உமார் கயாம்/9. எதிலும் ஐயமே; இதயம் குழம்புதே.
கிழவர் அலி மறுபடியும் தம் மாணவன் உமாரைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம், ஒரு வாரத்திற்குப் பிறகு தற்செயலாக ஏற்பட்டது. அன்று மாலையில் அவருடைய வாசலில் ஒரு குதிரை வந்து நின்றது. ஒரு குதிரையுடன் கூட வந்த பனிரெண்டு பேர்களிலே, ஓர் அடிமை குதிரை நின்ற இடத்திலிருந்து பேராசிரியரின் வீட்டு வாசல் வரையில் ஒரு நடைமிதியை விரித்தான். மற்றொருவன் உள்ளே நுழைந்து “பேராசிரியர் அலியைப் பார்ப்பதற்காக டுன்டுஷ் வந்திருக்கிறார்” என்று கட்டியம் கூறினான்.
பட்டாடைகளுக்குள்ளே உருண்டு திரண்ட உடலும் நீலக்கல் பதித்த பெரிய தலைப்பாகையும் கம்பீரமான குரலும் கொண்ட டுன்டுஷ் உள்ளே நுழைந்து பேராசிரியரைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
“ஆண்டவன் அருள் புரிவாராக! ஞானக் கண்ணாடியில் வாழ்வு நலம் சிறப்பதாக! இன்னும் பல்லாண்டு பல நூற்றாண்டுகள் வாழ்ந்து அறியாமை மிக்க ஏழைகளுக்கு அறிவொளியைக் கொடுத்து வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்துக் கூறினான் டுன்டுஷ்.
“என்னை அளவுக்கு மிஞ்சி உயர்த்திப் பேசுகிறாய்!” என்று பேராசிரியர் அலி கூற, “நிஜாப்பூர் நகர் முழுவதும் உங்கள் புகழ் ஓங்கி விளங்குகிறது. பேராசிரியர் காரெஸ்மியும், பாக்தாதுக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் அந்த முட்டாள் உஸ்தாத்தும் உங்களுக்கு இணையாவார்களா? என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்! அறிஞர் அலிசென்னா கூட விஞ்ஞான அறிவில் தங்களைக் காட்டிலும் உயர்ந்தவரல்ல” என்று இன்னும் அதிகமாகப் புகழ்ந்தான் டுன்டுஷ்.
இரத்தினக் கம்பளமொன்றில் இருவரும் உட்கார்ந்து, பழங்களும் சர்பத்தும் அருந்தத் தொடங்கினார்கள். டுன்டுஷைப் பற்றி அலிக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. அமைச்சருடைய பிரதிநிதிதான் டுன்டுஷ் என்றும், முத்துக்களையும், அழகிய வேலைப்பாடுள்ள பீங்கான் சாமான்களையும், பழைய கையெழுத்துப் பிரதிகளையும் அவன் சேகரித்து வருகிறான் என்றும் அவர் கேள்விப் பட்டிருந்தார். ஆனால் டுன்டுஷ் என்ன பதவியில் இருக்கிறான் என்பதோ, எங்கு குடியிருக்கிறான் என்பதோ அவருக்குத் தெரியாது.
அலி அவர்களின் கணித நூல் எவ்வளவு தூரம் பூர்த்தியாகியிருக்கிறது என்பதைப் பற்றிச் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, உமார்கயாம் என்ற மாணவன் ஒருவனைப் பார்க்க வேண்டுமென்று டுன்டுஷ் சொன்னான். தோட்டத்திலிருந்து உமார் அழைத்து வரப்பட்டான். உள்ளே நுழைந்த உமார் அந்த அறையின் ஒரு மூலையிலே, கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தான். பேராசிரியர் அலி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, டுன்டுஷையும், உமாரையும் சந்தேகத்தோடும் கலவரத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தார்.
டுன்டுஷ் அழுத்தம் திருத்தமான குரலில், “கடந்த மாதம் ஒரு விசித்திரமான செய்தி வந்தது. கிறிஸ்துவர்களின் பேரரசனான ரோமானஸ் யாஜீன்ஸ், தன் நாட்டு மக்களாலேயே பிடித்துத் தாக்கப்பட்டுக் கண் பிடுங்கப்பட்டு கொடுரமாகக் கொல்லப் பட்டானாம்!” என்று கூறினான். உமாரின் முகம் சுருங்கியது. போரும் போரில் இறந்த அவன் உயிர்த் தோழனின் நினைவும் மனதில் தோன்றியது.
“போரில் பிடிபட்ட அந்தப் பகையரசனை நமது சுல்தான் அவர்கள் உயிரோடு விட்டதே அதிசயம், அதைக் காட்டிலும் அதிசயம், அந்த அரசன் தன் மக்களாலேயே கொல்லப்படுவது. இப்படிப்பட்ட ஒன்றை முன்னதாகவே தெரிந்து சொல்ல யாரால் முடியும்” என்று டுன்டுஷ் கேட்டுவிட்டு உமாரை நோக்கினான்.
தன்னிடமிருந்து, பதிலை எதிர்பார்க்கிறான் என்று உணர்ந்த உமார் “ஒருவராலும் முடியாது” என்று கூறினான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு உமார் கயாமை வெளியே அனுப்பிவிட்டார்கள். அவன் போன பின், டுன்டுஷ் மெல்லப் பேராசிரியர் அலியை நோக்கி, “சோதிடக் கலையை நீங்கள் நம்புகிறீர்களா? பின்னால் நடக்கப் போவதை யாராலும் முன்னால் சொல்லி விட முடியுமா?” என்று கேட்டான். “எல்லாம் அல்லாவினால்தான் முடியும் என்பது என் நம்பிக்கை, என்னுடைய சிற்றறிவு, கணித நூல் ஆராய்ச்சியைச் செய்து முடிப்பதிலேதான் ஈடுபட்டிருக்கிறது” என்று மழுப்பினார் ஆசிரியர்.
“நடக்கப் போகும் மூன்று விஷயங்களைப் பற்றி ஒருவன் முன்கூட்டியே சோதிடத்தின் மூலம் குறி சொல்கிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த மூன்று விஷயங்களும் தற்செயலாகவே நிறைவேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? உங்கள் அறிவுக்கு என்ன தோன்றுகிறது என்பதையே அறிய விரும்புகிறேன்” என்றான் டுன்டுஷ்.
“மூன்று விஷயங்களில் இரண்டு தற்செயலாக நடந்து விடலாம். ஆனால் மூன்றாவது நடக்கவே நடக்காது. எந்தச் சோதிடனும் மூன்று விஷயங்களைச் சேர்த்து முட்டாள் தனமாகச் சொல்லவே மாட்டான்” என்றார் அலி.
“அப்படிப்பட்ட சோதிடன் உங்கள் மாணவர்களிலேயே ஒருவன் இருக்கிறானே! சற்றுமுன் நாம் பேசிக் கொண்டிருந்தோமே; அவன்தான்” என்று டுன்டுஷ் கூறியதும், “உமாரா? அவன் செய்ய வேண்டியது அது ஒன்றுதான் பாக்கியிருக்கிறது” என்றார் அலி.
“அட; கடவுளே! வேறு என்ன என்ன செய்கிறான்? என்று டுன்டுஷ் கேட்டான்.
“பட்டு நூல்களில் கோர்த்த தந்த மணிகளை உன் விரல்களினால் எவ்வளவு எளிதாகத் தள்ளுகிறாயோ அவ்வளவு எளிதாக அவன் கன அளவுக் கணிதங்களைச் செய்து விடுகிறான்”.
“அப்படியானால் அவனிடம் ஏதோ ஒரு திறமையிருக்கிறது. ஓய்வு நேரத்தில் அவன் என்ன செய்கிறான்?”
“என் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்கிறான். பாலைவனத்தின் ஓரத்திலேதான் தன்னந் தனியாகச் சுற்றுகிறான். பழங்கள் சாப்பிடுகிறான்; சொக்கட்டான் ஆடுகிறான். தான் செய்யும் கணிதங்களை ஒரு பெட்டிக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறான்!” என்று வேண்டா வெறுப்புடன் அடுக்கிக் கொண்டே போனார் ஆசிரியர்.
“பாலைவனத்தில் தனியாக ஒருவன் ஏன் நடந்து செல்ல வேண்டும்? உங்கள் பகுதியிலே யாரும் அழகிய, பெண்கள் மேல் மையல் கொண்டு சுற்றுகிறானா?”
“சொறி பிடித்த சலவைக்காரிகளைத் தவிர வேறு பெண்கள் இந்த பகுதியில் கிடையாது”.
உங்கள் மாணவன் உமார் கயாம் ஒரு விசித்திரமான ஆள்தான்! அவனுடைய ஆற்றல் கண்ணுக்குத் தெரியாத தேவதூதர்களின் சக்தியால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது பேய், பிசாசுகளின் செயலாக இருக்க வேண்டும். பேய்களின் கலையை மறைமுகமாகப் பயில்கின்ற அந்தப் பையனைத் தாங்கள் கவனித்து வரவேண்டும். அவனைப் பற்றிய விஷயங்களைக் குறித்து, ஒரு மாதம் ஆன பிறகு, குறிப்புகள் உள்ள தங்கள் தாள்களை உறையிலிட்டு மூடி முத்திரை வைத்து, அவன் கையிலே கொடுத்து, நிசாப்பூரிலுள்ள தாக்கின் வாசலில் வெள்ளிக்கிழமை மாலை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த டுன்டுஷ், “அறிவைத் தேடிக் கொண்டிருக்கும் நான் அறிவின் இருப்பிடமாகிய தங்களை விட்டுப் பிரிய நேரிடுவதற்காக வருந்துகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.