உலகத்தமிழ்/தொல்பொருள் ஆராய்ச்சி
12 தொல்பொருள் ஆராய்ச்சி
பிற்பகல் நிகழ்ச்சியில் இரு தலைப்புகள் பற்றிக் கட்டுரை கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். சிந்து வெளி எழுத்துக்கள் என்பது ஒரு தலைப்பு, தொல் பொருள்-அகழ் ஆராய்ச்சி என்பது மற்றொரு தலைப்பு இரண்டிற்குமாகக் கிடைத்த நேரம் இரண்டு மணிகளே, ‘சிந்து வெளி எழுத்துக்கள்’ பற்றிய கருத்துரைகளை முதலில் கேட்டோம். அன்றைய கருத்துரைகள் சிந்து வெளிநாகரிகத்தைப் பற்றி அல்ல; சிந்து வெளி எழுத்துகளைப் பற்றியே.
புதையுண்டு கிடந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளைப் பல்லாண்டுகளுக்கு முன், அகழ்ந்து பார்த்து அவற்றின் நாகரிகச் சிறப்பை உலகறியச் செய்தார் மேனாட்டு அறிஞர். அந்நாககரிகம் நம் நாகரிகம் என்றிருந்த தமிழர்களாகிய நாம் திடீரென ஒரடி உயர்ந்து விட்டோம். உரிமையான அப்பெருமிதம் தமிழ் அறிஞர்கள் சிலரையாவது அவ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தும் என்று எதிர்பார்த்தவர்கள் உண்டு. இன்றும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் உண்டு. அறிஞர் யாரும் தம்முடைய தனி ஊக்கத்தால் மட்டும் செய்துவிடக் கூடியதா தொல்பொருள் ஆராய்ச்சி? அதுவும் பிற நாட்டிற்குச் சென்று நிகழ்த்த வேண்டிய ஆராய்ச்சி? அத்தகைய ஆராய்ச்சிக்கு அரசுகளின் உதவி வேண்டும். உலக அவைகளின் துணை வேண்டும்.
தவத்திரு ஹீராஸ் பாதிரியார் வெளிப்படுத்தியவற்றை வைத்துக்கொண்டு பிறநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மேலும் ஆராய்ந்தனர். சோவியத் ஆராய்ச்சியாளர் இதில் ஈடுபட்டனர். “சிந்து வெளிச் சித்திர எழுத்துகள் திராவிடமொழி எழுத்துகள்” என்ற முடிவிற்கு வந்தனர்.
ஸ்காண்டினேவிய நாடுகளின் ‘ஆசியக் கல்விக் கழகம்’ என்றொரு ஆராய்ச்சி நிலையம் உண்டு. அதன் சார்பில் சிந்துவெளி எழுத்துக்கள் ஆராய்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு. அஸ்போ பர்போலா என்பவர். அவர் சில முடிவுகளுக்கு வந்துள்ளார். அவை அண்மையில் நூலாக வெளிவருமாம். அவற்றைப்பற்றிக் கோடிட்டுக் காட்டினர். அவை வருமாறு :
‘இலக்கியம், தொல்பொருள், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் கிடைத்த மொழியில் சான்றுகள் ஆகியவை எங்கள் ஆராய்ச்சிக்கு அடிப்படை.
சமஸ்கிருதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மொழி. இந்து மதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மதம் அன்று. இந்து மதத்தின் முதன்மொழி சமஸ்கிருதமன்று. இந்து மதத்தின் வேர் ஆரிய மொழி அல்லாத ஒன்றில் இருக்க வேண்டும். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் இந்துக்கள். அவர்கள் திராவிடர்கள். இந்து மதம், திராவிட மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்பட்டிருக்கலாம்.
சிந்து வெளி எழுத்துகள் திராவிட எழுத்துக்களே இக் கருத்துக்களைப் பதினைந்து இருபது நிமிடங்களில் பர்போலா கூறினார். நேரக்குறைவால் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் காட்டியதாகவே தோன்றிற்று அவரது விரிவான நூல் வெளியானல், கருத்திற்குப் போதிய தகவல்கள் கிடைக்குமோ என்னவோ?
திரு. பர்போலா பேசியதை மறுத்து, திரு. சுவலபில் பேசினார். இவர் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர். இவர் தமிழ் நாட்டிற்கு வந்து, நம்மோடு சேர்ந்து தமிழ்த் தொண்டு ஆற்றியது பலருக்குத் தெரியும். தமிழ் ஐயாக்களிடம் பாராட்டுதலைப் பெற்றவர். இப்போது அமெரிக்க நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்திலே பணிபுரிகிறார்.
‘புள்ளிவிவர’ முறைப்படி மட்டும் சிந்துவெளி எழுத்துகளை அடையாளம் கண்டுகொள்வது சரியன்று. மொழியியல் அடிப்படையிலும் அடையாளம் காண வேண்டும். இதுவரை நடந்திருக்கும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திராவிட மொழியாக இருக்கக்கூடும். என்று சொல்லலாமே ஒழிய, ‘திராவிட மொழிதான்’ என்று கூறுவதற்கு இல்லை. இது திரு. சுவலபில் கருத்து. திரு. சுவலபில் அவர்களைத் தமிழை வளர்க்க வந்த அக்கால அவதாரமாக உச்சிமேல் வைத்துப் போற்றியவர்கள் உண்டல்லவா? அவர்களுக்கு இது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.
அடுத்து திரு. ஐ. மகாதேவன் சிந்துவெளி எழுத்தைப்பற்றிப் பேசினர்; பர்போலாவைப்போல் கம்ப்யூட்டரை வைத்து ஆராயவில்லை. வேறு வழியில் ஆராய்ந்தாராம். சிந்துவெளி எழுத்து திராவிட எழுத்தே என்ற முடிவிற்கு வந்துள்ளதாக விளக்கினார். விரைவில் வெளியாக இருக்கும் அவரது நூலில் தெளிவாகவும் விவரமாகவும் பார்த்துக்கொள்ளச் சொன்னர். சுவலபிலால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு மகாதேவன் மருந்து முழுக்கப் பயன்பட்டதோ என்னவோ?
“முன்பு, தமிழ் எழுத்து பிராம்மி எழுத்திலிருந்து வந்த தென்றும் சொன்னவரல்லவா இவர்?” என்று இடைவேளை முணுமுணுப்பு என் காதில் விழுந்தது.
“கருத்து முதிர்ச்சி காலத்தின் இயற்கை விளைவல்லவா?” என்றேன்.
கருத்தரங்கில் திரு. மகாதேவன் பேசியதும் சிந்து வெளி எழுத்தைப்பற்றிக் கேள்வி கேட்க ஒருவர் முயன்றார் பயனில்லை. பதில் இதோ:
‘இங்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரமோ சிறிது. எடுத்துக் கொண்டுள்ள பொருளோ பெரிது. இதைப் பற்றி இங்கேயே விரிவாக அலசிப் பார்த்து, முடிவிற்கு வரமுடியுமா? இத்தகைய அறிஞர் அவையில் பல்வேறு கருத்துக்களைப் படைக்கிறோம் நோக்கம் என்ன? அறிஞர்கள் இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, தெளிவான முடிவிற்கு வரத் தூண்ட வேண்டும். இதற்காகவே பெரிய பொருள் பற்றி, சிறிது நேரத்தில் கூறிவிடும் ஏற்பாடு இப்போது எந்த முடிவிற்கும் வர வேண்டா. தொடர்ந்து ஆராய்ந்து பார்த்து முடிவு காணுங்கள்.’
‘இப்போது, தேநீருக்கு நேரமாகிவிட்டது. வாருங்கள் போகலாம்.’ எனவே முடிவு எடுக்கவில்லை.
எவ்வளவு மிகைப்படாத உண்மை. ‘தேநீர்’ எத்தனை முறை மாநாட்டவர்களுக்குக் கைகொடுத்தது தெரியுமோ? தேநீர் வாழ்க.