உலகத்தமிழ்/பாரிசில் தமிழ் முழக்கம்

11. பாரிசில் தமிழ் முழக்கம்

மாநாட்டன்று குறித்தநேரத்திற்கு முன்பே நானும் திரு. ம. பொ. சியும் மாநாட்டுக்குச் சென்றோம். எழுபது எண்பது பேர் போலப் பல நாடுகளிலிருந்தும் வந்திருந் தனர். இலண்டனிலிருந்து ஐம்பது தமிழர்கள் மறுநாள் பேருந்து வண்டியிலேயே வந்து சேர்ந்தார்கள்.

மாநாடு உரிய காலத்தில் தொடங்கிற்று. தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா கலந்து கொண்டார். அவர் அப்போது யூனெஸ்கோவின் பேரியக்குநராக இருந்தார். அவர் மும்மொழியில் முழங்கினார். பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரை நிகழ்த்தினர். ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் பேசியதன் மூலம் நம் தாய் மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உலகறியச் செய்தார்; நம்மோடு வாழ்பவர்களே நேற்றுவரை ‘மதராசி மொழி’ என்று சொல்லக் கேட்டுக் குமுறிய நமக்கு, உலகமெல்லாம் தமிழைப்பற்றி அறியச் செய்தது வான் மழையாக இருந்தது. நெடுநாள் நாப்பழக்கம் இன்மையால், அவரது தமிழ் ‘மழலை’யாக இனித்தது. பாரிசில் உலகக் கருத்தருங்கில் தமிழை முழக்கிய அவருக்கு நம் நன்றி.

பேரறிஞர் ஆதிசேஷய்யாவின் மொழி, மழலையாக இனித்தது. கருத்தோ முதிர்ந்து சிந்திக்க வைத்தது.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல், குறையாமல், நிலைத்திருக்கும் தமிழ் மொழியே தமிழ் மக்களின் இடையறாத தொடர்ச்சிக்குப் பெரிதும் காரணமாகும். இது சமுதாயததின் சிறப்பு மொழியாக, மதம், கல்வி போன்ற துறைகளுக்கு மட்டும் பயன் படவில்லை. மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்து ஜீவ சக்தியுடன் இன்றும் விளங்குகிறது” என்று அவர் கூறியபோது ஆர்வம் பொங்கி வழியாமல் இருக்குமா? ‘உயிராற்றல்’ என்ற இன்றைய தமிழ் வழக்கைப் பாரிசு வாழ் பெரியவர் கையாளாதது விலகியிருத்தலின் விளைவு.

பழங்குடி மக்களான திராவிடர்களின் நாகரிகமே, இந்திய உப கண்டத்தின் நாகரிகத்திற்கு முன்னோடி என்பது ஆராய்ச்சியாளர் கருத்து என்று சுட்டிக் காட்டினார் ஆதிசேஷய்யா.

“உலக சக்தியையும், வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கையையும் குறளிலே கண்டார். ஆல்பர்ட் சுவைட்சர். இலக்கியம், தத்துவம் இவற்றில் தனிச் சிறப்புடன் விளங்கும் இப் புராதன நூல் எளிய நீதி நெறியின் வழியே இயங்கும் மனித இனத்தையே இலட்சியமாகச் சித்திரிக்கிறது என்று அவர் கூறுகிறார்” என்று இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதராக விளங்கி மறைந்தவர் மூலம் திருக்குறளின் பெருமையைப் பன்னாட்டு அறிஞர்களுக்கு நினைவு படுத்தினார்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதை நினைவு படுத்தி தமிழனின் ஆழ்ந்த இதய பூர்வமான மனிதாபி மானத்தை உலகிற்குக் காட்டினார். அதன் பூரண சமாதான இயல்பே தனிச் சிறப்பு ஆகும் என்றார், ‘முதலியார், செட்டியார்’ என்பதை மறக்க முடியாத இக்காலத் தமிழரை எண்ணி ஏங்குவோன் பித்தன் அன்றோ?

“தமிழ் ஆராய்ச்சி, சங்க காலத்தோடு நின்று விடக் கூடாது, அண்ணாதுரை கால இலக்கியத்தையும் ஆராய வேண்டும்.

“தமிழ் ஆராய்ச்சி, பூரண உயிர்த்துடிப்புள்ள ஒரு கலாசாரத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி இன்று, நல்லதொரு கலாசாரத்தின் நறுமணத்தை உலகெங்கும் பரப்புவதற்குரிய சாதனமாகத் தமிழை உயர்த்த வேண்டும். இதுவே நமது குறிக்கோளென்று நான் நினைக்கிறேன்” என்று சிறப்புரை நிகழ்த்தினார் திரு.ஆதி சேஷய்யா.

அடுத்துத் தமிழ்நாட்டு முதலமைச்சர், மாண்புமிகு கலைஞர் கருணுநிதி சிறப்புரையாற்றினார். முந்திய உரையில், தமிழின் மழலை இனிமையை உணர்ந்தோம். கலைஞரின் சிறப்புரையில் தமிழின் பெருமிதத்தை உணர்ந்தோம். வழக்கம்போல் அவரது பேச்சு சிறப் பாகவும் கருத்துடையதாகவும் அமைந்தது.

கலைஞர் தமக்கே உரிய வெண்கலக் குரலில் கணீ ரெனத் தமிழிலேயே பேசினர். எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்தது.

“கண் மருத்துவம் பார்த்துக்கொள்ள வந்த இடத்தில், அதையும் தள்ளிவைத்துவிட்டு, தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்குக் காரணம், தமிழனுக்கு கண்ணிலும் இனியது தமிழ் மொழி” என்று உணர்ச்சியோடு கூறியதை, தமிழ் நாட்டிலுள்ள கோடிக் கணக்கானவர்கள் கேட்டிருக்க வேண்டும்.

அவரது உரை, தமிழ்ப் பற்றினை ஊட்டுவதாக மட்டும் நின்று விடவில்லை.

“தமிழின் வளர்ச்சியில் பிரான்ஸ் கொண்டுள்ள ஆழ்ந்த நாட்டம் தமிழ்-பிரஞ்சு அகராதி ஒன்றை வெளியிட்டதன் மூலம் காட்டப்பட்டது” என்று நினைவு படுத்தி புதிய நட்புறவை வளர்த்தார்.

“தமிழ் பரவியுள்ளது. தமிழர்கள் உலகெங்கும் சென்றுள்ளார்கள். ஆனால் தமிழ் மொழி, மொரிசியஸ் போன்ற நாடுகளில் மறைந்து வருகிறது. இன்னும் வேறு சில நாடுகளில் உள்ள தமிழர்களும் தம் தாய் மொழியை மறந்துவிடக்கூடிய அபாயத்திலுள்ளனர்” என்று சுட்டிக் காட்டி, நம்மை எச்சரித்தார்.

“இந்த நிலைமை தொடர்ந்து நிலவ அனுமதிக்கக் கூடாது” என்று அவர் கூறியபோது அனைவரும் ஒப்பினர். என்ன செய்ய வேண்டும்? கலைஞர் கூறக் கேட்போம்.

“தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலெல்லாம் தமிழைக் கற்பதற்கான வாய்ப்பும், தமிழனோடு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் வகையும் செய்யப்பட வேண்டும்.” என்று அவர் கூறிய ஆலோசனையை உளத்தால் ஏற்றுக் கொண்டோம். பணத்தைப் பற்றி எண்ணாமல், மொழிக்காகத் தொண்டாற்றிய மணி, திருநாவுக்கரசுகளும், சிவமுத்துகளும், அருணகிரிநாதர்களும், நூற்றுக் கணக்கில், இளந்தலைமுறையில் கிடைத்தால். கடல் கடந்த நாடுகளிலும் தமிழைக் காக்கலாம் என்னும் எண்ணம் என்னுள் எழுந்தது.

பிற நாட்டுத் தமிழரிடையே தமிழ் தழைத்து நிற்பதற்கான வழியைக் கூறிவிட்டு, நம் நாட்டில் செய்ய வேண்டியதை எடுத்துரைத்தார்.

வரலாற்றுக் காலலந்தொட்டு ஆழ்ந்த புலமை பெற்ற மொழியாகும் தமிழ். அது ஒரு செழுமையான மொழி.

“ஆனால் அந்த முதுமையும் தற்போதைய வளர்ச்சியும் மட்டுமே போதாது. நாம் பழைய மகிமையில் ஒய்ந்திருக்கக் கூடாது. “சிந்தனைகளை உணர்த்தவும், அறிவியல் வளமிக்க விண்வெளிப் பயணக் காலத்தின் புதுச் செய்திகளைத் தெரிவிக்கவும் ஏற்ற கருவியாக, தமிழ் மாற வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும். தொழில் நுணுக்கம், அறிவியல், மருத்துவம் முதலியவற்றைக் கற்பிப்பதற்கு ஏற்ற பயிற்று மொழியாக இது வந்தாக வேண்டும்' என்பதை வற்புறுத்தினார். மேலும் கூறுகையில்:

“தமிழ் வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சி செய்துவிட்டு, அதோடு தம் பணி முடிந்ததென்று எண்ணிவிடக் கூடாது.

“இம் மாநாடு, மூன்று பணிகள்மீது கவனம் செலுத்த வேண்டும்.

“முதலாவதாக, தமிழ் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கு மிடையே மாணவர்கள் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

“இரண்டாவதாக, தமிழை ஒரு நவீன மொழி யாக்கும் வண்ணம், ‘ஆங்கில-தமிழ் அகராதி’யைத் தயாரிக்கும் பணியில் இறங்க வேண்டும்.

“மூன்றாவதாக, உலகின் பல வேறு நாடுகளிலும் தமிழைப் பரப்பவும் வளர்க்கவும் வேண்டும். இப்படி மூன்று திட்டங்களைத் தந்தார். இவற்றிற்குத் தமிழ் நாட்டு அரசு இயன்ற எல்லா உதவிகளையும் செய்யும்” என்று உறுதி கூறி உவகையில் ஆழ்த்தினார்.

இக் காலம் விரைவுக் காலம் எதிலும் படபடப்பு. மின்னலைப் போன்று விரையவே அவா. எனவே, அமைதியாக, ஆழ்ந்து நுணுகிப்பார்த்து உண்மையின் முழுமையைக் காண நேரமில்லை. நுண்மாண் நுழைபுலமுமில்லை. அத்தகையோர் ஆராய்ச்சியின் விளைவு குருடர் கண்ட யானையே. இந்நிலையும் நீடிக்கக் கூடாதல்லவா?

எனவே கலைஞர், ஆராய்ச்சியாளர்களை நெறிப்படுத்தினார். இதோ அவ்வுரை:

“அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களைப் போன்றவர்கள் இங்கே கூடியுள்ள தமிழ் அறிஞர்கள். அவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் முழு உடல் நலத்தையும் தர முயல்கிறார்கள்.

“இப்படிப்பட்ட கடுமையான அறுவை சிகிச்சைகளுக்கு எல்லாம் குழந்தை இரையாகலாமா என்று எண்ணி, அந்த சிகிச்சையைத் தடுக்கக்கூடாது தாய்.

“அதே நேரத்தில், அறுவைச் சிகிச்சைக்காரர்களும் கண்டபடி தம் கத்தியை ஒட்டக் கூடாது.”

இது நமது மொழி ஆராய்ச்சியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை. தம் விருப்பத்திற்கேற்ப எதையோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு, வலிந்து விளக்கவும் வாதிடவும் கூடாதல்லவா?

மாநாட்டின் முதல் நாள், முற்பகல் நிகழ்ச்சி பெரியவர்களின் ஊக்க உரைகளோடு முடிவடைந்தது. அலுவல் நிகழ்ச்சிகளும் கருத்துப் பரிமாற்றங்களும் பிற்பகலில் தொடக்கம்.

பகல் உணவிற்கு இடந்தேடினோம், தமிழ் மாணவத் தொண்டர்கள் தங்கள் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். விடுதி நெடுந்தொலைவில். ‘யூனெஸ்கோ’விலிருந்து வந்த பேருந்துவண்டி பேருதவியாற்று.

மாணவர் விடுதியைப் பற்றிச் சில சொற்கள். பாரிசு நகரப் பல்கலைக் கழகம், பாரிசாருக்கு மட்டுமன்று; பிரெஞ்சுக்காரருக்கு மட்டுமன்று. அதில் பல நாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்காக விடுதிகள் பல ஒரே பரந்த வளைவுவுக்குள், பதினைந்து விடுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டாரால் கட்டப்பட்டது. இந்தியாவும் அங்கு நல்லதொரு விடுதியைக் கட்டியுள்ளது. மேனாட்டு நகரத்தில் இருப்பதால் மேனாட்டுப்பாணியில் இருக்கிறது. விடுதிகளுக்கான அடி மனை பிரஞ்சு நாட்டின் கொடை. விடுதி கட்டும் செலவு அந்தந்த நாட்டைச் சேர்ந்தது. ஒவ்வொரு விடுதிக்கும் அந்தந்த நாட்டின் பெயர் இடப்பட்டுள்ளது. இந்திய மாளிகையில், தமிழ் மாநாட்டுக்கு வந்தோர் சிலர் தங்கியிருந்தனர்.

அங்கே ஒரு விதி, நல்ல விதியும் கூட எந்த விடுதி யிலும் மாணவர் அனைவரும் ஒரே நாட்டினராக இருக்கக் கூடாது. இந்திய மாளிகையில் இந்தியர் பாதிப்பேர். மற்றவர் பல நாடுகளையும் சேர்ந்தவர். இப்படியே கம்போடிய மாளிகையில் கம்போடியாவைச் சோந்தோர் பாதிப்பேர்; இந்தியரும் பிறரும் மற்றப் பாதிப் பேர். ஏன் இந்தக் கலவை? இன்றைய உலகில் தனித்து ஒதுங்கி இருத்தல் நல்லதன்று. விடுதிகளில் பல நாட்டு இளைஞர்களும் கூடி வாழ்தல், அனைத்துலக நல்லெண்ணத்திற்கு ஆடிகோலும். பல நாடுகளிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குத் துணை புரியும். கல்வியாளர்களுடைய கருத்து இது. எனவே பல நாட்டவரும் ஒரே விடுதியில் கூடி வாழவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். நாட்டு வெறியூட்டுவோருக்கிடையே, மானுடத்தை வளர்க்கத் துடிக்கும் நல்லோர் சிலருடைய அவா இது. இந்த அவா வெற்றி பெற்றால் நன்மையே.

விடுதிகள் அத்தனையும், பரந்த பசும்புற்றரை நிறைந்த சோலைகளுக்கிடையே அழகாகக் காட்சியளிக்கின்றன.

பல விடுதிகளுக்கும் பொதுவாக உணவு விடுதி. அது பொது மக்களுக்கான உணவு விடுதியன்று. மாண வர்களுக்கும் அவர்கள் விருந்தினருக்குமான விடுதி. மாணவத் தோழர்கள் எங்களுக்காக விருந்தினர் சீட்டு வாங்கிக் கொடுத்தார்கள்.

இவ்வுணவுச்சாலையில் பரிமாறும் முறை கிடையாது. தமக்குத் தாமே பரிமாறிக் கொள்ளவேண்டும் ஒவ்வொரு வரும் தட்டையேந்தி, வரிசையில் நின்று நகர்ந்து, சமைத்து வைத்துள்ள பண்டங்களில் பிடித்தமான வற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் எல்லோரும் தட்டேந்தி நின்றோம். வரிசையில் நகர்ந்தோம். ‘இன்று உணவுப் பண்டங்கள் அவ்வளவு நன்றாக அமையவில்லையே’ என்று அங்கலாய்த்தார்கள் மாணவ நண்பர்கள். காய்கறியே உண்ணும் உங்களைப் போன்றவர்களுக்கு இவை போதாவே என்று இரங்கினார்கள். அருமையான பால் கிடைத்தது. பகல் உணவோடு. ஒருவழியாகச் சமாளித்தோம்.

சிறிது அரட்டைக்குப் பிறகு பிற்பகல் கூட்டத்திற்குப் புறப்பட்டோம். நேரத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.