உமார் கயாம்/10. அதிசயத் திறமைக்கு அத்தாட்சிக் கடிதம்!

10. அதிசயத் திறமைக்கு அத்தாட்சிக் கடிதம்!

ஒரு மாதம் ஆன பிறகும்கூட உமாரைப் பற்றிய எந்த விதமான இரகசியத்தையும் பேராசிரியரால் கண்டு பிடிக்க முடியவில்லை. தம் மாணவன் அடையாள முறைக் கணிதத்திற்கு மாறுபாடாக இருப்பதன் காரணமும், புதுவிதமான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள காரணமும் என்னவென்பது அவருக்குப் புரியவில்லை. எந்தவிதமான குறளி வித்தையையும் கையாண்டு, அவன் கணிதங்களைச் செய்யவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பேயோ, பிசாசோ, கண்ணுக்குத் தெரியாத எந்தப் பொருளோ, அவனுக்கு உதவி செய்யவில்லை என்பதிலும் அவனுடைய சொந்த மூளையைப் பயன்படுத்தியே கணித முறைகளைக் கண்டு பிடித்து விடை காண்கிறான் என்பதிலும் அவர் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தார். எந்தவிதமான முடிவுக்கும் அவரால் வர முடியவில்லை.

திடீரென்று ஒருநாள், உமாரை அவர் சோதிக்கத் தொடங்கினார். “அமைச்சரிடம் நீ எப்பொழுது திரும்பிச்செல்லப் போகிறாய்?” என்று அவர் கேட்டார்.

“திரும்பிச் செல்வதா? அமைச்சரிடமா? நான் அவரைப் பார்த்ததேயில்லையே!” என்று விழித்துக் கொண்டிருந்தான் உமார்.

“அல்லாவின் ஆணையாகக் கேட்கிறேன், எதற்காக என்னிடம் இத்தனை நாட்களாகத் தங்கியிருந்தாய்?”

“என் நண்பன் ரஹீம் போர்க்களத்தில் மாண்டு விட்டான், அவனுடைய பிரிவை மறப்பதற்காக ஒரு வேலையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்துடன் நிஜாப்பூரை விட்டுப் புறப்பட்டு தங்களிடம் படிக்கவந்தேன்” என்றான் உமார்.

“எந்த விஷயத்தைப் படித்து எப்படிப்பட்ட வேலையில் ஈடுபட நீ எண்ணியிருக்கிறாய்?” என்ற பேராசிரியர் ஒரு நீண்ட பிரசங்கமே செய்யத் தொடங்கிவிட்டார்.

“முதலில் அறிவு எப்படி உண்டாகிறது என்று பார்க்கவேண்டும். தீர்க்க தரிசிகளின் மூலமாக அறிவு இந்தச் சிறிய உலகத்திற்கு இறக்கிகொண்டு வரப்பட்டது. தீர்க்க தரிசிகளிடம் இயற்கையாகவே இருந்து விளங்கிய உள்ளொளியின் உதவியால்தான் காணாத உலகத்திலிருந்து அறிவைக் கல்லும் மண்ணும் நிறைந்த இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தார்கள். இந்த உலகில் அறிவை உண்டாக்கியவர்கள் தீர்க்கதரிசிகள் என்றால் அதை வளர்த்தவர்கள் தத்துவஞானிகள். தத்துவஞானிகள் தீர்க்கதரிசிகளின் வேத வாக்குகளை ஆராய்ந்து, விஞ்ஞானங்களில் திறமைபெற்று, சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி போதித்தார்கள். அவர்கள் இல்லாவிட்டால் அறிவுக் கலைகள் அனைத்தும் மக்களுக்குத் தெரியாமல் மறைந்து போயிருக்கும். மிக உயர்ந்து விளங்கிய அந்த தீர்க்கதரிசிகளைக் காலவரிசை முறைப்படி பார்க்கும்போது முதலாவதாக மூசாநபியும், அடுத்ததாக நாசரி ஈசாநபியும், மூன்றாவதாக முகமது நபி அவர்களும் வருகிறார்கள். தத்துவ ஞானிகளைப் பற்றிப்பேசும்போது அறிஞர்களுக்குள்ளே வேற்றுமையான கருத்துக்கள் நிலவுகின்றன. நான் அறிந்த வரையிலும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும், நமது பேரறிஞர் அலி சென்னாவும் மக்கள் உள்ளத்திலே அறிவு விளக்கை ஏற்றி வைத்தவர்கள் ஆவார்கள்.

தத்துவஞானிகளை அடுத்துக் கவிஞர்கள் வருகிறார்கள், கவிஞர்களின் திறமையோ ஆபத்தானதாகும். அவர்கள் தங்கள் அபூர்வமான கற்பனையைப் பயன்படுத்திப் பெரியனவற்றைச் சிறியதாகவும் சிறியனவற்றைப் பெரியனவாகவும் மாற்றியமைத்து விடுவார்கள். கோபத்தையோ, காதல் உணர்ச்சியையோ தூண்டி விடுவதன் மூலம் விருப்பையும் வெறுப்பையும் வளர்த்து உலகில் பெரியனவும் சிறியனவுமான பொருள்களைப் படைத்து விடுவார்கள்.

கவிஞன் கற்பனையைத் தூண்டி விடுவானே தவிர, அறிவைப் பாகுபடுத்தி விளக்க இயலாதவனாக இருக்கிறான். அதனால் தத்துவவாதியின் திறமையைக் காட்டிலும் அவன் கலை தாழ்ந்திராதுதான். ஆனால் கணித விஞ்ஞானிகள் உழைப்பின் பலனோ அழிவில்லாதது. ஆண்டவன் ஒருவனே உண்மையான நிலையை அடைகிறான். அறியாமை யுலகத்திலிருந்து, அறிவுலகத்திற்குப் போகக்கூடிய பாலத்தைக் கட்டுபவன் கணிதமேதையே! அப்படிப்பட்ட கணிதக் கலையிலே அடையாள முறைக்கணிதமே மிகவும் நன்மை பயப்பது, சிறந்தது, உன்னுடைய திறமை முழுவதையும் நீ அக்கணித முறையில் தேர்ச்சி பெறுவதற்காகப் பயன்படுத்து வாயென்று எதிர்பார்க்கிறேன்.” என்று கூறிமுடித்தார்.

அவர் தன்னிடத்துக் காட்டிய அக்கறை, உமாரின் உள்ளத்தைத் தொட்டது. தன்னுடைய எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தக்கூடிய சொற்களைத் தட்டுத் தடுமாறி நினைவுக்குக் கொண்டு வந்து, “நட்சத்திரங்களின் போக்கை அறிந்து, ஆராய்ந்து விடை காண வேண்டுமென்பது என் ஆசை!” என்று கூறினான். “நட்சத்திரங்களைப் பற்றியா? அது சோதிடக்கலையைச் சேர்ந்ததல்லவா? சோதிடமென்பது, கோளங்களுக்கும், மனித காரியங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியதல்லவா? அதற்கும் கணிதத்திற்கும் சம்பந்தம் இல்லையே!” என்றார் ஆசிரியர்.

“இருந்தாலும் விஷயம் ஒன்றுதானே!”

“என்ன சொன்னாய்! என் புத்தகத்தில் உள்ள விஷயமும், ராஜ சோதிடனின் கூற்றும் ஒன்றா? அது தவறு. இன்னொரு முறை அதை என் காதில் படும்படி சொல்லாதே”.

“இருந்தாலும், ஒரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும், வேறொரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும் ஒன்றுதானே?”

“அப்படியல்ல மகனே; இந்த மாதிரியான வீணான எண்ணங்களை யெல்லாம் கொண்டு அவதிப்படாதே. நீ இளைஞன். காலம் வரும்போது அனுபவத்தின் மூலம், ஒரு கலை, மற்றொரு கலையின் பகுதியல்ல என்பதை உணர்ந்து கொள்வாய். கணிதக் கலையொன்றுதான் உண்மையான அறிவையுண்டாக்கக் கூடியது. உன்னுடைய கவனமெல்லாம் அதிலேயே செலுத்தப்பட வேண்டுமென்பதுதான் என் விருப்பம். நாளைக் காலையில் நான் உனக்கொரு கடிதம் தருகிறேன். அதையெடுத்துக் கொண்டு நிஜாப்பூருக்குச் சென்றால், அங்கே உன்னை ஆதரிக்கக்கூடிய ஒருவரைச் சந்திப்பாய். உன் பயணம் வெற்றி பெறுவதாக!” என்று வாழ்த்தினார். உமார், ஆசிரியரிடம் எவ்வளவோ பேச வேண்டுமென்று எண்ணினான். ஆனால், தன் கருத்தை அவரிடம் முழுவதும் விளக்க முடியவில்லையே என்று வருந்தினான். அவரை விட்டு எழுந்து செல்லும் போது, தன் வாழ்வின் மற்றொரு கதவும் அடைப்பட்டுவிட்டதாகத் தோன்றியது. அவன் சென்ற பிறகு பேராசிரியர் அலி, பேனாவும் வெள்ளைத் தாளையும் எடுத்து எழுதத் தொடங்கினார்.

“என்னுடைய மாணவன் உமார்கயாம் பாக்தாதுக் கல்லூரிப் பேராசிரியர் உஸ்தாது அவர்களுக்குச் சமமான திறமையுள்ளவன் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். எந்த விதமான கணித பிரச்சனைகளுக்கும் விடைகாணக்கூடிய அபூர்வ சக்தியொன்று அவனிடம் இருக்கிறது. ஆனால் அது எது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அபூர்வத் திறமையைக் கொண்டு அவன் என்ன செய்வானென்று கூற முடியவில்லை. ஏனெனில் அவன் இன்னும் தன் கற்பனைக்கு அடிமையாகவே இருக்கிறான்.

என் வீட்டிலே வளர்ந்த அவனுடைய இந்த அறிவுத் திறனை தாங்கள் அறிந்த ஆதரவாளராக ஏற்றுக் கொள்ளும்படி செய்யுமாறு வேண்டுகிறேன். மேற்படி ஆதரவாளர்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவன் அடியவன் அலி.”

மை உலர்ந்த பிறகு, கடிதத்தை மடித்து தன்னுடைய முத்திரையைப் பதித்து “டுன்டுஷ் பெருமகனார், தாக்கின் வாசல், நிஜாப்பூர்” என்று முகவரி எழுதினார்.