்தைகளைப் போலக் கூவிக்கொண்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் இருந்தார்கள். ரஹீமுடன் வந்தவர்களில் மூன்று பேர் அந்தக் கூடாரத்தின் உள்ளேயிருந்து பட்டுத் துணிகளையும் வெள்ளிப் பாத்திரங்களையும் அள்ளிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒரு பெண்ணையும் இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
அவள் மருண்டவள் போல் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய கண்களின் இருபுறத்திலும் ஒளிவீசும் தலைமயிர்கள் சாய்ந்து விழுந்திருந்தன. காய்ந்த கோதுமைத் தாள்கள் போல் அவை பளபளத்தன. அவள் முக்காடு அணிந்திருக்கவில்லை. அவளுடைய மெல்லிய இடையில் பொன்னுடை ஒன்றை அணிந்திருந்தாள்.
அந்தக் கொரசானியர்கள் இதற்குமுன்னே இப்படிப்பட்ட ஓர் கிறிஸ்துவ இளமங்கையைப் பார்த்ததேயில்லை. எல்லோரும் அவளுடைய அழகிய உருவத்தைத் திறந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“உமார்! அல்லா நமக்கு அருள் புரிந்துவிட்டார் வெற்றி கிடைத்துவிட்டது” என்று ரஹீம் மகிழ்ச்சியுடன் கூறினான்.
வெற்றி என்று அவன் கூறிய குரலிலே விசித்திரமான ஓர் ஒலி இழைந்து கலந்திருந்தது.
‘இந்தப் புெண் கிறிஸ்துவப் பேரரசரின் அடிமைகளில் ஒருத்தியாக இருக்க வேண்டும். என் பங்குக்கு நான் ஒரு மத ரோதியான நாயைக் கொன்று விட்டேன்! வாருங்கள்; கூடாரத்திற்குள்ளே போய்ப் பார்க்கலாம்!’ என்று ரஹீம் அழைத்துக் கொண்டிருந்தபோது அவனுடைய வேலைக்காரன் யார்மார்க் ‘எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூவினான். கூடாரங்களுக்கு ஊடே சில மனிதர்கள் விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏறிவந்த குதிரைகள் வியர்த்து விறுவிறுத்து அதன் உடலெங்கும் சேறும் சகதியுமாக ஓடிவந்து கொண்டிருந்தன. பேய் பிடித்தவர்கள் போலத் தீராத வெறியுடன் கத்திகளையும் கோடாரிகளையும் ஏந்திப் பிடித்துச் சுழற்றிக் கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இரும்புத் தலைக்கவசங்களின் கீழேயிருந்த அவர்களின் முகங்கள் கடு கடுத்துச் சுருங்கியிருந்தன. அந்தக் குதிரை வீரர்கள் நெருங்கி வந்ததும் யார் என்று தெரிந்தது. ஆவேசம் பிடித்துப் பாய்ந்தோடி வந்த அவர்கள், தோற்ற கிறிஸ்தவர்களிலே சிலர்!
அவர்களைக் கண்டதும், உமார் தன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துத் திருப்பினான். அந்த வீரர்கள் அவன் மேல் பாய நெருங்கும்போது, அந்தக் குதிரை திடீரென்று திரும்பிப் பின்வாங்கி உமாரைக் கீழே தள்ளிவிட்டு ஓடியது.
கீழே விழுந்த உமாரின் தோளில் ஏதோ ஒரு பொருள் இடித்தது. பாய்ந்து செல்லும் ஒரு குதிரையின் கால்கள் அவன் தலைக்கு மேலே தாவிச்சென்றன. வாயும் கண்களும் சகதியடித்து முடிப் போயிருந்தன. கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு பார்த்தபொழுது அவன் விழுந்து கிடப்பது தெரிந்தது. தள்ளாடிக் கொண்டே அவன் எழுந்து நின்றான். வேலைக்காரர்களில் ஒருவன் கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் கைகலப்பது போல் தரையின் மீது சுழன்று கொண்டிருந்தான். அவனுக்கருகிலே ரஹீம் தரையின் மீது கிடந்தபடி எழுந்து உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான். யார்மார்க் குனிந்து அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். உமார், ஒடிப் போய் ரஹீமின் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவன் ஏதோ ஒரு புது மாதிரியாக உமாரை நோக்கி மெதுவாகச் சிரித்தான்.
“உனக்கு யார் இந்தக் கொடுமை செய்தார்கள். எப்படிக் காயம் ஏற்பட்டடது? சொல்?” என்று உமார் துடிதுடித்துக் கொண்டே கேட்டான். காயம்பட்டுக் குருதி யொழுகிச் சோர்ந்துபோன ரஹீம் ஏதும் சொல்லாதவனாக அவனையே கூர்ந்து பார்த்தான். யார்மார்க்கை ஒரு சுத்தமான துணி கொண்டு வரும்படிச் சொல்லிவிட்டு ரஹீமை மெதுவாகத் தரையிலே கிடத்தி அவனுடைய சட்டையைத் தூக்கி காயம் ஏற்பட்ட இடத்தைப் பார்த்தான். குருதி அவன் கைகளிலே சூடாகப் பாய்ந்து வழிந்தது. அந்தக் குருதியிலிருந்து மெல்லிய ஆவி எழுந்து காற்றிலே கலந்தது. யார்மார்க் உமார் அருகிலே வந்து நின்று கொண்டு மெல்லிய குரலிலே “தொண்டைக் குழியிலே அவனுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதை நீங்கள் பார்க்கவில்லையா? இனி, என்ன செய்யப் போகிறீர்கள்!” என்று கேட்டான். எழுந்து நின்று உமார் தன் குருதி தோய்ந்த கைகளைப் பார்த்தான். கதிரவனின் ஒளிக்கதிர்கள் அவன் கைகளிலும், சிதறிக்குழம்பிக் கிடந்த தரையிலும் பட்டுத் தெளித்தன. ரஹீம் முகம் வெளுத்து மூச்சு விடுவதை நிறுத்திவிட்டான். தொண்டைக் குழி சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு நின்று போய்விட்டது.
ரஹீமின் வேலைக்காரன் ஒரு மிருகம் போல் உறுமிக் கொண்டே தன் இடுப்பில் இருந்த ஒரு வளைந்த கத்தியை உருவினான். ரஹீம் செத்துக் கொண்டிருக்கும் போது அருகிலேயே நின்று கொண்டிருந்த, பிடிபட்ட அந்தக் கிறிஸ்தவப் பெண்ணின் மீது பாய்ந்தான் யார்மார்க்.
உதடு துடிக்க, “உயிருக்கு உயிர், பழிக்குப் பழி’ என்று கூவிக்கொண்டே அவளைத் தாக்கினான். அவள் பின்னுக்கு விலகிக்கொண்டாள். அவளுடைய ஆடை கத்தியால் கிழிபட்டது. அவள் ஓடிவந்து உமாரின் காலடியிலேயே வீழ்ந்து, அவன் கால்களைப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் எதுவும் பேசவில்லை. ஆனால் அவள் கண்கள் வேதனையோடும் துடிப்போடும் அவனை உற்று நோக்கின.
“முட்டாளே!” என்று கூவிக்கொண்டே உமார் யார்மார்க்கின் கையைப்பிடித்து அப்புறம் தள்ளினான். அவன் எலும்பில் வலுவில்லாததுபோல் தரையில் வீழ்ந்து “ஆய்லல்லா ஆய்லல்லா” என்று முனகினான்.
அந்த ரோமானியப் பெண்ணை, கூடாரத்திற்குள் போகும்படி உமார் சொன்னான். அவன் பேச்சு விளங்காமல் அங்கேயே நின்றாள். அவன் கூடாரத்தைச் சுட்டிக் காண்பித்ததும், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே கூடாரத்தை நோக்கி நடந்தாள். மற்ற வேலைக்காரர்களின் உதவியுடன் ரஹீமின் உடலைக் கூடாரத்திற்குள்ளே தூக்கிவந்து சமுக்காளத்தின் மேலே கிடத்தினான். தன் கைக்குருதியைத் துணியில் துடைத்துக் கொண்டு அவர்களை நல்ல தண்ணீர் கொண்டு வரும்படி ஏவினான். தண்ணீரில் தன் உயிர்த் தோழன் முகத்தைக் கழுவித் துடைத்தான். சிறிது நேரம் சென்றதும் அந்தப் பெண்ணும் அவன் அருகிலே வந்து உட்கார்ந்துக் கொண்டு, அவனிடமிருந்து துணியை வாங்கிக் கொண்டாள். அவள் ரஹீம் தலையிலும், தொண்டையிலும் படிந்திருந்த அழுக்கைத் துடைத்து விட்டுத் தூய்மைப் படுத்தினாள். அவ்வாறு செய்து உமாரின் உள்ளத்தில் நல்லஎண்ணம் உண்டாக்கலாம் என்று அவள் நம்பியது போல் இருந்தது. பிறகு அவள் அந்த உடலின் ஆடைகளை ஒழுங்கு படுத்தினாள். நானாக இருந்தால் செத்துப்போன ஒரு கிறிஸ்துவனுடைய உடலைத் தொடவே மாட்டேன் என்று உமார் எண்ணிக் கொண்டான். ரஹீமுக்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருந்தன. அவற்றில் ஒன்றுகூட விடுபட்டுப் போகாமல் செய்து முடிக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான்.
அன்று இரவு பழுத்த தாடியுடன் கூடிய முல்லா அவனைப் பார்த்து அனுதாபத்தோடு கூறினார். “மகனே! புனிதமான கிணற்றிலிருந்து வெளிவரும் தண்ணிரும், கடைசியில் தரைக்குள்ளே போய்ச்சேர வேண்டியதுதான்! அல்லாவிடமிருந்து உயிர் தோன்றுகிறது. திரும்பவும் தீர்ப்பு நாள் வரும்போது அவரிடம் இந்த ஆத்மா போய்ச்சேர வேண்டியதுதான்” என்று அந்த முல்லா கூறினார்.
அவனுடைய மனதிலே, ரஹீமின் முகம் தோன்றியது. ஈரமண்ணிலே சகதியின் நிறத்திலே அது தெரிந்தது. இப்பொழுதோ, தூய்மையான புதைகுழியிலே இருண்ட மண்ணின் அடிப்பரப்பிலே, மெக்காவை நோக்கிக் கால்களை நீட்டிக் கொண்டு அவனுடைய உடல் கிடந்தது.
வேலை முடிந்ததும் முல்லா கிளம்பிவிட்டார். அவரால் புதைக்கப்பட வேண்டிய பிணங்கள் எத்தனையோ இருந்தன. உமாரை யார்மார்க் ஒரு நாயைப்போல் பின் தொடர்ந்து வந்து, அவனருகிலே கீழே உட்கார்ந்து கொண்டான். அவன் உடல் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது. அவனுடைய தலைவன் புதைக்கப்பட்டு விட்டான், அவனுக்கு ஒரு வகையில், அது நல்லதே! இனி அவன் அடிமையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், உமாருக்கு அப்படியில்லை, ஒன்றாக வளர்ந்து அண்ணன் தம்பி போல் பழகிய அவனை இழப்பதென்றால் அது பொறுக்க முடியாத வேதனையன்றோ? அந்த இடத்தைவிட்டு அவன் போவதென்பது பெருங்கஷ்டமான காரியம். இந்த இடத்திலே மழையால் அரிக்கப்பட்டுப் புல் வளர்ந்து கோதுமை விதைத்து அறுக்கப்பட்டும், எத்தனையோ ஆண்டுகள், பலவிதமான செயல்களும் நடத்தப்படும் பூமியின் கீழே அவன் படுத்துக் கிடக்க வேண்டும். தீர்ப்பு நாள் வந்து ஒவ்வோர் ஆத்மாவும் அதனதன் உடலிலே சேர்ந்து கொள்ளும் வரையிலே, பார்வைக்கெட்டாத திரைமறைவிலே ரஹீம் காத்துக் கொண்டு கிடக்க வேண்டும். கன்னத்தில் கைவைத்தபடி விடியுமட்டும் உட்கார்ந்திருந்தான் உமார். கடந்த இரண்டு நாள் அலைச்சலும் இப்போது இல்லாமல் இருந்தது, தவிர அவன் மனம் முழுவதும் துன்பத்திலாழ்ந்திருந்தது.
“ரஹீம்! உன்னுடைய உடல் ஒரு கூடாரம் போன்றது. உன் உயிர் அதிலே வந்து சில நாள் தங்கியிருந்தது. கூடாரம் தாக்கப்பட்டுவிட்டது, தன்னுடைய நெடும் பயணத்தைத் தொடங்கிவிட்டது. அந்தப் பயணத்திலே விரைவில் நானும் கலந்து கொண்டு உன்னைக் காண வருவேன்” என்று உமார் புலம்பினான்.
“ஆமென்! அமைதியுண்டாகட்டும்!” என்று யார்மார்க் உடன் மொழிந்தான்.
கூடாரத்திற்குள்ளே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அதை விழித்துப் பார்த்துக் கொண்டு உமார் உட்கார்ந்திருந்தான். ஒரு மூலையிலே கிடந்த ஆடைகளின் மத்தியிலே தூங்கிக் கொண்டிருந்த அந்த ரோமானியப் பெண் எழுந்து ஒரு ஜாடியிலிருந்த திராட்சை மதுவை ஒரு கண்ணாடிக் குவளையிலே ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள். உமார் அதை உதறித் தரையிலே தள்ளுவதற்காகத் தன் கையை ஓங்கினான். நிசாப்பூர் வீதியில் உள்ள சத்திரத்தில், அவனும் ரஹீமும் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்தபோது, ரஹீம் அவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அவளிடமிருந்து அந்தக் குவளையை வாங்கி அதில் இருந்த மதுவைக் குடித்தான். குளிர்ந்திருந்த அவனுடைய உடலிலே ஒருவிதமான கதகதப்பு உண்டாகியது. உமார் குடிக்கக் குடிக்க அந்தப் பெண் குவளையை நிரப்பிக் கொண்டேயிருந்தாள். அலுப்பு மிகுதியால் பெருமூச்சு விட்டுக்கொண்டே உமார் துணிக் குவியலின் மேல்படுத்து உறங்கத் தொடங்கினான்.
மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு அவன் அருகிலே உட்கார்ந்து கொண்டு வானம் வெளுத்து வருவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் தெளிவாகத் தெரியும், அளவு வெளிச்சம் வந்ததும் ஒரு வெண்கலக் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு அவள் அதில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டே தலையை வாரிவிட்டுக் கொண்டாள். ஒரே இரவிலே தன்னுடைய எஜமானர்களை மாற்றிக் கொள்ளுவது அவளுக்குப் புதிதல்ல பழக்கமான விஷயந்தான்.